எண்பதுகளில் எழுத ஆரம்பித்த பிரபஞ்சன் பாண்டிச்சேரிக்காரர். அரசியல் நையாண்டி தொனிக்க இவரது பல கதைகள் சமகால அரசியலை விமர்சிக்கும் போக்குடன் எழுதப்பட்டிருக்கும்.
எளிமையான மொழி நடை, விறுவிறுப்புடன் கூடிய கதை நகர்த்தல்கள், பாஸிட்டிவான அனுகுமுறை இதெல்லாம் பிரபஞ்சனின் பலங்கள். விமர்சகர்கள் பலரும் இவரது எழுத்துக்களைத் தவிர்க்கவே முடியாதவை, முக்கியத்துவம் வாய்ந்தவை என்றே குறிப் பிட்டிருக்கின்றனர்.
'கனவு மெய்ப்பட வேண்டும்', 'நாளை ஒரு பூ மலரும்', 'மானுடம் வெல்லும்', 'மகாநதி', 'சுகபோகத் தீவுகள்', 'ஆண்களும் பெண்களும்', 'வானம் வசப்படும்' போன்ற நாவல்கள் பிரபஞ்சனின் எழுத்துக்களுள் குறிப்பிடத் தக்கவை.
'ஒரு மனுஷி', 'நேற்று மனிதர்கள்', 'ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்', 'பிரபஞ்சன் கதைகள்' போன்ற சிறுகதைத் தொகுப்புக்களும் குறிப் பிடத்தக்கவை.
'ஈரோடு தமிழர் உயிரோடு' என்ற பெரியார் பற்றிய கவிதை நூலும் பிரபஞ்சனின் படைப்பாளுமைக்கு உதாரணம் கூறுகிற ஒன்று.
நவீன நாடகத் துறையிலும் பிரபஞ்சனின் பங்களிப்பு கணிசமான அளவு இருந்திருக்கிறது. இவரது 'முட்டை' நாடகப் பிரதி தமிழகத்தின் பல குழுக்களாலும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
சாகித்ய அகாதெமி பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, பாண்டிச்சேரி நினைவுப் பரிசு போன்ற பரிசுகளை இவருடைய எழுத்துக்கள் பெற்றுள்ளன.
இவரது 'மானுடம் வெல்லும்' நாவல் பலராலும் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மானுடம் வெல்லும் அசலான வரலாற்று நாவல். பிரபஞ்சனின் எழுத்துக்களில் சற்று அதி உணர்வு தலைதூக்குவது என்றாலும் இந்நாவல் அதற்கு விதி விலக்கு.
'நாளை ஒரு பூ மலரும்' நாவல் தொன்னூறு களில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் வாழ்வைப் பூடகமாகப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்தது. இந் நாவல் சமூகம் குறித்துச் சிந்திக்கிறவர்களிடையே தார்மீகக் கோபத் தைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டிருக்கும்.
கேரளத் தொலைக்காட்சியில் இவருடைய கதைகள் 13 வாரத் தொடராக வெளியானது. ராஜன் சர்மா என்பவர் இந்தத் தொடரை இயக்கினார்.
தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிகளிலும் இவருடைய சிறுகதைகள் அரைமணி நேர நாடகங்களாக வெளியாகியுள்ளன.
பிரபஞ்சனின் எழுத்துக்கள் பல பிரபலமான வணிக இதழ்களிலும் தொடர்கதைகளாக வெளியாகி வாசக வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், 'நாளை ஒரு பூ மலரும்' நாவல் பாக்யா இதழில் வெளியாகிப் பெற்ற வரவேற்பைச் சொல்லலாம்.
பிரபஞ்சனின் சித்திரிக்கும் உலகம் பிரச்சனை களுக்கு நடுவிலும் நம்பிக்கையான மற்றுமொரு உலகத்தைத் தேட நம்பிக்கை யைத் தருவது. சமகால அரசியல் போக்குகளை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுபவையாக அமைந்திருக்கும்.
இந்த உலகம் அபத்தமானதுதான். ஆனால் அந்த அபத்தத்தை எதிர்த்து இயங்கிக் கொண்டிருப்பதில்தான் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது என்று ஆல்பர்ட் காம்யூ சொல்வதைப் போலத்தான் பிரபஞ்சனின் எழுத்துக்களும் அபத்தமான இந்த உலகத்திலும் நம்பிக்கை யைத் தந்து ஆசுவாசப்படுத்துபவைகள்.
சரவணன் |