செப்டம்பர் 11
செப்டம்பர் 11 என்றால் பாரதியின் நினைவு வரும்; ஆனால் இனிமேல் உலகெங்கும் அந்த நாள் பேரழிவையும் அவலத்தையுமே குறிப்பதாய் மாறிவிட்டது. பயங்கரவாதம், அடிப்படைவாதம், மத வெறி .. இவ்வாறு எப்பெயரிட்டு அழைத்தாலும் சரி - மனித நேயம் சிறிதுமற்று தன்னினம் சாராதோரை எதிரிகளாக நினைத்து அவர்களை அழிப்பதற்கு வாழ்வில் பெரும்பகுதியை செலவிடுவது மிகவும் பரவலாக நிகழ்கின்றதாக ஆகிவிட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், நண்பர்களுக்கும், அமெரிக்க நாட்டினருக்கும் எனது மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன்.

இந்தக் கொடுமையைத் தவிர்த்திருக்க முடியுமா? இந்த பயங்கரவாதத்தை வளர்ப்பதில் அமெரிக்காவின் பங்கு என்ன? போன்ற கேள்விகளை ஆராய்வது மிகவும் அவசியம். உலகின் ஒரே வல்லரசு என்ற நிலையில் அமெரிக்கா கவனமாகவும் தொலை நோக்குடனும் செயல்பட வேண்டும். மிதமிஞ்சிய வருத்தமும், கோபமும் அதன் செயல்களை நிச்சயிப்பதற்கு இடங் கொடுக்கக்கூடாது.

குறுகிய மனப்போக்கை வளர்க்கின்ற எந்த இயக்கத்தையும் அவை உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் உலக அரசுகள் யாவும் ஒருங்கிணைந்து அடக்க வேண்டியது இன்றைய முதல் தேவை. குறுகிய காலக்கண்ணோட்டதைத் தவிர்ப்பதும் அவசியம். எதிரியின் எதிரி எனது நண்பன் போன்ற கோட்பாடுகள் நிராகரிக்கப்படவேண்டும். பிற இன, மொழி, கலாசாரங்களைப் புரிந்துகொள்வதும் அவற்றை மதிப்பதும் உலகெங்கும் நிகழ வேண்டும்.

இது நடக்காத ஒன்று என்று சொல்வோரையும், இத்தகையை இயக்கங்களை போர் மூலமே அழிக்க முடியும் என்போரையும் வரலாற்றைப் புரட்டிப்பாருங்கள் என்று சொல்லவேண்டும். எந்த ஒரு மக்களியக்கமும் - அது சரியானதோ, தவறானதோ - கடும் நடவடிக்கைகளினால் அழிந்தது இல்லை. இவ்வாறான பிரச்சினைகளில் இரு பக்கங்களும் இறந்தவர்களை தியாகிகளாக்கி அவர்கள் பெயரைச்சொல்லி மேலும் பலரை மாய்ப்பதுதான் நடந்திருக்கிறது - "Those who forget history are condemned to repeat it".

செப். 11 இல் இறந்தவர்கள் இது போன்ற பிரச்சினைகளால் மாண்ட கடைசி சிலராக இருக்கும் வகையில் உலகத்தை மாற்றுவது ஒன்றே அவர்களுக்கும் இது போல் மடிந்த பிறருக்கும் நாளைய சமுதாயத்திற்கும் நாம் செய்யக்கூடிய, செய்ய வேண்டிய கடமை.

இன்றைய காலகட்டத்தில் செய்யவேண்டிய மீட்பு மற்றும் உதவிப்பணிகளில் உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வந்து செயல்படுகின்றன. FETNA மற்றும் New York Tamil Sangam போன்ற தமிழ்/இந்தியா சார்ந்த அமைப்புகளும் இதில் இறங்கியுள்ளன. இந்த இதழிலும், தென்றல் வலைத்தளத்திலும் விபரங்களைக் காணலாம்

******


அமளி துமளி அரசியலில் அடுத்த காட்சி அரங்கேறி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் நடந்தவை தமிழ்நாட்டு அரசியல் அதன் சினிமா மூலங்களை இன்னமும் மறக்கவில்லை என்பதை அடிக்கோடிட்டிருக்கிறது. இது போன்ற எதிர்பாராத திருப்பங்கள் சினிமாவுக்கே சவால் விடுகின்றன.

******


இத்தனை மாற்றங்களுக்கு நடுவில் மாறாதது, சாதி அரசியல்தான். புதிய முதலமைச்சர் எங்கள் சாதி என்று சிலர் கொண்டாடுகிறார்கள்; பிற சாதியினர் வருந்துகின்றனர் என்பதே பெரும் செய்தியாக இருக்கிற அவல நிலை மனதை உறுத்துகிறது, என்று இந்தக்கொடுமையில் இருந்து நாம் மீளப்போகிறோமோ தெரியவில்லை? இந்த அரக்கனை அழித்து இன்னுமோர் தீபாவளி கொண்டாடவேண்டும்.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
அக்டோபர் 2001

© TamilOnline.com