அமிம்சை தருமத்தை அனுசரிப்போம்
இந்தியாவின் சிறந்த தத்துவார்த்த சிந்தனை யாளரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மகாத்மா காந்தி பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

''இவ்வுலகில் மனித சரித்திரத்திலே காணப்படும் மிகப் பெரிய உண்மை அவனுடைய உலகாயத சாதனைகளல்ல; அவன் நிர்மாணித்து அழித்த இராச்சியங்களல்ல; ஆனால் யுகம் யுகமாக உண்மையையும் நன்மையையும் - சத்தியத்தையும் பண்பையும் - துருவித் துருவி ஆராய்ந்து அதனால் ஏற்பட்ட ஆன்மிக வளர்ச்சியேயாகும். இத்தகைய ஆன்மிகத் தொடர்புள்ள பிரச்சனைகளில் எவரொருவர் பங்கெடுத்துக் கொள்கிறாரோ, அவர் மனிதப் பண்பாட்டின் சரித்திரத்தில் நிரந்தரமான இடத்தைப் பெற்று விடுபவராகிறார். காலமானது தன்போக்கில் யாவரையும் மறந்ததை போல, வீராதி வீரர்களையும் மறந்து புறக்கணித்து விட்டது. ஆனால், துறவிகள் மட்டும் மறக்கப்படவும் இல்லை; புறக்கணிக்கப்பட்டதும் இல்லை. எஞ்சி நின்றவர்கள் அவர்களே. காந்தியாரின் பெருமை, அவர் தம் போராட்டம் மிகுந்த வீரவாழ்க்கையைக் காட்டிலும், புனிதமான வாழ்க்கை நடத்தி வந்ததிலும், அழிக்கும் சக்தி உச்சத்தில் நின்று கோரத் தாண்டவமாடிய காலத்தில் ஆன்மாவின் ஆக்கச்சக்தி, அதன் உயிரளிக்கும் பண்பு ஆகிய இவற்றை வற்புறுத்தி வந்ததிலுமே காணப்பெறும்'' என்றார்.

தேசம் அந்நிய ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரத் தேசமாக மலர்ச்சி பெற போராட்டம் பல முனைகளில் இருந்து வெளிப்பட்டது. அக்கால கட்டத்தின் ஓர் பிரவாகமாக காந்தி இருந்தார் என்பது மிகையான கூற்று அல்ல.

இந்திய வரலாற்றில் ஒரு மாபெரும் மனிதராக சுமார் அரை நூற்றாண்டு காலம் வியாபித்திருக்கிறார். இவர் உடலால் பலசாலி அல்ல; மனதில், ஆன்மாவில் இவர் மாபெரும் மனிதராவார். கீதையின் போதனைகளுக்கு ஏற்ப, பலன்களை எதிர்பாராது பற்றின்றி முழுமூச்சுடன் பாடுபட்டவர். இதனால் வரலாற்றில் காந்தியின் நடைமுறை சிந்தனை, ஆன்ம ஈடேற்றம் என விரியும் சுழற்சியில் காந்தி ஒரு சகாப்தமானார்.

உடல் வலிமை இல்லாத இந்தச் சிறிய மனிதர் உள்ளத்தில் எ·குப் போன்றவராய் இருந்தார். பலம் பொருந்திய சக்தியையும் அசைக்க முடியாத மலை போன்ற திண்மையையும் பெற்று விளங்கினார். அக்காலத்தில் முழங்கால் அளவுக்கு ஒரு துண்டைக் கட்டியிருந்த கோலமும், மேலே துணி போடாதிருந்த தோற்றமும் பிறரைக் கவராது இருந்திருக் கலாம். ஆயினும் பிறரை அச்சம் கொள்ளச் செய்தது உண்மை. அதைவிட பிறரை மனமுவந்து சிரந்தாழ்த்த வைத்த குணத்தையும் பெற்றிருந்தது. அவருடைய அமைதியான ஆழ்ந்த கண்கள் யாரையும் கட்டுப்படுத்திவிடும். அதுவே ஒரு பிரளயம் ஆகும் சக்தியைக் கொண்டிருந்தது.

காந்தி வாழ்ந்த காலத்தில் இருந்து இன்றைக்கும்கூட அவர் போன்ற அபூர்வ மனிதரை - அபூர்வ சக்தியை இதுவரை இந்தியா மட்டுமல்ல, உலகம்கூட கண்டதில்லை. காந்தியின் பேச்சு சிந்தனை, செயல் யாவும் ஒரு புதிய சமுதாய மாற்றத்துக்கும் ஆன்ம ஈடேற்றத்துக்கும் புதியவகையிலான மார்க்கங்களை வழங்கிச் சென்றுள்ளது. சாத்வீகப் போராட்டத்தின் முழு வலிமையையும் உலகறியச் செய்தார்.

சத்தியத்தை தவிர வேறு கடவுள் இல்லை என்பதை காந்தி தன்னுடைய அனுபவங்களில் உணர்ந்து கொண்டார். அகிம்சையைப் பூரணமாக அடைந்தால் மாத்திரமே சத்தியத்தின் பூரணமான சொரூபத்தையும் தரிசிக்க முடியும் என்பதையும் தெளிவுற புரிந்து கொண்டிருந்தார்.

''பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின், மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும்'' என்று காந்தி உறுதிபட தெளிவுடன் கூறி வந்தார்.

ஆனால் இன்றைய நிலைமையோ உயிர்களை அழித்துக் கொள்வதில் போட்டா போட்டி போட்டு அழித்து வருகின்றனர். அழிப்பதற்கு அவரவர் நோக்கில் காரணம் கூறிவந்தாலும், இவை மனிதத்தன்மை அற்ற செயற்பாடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

வன்முறையும் தீவிரவாதமும் எந்த ரூபத்தில் எவர் மூலம் வெளிப்பட்டாலும் காந்தி வழிச் சிந்தனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 'தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டு விடாமல் எல்லா உயிர்களிடத்திலும் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வது என்பது முடியாத காரியம். தம்மைத் தாம் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் அகிம்சை தருமத்தை அனுசரிப்போம் என்பது வெறும் கனவாகவே முடியும்'' எனக் காந்தி தனது சத்திய சோதனையில் குறிப்பிட்டிருந்தார்.

''இந்தியாவை நான் நேசிக்கிறேன். அதற்குச் சேவை செய்ய விரும்புகிறேன். பூகோள ரீதியாக அது பெரிய நாடு என்பதனால் அல்ல. கடந்த காலத்தில் பெருமை மிக்க நாடாக இருந்தது என்பதனாலும் அல்ல. இன்று அதன் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையினால்தான். சத்தியம், சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்கு வேண்டிய உயர்ந்த பொருள்கள்... காந்திஜி நம்முன் வைத்த பெரிய லட்சியங்கள், குறிக்கோள்கள்... ஆகியவற்றின் சின்னமாக அது விளங்கும் என்று நான் உறுதியான நம்பிக்கை வைத்திருப் பதனால்தான்'' என்று நேருஜி தெள்ளத் தெளிவாக முன் வைக்கிறார்.

காந்தியின் ஜனநாயக சேவை தியாகத்தை அடிப்படையாக கொண்டது. ஆகவே அது தார்மீகப் பலத்தை செலுத்தும். இதனால் காந்தி ''நான் ஒரு பிறவி ஜனநாயகவாதி'' என்று தொடர்ந்து உரிமை பாராட்டிக் கொண்டி ருந்தார்.

''மனித வர்க்கத்தில் மிகமிக கீழான கட்டத்தில் உள்ள பாமர எழைகளுடன் ஒன்றுபட்டவன் என்ற முறையிலேயே நான் இந்த உரிமை பாரட்டுகிறேன். அவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ நான் விரும்பவில்லை. தன் திறமையை எல்லாம் பயன்படுத்தி அந்த நிலையை அடைய மனப்பூர்வமாக ஒருவன் முயன்றால் இந்த உரிமை பாராட்டலாம். அதையே நான் செய்கிறேன்'' என்று வியாக்கியானப்படுத்தினார்.

காந்தி கருத்தில் கொண்ட ஜனநாயகத்தில் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் இல்லை. சாதாரணமாக நாம் வழங்கும் பெரும்பான்மை, பிரதிநிதித்துவம் என்பவற்றுக்கெல்லாம் அங்கு இடமில்லை. ஜனநாயகம் பற்றி தனக்கான விளக்கத்தை எப்போதும் வலியுறுத்திக் கொண்டே வந்தார்.

ஒருமுறை காந்தி, ''காங்கிரஸில் உள்ள ஜனநாயக அம்சமும் செல்வாக்கும் அதன் வருடாந்தர மகாநாடுகளுக்கு வரும் பிரதி நிதிகள், பார்வையாளர்கள் ஆகியோருடைய எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல; அது மேலும் மேலும் அதிகமாகச் செய்துவரும் சே¨வையைப் பொறுத்தே என்பதை நாம் உணர வேண்டும். மேல்நாட்டு ஜனநாயகமுறை இப்போது சோதனைக் கட்டத்தில் இருக்கிறது. அது தோல்வியடைந்து விட்டது என்று கூறலாம். ஆகவே உண்மையான ஜனநாயகத்தை நடைமுறையில் வெற்றியடையச் செய்து ஜனநாயகத்தின் உண்மை இலக்கணம் இதுதான் என்பதை நாம் உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்'' என்பதை வலியுறுத்திக் கூறினார்.

அவர் வாழ்ந்த காலத்திலேயே உண்மையான ஜனநாயக நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை. பின்பற்றப்படுவதற்கு பல்வேறு தடைகள் மேற்கிளம்பிய உண்மையை உணர்ந்துள்ளார். ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் தடைக்கற்கள் இப்போது அசுரத்தனமாக வளர்ந்துவிட்டன. மதம், சாதி, மொழி, பிரதேசம் என பன்முகப்பட்ட சிக்கலான முரண்பாடுகள் இந்தியாவின் இறையாமைக்கே சவால்விடக் கூடிய நெருக்கடிகள் வளர்ந்து விட்ட காலமாகிவிட்டது.

ஆயுதக்கலாசாரமும் வன்முறையும் இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத விளைவு பொருட்களாகி மனிதத்துவத்துக்கு சோதனைக் காலகட்டமாகிவிட்டது. காந்தியின் தீர்க்கமான சிந்தனைகள், ஆன்ம ஈடேற்றம் எங்கும் எதிலும் காணாமல் போய்விட்டது.

காந்தி எப்போதும் வலியுறுத்திய அஞ்சாமையும் சத்தியமும்தான் அச்சத்திலிருந்த விடுதலை என்றார். அனைத்துத் தடைகளிலிருந்து விடுபட்டு சுதந்திர ஜீவியாக வாழ்வதற்கு ஆன்ம ஈடேற்றத்துக்கு ஆன்ம பலத்தை பயிற்சியைக் கொடுத்தார். ஆனால் இன்றைய விரைவு யுகம், ஆன்ம விசாரத்தில் ஈடுபடக் கூடிய மனப்பக்குவத்தை வழங்குவதாக இல்லை.

கசப்பான வாழ்க்கைச் சூழல்களுக்கு ஆட்பட்டு பொருளுக்கு அடிமையாகி தன்னால் படைக் கப்பட்ட உலகிலிருந்தும் சக மனிதர் களிடமிருந்தும் அந்நியமாக்கப்பட்டு புகலிடம் ஏதுமின்றி விம்முகின்ற மனிதக்கூட்டம் பெருகி வருகிறது.

காந்தியின் 'சத்திய சோதனை' காந்தியின் ஆன்மீகப் பயிற்சி ஆன்மிகப் பலம் புதிய சகாப்தத்துக்கு புத்துயிர்ப்புக்கு வழிகாட்டும்.

துரைமடன்

© TamilOnline.com