தமிழ் தென்றல் அமெரிக்கா முழுவதும் தவழ்ந்து குளிர் தர எனது வாழ்த்துக்கள். படிக்க படிக்க திகட்டாத திறந்த புத்தகம்.
சரஸ்வதி தியாகராஜன், அட்லாண்டா
*****
சில நாட்களுக்கு முன்பு USA வந்துள்ள எனக்கு 'தென்றல்' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலைவன பயணத்தில் குளிர் சோலையை கண்ட சுகம். பக்கங்கள் அனைத்தும் பயனுள்ளவை. கதிரவனின் 'வேலை போனால் (லும்) கவலை வேண்டாம் என்று ஆறுதல் அளிக்கும் கட்டுரை. ராசிபலன், சமையல், கடி ஜோக்ஸ், அரசியல், சினிமா, சிறுகதை, பிரபல எழுத்தாளர்களை பற்றி & அவர்கள் எழுதிய கதைகள், தலை சிறந்த தமிழர்களை பாராட்டும் கட்டுரைகள்... அப்பப்பா... உளமார்ந்த பாராட்டுக்கள்.
பணக்கார நாட்டிலே பாரதத்தின் பண்புகளை தெவிட்டாமல் தெளிவாக தேனினும் இனிதாக அறிவுக்கு விருந்தாக தமிழுக்கு தொண்டாக இலவச மலராக மனம் வீசும் ''தென்றல்''
இந்திரா காசிநாதன், சன்னிவேல்
*****
அக்டோபர் மாத இதழ் கிடைக்கப் பெற்றேன். நன்றி. அமெரிக்கா மீதான தீவிரவாதத் தாக்குதல் (செப்-11) பற்றிய கட்டுரை மிக உருக்கமான வகையில் அமைந்திருந்தது. சுஜாதா மூர்த்தி அவர்களுடனான பேட்டி, அமெரிக்காவில் சிறுபான் மையினர் எத்தனை வெற்றிகரமாகச் செயல்படு கிறார்கள் என்பதற்கான மற்றுமோர் எடுத்துக் காட்டாக அமைந்தது. பேட்டி கண்டவர் சிறப்பான வகையில் கேள்விகளைத் தொடுத்ததை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஆதித்தனார் பற்றிய கட்டுரை, தமிழில் வெகுஜனப் பத்திரிகை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும் பணியை வெளிச்சமிடுவதாக அமைந்தது. இந்த இதழில் அச்சுப் பிழைகள் வெகுவாகக் குறைந்திருப்பது வரவேற்கத் தக்கது. தென்றல் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்பதில் ஐயமில்லை.
விஜயா திருவேங்கடம், சென்னை.
*****
இந்த மாதம்தான் 'தென்றல்' இதழ் எங்களுக்கு அறிமுகமானது. படித்து ரசித்தோம், மிக்க மகிழ்ச்சி. நாங்கள் விரும்பும் அத்தனை தகவல்களையும் உள்ளடக்கி வெளிவருவதால், தென்றலின் சந்தா தாரர்களில் ஒருவராக விரும்புகிறோம். அதற்கான விவரங்களை எனக்குத் தெரியப்படுத்தவும். நன்றி.
ஷீலா ஸ்ரீநிவாஸ்
*****
உடல்நலம் குன்றிய எனது அமெரிக்க நண்பனைப் பார்க்க வந்த போது, தென்றலைத் தழுவும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன். இதழில் இடம் பெற்றிருந்த பல கட்டுரைகள் பாராட்டும்படியாக அமைந்திருந்தன. வாழ்த்துக்கள். மிகவும் நன்றி.
ஆண்டிப் பண்டாரம் (முன்பு: சேதுராமன்!)
*****
கீதா பென்னெட்டின் 'வித்தியாசம்' கதை, மனதை மிகவும் நெகிழ வைத்தது. அருமையான படைப்பு.
திருமதி. பஞ்சநாதன், ·பிரிமாண்ட், கலிபோர்னியா.
*****
தமிழை வளர்க்க தாங்கள் நடத்தி வரும் தென்றல் பத்திரிகையின் இம்மாத வெளியீட்டைப் படிக்க நேர்ந்து அதனால் மனமகிழ்வோடு இதனை எழுதுகிறேன். உங்களுக்கும், உங்கள் குழுவினருக் கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் பணி வரும் ஆண்டுகளில் மேல் மேலும் சிறக்க இறையருள் துணை நிற்கட்டும்.
விஜயலட்சுமி சுப்ரமணியன், கலி·போர்னியா |