கம்பனைக் காண்போம்
“கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று தமிழ் நாட்டிற்குப் பெருமை தந்த புலவராகப் பாரதியாரால் போற்றப் பட்டவர் கம்பர். உலக அறிஞர்கள் கம்ப ராமாயணத் தை மிகச் சிறந்த உலகப் பேரிலக்கியங்களின் வரிசையில் தலையாய இடத்தில் வைத்துப் போற்றுவர். சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் கடந்த சூன் மாதம் வட அமெரிக்கா விலேயே முதன் முறையாகக் கம்பனுக்கு விழாவெடுத்துப் போற்றியது. அதைத் தொடர்ந்து, நவம்பர் 4ஆம் நாள் முதல், கலி·போர்னியா தமிழ்க் கல்லூரி (California Tamil Academy, formerly TNF Tamil School,Cupertino) கம்ப ராமாயண வகுப்புகளை ஏற்பாடு செய்திருக்கிறது.

கம்பனை ஏன் கற்க வேண்டும் என்ற கேள்வியைத் தமிழறிஞர்களிடம் தொடுத்தோம். பர்க்கெலி, கலி·போர்னியா பல்கலைக் கழத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் அவர்கள், டி. எஸ். எலியட்டின் புகழ் பெற்ற “எது செவ்விலக்கியம்” (What is a Classic, T.S. Eliot (1944)) என்ற கட்டுரையை நினைவு கூர்ந்தார். “ஒரு முழுமையான செவ்விலக்கியம் என்பதில் அந்த மொழி பேசும் மாந்தரின் திறம் முழுதும் புலப்படும். அத்திறம் அந்த மொழியில் மட்டுமே முழுமையாகப் புலப்படுத்த முடியும். அத்தகைய செவ்விலக்கியத்தில் அந்த மக்களின் உணர்வு களின் எல்லைகளும் இயல்புகளும் முழுமையாக ஒளிரும்.” இந்திய இலக்கியங்கள் அனைத்திலும் சமஸ்கிருத மகாபாரதமும், கம்பனின் தமிழ் இராமாயணமும் மட்டுமே டி. எஸ். எலியட்டின் அளவுகோலை விஞ்சுவன என்கிறார் ஹார்ட்.

“வால்மீகி இயற்றிய ஆதி காவியத்தை ஒட்டிக் கம்பர் தன் காப்பியத்தை எழுதியபோதிலும், கம்பராமாயணம் மொழி பெயர்ப்பும் அல்ல; வெறுந்தழுவலும் அல்ல. ஒரு புதுக் காப்பியம் போலவே விளங்குமாறு கம்பர் தம் கற்பனைத் திறனால் படைத்துத் தந்துள்ளார்” என்றார் மு. வரதராசனார். இதையே எதிரொலிக்கிறார் பேரா. ஹார்ட். கம்பனின் சொல்லோவியங்கள் காட்டும் மனித நிலைகளின் வகைகளும், செழுமைகளும், வரம்புகளும், பரப்பும் வெகு சில பேரிலக்கியங்களில் மட்டுமே காண முடியும் என்கிறார். குக்கிராமத்துக் கோழிச் சண்டையாயிருந்தாலும், மெய்யியல் தத்துவம், கடவுளின் இயல்பை விவரிப்பதாயிருந் தாலும், இரண்டுமே கம்பனுக்குக் கை வந்த கலை.

“இராமாயணம் தமிழரின் அடிப்படைப் பண்பாட்டுக் கூறான கற்பைக் கதையின் கருவாகப் போற்றியுள்ளது; முல்லைத் திணை யின் தலைவனும் தலைவியுமான திருமாலும் திருமகளும் காடும் காடும் சார்ந்த நிலத்தில் முல்லையின் ஒழுக்கமான கற்பை உரிப் பொருளாகக் கொண்ட இராமாயணம் அடிப் படையில் தமிழர் காப்பியமே. கம்பன் வால்மீகி யினும் நுணுகித் தமிழ்ப் பண்பாட்டின் ஆழத்தைச் சித்தரித் துள்ளான்.” என்கிறார் அட்லாண்டா அறிஞர் பெரியண்ணன் சந்திர சேகரன்.

தமிழ்ச் சொற்களின் ஓசை வளத்தையும் பொருள் வளத்தையும் நன்றாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் கம்பர் என்பார் மு. வ. பேரா. ஹார்ட் ஆமென்கிறார். “எனக்குத் தெரிந்த எந்த மொழியிலும் ஓசை நயத்தைக் கையாளுவதில் கம்பனை விஞ்சி யவரைக் கண்டதில்லை” என்கிறார். கம்பனின் சொல்லாற்றலை ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரோடு மட்டுமே ஒப்பிடலாம். இதை எல்லாம் விட அவர் கம்பனைத் தனிப் பெருந்தமிழ்க் கவிஞனாகக் காண்கிறார் ஹார்ட். பன்னிரண்டாம் நூற்றாண்டின் தமிழ் மக்களின் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையிலேயே கம்பனின் காவியம் படைக்கப் பெற்றிருக்கிறது என்கிறார் அவர். தமிழர்களின் இரு பெரும் கருப்பொருள்களாகிய அறம், மறம் என்ற இரண்டையும் கம்பன் தன் காப்பியத் தலைவர்களான இராமன், இராவணன் என்ற பாத்திரங்களின் சூழலில் வடித்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஹார்ட்.

கம்பனைப் படிப்பதென்பது தமிழர்களின் எண்ணப் பரப்புகளில் பயணம் மேற்கொள்வது போல்; இருளூடாகத் தெய்வ நோக்கில் ஐயமுற்றுப் பின் இறுதியில் வாழ்வைப் பற்றியும், மக்கள் துன்பத்தையும் ஆழமாக அறிந்து, பல்வகை மனித அனுபவங்களை என்பதை மேன்மையாக உணரலாம். உண்மையிலே தமிழனாக வாழ்வதின் பொருளென்ன என்பதைக் கண்டறியக் கம்பனைப் படியுங்கள் என்று வலியுறுத்துகிறார் பேரா. ஹார்ட்.

கம்பனைக் கற்க விரும்பும் தமிழர்களுக்குக் கலி·போர்னியா தமிழ்க்கல்லூரியின் வகுப்புகள் ஒரு நல்ல வாய்ப்பு.

நேரம்: நவம்பர் 4, 2001 முதல்
ஞாயிற்றுக் கிழமை காலை 11 முதல் 12 வரை.
இடம்: அறை எண் L73, டி ஆன்சா கல்லூரி, கூப்பர்ட்டினோ

ஆசிரியர்: கவிஞர் மதுரபாரதி (Chennaionline.com)

கவிஞர் மதுரபாரதி அண்மையில் சென்னை ஆன்லைன்.வணி (Chennaionline.com) என்ற வலைவாசல் மற்றும் வலையிதழில் கருப் பொருள் தலைமையாசிரியராய்ப் பணியாற் றியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையுள்ள இவரது கவிதைகளையும் ஏனைய படைப்புகளையும் இணையத்தில் பரவலாகக் காணலாம்.

அனுமதி இலவசம்.
மேற்கொண்டு விவரங்களுக்கு அணுகுக:
Ganesh Babu @ (408) 260 9721, sabi2000@yahoo.com

© TamilOnline.com