காற்று சொல்லிய கதைகள்
மழை எப்படி உண்டானது?

முன்பு வானத்தில் இருந்த தண்ணீரை யாரும் எடுக்கவே முடியாது. மேகங்கள் வெறுமனே அலைந்துகொண்டிருக்கும். ஒரு நாள் மேகங்களின் கடவுள் வானில் சுற்றியலைந்து கொண்டிருந்தது. அப்போது பூமியில் உள்ள ஓரிடத்தில் தவளைகளின் ராணி தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டது. அழகான தவளை ராணியைக் கண்டதும் மேகங்களின் கடவுள் அதன் மீது காதல் கொண்டது. எப்படியாவது தவளை ராணியை அடைய வேண்டு மென்று திட்டம் தீட்டியது.

தான் விரும்பிய தவளை ராணியை அடைவதற்காக பூமியில் இருந்து சில தவளைகளைத் திருடிக் கொண்டுபோய் தனது வானத்தொட்டியில் உள்ள தண்ணீரில் போட்டுவிட்டது. அது வரை தண்ணீர் என்றால் என்ன என்பதையே அறிந்திராத தவளைகள், தண்ணீருக் குள்ளிருந்து இடைவிடாமல் கத்தத் துவங்கின.

வானத்திலிருந்து அவை போட்ட சத்தம் பூமி வரை கேட்டது. அதனால் மற்ற உயிரினங்கள் தூங்க முடியாமல் தத்தளித்தன. இதைக் கண்ட ராணி சத்தத்திலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றவும், வானத்தண்ணீர்த் தொட்டியில் விழுந்த தவளைகளைக் காப்பாற்றவும் வேண்டி வானத்திற்குப் போனாள். தான் விரும்பிய தவளைக் காதலி தன்னைத் தேடி வந்தவுடன் மகிழ்ச்சியடைந்த மேகங்களின் அரசன் தவளை ராணியோடு உற்சாகமாக நடனமாடத் துவங்கி னான். அவனது உற்சாக வெள்ளத் தால் வானில் மழை உண்டானது. அது பூமிக்கும் சென்றடைந்தது. ஆனால், தண்ணீரைக்கண்டு பயந்து போன தவளைகளின் சத்தம் மட்டும் இன்று வரை நிற்கவில்லை. தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

-கடபா இனக் கதை

ஹரிகிருஷ்ணா

© TamilOnline.com