மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
அதிமுக மீண்டும் கடந்த மே 14 முதல் ஆட்சிக்கு வந்ததை அடுத்து தமிழக அரசியல் களம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. அதிமுகவின் பழிவாங்கும் அரசியல், மனித உரிமை மீறல், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், மத்திய மாநில அரசுகளுக் கிடையிலான உறவில் முறுகல் நிலை என பல்வேறு நிகழ்வுகள் ஒன்றுடன் ஒன்று பின்னப் பட்டு தமிழகம் மீது இந்தியாவையே கவனம் கொள்ளச் செய்தது.

தொடர்ந்து ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்க முடியமா என்ற எதிர்பார்ப்பு விவாதம் அரசியலின் திசைப்போக்கை தீர்மானிக்கும் வகையில் அமைந்தது. எப்படியும் ஜெயலலிதா ஏதாவது ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிட்டு தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள அதிமுக தயாரானது.

இந்த நிலையில் தமிழக அரசியலில் புதுத்திருப்பம் ஏற்பட்டுவிட்டது. ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலைமை உருவாகிவிட்டது.

''ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது தவறு...எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் வாதங்கள் பலரது கவனத்தை ஈர்த்தன. எப்படியும் முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலக வேண்டிய நிலை உருவாகும் என்பது உறுதியானது. அதுபோல் வழக்கின் தீர்ப்பும் பரபரப்பாக வெளியானது.

கடந்த மே மாதம் 14 ம் தேதி செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றது செல்லாது... இது சட்டபூர்வமானதல்ல...'' என்று தீர்ப்பின் முக்கியப் பகுதி வெளியானது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முதலாக ஒரு மாநிலம் 10 மணி நேரம் வழிநடத்த அரசு எதுவும் இல்லாமல் செயலிழந்து நின்றது. அந்த பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு.

ஜெயலலிதாவும் பதவியில் இருந்து விலகி புதிய முதல்வருக்கு வழிவிட்டுவிட்டார். எவரும் கற்பனை செய்ய முடியாத ஒருவர் முதல்வராகி உள்ளார். அவர்தான் ஒ. பன்னீர்செல்வம்.

எப்படியும் அடுத்த முதல்வராக ஒரு பெண் வருவாரென்று எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. இன்னொருபுறம் காளிமுத்து, பொன்னையன், தம்பித்துரை... என்னும் பல பெயர்கள் அடி பட்டன. ஆனால் கட்சி, சசிகலா குடும்பம் இரண்டுக்கும் ஏற்புடைய ஒருவரை ஜெயலலிதா தேர்வு செய்துள்ளார்.

ஒ. பன்னீர்செல்வம் தினகரன், சசிகலா குடும்பத்துடன் நெருக்கமானவர். அவர்கள் சொல்வதை தட்டாமல் செய்யக்கூடியவர். அதைவிட ஜெயலலிதாவுக்கு எதிராக போகக் கூடியவராக அல்லாது, அவரை சார்ந்து நின்று அல்லது அவர் ஆட்டுவிக்கும் ஒர் பொம்மையாக இருந்து செயற்படக் கூடியவராக இருப்பார்.

பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் பழையவர்கள் தான். போயஸ் கார்டனில் புதிய முதல்வருக்கான வீடு ஒதுக்கப்பட்டாயிற்று. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக போயஸ் கார்டன் என்னும் பிம்பத்தை தக்கவைக்க ஜெயலலிதா முயற்சி செய்கிறார்.

சசிகலா குடும்பத்தை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலையில் ஜெயலலிதா உள்ளார் என்பதற்கு இந்த முதல்வர் தெரிவு நல்ல உதாரணம்.

ஆக முக்குலத்தோர் லாபி ஜெயித்துவிட்டது.

சசிகலா கள்ளர் பிரிவைச் சேர்ந்தவரென்றால் பன்னீர்செல்வம் அதே முக்குலத்தோர் சமுதாயத்தில் மறவர் பிரிவைச் சேர்ந்தவர். இந்த சாதிய உணர்வு அரசியலில் எத்தகைய தீர்மானகரமான சக்தியாக மாறியுள்ளது என்பதற்கு முதல்வர் தெரிவும் சான்று.

இதே நேரம் திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவும் தமிழகம் தயாராகிவிட்டது. இந்நிலையில் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகள் அதே கூட்டணியில் தொடரவில்லை. கூட்டணிகள் மாறியுள்ளது. காங்கிரஸ் அதிமுக விலிருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுபோல் திமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கூட்டணியில் இருந்து முன்னமே விலகிவிட்டது. பாமக மீண்டும் திமுகவில் இணைந்துவிட்டது. இதனால் விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியும் கூட்டணியி லிருந்து வெளியேறுகிறது. இதனால் அதிமுக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தை இழந்து நிற்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள 'மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு' என்பதற்கான பெருள்கோடலை கீழ்மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும். தற்போதைய சூழலில் உள்ளாட்சி தேர்தலின் வெற்றி தான் ஜெயலலிதாவுக்கான இயங்குவெளியை வழிவகுத்துக் கொடுக்கும்.

ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியும் பிரிந்து செல்வது கட்சிக்கு அதிக நன்மையை பெற்றுக் கொடுக்காது.

திமுக அணியும் ஓரளவு பலம் குன்றியே உள்ளது. பாஜக மட்டுமே திமுகவின் பலம். ஆயினும் தமிழக அரசியல் சூழலில் எதுவும் நடக்கலாம். இந்த உள்ளாட்சி தேர்தலை கடந்து பார்க்கும் போது பாஜகவுடன் உறவு பலப்படுவதை அதிமுக விரும்பும், அதற்கேற்ற காய்நகர்த்தலை நிச்சயம் அது மேற்கொள்ளும். தற்போது திமுகவுக்கு இந்தத் தேர்தல் தனக்கான எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை கணிப்பிட உதவும் தேர்தலாகும்.

காங்கிரஸ் மூன்றாவது அணியை அமைத் திருக்கிறது. காங்கிரஸ் ஜனநாயக பேரவை, சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, கண்ணப்பனின் மக்கள் தமிழ்தேசக்கட்சி,கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.

இதுவரை தமிழக அரசியலில் சந்திக்காத அரசியல் விநோதங்கள் இன்னும் இடம் பெற போகின்றன. அதற்கான வாய்ப்புக்கள் நிரம்பிய சூடு பிடிக்கும் அரசியல் களமாகவே தமிழக அரசியல் உள்ளது.

கந்தர்

© TamilOnline.com