எழுத்தில் மணக்கும் இசை
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் தி. ஜானகிராமன் தனித்துவமானவர். அவரது படைப்புலகம் உயர்ந்த சங்கீதம் எழுப்பும் ஆழ்ந்த பெரும்மூச்சுகளை தன்னளவில் வெளிப் படுத்திக் கொண்டவை. தி.ஜா.வின் ஆழ்ந்த சங்கீதப் புலமை அவரது எழுத்தில் லாவகமாக வெளிப்பட்டுள்ளன.

குறிப்பாக தி.ஜா.வின் 'மோகமுள்' நாவல், நவீன தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிகரங்களில் ஒன்று என்ற கணிப்பு விமரிசகர்களிடையே உண்டு. இந்நாவலின் களம் சங்கீத மணம் பரப்பும். இதில் சங்கீதத்தை பற்றி தி.ஜா. வெளிப்படுத்திய கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவை. இவை திஜாவின் சங்கீதப் புலமைக்கு எடுத்துக்காட்டு. அதிலிருந்து ஒரு சிறு பகுதி...

தம்புராவின் நாதம் அலை அலையாக எழுந்து செவியையும், உள்ளத்தையும் நிரப்பிற்று.

அப்பழுக்கில்லாத நாதமாக கூடம் முழுவதும் கமழ்ந்தது அது.

சுருதி பரிபூர்ணமாகச் சேர்ந்திருந்தது. தீயும் சூடும் போல. இரவும் இருளும் போல. வைகறையும் தூய்மையும் போலச் சேர்ந்திருந்தது. மகாகவியின் சொற்களில் எழுதுவது போல சொல்லாத காந்தாரம் சேர்ந்து தொனித்தது.

புலன்களைக் கூட்டி, ஒருமுகப்படுத்திற்று அந்த நாதம். புறத்தின் நினைவை அகற்றி, உள்ளத்தை மீற முடியாமல் கவ்விச் சென்றது. உடலையும் உலகையும் விட்டுச் சென்ற நினைவும், புத்தியே ஒலியும் பாவுமான அனுபவத்தின் மேலமர்ந்து, மாயக் கம்பளத்தில் அமர்ந்தது போல் பறந்தது. திக்கும் எல்லையும் அற்ற பெருவெளியில் உலவுவது போன்றிருந்தது அந்த நாத உணர்வு.

நாத முனிகளெல்லாம் இப்படித்தான் திரிந்தார்கள். நாரதன் திரிந்தது இந்த மாயந்தான். மூவுலக வழிப்போக்கனாகத் திரிந்த அவன் இந்த நாத வெளியில் தான் திரிந்தான் போலிருக்கிறது. இதைத்தான் மனிதனின் விரியாத கற்பனை. மூவுலகென்று குறுக்கிப் பெயரிட்டு விட்டதா? அல்லது மூன்று ஸ்தாயிகளையே மூவுலகென்று சொல்லிற்றா? தந்திஒலிக்க, வாய் பாட செம்பை ஏந்திப் பிட்சை ஏற்ற தியாகய்யர் தெருவிலா நடந்தார்? திக்கை நிறைத்த நாதத்தில் தானே அலைந்தார். அவர் செம்பை ஏந்தியது அரிசிக்கா? அல்லது நாத வெள்ளத்தில் மொள்ளுவதற்கா? ஊர் ஊராக காசிக்கும், தில்லைக்கும் தீர்த்தங்களுக்கும் தீட்சிதர் அலைந்ததெல்லாம் நாதத்தில் அலைந்தது தானே? அவர் குளத்தில் மூழ்கி நீக்கிக் கொண்டே நோய் உடல் நோயா, அபஸ்வரமா? இந்த ஒருமையிலிருந்து விண்டு விண்டு வந்த பேதப்பாங்கா?

பாபுவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பாட்டுக்கூட இல்லை இது வெறும் இரண்டு மூன்று ஒலிகள். வெறும் தம்புராவின் இசை. திரும்பித் திரும்பி வரும் ஒரே ஸ்வரங்கள். இதுவா இப்படிப் பரவசப்படுத்துகிறது? காரணம் என்ன என்று அறிய முடியவில்லை. தந்திகளின் இனிமையா? நின்று ஒலிக்கும் கார்வையின் நீளமா? சுருதி சேர்ந்த தூய்மையின் நிறைவா?

வாத்தியம் ஒலித்துக் கொண்டிருந்தது.

© TamilOnline.com