புரட்டாசி மாசம் புதவார நாள், மத்தியானம் பனிரண்டு அடிச்சு அரை மணிக்கு மகாராஜஸ்ரீ துய்ப்ளெக்ஸ் துரையவர்கள் பெண்ஜாதி ழான்அம்மைக்கு புத்திரேஸச்சமாய் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த உடனே துறையிலே இருக்கிற கப்பலுகள் பேரிலே, கப்பலுக்குக் கப்பல் 21 பீரங்கி போட்டார்கள். கோவிலிலே கண்டா மணி அரை நாழிகை மட்டும் அதிர அதிர முழங்கியது.பாக்கு மண்டியிலே பெட்டியடிப் பிள்ளையண்டை அமர்ந்து கொள் முதல் வித்துமுதல், கணக்கு வழக்கு, செலவு சில்லறை பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தரங்கருக்கு கோட்டைக் காவலில் இருந்த சிப்பாய் குளத்தையன் வந்து சேதி சொன்னான். பிள்ளை, பெட்டியைத் திறந்து ஆர்க்காடு ரூபாய் ஒரு ரூபாய்ப் பணத்தை எடுத்து அவனுக்கு இனாமாகத் தந்தார்.
''கடவுள் கிருபையாலே தாயும் சேயும் சுகமாக இருக்கிறார்களா?'' என்று விசாரித்தார் பிள்ளை.
''பரம செளக்யம்''
''நமக்கு மனசு ரொம்ப விசாரமாச்சுது. பூஞ்சை திரேகம் அந்த அம்மாவுக்கு. அதிலே பாரியான வயிறு கண்டிருந்தது. எப்படிப் பெத்துப் பிழைக்கப் போகிறாளோ என்று இருந்தது.''
''பத்தும் பன்னிரண்டும் பெற்றவளுக்கு மேரொண்ணு பெறுவதில் என்ன கஷ்டம் இருக்கப் போகிறது?'' என்றார் பெட்டியடிப் பிள்ளை.
''அல்லடா. அப்படி அல்ல. தூங்குவது நம் கையில், எழுந்திருப்பது அவன் கையில்ன்னு சொலவடை உண்டுதானே?''
''அது உள்ளது.''
பிள்ளை, பல்லக்கில் ஏறி வீடு சேர்ந்தார். காலணிகளை நடையில் அவிழ்த்து விட்டார். அகன்ற முற்றத்து மேற்கு ஓரமாகத் தகதக வெனப் புளி போட்டு விளக்கின பித்தளை அண்டாவில் இருந்த நீரைச் சேந்தித் தயாராக நின்றாள் மங்கை.
''பாப்பாள் எங்கே?''
''தம்பியோடு கோட்டை தண்ணீர் மண்டபத்துக்கு விநோதம் பார்க்கப் போயிருக்காள்.''
''திருவேங்கடம் சாபிட்டானா?''
''ஆச்சு. சாப்பிட்டுத்தான் இரண்டு பேரும் புறப்பட்டார்கள்.''
''அவனை நான் பார்க்க வேண்டும் என்று வந்தால் சொல்லு.''
''ஆகட்டும்.''
எப்பொழுதும் கை கால் கழுவிக் கொண்டு பிள்ளை, மடைப்புறம் இருக்கும் பின்பக்கம் செல்பவர், மெத்தைக்குப் படி ஏறினார்.
''இலை போட்டாச்சுதே'' என்றாள் மங்கை அம்மாள்.
''அப்புறமாகப் பசியாறலாம். சித்தே மச்சுக்க வாயேன்.''
அம்மை, பிள்ளையைத் தொடர்ந்து மச்சுக்கு வந்தாள்.
''சாப்பாட்டுக்கு விருந்தாளிகள் யார் யார் வந்தது?''
''செங்கழுநீர்ப்பட்டிலிருந்து சித்தப்பா வந்தார்கள். சாப்பிட்டுச் சற்று சிரமபரிஹாரம் பண்ணிக் கொள்கிறார். அப்புறம் சுங்கு செட்டியார் ஆள் ஒருத்தர் ஒட்டியாணம் புதிசு பண்ணிக்கொண்டு வந்தார். அவரும் சாப்பிட்டுப் போனார். வேங்கடம்மாள் பேட்டை பட்டர்கள் பிரசாதம் கொண்டு வந்தார்கள். அவர்களுக்குத் தனியாக பிச்சைவையரைக் கூப்பிட்டு சாதம் பண்ணிப் போடச் சொன்னேன்.''
''அவாளுக்குத் தட்சணை தந்தாயா?''
''ஆச்சு.''
அவர்கள் மச்சுக்கு வந்து சேர்ந்தார்கள்.
''அது சரி ஒட்டியாணம் வந்தது என்கிறாய், அதை அணிந்து என்னிடம் காண்பிக்க வேணாமோ?''
''போங்கள்.''
அந்த அம்மாள் பாராக்கு பார்ப்பது போல் தெருவை எட்டிப் பார்த்தாள்.
''ஒரு சந்தோஷச் சமாச்சாரம்.''
''கேழ்க்கச் சித்தம்.''
''நம் துரைபெருமானுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கே.''
''சுபம். சுபம். நானும் கவலைப்பட்டுக் கொண்டு கிடந்தேன். சந்தோஷச் செய்தி சொன்னீர்கள். சாயங்காலமே ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துப்படி பண்ணிடுவோம்.''
''பேஷாகச் செய்யேன். துரைசானிக்கு என்ன வழங்கலாம். அந்த யோசனைக்குத்தான் கூப்பிட்டேன்.''
அம்மாள், யானைத் தந்த நுனி மாதிரி இருக்கும் தன் சுட்டு விரலைத் தன் இதழ்களில் குறுக்காக வைத்து யோசித்தாள். அப்புறமாய்ச் சொன்னாள்.
''குவர்னர் துரைப் பெருமான் பெண்ஜாதிக்கு நம்மூர்பட்டு என்றால் ரொம்ப இஷ்டம் என்று அவ்விடத்தில் வார்த்தை வந்ததே. நல்ல அரக்குப் பட்டு பத்து கெசமும், மங்கள காரிய மானபடியினாலே, வைரம் இழைத்த வங்கி வளை ஒரு ஜோடியும் வழங்கலாமே. அத்தோடு குழந்தைக்குப் பொன் அரைஞாண் கொடுத்தி டலாமே. நம் பாப்பாளுக்குப் போட்டு அவிழ்த்தது இருக்கிறதுதானே. பிரான்சு ஜனங்களக்கு அரைஞாண் எங்கே தெரியப் போகிறது. அதைக் கொடுத்தால் பரிமளிக்கும்.''
''நானும் அப்படியேதான் நினைச்சுது.''
''பிள்ளை பெற்றவள்தான் சாப்பிடாமல் இருப்பாள். நீங்கள் என்னத்துக்குச் சாப்பிடாமல் இருக்கிறது.''
பிள்ளை சிரித்தார்.
''ஆள் அனுப்பி, நம் பெட்டியடிப் பிள்ளையை அழைத்து, பட்டையும் ஆபரணங்களையும் கொடுத்தனுப்பி மங்கை. நான் முன்னால் கோட்டைக்குப் போகிறேன்.''
பிள்ளை மீண்டும் வந்து தம் பல்லக்கில் ஏறிப் புறப்பட்டார். கோட்டையை நெருங்குகையில் என்னமோ அசுப சூசகம் அவருக்குத் தென்படலாயிற்று. பிள்ளை துணுக்குற்றார். குவர்னர் பெருமானுக்குக் குழந்தை பிறந்தது. எவ்வளவு சந்தோஷத்துக்குண்டான விஷயம். கோட்டைக் காவலர், அலுவலர்கள் என்று யார் முகத்திலும் ஏன் மகிழ்ச்சியில்லை? ஏன் பார்வையைத் தவிர்க்கிறார்கள்? குவர்னர் பெருமான் மாளிகை முன் பல்லக்கை விட்டிறங்கிய பிள்ளையின் அருகில் வந்து நின்றார் பெட்டியடிப் பிள்ளை.
''ஐயா, ஒரு விபரீதம்.''
''என்ன?''
''குவர்னருக்குப் பிறந்த பிள்ளை சுவாமி பாதம் சேர்ந்து போச்சுது.''
பிள்ளை மெளனமாகச் சில நிமிஷங்கள் நின்றார்.
''சரி... நீ போ... மங்கைக்குச் செய்தியைச் சொல்லிடு.''
குவர்னர் திருமாளிகையில் சின்ன துரை முதலான பெரிய தரத்து அதிகாரிகள் குழுமி இருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் துக்கம் இருந்தது. குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ் அவர்கள் எழுதுகிற கபினேத் அறையில், மேசைக்குப் பக்கத்தில் கன்னத்தில் கையை ஊன்றி அமர்ந்திருந்தார். குவர்னர் துரையைப் பிள்ளை முந்தின தினம்கூடப் பார்த்துப் பேசி விடை பெற்றிருந்தார். கேளிக்கை, நகைச்சுவைகளில் ஆர்வம் மிகுந்த மனித ராகவும், கோடைமழை மாதிரி எதிர்பாராத நேரத்தில் அருள் சுரப்பவராகவும், சித்திரை வெய்யில் மாதிரி திடுமெனக் காய்பவராகவும், சுறுசுறுப்பும், செல் ஊக்கமும் நிறைந்த கன்றுக்குட்டி போன்றவராகவும் காணப்பட்ட குவர்னர் துரை பெருமான், ஒரு நாழிகை நேரத்துக்குள் இப்படிப் பறித்துப் போட்ட குவளை மாதிரி வாடிவிடக் கூடுமா? பத்து வயது ஒருநாள் கூடியவரைப்போல அவர் முதுமை அடைந்திருந்தார். வறண்ட ஆற்றுப் படுகையைப் போல, அவர் நெற்றியில் சுருக்கம் கண்டிருந்தது. வியாகூலத்தில் உறைந்து போனவராக அவர் காணப்பட்டார்.
பிள்ளை குவர்னரின் அருகில் போய் நின்றார். குவர்னர் தலைநிமர்ந்து பார்த்தார். கண்கள் சிவந்து சிற்றே கலங்கின. சட்டென்று தன்னை அடக்கிக் கொண்டார்.
''வா ரங்கப்பா'' என்றார் குவர்னர் துரை.
''குவர்னர் எல்லாம் அறிந்தவர்கள். கடலை நிகர்த்த படிப்பைக் கரை கண்டவர்கள். பெரியவர்கள் தாண்ட முடியாத வாய்க்காலைக் குழந்தைகள் தாண்ட முயல்வது போல, அடியேன் தங்களுக்கு ஆறுதல் சொல்வதாவது? என்றாலும், என் கடமை அல்லவோ. மன ரணத்தைச் சொஸ்தப்படுத்திக் கொள்ளுங்கள். கடவுள் கொடுத்ததை அவரே திரும்ப வாங்கிக் கொண்டார். கடவுள் தாம் பிரியமாக நேசிப்பதைத் திரும்பத் தாமே எடுத்து கொள்வார் என்பதைத் தாம் அறியீரோ? தாங்களே விசாரத்தில் மூழ்கிப் போனால் மதாம் அம்மாளை யார் தேற்றி எழுப்புவது? சட்டென்று எழுந்து பிரகாசிக்க மாட்டீரோ? என்று நிதானமாகப் பேசத் தொடங்கினார், பிள்ளை.
''விளங்குகிறது, ரங்கப்பா... என்றாலும் மனம் கடிகார நாக்கு மாதிரி அசைந்து கொண்டும் அரற்றிக் கொண்டும் இருக்கிறதே.''
''அப்படித்தான் இருக்கும். புத்திர சோக மாச்சுதே. சோகங்களில் தலைமையான ஒன்றல்லவோ. ஆனாலும் அசத்தர்களான மனுஷர்களாகிய நாம் என்ன செய்யக்கூடும்? மனம் சாந்தடையுங்கள். மதாம் அம்மாளைத் தற்சமயத்தில் நாம் பார்ப்பது உசிதம். அறைக்குப் போய்க் கண்டு கொள்கிறேன்.''
துய்ப்ளெக்ஸ் சம்மதம் கொடுத்தார். கபினேத்தைக் கடந்து தோட்டத்துக்கு முன் வளைவில் குழந்தையின் திருஉடலைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். பெரிய துபாஷ்கனகராய முதலியார் மதாமின் அருகில் நின்றிருந்தார். மதாம் ழான், பஞ்சு மூட்டையை அவிழ்த்துக் கொட்டினாற் போல, உருக்குலைந் திருந்தாள். துக்கத்தின் விளிம்பாகிய விரக்தியில் இருப்பவள்போலும் காணப்பட்டாள். அவள் அருகில் அவளின் இரு மகள்களும் அம்மாவுக்கு ஆதரவு சொல்லியபடி நின்றிருந்தார்கள்.
''மதாம் அம்மாள், மனசை ஆற்றிக் கொள்ளுங்கள். தாங்கள் ஆதி விவேகக் காரராயிற்றே. கடவுள் நமக்கெல்லாம் மேலான பரம்பொருள் அல்லவா? நம் விருப்பு வெறுப்புகளை அவரன்றோ தீர்மானிக்கிறார்? சுக, கஸ்திகளைச் சமமாகப் பாவியுங்கள். துக்கத்தைக் கொடுத்த கடவுள் துக்க நிவாரணத்தையும் கூடமே அளிக்கிறார்.'' என்று பிள்ளை, மாதம் கேழ்க்கிற விதமாகச் சொன்னார்.
ழான் நிமிர்ந்து, பிள்ளையைப் பார்த்தாள். உதடுகள் சற்றே கோணின. நாசி விடைத்தது. அவள் கண்களில் இருந்தும் இரு சொட்டுக் கண்ணீர், கன்னத்தில் உருண்டு வழிந்தது.
''ரங்கப்பன், கடவுள் அருள் வடிவானவர் என்றால், எனக்கு இந்தக் கஸ்தியை எதன் பொருட்டுக் கொடுத்திருக்கிறார்? என் அன்பான துய்ளெக்சுக்குத் தர வேண்டும் என நான் ஆசை ஆசையாய் எண்ணின பரிசுப் பொருளை இவ்விதம் தட்டிப் பறித்தமைக்கு என்ன காரணம்? நானோ, என் குழந்தையோதான் என்ன பாவம் செய்தோம்?''
''ஆண்டவனின் அனந்தகோடி விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. அதன் பொருளை ஞானிகளே அறியத் திகைக்கும் போது, நாம் எம்மாத்திரம். காரண, காரிய விசேஷங்கள் அற்று எதுவும் இயங்குவதில்லை. மனசை சொஸ்தப்படுத்திக் கொள்ளுங்கள்.''
அறைக்கு நடுவாகக் குழந்தையைக் கிடத்தி இருந்தார்கள். அந்தக் குழந்தை இருந்த காத்திரம் ஒரு வருஷத்துப்பிள்ளை போல் இருந்தது. அதை மங்கள மேஸ்திரி அளந்து பார்த்து, ''சாதி அடியாலே, இரண்டரை அடி இருக்கிறது என்றான். எத்தனையோ பிரசவங்களையும் பிள்ளைகளையும் கண்ட மேஸ்திரி, இத்தனை காத்திரமும், இத்தகைய நீளமும் ஒரு பிள்ளையும் பிறக்கக் கண்டதில்லை என்று சொன்னான். இப்படி ஒரு அசுரப் பிள்ளையைத் தந்த கடவுள், ஆயுள் பாகத்தில் அதை அற்பாயுசாக வைத்த ரகசியம்தான் என்ன என்கிற கேள்வி பிள்ளையின் மனத்தில் மட்டுமல்ல அங்கிருந்த பலரின் மனசிலும் எழுந்து தளும்பிக் கொண்டுதான் இருந்தது.
ஆனந்தரங்கரைப் பார்த்துப் பேசிப் போக நாகாபரணப் பண்டிதர் வந்திருந்தார். பண்டிதர், காசிக்கும் ராமேசுவரத்துக்கும் §க்ஷத்ராடானம் செய்து திரும்பியிருந்தார். அந்திப்போதில் அவர் பிள்ளையின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார்.
'பண்டித சாமி, தந்தி ஜபம் இங்கனேயே பண்ணலாமே!'' என்று வேண்டிக் கொண்டாள் மங்கை. பண்டிதரும் சம்மதித்து அங்ஙனமே தம் சந்தி பூஜையைச் செய்யத் தொங்கினார். அதற்குள் ஆள்விட்டனுப்பி பிள்ளைக்கும் சேதி சொல்லச் சொன்னாள் மங்கை. பாக்கு மண்டியிலிருந்து சீக்கிரமே பிளையும் வீடு வந்து சேர்ந்தார். நெடுநாள் பிரிந்திருந்த சிநேகிதரைக் காண்பதில் பிள்ளைக்கு மகிழ்ச்சியுண்டாயிற்று. மங்கை §க்ஷத்ராடானம் செய்த புண்ணியர் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து கொண்டாள். இரவு போஜனம் முடித்துக் கொண்டு அவர்கள் மச்சுக்குப் போனார்கள். இவர்கள் வசதி கருதி, மச்சில் பாயும் தலையணைகளும் போடப்பட்டிருந்தன. வெற்றிலைச் செல்லம் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. நிலா ஒய்யாரமாக வீசிக்கொண்டிருந்தது. பிள்ள¨ கேட்டார் :
''பயணம் எல்லாம் சுகம்தானே?''
''பர சுகம். மனசு நிரம்பிக் கிடக்கிறது''
''ஆதமலாபம்னு சொல்றது இதைத்தானே. அது சரி. என்ன என்ன விநோதங்களைப் பார்த்தீர்?''
''விநோதம்னு எனக்கு ஒண்ணும் தோணலை. எல்லாம், எல்லாத்திலேயும் என்னைத்தான் பார்த்தேன்.''
வெற்றிலையைத் துடைத்து நரம்பெடுத்து வாயில் போட்டுக் கொண்டார் பிள்ளை. அப்புறம் சொன்னார்.
''சத்யம்தான். எல்லாத்திலேயும் தன்னைப் பார்க்கிறதுதான் லாபம். இந்த லாபத்துக்குத்தான் அத்தனை தொழிலையும் செய்து பார்க்க வேண்டியிருக்கு.''
பண்டிதர் அதை ஒப்புக்கொள்பவர் போல அமைதியாக இருந்தார். பிறகு விசாரித்தார்.
''ஆர்க்காடு விவகாரம்தான் ஒரே அமளி துமளியாக இருக்கிறதே...''
''உள்ளது. எல்லாம் அரியாசன விளையாட்டுதான். எல்லார்க்கும் ராஜா ஆகவேணும் என்கிற ஆசை. ஆர்க்காட்டு நவாபுக்கு வேலூர் கோட்டையிலிருக்கும் மூச்¡த்அலியென்கிறவன் ஒரு மருமகன். சந்தா சாயபு மாதிரி அவனும் ஒரு பெண்ணைக் கட்டியிருக்கான். சந்தா சாயபு தான் மராத்தியரிடம் சிக்கி சதாரா சிறையில் இருக்கிறார். நவாப் சப்தர் அலியைக் கொலை பண்ணிப் போட்டார்கள். ஆட்சி பண்ண அரசன் வேண்டுமே. மீசையுள்ளவன் எல்லாம் தாசில் பண்ண வேணும் என்கிறான். இந்த மூர்சாத், யானைகளையும் குதிரைகளையும் சேர்த்து வச்சுக் கொண்டு சண்டைக்கு இறங்கியிருக்கிறான். இந்த மனுஷர்கள் சண்டை பண்ணட்டும். ஆனால் ஜனங்களை ஹிம்சை பண்ணுகிறார்களே, அதைத்தான் பார்க்க சகிக்கவில்லை. குதிரைக்காரர்கள் கிராமங்களையெல்லாம் கொள்ளையிட்டு அடித்துப் பறித்து தானிய தவசம், உடமை உப்பந்தி, தட்டுமுட்டுகள் சகலமும் கொள்ளையிட்டது மட்டுமல்லாமல், ஊருக்குள் நெருப்பைப் போட்டு வீடு வாசல்கள் எல்லாம் கொளுத்தி, நிர் தூளி பண்ணி சுத்த சூனியமாக்கிப் போட்டார்கள். திருடன் வந்தா வீட்டில் விளக்குமாறு மட்டிலாவது மிஞ்சும். தீ வந்தால்¡ என்ன மிஞ்சும்? வழுதாவூர் கோட்டையிலே இருக்கிற குதிரைக்காரர் புறப்பட்டு அருகாமையிலிருக்கிற பள் ளிப்பட்டுக்களிலும், கிராமங்கள் குப்பம் குடிகாடு சகலமும் கொள்ளையிட்டு நிர்தூளி பண்ணிப் போட்டார்கள். கொள்ளையடிப்பதில் ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைத்தவன் இல்லை. ஆக மொத்தத்தில் எல்லாருமே கொள்ளைக்காரர்கள்தாம், பண்டிதரே !''
''ஜனங்களை இவர்கள் என்னதான் நினைத்தார்கள்?''
''வரி கட்டவும், அவர்கள் தின்னப் பரிடவும் ஆன ஜடப் பொருளாக நினைக்கிறார்கள்.''
சற்று நேரம் அமைதியாக இருந்து பிள்ளை தொடர்ந்தார் :
''இப்படி நாலாவிதமும் இராச்சியமும் கெட்டு, இராச்சியங்களில் உண்டான ஜனங்கள் எல்லாரும் ரொம்பவும் கெட்டு நொந்து சர்வசோபாரமும் தோற்று கட்டத் துணியும் குடிக்கக் கஞ்சியும் இல்லாமல் ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகாமல் முகமிட்ட வாக்கிலே அலைஞ்சு போனார்கள். முன்னாலே மராட்டியர் கலகத்திலே கூட இப்படி அநியாயமில்லை. அப்போவானாலும் அவரவர் பறிகொடுத்தது போக கொஞ்சநஞ்சம் வைத்திருந்தார்கள். இப்போ ஜனங்களிடம் உயிர் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது.''
''பெரிய துபாஷ் கனகராய முதலியாரைப் பிடித்துக் கொண்டு ரொம்பத் தொந்தரை செய்தார்களாமே.''
''ஆமாம். பாவம், பெரிய மனுஷ்யர். வாயில் நுரை தள்ளி விட்டது.''
மங்கை அம்மாள் தட்டில் வைத்த மாலைப்பழமும், சுண்டக்காய்ச்சிய பாலும் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். பால் சிவந்திருந்தது.சீனாக் கல்கண்டும், பனைவெல்லமும், கொஞ்சம் குங்குமப்பூ, கொஞ்சம் கிராம்புத்தூள், கொஞ்சம் ஏலம், இரண்டு இழைப்பு இழைத்த சுடுக்காய் மசியல், துளி கற்பூரம் ஆகியவை போட்ட சுண்டக்காய்ச்சிய பசும்பால், பாயசமாகிப் போய்ப் பருக மிகுந்த ருசியாக இருந்தது.
''பெரியவருக்கு நேர்ந்த துன்பம் கொஞ்சமில்லை. நேற்று சாயங்காலம் நாலு மணிக்கு வழுதாவூரிலேயிருந்து அசரத்து உசேன் சாயபு அவர்கள் தம்பி மகமது ஜமால் சாயபு ஐநூறு குதிரையுடனே ஒழுகரையிலே வந்து இறங்கி துரை அவர்களுக்கு கபுறு சொல்லி அனுப்பியிருந்தார்கள். அதன் பேரிலே இவ்விடத்திலேயிருந்து கனகராய முதலியாரை அனுப்பி வைத்தார்கள். கண்டுபேசி வரச் சொல்லி அவரும் பயணப்பட்டு ஒழுகரைக்குப் போய் ஜமால் முகமதுவைக் கண்டுபேசி அனுப்பி வைத்துக் கொண்டு வரச்சே, எல்லப்பன் சாவடி யண்டையிலே நாற்பது ஐம்பது குதிரைக்காரர், துலுக்கர் இறங்கியிருந்தவர்கள் கனகராய முதலியாரை வழிமறித்தார்கள். மறித்தமட்டிலே, பல்லக்கை நிறுத்திய உடனே அங்கேயிருந்த குதிரைக்காரர் எல்லோரும் வந்து சுற்றிக்கொண்டு, அதிலே ஒருததன் முதலியாரின் மடியைப் பிடித்துக் கொண்டு, சேனே அலாக்கு பண்ணினார்கள். அது எதினாலே என்றால், அந்த வீரர்கள் முன்னாலே சந்தா சாயபு அவர்களைச் சேவித்து, அவர்களுக்கு சந்தா சாயபு அவர்கள் பேரிலே சம்பளம் வர வேண்டியிருந்தது. அது நிமித்தமாய், சந்தா சாயபு எழுதிக் கொடுத்த கடுதாசியை வைத்தக் கொண்டு அந்தக் கடுதாசியை கனகராய முதலியார் முன்னே போட்டு, சந்தாசாயபு அவர்களின் பெண்ஜாதி குடும ்பம் உங்களூரிலே இருக்கிறதே. புதுச்சேரிக்கு துரைத்தனம் நீயாமே, இந்தக் கடுதாசியை எடுத்துக்கொண்டு உண்டான பணத்தை நீர் எங்களுக்குக் கொடுத்துவிட்ட அப்புறம் நீர் போய் அவர்கள் கையிலே வாங்கிக் கொள்ளும் என்கிறதாய், அந்த மட்டில விடுகிறது இல்லை என்கிறதாய் ஒருத்தன் மடியைப் பிடித்துக் கொண்டு, ஒருத்தன் கட்டாரிய உருவப்போனவுடனே, முதலியாருக்கு நிர்ஜீவனாய்ப் போய், உத்தரவு கொடுக்கிறதுக்கு நாவெழாமல், தத்துத் தப்பித் தக்கவென்ற தடுமாறிப்போய், நாவிலே, வாயிலே, பல்லிலே தண்ணியில்லாமல் சித்தப்பிரமை போலே பல்லக்கிலே உட்கார்ந்திருந்த இடத்திலே இருந்து போனார்.
அப்படியிருக்கச்சே, உசேன் சாயபு மருமகன் இந்த சமாசாரம் கேட்டு குதிரை போட்டுக்கொண்டு ஓடிவந்து கனகராய முதலியாரை மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற துலுக்கரை, சமாதானம் பண்ணி, அவர்களுக்கு ரொம்பவும் உடன்படிக்கை சொல்லிவிட்டு மெல்லென முதலியாரை அப்புறப்படுத்தி விட்டான். முதலியார் கெட்டேன் பிழைத்தேன் என்று ஒரு நிப்பிரமமாய் கெஷனியிலே வந்து விழுந்தார்.''
''பாவம், சர்க்கரை நோயாளிக்கு இந்தக் கெதி நேர்ந்ததே.''
நிலா, உக்ரமாகச் சஞ்சாரம் பண்ணி உலகைத் தன் சோபையில் நனைத்துக் கொண்டிருந்தது. பண்டிதர் கேட்டார்.
''குவர்னர் துரை மனம் தேறிவிட்டாரா?''
''காலம் என்கிற மருத்துவச்சி, எல்லாக் காயங்களுக்கும் கட்டுப்போட்டுச் சொஸ்தமாக்கிக் கொள்வாள்.''
''அது உள்ளது'' என்றார் பண்டிதர்.
பிரபஞ்சன் |