இன்றைய பொருளாதார சூழ்நிலையில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
(இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் முன் ஒரு சிறு குறிப்பு. இந்தக் கேள்வி தான் தென்றலில் இனிமேல் தொடர்ந்து இடம் பெற இருக்கும் இப்பகுதியின் முதல் முறை. வாசகர்களின் வாழ்வில் பரவலாக எழும் ஒரு கேள்வியையே அடிப்படையாக வைத்து எழுதப் படுகிறது. இம்முறை எழுந்திருக்கும் கேள்வி என் நெஞ்சை நெகிழ்த்தி நோகடிக்கும் கேள்வி. என் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமே என்னைக் கேட்டுக் கேட்டு, என் மனத்தில் நாள் தோறும் நெருடி என்னைத் தினந்தோறும் துயரத்தில் தோய வைக்கும் கேள்வி. இருந்தாலும் புன்னகையே வாழ்க்கையின் இடிதாங்கி என்ற கண்ணோட்டத்துடன் என் பதிலை ஒரு விளையாட்டுப் போக்குடன் துவங்கியிருக் கிறேன். அது யார் மனத்தையும் புண் படுத்தும் நோக்கத்துடன் அல்ல. அப்படி யாரையாவது என் எழுத்துக்கள் நோகடிக்கு மானால் தயவு செய்து மன்னித்து விடும்படி ஆரம்பத்திலேயே கேட்டுக் கொள்கிறேன்.)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத கதிரவன் மின் வலைக்குள்புகுந்து, உறங்கிக் கொண்டி ருந்த வேதாளத்தை பிடித்து தோளின் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு நிஜ உலகுக்கு வரத் தொடங்கினார். வேதாளம் உடனே விழித்துக் கொண்டு கேள்விக் கதையை விவரிக்கலாயிற்று:

சான் ·ப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வசிக்கும் குணவர்மன், சமீப காலத்தில் வேலை நீக்கம் செய்யப் பட்டார். அவருடைய மைத்துனன் பலவர்மன் இப்போதுதான் M.S. படிப்பு முடித்து விட்டு வேலை தேட குணவர்மன் வீட்டுக்கு வந்துள்ளான். மாமனும் மைத்துனனும் தீவிரமாக வேலை தேடியும் கிடைத்த பாடில்லை. மாமனுக்கு குடும்பக் கவலை. மைத்துனனுக்கு விசாக் கவலை - உடனே இல்லை, இன்னும் சில மாதங்கள் கழித்து. நாளொரு நிறுவன மூடல், பொழுதொரு வேலை நீக்கமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், வேலை கிடைக்க அவர்கள் எப்படி முயற்சி செய்ய வேண்டும்? வேலை உடனே கிடைக்க விட்டால் என்ன செய்வது?

வேதாளம் கேள்வியை முடித்து விட்டு, "இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் சொல்ல வில்லையென்றால், உன் web-site Code Red II virus-ஆல் பாதிக்கப் பட்டு சுக்கு நூறாகச் சிதறி விடும்" என்றது.

இது வழக்கமாக வரும் டயலாக் என்பதால் கதிரவன் பதட்டமின்றி பதிலைத் துவங்கினார்.

(அம்புலிமாமா விக்கிரமன் விசிறிகளிடமும், அது என்னவென்றே தெரியாத அப்பாவி களிடமும் நான் ஆழ்ந்த மன்னிப்புக் கோருகிறேன்!)

இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க நான் மிகவும் தலையைச் சொறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் நான் வேலை செய்யும் அலுவலகத்திலேயே பலர் வேலை இழந்து, பல வாரங்களாகத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் கிடைத்த பாடில்லை. இப்போது வேலை கிடைப்பது சஹாராவில் தண்ணீர் கிடைப்பதை விட அரிதாகி விட்டது. நானும் அவர்களூக்கு என்னால் ஆன அளவு அறிமுகமும், சிபாரிசும் (recommendation) கொடுத்தும் வேலை கிடைப்பது பிரம்மப் பிரயத்தனமாகவே உள்ளது. மிகச் சிலருக்குத்தான் கிடைத்துள்ளது. interview கிடைப்பதே பெரும் பாடாக உள்ளது. ஒரு வேலைக்கு நூறுக்கும் மேற் பட்டோர் விண்ணப்பம் (application) விடுக்கிறார்கள். நேரம் அப்படி.

ஆனாலும் எனக்குத் தோன்றிய சில அணுகு முறைகளைக் கூறுகிறேன். அவை இப்போது வேலை தேடும் அன்பர்களுக்கு சிலருக்கேனும் உதவியாக இருக்குமானால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

குணவர்மனுக்கும், பலவர்மனுக்கும் நிலை வேறு வேறு. அவர்கள் அணுகுமுறையிலும் சிறிது வேறுபாடு இருக்க வேண்டும். அதனால் வேலை தேடுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், எல்லோரும் ஒரே மாதிரி வேலை தேடக் கூடாது. அவரவர் நிலைக்கேற்ப செயலாற்ற வேண்டும்.

இருவரில் பெரியவர் அனுபவசாலி. சில குறிப்பிட்ட திறன்களை அடைந்தவர். உடனே குடும்ப செலவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உடையவர். அவருக்கு உடனே வேலை கிடைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் என்று தோன்றுகிறது. அவர் மிகவும் சரியான பொருத்தம் பார்க்காமல், திறனுக்கேற்ற வேலை சற்று அப்படி இப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். சில காலம் கழித்து, முன்பு பெற்ற அனுபவத்தை வைத்து சரியாகப் பிடித்த வேலையைத் தேடிக் கொள்ளலாம்.

அந்த இளைஞனோ, அப்படிப் பட்ட வலுக் கட்டாயத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அதிலும், முதலில் எடுத்துக் கொள்ளும் வேலை, தொழில் முன்னேற்றத்துக்கு பலமான அஸ்திவாரம் கொடுக்க வேண்டும் என்பதாலும், Green Card கிடைக்க மிக நாளாவதால், வேலை சரிப்பட்டு வராவிட்டால், சீக்கிரம் வேலை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதாலும் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மற்றபடி, இந்த கால கட்டத்துக்கேற்ற பொதுவான அணுகுமுறைகள் சில இருக்கின்றன.

சிலர், இந்த மின் வலை யுகத்தில், வேலை தேடுவது என்றால் மின் வலையில் வேலை நிமித்தமான தளங்களில் (job web-sites) போய் தங்களுடைய வேலை வரலாற்றை (resume) post செய்து விட்டால் முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதை விடத் தவறு எதுவுமே இருக்க முடியாது. அந்த யுக்திக்கு 1% வாய்ப்பு கூட இருப்பது சந்தேகந்தான். எந்த நிறுவனங்கள் வேலைக்கு ஆள் தேடுகின்றன, எந்த மாதிரி வேலைகள் இருக்கின்றன என்று பரவலாகத் தெரிந்து கொள்ள மின்வலை ஒரு பிரமாதமான கருவி தான் - சந்தேகமே இல்லை. ஆனால் இறுதியாக வேலை கிடைத்து விட வேண்டுமென்றால், இன்னும் மிக மிகத் தீவிரமான முயற்சி தேவை.

இப்போதெல்லாம் செய்தித் தாள்களில், வேலைகளைப் பற்றிய பகுதி 60 நாள் பட்டினிக் கிடந்தாற் போல் பரிதாபமாக ஒல்லியாகி விட்டது. மிகச் சில விளம்பரங்களே இருக் கின்றன. அவையும் நாம் சாதாரணமாக நினைக்கக் கூடிய வேலைகளாக இல்லை. மிகக் கூர்மையான சிறப்புத் திறன் வேண்டிய வேலைகளாவே இருக்கின்றன.

நிலைமை இப்படி இருப்பதால் தற்போது வேலை தேட நல்ல அணுகு முறைகள் சில தான்:

Network, Network, Network: அதாவது, உங்களுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள், அவர்களால் தொடர்பு வைத்துக் கொடுக்கக் கூடியவர்கள் எல்லாரிடமும் எங்கெல்லாம் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு தொடர்வது.

தற்சமய நிலையில், பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் வேலை உரைப்பு (hiring freeze) அல்லது இன்னும் மோசமாக, வேலை நீக்க நிலையில் உள்ளன. எனவே, அத்தகைய நிறுவனங்களை விட, நல்ல பண வசதியுள்ள (cash position) சிறிய அல்லது நடுத்தரமான நிறுவனங்களூம், சமீபத்தில் தொடங்கப்பட்டு, முதலீடு (funding) பெற்ற நிறுவனங்களும்தான் வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய நிலையில் உள்ளன. அவை யாவை என்று எப்படி அறிந்துக் கொள்வது?

மீண்டும் network, network, network! யாருக்காவது இத்தகைய நிறுவனம் எதாவது தெரியுமா என்றூ விசாரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

முதலீடு பற்றிய புதுச் செய்திகள் www.technologicpartners.com, www.news.com போன்ற web site-களில் பார்த்தறியலாம். அவை மின் கடிதமாகக் கிடைக்க பெயரை பதிப்பித்துக் கொள்ளலாம்.

செய்தித்தாள்களிலும், தொழில் ரீதியான தாள்களிலும் பத்திரிகைகளிலும் இம்மாதிரியான புது நிறுவனங்களைப் பற்றிய செய்தி வருவதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பெரிய நிறுவனங்களிலும், அபூர்வமாக சில வேலை வாய்ப்புகள் உண்டு. அவற்றை கண்டு பிடிக்க, அந்நிறுவனங்களின் web-site-இலும், அந்நிறுவனங்களில் வேலை செய்பவர்களிடமும் (network!) வேலைக்குத் தக்கவர்களைத் தேடும் மூன்றாம் தர அமைப்புக்கள் (recruiting firms) மூலமாகவும் அறிந்து, தொடரலாம்.

நல்ல recruiter யாராவது தெரிந்தால், அவர்களிடம் resume கொடுத்து வைக்கலாம். அவர்கள் நிறுவனங்களிடம் நிறையப் பழகி, நல்ல resume-க்களே அனுப்புகிறார்கள் என்ற நோக்கம் பெற்றிடுப்பார்கள். அவர்கள் மூலமாக வரும் resume-க்களுக்கு ஆரம்ப மதிப்பாவது இருக்கும். மற்றது உங்கள் பொறுப்பு!

அப்படி எந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று தெரிந்த பின், சும்மா resume-வை ஒரு பொது விலாசத்துக்கு அனுப்பி விட்டு அக்கடா என்று அமர்ந்தால் ஒன்றும் நடக்காது - மனக் கோட்டை, மண் கோட்டையாகத்தான் முடியும். அந்த நிறுவனத் தில் வேலை செய்யும் ஒருவரை எப்படியாவது பிடித்து, அந்த வேலை இருக்கும் குழுவின் அதிகாரியின் கையிலேயே நேரில் சென்று சேருமாறு செய்ய வேண்டும். இரண்டு வெவ் வேறு குழுக்களில் வேலை இருப்பது தெரிந்தால், தனித்தனியே இரண்டு நகல்கள் அனுப்பது நல்லதுதான். இந்த விஷயத்தில் எவ்வள்வு முயற்சி எடுத்துக் கொண்டாலும் தேவைதான். வேலைக்கு அமர்த்தும் மேனேஜ ரிடம் resume சேர்ப்பது அத்தனை முக்கியம். அதுவும் அவரை தொழில் ரீதியிலோ தனிப் பட்ட முறையிலோ, நன்கு அறிந்தவர் மூலமாக அனுப்ப முடிந்தால், இன்னும் பிரமாதம்.

வேலை எங்கு கிடைக்கும் என்று தேடுவது போக, வேலை கிடைத்து சேர வேண்டுமானால், மனப்பாங்கிலும் நிலைமைக்கேற்ற மாற்றம் தேவை இருக்கலாம்:

இந்த விதமான வேலைதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்காமல், வறட்டுக் கௌரவம் பார்க்காமல், திறனுக்கேற்ற வேலை எது கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். அதுவும், கிடைத்த வேலையில் முழுத்திறனையும் காட்ட வேண்டும். நீங்கள் உண்மையிலேயே திறமைசாலி என்றால், சிறிது காலத்தில் உங்களுக்கேற்ற முன்னேற்றமோ, வேறு வாய்ப்போ கிடைத்தே தீரும்.

அதே போல், டாட்-காம் பைத்தியத்தின் உச்ச நேரத்தில் கிடைத்த சம்பளத்தையே இப்போது எதிர் பார்த்தால் நடக்காது. காலம் மாறிப் போச்சு! அப்போது எவ்வளவுக்கு வேலை செய்பவர்கள் கை ஓங்கியிருந்ததோ, இப்போது அவ்வளவு வேலை கொடுப்பவர்கள் கை ஓங்கியுள்ளது. முன்பை விட குறைந்த சம்பளம் கிடைப்பது ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிப்பதற்கில்லை. வேலை நீக்கம் ஆகியும், விரைவில் வேறு வேலை கிடைத்து, சம்பள உயற்சி பெறும் சில அதி அதிர்ஷ்டசாலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அது மிக, மிக அபூர்வம். மிகக் குறிப்பான சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் அசாதாரண நிகழ்ச்சி என்று கூறலாம். அவர்களை உதாரணமாக வைத்து, வாய்ப்புக்களை இழந்து விட வேண்டாம்.

வீட்டிலிருந்து வெகு தூரம் வேலைக்காக தினப் பயணம் (commute) செய்ய தயாராக இருக்க வேண்டும்.

வழக்கத்தை விட இன்னும் அதிக நேரம் வேலை செய்ய முன் வர வேண்டும்.

இழந்த வேலை, அல்லது படித்த படிப்பை விட்டு வேறு தொழில் முறைகளில் வேலைக்கு சேர வேண்டியிருக்கலாம். சில பேருக்கு அதுவே வாழ்க்கையில் முன்னேற முதல் படியாகவும் அமையலாம்! இருந்த தொழிலில் முன்னேற முடியாத சூழ்நிலைக்கு பலர் மாட்டிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிலை விட்டு மாறுவது கருமேகத்தைச் சுற்றிய வெள்ளி வரிப் படிவமாக அமையும். உதாரணமாக, IT applications-ஐ விட்டு விட்டு, bio-informatics போன்ற வளரும் துறை நிறுவனங்களில் வேலை கிடைத்தால் அது நல்ல வாய்ப்பாகவே இருக்கக் கூடும்.

முழு நேர, நிரந்தர வேலை கிடைக்கா விட்டாலும், contract வேலையோ, தற்காலிக (temporary) வேலையோ, பகுதி நேர வேலையோ கிடைத்தாலும் ஒப்புக் கொண்டு, முழு நேர வேலை தொடர்ந்து தேடலாம். சில சமயம் அத்தகைய வேலை சிறிது நாள் கழித்து முழு நேர வேலையாக மாற வாய்ப்புண்டு. எல்லோருக்கும் இந்த வழி சரிப்படாது. ஆனால் அதை செய்யக் கூடியவர்களுக்கு, எதோ சரிப்படாத முழு நேர வேலையில் மாட்டிக் கொள்வதை விட, இது இன்னும் நல்லதுதான். கையில் எதாவது வேலை இருக்கும்போது, இன்னும் தன்னம்பிக்கையுடன் முழு நேர வேலை தேடலாம்.

திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப, இருக்கும் ஊரை விட்டு வேறு ஊரில், ஏன் வேறு நாடுகளுக்கும் குடியேறும் மனப்பான்மை இருந்தால் வேலை கிடைக்கும் வாய்ப்பு பல மடங்கு அதிகமாகும். இப்போது, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெவ்வேறு நாடுகளில் software வேலை வாய்ப்புக்கள் அமெரிக்கவை விட அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

ஆக மொத்தம், வீசும் புயற் காற்றில், நேராகத் தூண் போல் நின்று விழுந்து விடும் அரச மரமாக இருக்காமல், வளைந்து கொடுத்து செழிக்கும் நாணல் போன்று நடந்து கொண்டால் இன்றைய பொருளாதார சூழ்நிலையைச் சமாளித்து வேலை பெறும் பாக்கியம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. டார்வினின் தத்துவமும் நமக்கு அதே பாடத்தைத்தான் புகட்டுகிறது: "சூழ்நிலை யில் ஒரு மகத்தான மாறுபாடு ஏற்படும் போது, அதில் பிழைத்து எழுவது பெரும் பாலும் பலமான உயிர் வர்க்கங்கள் அல்ல. அந்த புதிய சூழ் நிலைக்கேற்ற வர்க்கங்களூம், அது போல் தம்மை மாற்றிக் கொள்ளக்கூடிய வர்க்கங் களுந்தான் (It is the adaptible species that survive)."

எல்லா இடத்திலும் மும்முரமாகத் தேடியும் சில காலமாக வேலை கிடைக்கவில்லை எனில் என்ன தான் செய்வது? வீட்டில் சும்மா உட்கார்ந்துத் தொலைக்காட்சி பார்ப்பதா?

நிச்சயமாக கூடாது! கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்:

சரியாகப் பரிச்சயமில்லாத, ஆனால் வேலைச் சந்தையில் நன்கு செலாவணியாகக் கூடிய திறன்களை பயிற்சி செய்து கொள்ளலாம். படித்தும் அறிந்து கொள்ளலாம், software என்றால் வீட்டு கம்ப்யூட்டரிலேயே program செய்தும் பழகிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பயிற்சி நிறுவனங்களிலோ, மின் வலை மூல மாகவோ, குறும் பாடங்களை (short courses) எடுத்துக் கொண்டு பழகவும் முடியும்.

இன்னும் பலமான முறை ஒன்று உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையால் நல்ல பண வசதியற்ற பல சிறிய நிறுவனங்களில், நல்ல technology-யும், வேலை செய்பவர்கள் தேவையும் உண்டு. அப்படிப்பட்ட நிறுவனங்களில் தெரிந்தவர்கள் இருந்தால், சம்பளமே இல்லாமலோ, மிகக் குறைந்த பண ஈட்டுக்கோ இருக்கும் வேலை யைக் கற்றுக் கொண்டு, செய்து கொடுத்து, அனுபவம் பெற்றுக் கொள்ளலாம். அந்நிறுவனம், stock அல்லது, மருத்துவ வசதி போன்ற ஈடுகள் கொடுக்கலாம். பிற்பாடு போனஸ் ஆகவும் அளிக்கலாம். ஆனால், எந்த ஈடு கொடுப்பதாக இருந்தாலும், INS-இன் விதிமுறைகளை மீறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், பிறகு பெரிய வினையாக வந்து சேரும்.

சிலருக்கே சரிப் பட்டு வரக் கூடிய ஒரு யோசனை: நல்ல idea ஒன்று இருந்தால், நீங்களே ஒரு நிறுவனம் ஆரம்பித்து பார்க்கலாம். Angel-களிடமோ, Venture Funds-இடமோ சிறீது முதலீடு பெற முயற்சி செய்யலாம். உண்மையில் அவ்வாறு முதலீடு பெற்று விட்டால் முழு மனதோடு இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும் - அரை மனத்தோடு செய்வதில் பயனில்லை. அந்த நிறுவனம் பெரிய வெற்றியும் பெறலாம் அல்லவா? ஆனால் முதலீடு கிடைக்கும் வரை வேலையும் தேடுவதில் தவறில்லை. ஒன்றுக்கு மற்றது மிகவும் இடைஞ்சலாகி விட்டால், ஒன்றில் மட்டுமே முழு நேர கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு தீவிர முடிவுக்கும் வரலாம் - அதாவது, வேலை தேடுவதை விட்டு விட்டு, மீண்டும் கல்லூரிக்குச் சென்று சேர்ந்து புதிய post-graduate பட்டத்தையும் பெறலாம். பொறி யியல் பட்டம் பெற்றவர்கள், M.B.A. பட்டம் பெறலாம். அல்லது, வேறு technical துறையில் பட்டம் பெறலாம். Ph. D. பட்டம் பெறவும் சேர்ந்து கொள்ளலாம். யார் சொல்ல முடியும், அதே பிற்கால வாழ்க்கைக்கு பெரிய உதவியாக அமையலாமே!

எதுவும் இல்லாவிட்டால், வெகு காலமாக எடுத்திராத விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இது சிலருக்கே சாத்தியம் என்பது உண்மை. ஆனால் அவ்வாறு சாத்தியப் படக் கூடியவர் களுக்கு, புத்துணர்வு பெற இது ஒரு நல்ல வழியாக இருக்கக் கூடும். புது வேலையில் சேர்ந்து விட்டால் பிறகு விடுமுறை பெறுவது மிகக் கடினமாகிவிடும். அதனால், வெகு நாட்களாகத் தள்ளிப் போட்டு வந்த பயணங்களையோ அல்லது மற்ற சொந்தக் காரியங்களையோ இந்த இடைவெளிக் காலத்தில் மேற்கொண்டு முடித்துக் கொள்ளலாம்.

இந்த பதிலால் கதிரவனின் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் அவர் தோள் மேலிருந்துத் தாவி, மின் வலைக்குள் குதித்து மறைந்து விட்டது!

கூடிய சீக்கிரம் கதிரவனுக்கு பலவர்மனி டமிருந்தும், குணவர்மனிடமிருந்தும் இரு மின் வலைக் கடிதங்கள் வந்தன. பதிலில் கூறிய படியே அவர்கள் வாழ்க்கையிலும் நடந்தது. முன்பு பொறியியல் மேனேஜராக இருந்த பலவர்மன், இப்போது senior sales engineer ஆக ஒரு வேலையில் சேர்ந்து மிக்க மகிழ்ச்சி யாவே இருக்கிறாராம். குணவர்மன்? அவன் M.S. Computer Science, முடித்திருந்தான். இருக்கும் நிலையைப் பார்த்து, அவனுடைய professor-இடமே கேட்டு, Ph.D. பட்டப் படிப்புக்கு மீண்டும் சேர்ந்து விட்டான். Research Assistantship-உடன், சந்தோஷ மாக மேற்படிப்பு மாணாக்கன் வாழ்க்கையில் மீண்டும் ஊறிவிட்டதாக எழுதியுள்ளான்.

வேலை தேடும் அனைவருக்கும் அத்தகைய நல்ல திருப்பங்கள் விரைவிலேயே கிடைக்காது தான். ஆனாலும், இந்தக் கட்டுரை சிலருக்கா வது பயன் படுமானால் எனக்கு பரம திருப்தி.

தற்போது வேலை தேடும் அனைவருக்கும், சீக்கிரமே அவரவர் விருப்பத்துக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை, அதற்கு என் நல்லாசிகள்.

******


கீழ்க்கண்ட web-sites வேலை தேடுபவர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியவை:
www.monster.com
www.careerpath.com
www.technologicpartners.com
www.news.com
www.jobhuntersbible.com

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com