தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 3 கப் பச்சை மிளகாய் - 15 (சுமாரான உரைப்புள்ளது) உப்பு (சுமாராக) - கால் கரண்டி எலுமிச்சைப்பழம் - 1 பிளாஸ்டிக் பேப்பர் - பெரிய சைஸ் 1
செய்முறை
ஜவ்வரிசியை 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
பச்சை மிளகாய், உப்பு இவற்றை தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.
ஊறிய ஜவ்வரிசிக்கு மேல் 4 அங்குலம் முதல் 6 அங்குலம் உயரம் தண்ணீர்விட்டு அடிகனமான பாத்திரத்தில் வைத்து நிதானமாக அடுப்பை எரியவிட்டு வேகவைக்கவும்.
அடிபிடித்துக்கொள்ளாமல் கிளறிக்கொண்டே வரவும்.
கொஞ்சம் கிளறமறந்தால்கூட அடிப்பிடித்துவிடக்கூடும். ஆகையால் நிதானமாக மேலும் கீழும் கிளறிவிடவும். சுமார் 10, 15 நிமிடத்திற்குள் வெந்துவிடும்.
நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, தட்டு கொண்டு மூடவும்.
சுமார் 1 மணி நேரம் கழித்து எலுமிச்சம் பழசாறு, மற்றும் ஏற்கெனவே தயாராக அரைத்து வைத்திருக்கும் விழுது ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறவும்.
வெயில் வரும் இடத்தில் பிளாஸ்டிக் பேப்பரை போட்டு சிறிய கரண்டி அல்லது ஸ்பூனால் வட்டவட்டமாக வைக்கவும்.
இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்தவும். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒவ்வொன்றையும் திருப்பிபோட்டு காய விடவும்.
நன்கு காய்ந்தவுடன் ஈரம் இல்லாத உலர்ந்த டப்பாக்களில் இறுக போட்டுமூடி வைக்கவும்.
தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.
குறிப்புகள்:
ஜவ்வரிசியை ஊற வைத்து ஊறியபிறகு அது நன்றாக மலர்ந்து ஊற்றிய தண்ணீருக்கு மேலாக கிளம்பி வந்தால் தண்ணீர் அதிகம் விட்டு கிளறலாம். வாடமும் நிறைய கிடைக்கும்.
ஜவ்வரிசி ஊறிய பிறகு போட்டபடியே இருந்தால் தண்ணீர் அதிகம் தாங்காது. கிளறும் போது கெட்டியாக கிளற வேண்டும். இல்லாவிட்டால் நீற்று போய் வடாம் பேப்பரை விட்டு எடுக்கவராது.
இந்திரா காசிநாதன் |