கீதாபென்னெட் பக்கம்
தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களுடன் 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா?'' என்ற கேள்வியுடன் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

அமெரிக்காவிற்கு வந்த பிறகு தீபாவளிக்குச் சென்னையில் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாகவே இருந்தது. அதே மாதிரி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது சென்னையில் இருந்து விடுவேன். இப்படி இரண்டையுமே வருடா வருடம் தவற விடுவதால் இந்த தீபாவளிக்குச் சென்னையில் இருப்பது என்று இரண்டு வருடங்களுக்கு முன் நிச்சயம் பண்ணிக் கொண்டேன்.

தீபாவளி அன்று மட்டுமல்ல! அதற்கு முன்னேயே களை கட்டிவிடுமே! கிறிஸ்துமஸ் ·பீவர் மாதிரி தீபாவளி ஜூரத்தையும் பார்க்க வேண்டாமா? அதனால் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே சென்னையில் இருக்கும்படி சென்று விட்டேன்.

என் மனதில் ஏராளமான கற்பனைகள். என் சின்ன வயது தீபாவளி நாட்களெல்லாம் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது. தீபாவ ளிக்கு சில நாட்கள் முன்பாகவே எல்லோருக் கும் மனதுக்குப் பிடித்த மாதிரி அம்மா துணிமணி வாங்கி தந்துவிடுவார். அதை காட்ரேஜ் பீரோவில் வைத்திருப்பார். அதை அடிக்கடி எடுத்துப் பார்த்து மகிழ்வோம். வருகிறவர்கள் போகிறவர்களுக்கெல்லாம் பெருமையாக அதை எடுத்துக் காட்டும் சாக்கில் இன்னொரு தடவை தொட்டுப் பார்ப்போம்.

சாயந்திரம் பள்ளிவிட்டு வரும் போதே எல்லோர் வீட்டு வாசலிலும் பட்சணங்கள் எண்ணெயில் காய்கிற வாசனை நாசியைத் தொடும். அதே மாதிரி தித்திப்பு பண்டங்களில் மணம் தெருக்களில் உலாவி நாக்கில் எச்சில் ஊற செய்யும்.

அப்பாவுக்குப் பட்டாசுக்குப் பணம் செல வழிப்பது பிடிக்காது. காசைக் கரியாக்கு வார்களா என்று கேட்பார். ஆனால் அம்மா எப்படியோ சாஸ்திரத்திற்கு என்று சொல்லி எங்களுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுப்பார். என்னை மாதிரி பயந்தாங்கொள்ளிகள் வீட்டுக்குள்ளே உட்கார்ந்து குச்சி மத்தாப்பு அல்லது பாம்பு என்று கொளுத்த, என் சகோதரர்கள் வாசலில் நின்று அடுத்த வீட்டுப் பெண்கள் பார்க்கிறார்கள் என மிக தைரியமாக அலட்டலாக ஆட்டம்பாம், பெரிய சரவெடி என்று வெடிப்பார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் தீபாவளி சமயத்தில் போய் சேர்ந்த போது எந்த விதமான ஜூரமும் இல்லை, ஒன்று மட்டும் கவனித்தேன். கடைகளில் கும்பல் தாளமுடியவில்லை. அதுவும் மாம்பலம் ரங்கநாதன் தெரு சமீபத்தில் ஏகமாய் போக்குவரத்து, தெரியாமல் மாட்டிக் கொண்டு விட்டால் வெளியே மூச்சு திணறி வருவதற்குள் நிச்சயம் மணிக்கணக்கில் ஆகும்.

என்னுடைய சகோதர சகோதரிகள். அவர்களது டீன் ஏஜ்கள் முதற் கொண்டு புதுத் துணி வாங்குவதைப் பற்றி அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. ஏற்கனவே நாலைந்து சுரிதார் செட் பீரோவில் தூங்குகிறது. அதில் ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டால் போயிற்று'' என்று ஒரு பெண் சொல்லிற்று. இன்னொருத்தி எனக்கு ஸ்கூட்டரில் சுற்ற வேண்டியிருக்கிறது. அதனால் செளகரியத்துக்காக இன்னொரு ப்ளூ ஜீன்ஸ் வாங்கிக் கொண்டேன்...'' என்றாள்.

கார, இனிப்பு பட்சணங்களையும் வீட்டில் யாரும் பண்ணவில்லை. ''எண்ணெய் புகையில் அமர்ந்து எத்தனை நேரம் செலவழிப்பது? க்ராண்ட் ஸ்வீட்ஸ் மாதிரி கடைகளில்தான் தரமானவை கிடைக்கின்றனவே!'' என்று கடைகளில் தேவையானவற்றை காசு கொடுத்து வாங்கி வைத்து விட்டார்கள்.

''சிவகாசியில் சின்னக் குழந்தைகளைப் பட்டாசு பண்ணுகிற தொழிலில் ஈடுபடுத்து கிறார்கள். பாவம் அந்த சின்னஞ்சிறிசுகள்! இதை தடுப்பதற்காக நாங்கள் எல்லோரும் ஒரு முகமாக இந்த வருடம் பட்டாசு வாங்குவ தில்லை என்று தீர்மானித்திருக்கிறோம்.'' என்று என் வீட்டார் சொன்ன போது ரொம்பவே பெருமையாக இருந்தது.

ஒரு வழியாக தீபாவளி தினம் வந்தது. காலை ஐந்து மணி சுமாருக்கு எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து - புதிசு உடுத்தி - எதிர் வீட்டில் சுடும் பட்டாசுகளைக் காதார கேட்டு - கடையில் வாங்கின சுவையான பண்டங்களைத் தின்று - கோயிலுக்குச் சென்று வணங்கி - செழுமையாக பகல் விருந்து உண்டு - அந்த களைப்பு தீர தூங்கி எழுந்ததில்... அந்த வருட தீபாவளி ஓட்டமாக ஓடியே விட்டது. அத்தோடு என் தீபாவளிக் கனவுகளும் கலைந்து விட்டன.

அது இருக்கட்டும், கல்கத்தா தான் கொல்கத்தாவாக மாறியது என்றால், ரசகுல்லா வும் அல்லவா ரொஸகுல்லாவாகிவிட்டது!!!

கீதா பென்னெட்

© TamilOnline.com