சாகசம் புரிந்த மழலைப் பட்டாளம்....
அந்த மூன்று குழந்தைகளும் வந்து மேடையில் அமர்ந்துகொண்டன. அவர்களது ஆசிரியர் ஒரு ஸ்ருதிப் பெட்டியை முடுக்கிவிட்டுப் போனார். ஸா... பா... ஸா... ஸ்ருதி காற்றில் கலந்தது. அவை மிக சிரத்தையாகப் பாட ஆரம்பித்தன...

"பாருக்குள்ளே நல்ல நாடு -
எங்கள் பாரத நாடு.."


மழலைச்சொல்லே குழலைவிட இனிமை என்றால், அந்த மழலைகளின் கீதம்..? எத்தனை இனிமை.! பாரதி இருந்திருந்தால் அமெரிக்க மண்ணில் வளரும் இந்தக் குழந்தைகளின் கனிவு கொடுக்கும் பாட்டைக் கேட்டு மகிழ்ந்திருப்பார். ஆம், அந்த மூன்று குழந்தைகளைப் பார்த்து மட்டுமல்ல... இது போன்று எண்ணற்ற குழந்தைகளைப் பார்த்து வியந்திருப்பார். ஒவ்வொரு குழந்தையிடமும் எத்தனை திறமைகள்! பே ஏரியா தமிழ் மன்றம் நடத்திய குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் இந்தக் குழந்தைகளின் திறமைகளையும், அவர்களின் உழைப்பையும் பார்த்து நிச்சயம் வியந்திருப்பர்.

கணீரென்று ஒலித்த பாரதியின் பாடல்கள். ரசிக்கும் படியான சாஸ்திரீய பரத நடனம். ஜனரஞ்சகமான தாள கதியில் நாட்டுப்புற நடனம். நவீன நடனம். தமிழ்க் கலாச்சாரம் பற்றியும், நேரு பற்றியும் தமிழ்ப் பேச்சு. ஜப்பானிய கராத்தே கலை. சீதை சுயம்வர நாட்டிய நாடகம். இன்னும் ஹாஸ்யம், நடிப்பு, மாறு வேட ஊர்வலம், குழுப் பாடல், விளக்கு நடனம்... சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனையையும் வழங்கியவர்கள் - பே ஏரியா குழந்தைகள்தான். எல்லாம் 2-3 வயதிலிருந்து, பத்து பதினைந்து வயதிற்குள்ளான குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள்.

தமிழ் நாட்டிலேயே தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாகக் கருதும் இக்காலத்தில் அமெரிக்க மண்ணில் வந்து வருகிறதோ இல்லையோ தமிழில் பேச, பாட இக்குழந்தைகள் எடுத்துக்கொண்ட முயற்சி ஆச்சர் யப்பட வைக்கிறது. இதன் ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னும் அந்தக் குழந்தையின் விடா முயற்சி, அதன் பெற்றோரின் ஊக்குவிப்பு, ஆதரவு, அக்குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்த குருவின் உழைப்பு எல்லாம் அடக்கம். இதற்காக இவர்கள் எல்லாம் செலவிட்ட நேரமும் உழைப்பும் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. எல்லாக் குழந்தைகளும் அதனதனால் முடிந்தவற்றை மிகச் சிறப்பாக செய்துவிட்டுப் போயின. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கிய தமிழ் மன்றத்தையும் பாராட்டவேண்டும்.

நவம்பர் 10, 2001 சனிக்கிழமையன்று, க்யூபர்டீ னோ பள்ளி அரங்கத்தில் இந்தக் குழந்தைகள் நிகழ்ச்சி நடந்தது. (தமிழ் மன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக) சரியாக நாலு மணிக்குத் தொடங்கிவிட்டார்கள். அன்று பெய்த மழை கூட இதைச் சொன்னது. மேடையில் தோன்றும் ஆவல் பொங்க இருந்த குழந்தைகளுக்கென பெயரெழுதி தனியாக முன்வரிசை நாற்காலிகள் ஒதுக்கப் பட்டிருந்ததும், அவர்களை வரிசையாக ஒழுங்குடன் மேடையேற்றி இறக்கவென்றே சிலர் நியமிக்கப் பட்டிருந்ததும் இந்த வருடத்திய வரவேற்கத்தக்க புது முயற்சிகள். மேடையேற வந்த எல்லாக் குழந்தை களையும் குறுகிய ஒப்பனை அறையில் (Green room) அடைக்காமல் அவர்களையும் பார்வையாளர்களுடன் சேர்த்து அமரவைத்தது, மேடை நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த குழந்தைகளுக்கு ஊக்கமாக இருந் திருக்க வேண்டும். இதன் மூலம் தொடக்கத்தில் என்றுமிருக்கும் காலியிருக்கைகளும் கால தாமதமும் இருக்கவில்லை. இரு பதின்வயதுச் சிறுமிகளை வைத்து நிகழ்ச்சியைத் தொகுத்தது புதுமை. முடிவில், பங்குகொண்ட அனைத்துக் குழந்தைகளுக் கும் நில்கிரீஸ் வழங்கிய இனிப்பினால் ஏற்பட்டத் தித்திப்பு எல்லாக் குழந்தைகளிடமும் தெரிந்தது.

குறைகள் என்று பார்த்தால், நடுவில் நிகழ்ச்சிகளின் வரிசையில் இருந்த குழப்பங்களைத் தவிர்த்திருக் கலாம். தங்கள் குழ்ந்தையின் நிகழ்ச்சி முடிந்தவுடன் கிளம்பிவிட்ட சில பெற்றோர்கள் முழு நிகழ்ச்சி யையும் மற்ற குழந்தைகளுக்காக அமர்ந்து பார்த் திருக்கலாம். சிறுவர்களையும் சிறுமிகளையும் ஆட வைக்க "அடடா அல்வா துண்டு இடுப்பு" போன்ற விரச வரிகள் வராத திரைப்படப் பாடல்களைத் தேர்வு செய்யலாம். வருகிற 2002 மார்ச் மாதம் தமிழ் மன்றம் மற்றுமொரு மிகப்பெரிய குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தப் போவதாக ஒரு திட்டம் வைத்திருக்கிறது. இவற்றை கவனத்தில் கொள்வார்கள் என நம்பு கிறேன்.

நிகழ்ச்சி முடிவில் அனைத்துக் குழந்தைகளும் மேடையில் ஏறி அந்தச் சிறுவனுக்குப் பக்கபலமாய் நின்று கொண்டன. அவன் பாட ஆரம்பித்தான்...

"பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே!
எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்."


பாரதி சொன்னதை நாம் பின்பற்றுகிறோமோ இல்லையோ, அந்தக் குழந்தைகள் ஓரினமாய் அன்று பின்பற்றி நின்றுகொண்டிருந்தது உண்மை.

மனுபாரதி

© TamilOnline.com