தமிழ் கீர்த்தனைகள் கச்சேரியின் இறுதியில் பாடப்பட்டு வந்த முறையை மாற்றி, கச்சேரியின் துவக்கத்தில் தமிழ் கீர்த்தனைகள் பாடும் முறையை அறிமுகப்படுத்தியவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். (1890-1967) இவர் தற்கால இசை நிகழ்ச்சியின் பரந்த வடிவமைப் புக்கும் வித்திட்டவர். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப் படுத்தும் படியான ஒரு புதிய வடிவமைப்பை உருவாக்கினார்.
இவர் ஒரு சிறந்த பாடகராக மட்டும் இல்லாமல் இசை நுணுக்கங்களின் புதிய ஸ்வரங்கள் பற்றிய சிந்தனைகளிலும் ஈடுபட்டவர். அருணாசலக் கவிராயரின் ராமநாடக கீர்த்த னைகள், திருப்பாவை முதலியவற்றை விரிவாகப் பாடுவதற்கு ஏற்றவிதத்தில் ஸ்வரப்படுத்தி மறு அமைப்பு செய்தார். இவ்வாறு அவர் இயற்றிய ஸ்வரங்கள் சுதேசமித்திரன் ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் பிரசுரமாயின.
1960களில் பன்முக இசை ஆளுமையை வெளிப்படுத்தக்கூடிய கலைஞர்கள் பலர் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவர் பாணியும் தனித்தன்மை பொருந்தியதாக இருந்தது. மதுரை மணி ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி சுப்பிரமணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், டி.கே. பட்டம்மாள், ஜி.என். பாலசுப்பிர மணியம், எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி போன்றோர் இசைத்துறையில் ஆளுமை மிக்கவராக இருந்து இசை பரப்பினர்.
கர்நாடக இசையின் செழுமைமிக்க காலமாக இக்காலத்தை கருதலாம். இசைக்கு புதுப்புது அர்த்தம் ஸ்வரங்கள் சேர்த்து புதிய இசைக் கோலங்கள் படைக்கப்பட்ட காலம். சங்கீதத் தில் தமது தரத்தையும் தகுதியையும் உயர்த்திக் கொள்ள ஒவ்வொருவரும் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருந்தது.
இந்த செழுமைமிக்க இசைப் பாரம்பரியத்தின் அடுத்தகட்ட பரம்பரையினராக டி.வி. சங்கர நாராயணன், என். சேஷகோபாலன், மகாராஜ புரம் சந்தானம், டி.கெ. ஜெயராமன், திருச்சூர் வி. ராமச்சந்திரன், ஆர்.வேதவல்லி, சாருமதி ராமச்சந்திரன், டி.வி. கோபாலகிருஷ்ணன், பம்பாய் சகோதரிகள், கே.ஜே. யேசுதாஸ் போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்கள் தங்களுக்கென சுயமான இசைப்பாணிகளை உருவாக்கி இருந்தனர். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இனிய நுண்ணிய குரல் வெளிப்பாட்டு முறைகளை வெளிப்படுத்தி வந்தனர்.
ஒவ்வொரு காலகட்ட இசைக் கச்சேரிகளில் பாடகர்ளுக்கு இணையாக பக்கவாத்திய கலைஞர்களின் திறமையும் இருந்தது. கச்சேரி எல்லாதரப்பு ரசிகர்களின் கவனயீர்ப்பாக மாறுவதற்கு பாடகர் மட்டுமல்ல பக்கவாத்தியக் கலைஞர்களின் நுண்ணியமான இசைவெளிப் பாடும் காரணம். வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் தனகென்று பாணி ஏற்படுத்து வதற்கு ''ஐந்து தலைமுறை கலைஞர்களுக்கும் தான் வாசிச்சுட்டு வருவதும் ஒரு காரணம்'' என குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு இசை மேதைகளின் இசையில் உள்ள நுணுக்கங்களை அதன் அழகியலை கற்றுத் தேறுவதன் மூலம், அக்கலைஞர்கள் தமக்கான பாணிகளை உருவாக்க முடியும். உயர்ந்த கற்பனைகளும் ஜீவனும் உள்ளிருந்து இயங்கும் போது விதம்விதமான இசை அனுபவங்களை வெளிப்படுத்த முடியும். இதுவரையான கர்நாடக இசையின் வரலாறும் அதன் அனுபவமும் இதனை நிரூபிக்கின்றன.
இன்றைய தலைமுறையின் முதிர்ந்த வயலின் கலைஞர் லால்குடி ஜி. ஜெயராமன். ஒரு நேர்காணல் ஒன்றில் வளரும் கலைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார்.
''லட்சியத்தை வைத்துக் கொண்டு பயிற்சி செய்யுங்கள். உயர்ந்த இடம் சீக்கிரம் கிடைக்க வில்லை என்று கவலைப்பட வேண்டாம். காலம் வரும் போது அனைத்தும் தானாக நடக்கும். மனமுவந்து பிறரைப் பாராட்டுங்கள். அதுவே நீங்களும் உயரவழி. மேலும் கேள்வி ஞானமும் முக்கியம். நல்ல சிந்தனையும் முக்கியம். சோர்வடையாதீர்கள். உண்மைக்கு அழி வில்லை.''
இதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய இளம் கலைஞர்கள் சுத்தமான சாஸ்தீரிய சங்கீதம் செய்யும் ஜால வித்தையை நன்கு புரிந்து செயலாற்றுகின்றனர். குறிப்பாக எண்பதுகளுக்கு பின்னர் இசைக்கச்சேரிகக்கு கூட்டம் வருவது குறைந்து வந்தது. ஆனால் புதிய இளைய தலைமுறையின் பிரவேசம் இசைக் கச்சேரிக்கு ஒர் புதிய மவுசு ஏற்படும் சூழலை உருவாக்கியிருக்கிறது.. கல்விசார் நிலையில் வேறுதுறைகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் முழுநேர இசைப்பிரியர்களாக மாறி இசைத்துறையில் புதிய இசைக்கோலங்களை அமைத்து வரத் தொடங்கியுள்ளனர்.
தன்னம்பிக்கையும் துணிச்சலும் புதியனவற்றை உருவாக்க வேண்டுமென்ற ஆர்வமும் துடிப்பும் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிமான தனித்துவச் சிறப்புடன் விளங்கும் வகையில் உருவாக்கி யுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளை சரிவர பயன்படுத்தி தமது இசை ஆர்வத்துக்கு புதிய பாணிகளை உருவாக்கியும் வருகின்றனர்.
முந்தைய தலைமுறைப் பாடகர்களுக்கு சங்கீதம் மட்டும்தான் தெரியும். அவர்கள் அப்பாவிகளாக மட்டுமே இருந்தார்கள். இன்றைய நவீன தொடர்பால் வளர்ச்சியில் ஒவ்வொரு இளம் கலைஞரும் தனக்கான அங்கீகாரத்தை தகுதியைப் பலப்படுத்த திட்டமிட்டு செயலாற்றுகின்றனர்.
முன்பெல்லாம் ஒருவர் இசைத்துறையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிப்பதற்கு 15, 20 வருடங்களுக்கு மேலாக கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால் தற்போதைய தலைமுறையினர் ஐந்து வருடங்களுக்குள் தங்களுக்குரிய அங்கீகாரத்தை பெற்று விடுகின்றனர்.
இன்று இசை அரங்கங்களை ஆக்கிரமித்துள்ள உன்னிகிருஷ்ணன் (35), செளம்யா (31), நித்யஸ்ரீ (28), சஞ்சய் சுப்பிரமணியம் (27), என். விஜய் சிவா (40), டி.எம். கிருஷ்ணா (25), சுதா ரகுநாதன் (40) பாம்பே ஜெயஸ்ரீ போன்றோரை குறிக்கலாம். இவர்கள் இசை நுணுக்கம் அறிந்தவர்கள், மற்றும் சாதாரண இசை அறிவு உள்ளவர்கள்கூட திருப்தி அடையும் வகையில் ஒரு புதிய இசை முறையை உருவாக்கி உள்ளனர். உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகியோர் திரை இசையில் ஈடுபடத் தொடங் கிய பிறகு அதிக அளவில் ரசிகர் கூட்டத்தை ஈர்த்து வருகின்றனர்.
பாடகர்களின் வருமானமும் பெருகிவிட்டது. ஒவ்வொரு பாடகர்களும் கேசட்டுகள் வெளி யிட்டு வருகின்றனர். ஓரளவு அறிமுகம் கிடைத்தவுடனேயே தமது கேசட்டுகளை சந்தைக்கு விடத் தயாராகிவிட்டனர். அதை வாங்க சந்தை உருவாகிவிட்டது. சந்தை விதிகளின் நெளிவு சுளிவுகளை அறிந்து கேசட் விற்பனையில் கவனத்தை குவித்தும் வருகின் றனர். கேசட் வெளியிட சில தனியார் கம்பெனிகள் தயாராகிவிட்டன சிலர் தாமே சொந்தமாக கேசட் தயாரித்து வெளியிடு கின்றனர்.
முன்பெல்லாம் கச்சேரிக்கு போய் வந்தால் மட்டுமே தமது வருமானத்தை ஈட்ட முடிந்தது. தமது பாடல் கேசட் வெளியிட பலர் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. வருமானம் குறைவாகவே இருந்தது. பேரும் புகழும் சிலருக்கு இருந்திருக்கலாம். ஆனால் வருமானம் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று இந்த நிலை இல்லை. வரு மானம் ஈட்டித் தரக்கூடிய தொழிலாகவும் இதை மாற்றியுள்ளனர். அதே நேரம் சங்கீதத் தின் புதிய எல்லைகளை தேடும் ஆர்வம் உள்ளவர்களாகவும் உள்ளனர். நித்யஸ்ரீ, உன்னி கிருஷ்ணன், சஞ்சய், செளம்யா போன்றோரின் கச்சேரிகளுக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் புதியவர்களின் வருகை சங்கீதத்தின் புதிய எல்லைகளை கண்டடையும் வகையிலான மனப்பாங்கு, தேடல் முயற்சி இல்லை என்று கூறும் சில விமர்சகர்களும் உண்டு. முந்தைய தலைமுறையினரிடம் இருந்த வித்துவம், கடின உழைப்பு புதியவர்களிடம் இல்லை. இந்த விளம்பர யுகத்தில் தமது பெயரை குறுகிய காலத்தில் இடம் பெறச் செய்யும் முயற்சிதான் உள்ளது என குறைப்பட்டு கொள்ளும் நிலையும் இல்லாமலும் இல்லை.
கடந்த ஒரு சில வருடங்களாக டிசம்பர் இசைவிழா திருப்திகரமாக இல்லை என்ற குறை உள்ளது. கச்சேரிகள் சடங்கு நிகழ்வுகளாக மாறிவிட்டன. இதனால் இவற்றின் கனம் ஆழம் குறைந்துள்ளது. ரசிகர்கள் ஏமாற்றமடை கின்றனர். ரசிகர்களின் வரவை அதிகரிக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும்கூட இல்லாமல் சபாக்கள் உள்ளன என்கிற கருத்தும் பரவலாக உள்ளது.
இந்த சீசனுக்கு எத்தனை சபாக்களில் தனது கச்சேரி நடந்தது என்னும் பெருமை பேசுவதில் உள்ள கவனம் ஆரோக்கியமான கச்சேரிகளை கொடுப்பதில் இல்லை. சங்கீதத்தில் தமது தரத்தை தகுதியை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யாது, ஓர் அவசர விரைவு ஓட்டத்தில் உள்ளனர். இதனால் எதிர்பார்த்துப் போகும் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைகிறார்கள். குறிப்பாக இசைக் கச்சேரிகளில் பக்க வாத்தியங்களுக்கும், வாத்திய கலைஞர் களுக்கும் தரப்பட்டு வந்த முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ரசிகர்கள் எதிபார்த்துப் போகிற சுகானுபவம் கிடைக் காமல் நிகழ்ச்சிகள் நீர்த்து போவதற்கு இதுவும் ஒரு காரணம். கச்சேர்களில் மிருதங்கம் வயலின் ஓசை வந்தால் போதும் என்கிற அளவிற்கு அதற்கான மரியாதை வந்து விட்டது.
அதே சமயம் ஒருகாலத்தில் பக்க வாத்திய கஞைர்களாக இருந்தவர்கள் இன்று தனி வாத்தியக்கச்சேரி வழங்கும் நிலையும் வந்திருக் கிறது.
முன்பெல்லாம் பாடகர்களுக்கு நிகரான கலைஞர்கள் பக்கவாத்தியத் துறையில் இருந்தார்கள். இதனால் கச்சேரி களை கட்டுவது அதிகம். பக்கவாத்தியகாரர்களின் வித்துவம் பாடகர்களின் வித்துவம் இரண்டும் போட்டி போட்டு புதியவகையான இசைக் கோலத்தை அளித்து வந்தன. கலைஞர்களின் கூட்டுத்தன்மையால் தான் புதிய இசை அனுபவம் கிடைக்கிறது.
ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய பாராட்டு, விஷயம் புரிந்த மற்றொரு சக கலைஞன் பாரட்டுவதுதான். ஆனால் சமீபகாலங்களில் பாடகரை மிஞ்சிய வாசிப்பு இருக்கக்கூடாது என்னும் மனநிலை உருவாகிவருகிறது.
இது போன்ற ஆரோக்கியமற்ற சிலபோக்கு வெளிப்பட்டாலும், இவற்றையும் கடந்து இளம் தலைமு¨றையினரிடையே இசை ஆர்வம் பெருகிவருவதையும் காண முடிகிறது. பல இளம் கலைஞர்கள், பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும், அரங்கேற்றம் மூலமாகவும் சங்கீத உலகத்துக்குள் பிரவேசித் துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் முந்தைய இசை கலைஞர்களின் இசை நுணுக்கங்களை, இசை அணுகுமுறைகளை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் புதிய இசை கோலங்களை உருவாக்க முடியும்.
ஆதி
******
விமர்சகர் என்பவருக்கு இசை யைப் பத்தின எல்லா விஷயங்களும் தெரிஞ்சிருக்கணும். இசையிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தணும், தேவையில்லாம சுத்தி வளைச்சு எழுதப்படாது. த்வேஷம் கூடாது. தேவையில்லாம சிண்டு முடியற வேலையில இறங்கக்கூடாது. வித் வானுக்குள்ள வித்வானா இருக் கணும் கோணாமணான்னு எழுதப் படாது.
(செம்மங்குடி ஸ்ரீநிவாஸய்யர், ஸரிகமபதநி நேர்காணல் ஜூலை 99)
******
நாளைய இசை உலகம் - திருமதி காயத்ரி கிரீஷ்
நான் பல்வேறு மொழிகளை அதன் அர்த்தம் புரிந்து கொண்ட பிறகே அந்தந்த மொழி களில் பாடல்களை கவனம் செய்து, பின்னரே கச்சேரிகளில் பாடுவேன். எதிலும் perfection இருக்க வேண்டுமென்று என் குருநாதர் சேஷகோபாலன் சொல்லுவார். அவரது கூற்றின்படி, நிதானம் மிகவும் அவசியம். அவசர வேலை சபைக்கு உதவாது. 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' அந்த இறைவனை இசை மூலம் கட்டிப்போட முடியும். இசையாலே வசமாகா இதயம்தான் இப்பூலகில் உண்டோ?
கர்நாடக இசையுலகம் நேற்று - இன்று - நாளை என்று பிரிந்துப் பார்த்தோமானால்... நேற்றைய இசையுலகம் இசை மேதைகளின் இசைமழையிலும், இசை வெள்ளத்திலும் நனைந்த வண்ணம் இருந்தது. இன்றைய இசை உலகம் வளரும்/வளர்ந்துவிட்ட கலைஞர்களின் கையில் உள்ளது. நாளைய இசை உலகம் மிகவும் ஜகஜோதியாகக் கண்முன் விரிகிறது.
(ஸரிகமபதநி செப் 2000 இதழில் வெளிவந்த நேர்காணலில்...)
******
இசைத்துறையில் சங்கீத பிதாமகர் ஸ்ரீமான் செம்மக்குடி ஸ்ரீநிவாஸய்யர், சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் சங்கீதம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. இவர்கள் இசையின் எல்லா பரிமாணங்களையும் கண்டு அவற்றை காற்றின் மூலம் ரசிகர்களின் காதுகளுக்கும் கொண்டு சேர்த்தவர்கள். இவர்களை விமர்சிக்க முயன்றால் அது இசைத் தாயை விமர்சிப்பதற்கு ஒப்பாகும். அந்தளவிற்கு இசையோடு பிரிக்க முடியாத வகையில் இரண்டறக் கலந்துவிட்டவர்கள் செம்மங்குடியின் ''ஓ. ரங்கசாயி'' எம்.எஸ். சுப்புலட்சுமியின் ''அகிலாண்டேசுவரி ''மீரா பஜன்கள்'' போன்றவை கேட்போரை அந்த இறைவனுக்கு அருகாமையிலே கொண்டு போய் நிறுத்திவிடும் சக்தி கொண்டவை. இவர்களை விமர்சிக்க பேனா எடுக்கும் விமர்சகனுக்கு எங்கிருந்து தைரியம் வரும். வீம்புக்காக வேண்டுமானால் எதையாவது எழுதலாம். எனது 70 வருட கால இசை உலக அனுபவத்தில் பல ஜான்பவான்களை சந்தித்துள்ளேன். எனது கணிப்பில் genius என நான் எடை போட்டு வைத்திருப்பது சங்கீத பூபதி, சங்கீத கலாநிதி ஸ்ரீமான் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் flute மகாலிங்கம், நாதஸ்வர மேதை டி.எஸ். ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரைத் தான் இவர்கள் மூவருமே don't care masterகள் தான்.
(இசைவிமர்சகர் பி.எஸ். பார்த்தசாரதி: ஸரிகமபதநி நேர்காணல் ஜன 2001) |