த்ரீ ரோஸஸ்
மூன்று ரோஜாக்களாக ஜோதிகா, ரம்பா, லைலா நடிக்கிறார்கள். முதலாமவர் ஹைகூ. இரண்டாமவர் மரபுக் கவிதை. மூன்றாவது...? வேறென்ன கவிதை பாக்கியிருக்கிறது... யெஸ்... புதுக்கவிதை.

இந்த மூன்று நாயகிகளுக்கும் மூன்று நாயகன்கள் தேவையாயிற்றே... நோ அதுதான் இல்லை. ஒரே ஒரு நாயகன்தான். ''இந்த மூன்று டைட்டில் நாயகிகளையும் வழி நடத்தும் கேரக்டராக அது இருக்கும்'' என்கிறார் டைரக்டர் பரமேஷ்வர். மிகவும் ஜனரஞ்சகமான இக் கதையில் மேற்படி மூன்று நாயகியரும் அதிரடி சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாட இருக்கிறார்கள். இது சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலப் படத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால் அதைத் தாலி, தாயின் கண்ணீர்... இத்யாதி என்று நேட்டிவிடி பண்ணியிருப்பார்கள்.

பிரகாஷ் ராஜ், விவேக் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இதில் தேவன், குயிலி ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகன் யார் என்பது படம் வெளியாகும் வரை சஸ்பென்ஸ். (பாவம் கதாநாயகன்... என்ன தான் பெண்களுக்கு முன்னு ரிமை என்றாலும் இப்படியா ஒரு ஆணை இருட்டடிப்பு செய்வது?) ஆனால் இந்த மூன்று நாயகிகளோடும் ஒரே ஒரு பாடல் காட்சியில் இந்தி நடிகர் கோவிந்தா நடனமாடுகிறார்.

அரை மணி நேரத்துக்கு இடம் பெறும் வகையில் கிராபிக்ஸ் காட்சி ஒன்று படத்தில் இடம் பெறுகிறது. ''பெரும்பாலான காட்சிகள் கடலிலும் கடலுக்குள்ளும் இடம்பெறும்'' என்கிறார் டைரக்டர். (நனைந்த ரோஜாக்கள்?) இப் படத்துக்கு கதை, திரைக்கதையும் இவரே.

'வி.ஐ.பி.' படத்துக்கு இசையமைத்த ரஞ்சித் பரோட் இதற்கு இசையமைக்கிறார். வசனம்: பிருதிவிராஜ்குமார், படத்தொகுப்பு: பி. லெனின் - வி.டி.விஜயன், கலை: தோட்டாதரணி, சண்டைப் பயிற்சி: கனல்கண்ணன். சந்தோஷ் சிவனின் உதவியாளராக இருந்த வினோத் இப்படத்தின் மூலம் ஒளிப்பதி வாளராகிறார்.

த்ரீ ரோஸஸில் சுவை - மணம் - திடம் மூன்றும் இருக்கும் என்று நம்பலாம்.

தமிழ்மகன்

© TamilOnline.com