மதச்சார்பற்ற அணிதிரட்டரை நோக்கி....
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் எக்காலத்தைக் காட்டிலும் 1992 டிசம்பர் 6ஆம் தேதி கொடூரமான நாளாகும். பாபர் மசூதி அழிப்புடன் இந்திய சமூகத்தை சீர்குலைக்க முனைந்துள்ள வகுப்புவாத சக்திகளின் அபாயத்தை சுட்டிக் காட்டிய நாளாகும். இந்த அழிப்பு நடவடிக்கை தன்னியல்பாக தோன்றிய ஆவேசமான செயலாக மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. வெறியுணர்ச்சியையும் வன்முறையையும் போற்றி மற்ற சமூகங்களை எதிர்த்துப் போர் செய்யுமாறு தூண்டி, சட்ட மற்றும் சனநாயக நெறிமுறைகளை இகழ்கின்ற இந்துத்துவா அரசியலின் நீண்ட வரலாற்றின் விளைவாகவே 'டிசம்பர் 6' நடைபெற்றிருக்கிறது.

இதுவரை இந்திய சனநாயகம் கட்டிக்காத்த மதச்சார்பற்ற சனநாயகக் கொள்கைக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த மதச்சார்பற்ற சனநாயகக் கொள்கைக்கு அவ்வப்போது தடுமாற்றம் ஏற்பட்டாலும் 'பாபர் மசூதி இடிப்பு' டன் மதச்சார்பற்ற கொள்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு டிசம்பர் 6ந் தேதியும் கொடூரமான பாசிச நடவடிக்கையின் கொடுமையை உணர்த்தி வருகிறது. அக்காலங்களில் பதட்டமும் வன்முறை ஏதும் வெடித்துவிடுமோ என்ற அச்சமும் சூழ்ந்து வருகிறது. இதுவரை இந்தியாவின் தீர்க்கமான சிந்தனையாளர்கள் தலைவர்கள் கட்டிக்காத்த வலியுறுத்திய சகிப்புணர்வுக்கு சோதனைக் காலம் உருவாகி விட்டது.

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், மொழியின் பெயரால் கடைப்பிடிக்கப்படும் பாரபட்சங்கள், ஒதுக்கல்கள் சமுதாயத்தின் அடிப்படையையே தகர்க்கும். இந்த அடிப்படை களின் பெயரால் முன்னெடுக்கப்படும் அரசியல் சமூக நீதிக்கும் சமூக சனநாயகத்துக்கும் பெரும் சவாலாகவே மாறி பாசிச அரசியல் கோலோட்சும். இதன் தொடர்ச்சி சமுதாயத் தை அநாகரிக கால கட்டத்தை, காட்டு மிராண்டி மனோபாவத்தை நோக்கி தள்ளும்.

இதனால் சமுதாயத்தில் அமைதியின்மையும் சிறுபான்மையின மக்களிடையே அச்சமும் பதட்டமும், வன்முறை அரசியலின் கோரமும் தான் மிஞ்சும். ஆகவே எந்தவொரு அரசியல் கட்சியும் மதம், சாதி, மொழி ஆகியவற்றின் பெயரால் முன்னெடுக்கும் அரசியல் கண்டிக் கத்தக்கது. நவீன சமுதாய உருவாக்கத்துக்கு தடைகளாக இவை இருப்பவை என்பதையும் இதுகாறுமான உலக வரலாறு நமக்கு படிப்பினைகளாகவே முன் வைத்துள்ளது.

இந்திய சமூகங்களின் சிந்தனை மரபும் வாழ்க்கை முறையும் பண்பாட்டு வழக்காறுகளும் உலக சமுதாயத்துக்கே புதிய வழிகாட்டல் களாக அமைய வேண்டியவை. அந்தளவிற்கு நமக்கிடையே பெரும் வளங்களின் வீரியம் உள்ளது. இதனை புரிந்து கொள்ளாது அரசியல் வாதிகள் இந்திய மக்களின் ஜனநாயகப் பாரம்பரியத்துடன் விளையாடுவது ஆரோக்கிய மானதல்ல. தமது குறுகிய லாபத்துக்கும் தனியான அரசியலுக்கும் மக்களை பலியாக் குவது, 'அது எதன் பெயரில்' நடைபெற்றாலும் கண்டிக்கத்தக்கது.

பன்மைத்துவ சமுதாயத்தில் பன்மைத்துவ அடையாளங்களை அங்கீகரித்துக் கொண்டு வாழ்வதில் தான் சிறப்பு. ஒவ்வொருவரும் அவரவர் மதவழிபாட்டுடன் வாழ்வது சனநாயகத்தின் அடிப்படை. இந்த சனநாயகத்தையே கேள்விக் குள்ளாக்கும் மத அரசியல் புகுத்தப்படும்போது சமூக சனநாயகம் சமூக நீதி குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடுகிறது.

பாபர் மசூதி இடிப்பு இந்தியாவில் நிகழ்ந்த மிகப் பெரிய பண்பாட்டுக் கொலை. இதனை எதன் பெயரிலும் யாரும் நியாயப்படுத்த முடியாது. பாபர் மசூதியை வைத்து மீண்டும் மீண்டும் அரசியலாக்கும் முயற்சி வேதனை யானது. நம்மிடையே வளர்க்கப்பட வேண்டிய சகிப்புத்தன்மை சுயநலமிகளால் குறுகிய அரசியல்வாதிகளால் பாழாக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

பன்மைத்துவ சமுதாயத்தில் 'சகிப்புத்தன்மை' என்பது நாகரீக சமுதாயத்தின் உயிர்ப்பு மையமாகவே திகழும். ஆதலால் தான் 'மற்றவர்கள் உன்னிடம் சகிப்புத் தன்மை காட்ட வேண்டுமானால், நீ மற்றவர்களிடம் சகிப்புத் தன்மை காட்டு' (தாமஸ் ·புல்லர்) என்பதனை பலரும் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் சமகால அரசியல்வாதிகள் சகிப்புத் தன்மை என்பதற்கு மனித சமுதாயம் வெட்கித் தலை குனியக் கூடிய விளக்கத்தையே கொடுக்கின்றனர்.

'வாழ், வாழவிடு ஏனெனில் வாழ்க்கையின் நியதி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் பண்பும் சகிப்புத் தன்மையுமே' என மகாத்மா காந்தி குறிப்பிட்டதையும் மறந்துவிடக் கூடாது.

டிசம்பர் 6 இந்தியர்களிடையே மதச்சார்பற்ற சனநாயகத்துக்கு நேர்ந்துள்ள ஆபத்தை சுட்டிக் காட்டுவதாகவும், மதச்சார்பற்ற கலாச்சார அணிதிரட்டலை நோக்கி ஒவ்வொருவரையும் ஈர்க்கக் கூடிய 'பொதுச்சூழல்' உருவாக்கப்பட நாம் பாடுபட வேண்டுமென்ற அறைகூவலை விடுக்கக் கூடிய நாளாக மாற வேண்டும். பன்மைத்துவ சமூகங்களை ஒருங்கிணைக்கும் தேசிய உணர்வு, தேசிய வாதம் கட்டமைக் கப்பட வேண்டும்.

துரைமடன்

© TamilOnline.com