"டி.கே. பட்டம்மாளை பாடவைத்தவர்" - வை.மு. கோதைநாயகி அம்மாள்
பொதுவாக தமிழில் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு பெண் தானே முயன்று படித்து 115 நாவல்களை எழுதி, 35 வருடங்கள் தொடர்ந்து 'ஜகன்மோகினி' எனும் பத்திரிகையை நடத்தி பெரும் சாதனை புரிந்துள்ளார். அவர் தான் வை.மு. கோதைநாயகி அம்மாள் (1.12.1901 - 20.02.1960).

இலக்கியம், பத்திரிகை, நாடகம், சமூகசேவை, அரசியல் ஈடுபாடு, பக்தி, இசை... என பன்முகக் களங்களில் இயங்கிக் கொண்டிருந்தவர். இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றத்தின் விளைவுகளில் ஒருவரா கவும், அந்த விளைவுகளின் ஊக்கியாகவும் திகழ்ந்தவர். பன்முக ஆளுமைப் பண்புகளுடன் வாழ்ந்தவர். இதனாலேயே இருபதாம் நூற் றாண்டின் சென்னை நகர பிரமுகர்களுள் ஒருவ ராகவும் வெளிப்பட்டுள்ளார்.

வை.மு. கோவின் பன்முக ஆளுமையையும் மீறி, அவரை நாவலாசிரியராகவே அதிகம் தமிழில் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் அவரது ஒரு முகமான இசைப்புலமை, இசை ஆர்வம் சரிவர வெளிக்கொணரப்படவில்லை. இசையில் அவருக்கிருந்த ஈடுபாடு தீவிரம் வியப்பளிப் பதாகவே உள்ளது. அவர் வாழ்ந்து மறையும் வரை பழுத்த இசைஞானம் மிக்கவராகவும் இசைக் கலைஞர்களின் அன்பையும் ஆதரவை யும் பெற்றவராகவும் திகழ்ந்துள்ளார்.

வை.மு.கோ சிறுவயதிலேயே திருமணமானவர். அக்காலத்திலேயே இசையார்வம் மிக்கவரா கவும் திகழ்ந்துள்ளார். இதனால் திருமணத்திற் குப் பின்பு கணவரோடு நிறைய இசைக் கச்சேரிகளுக்க சென்று வந்தார். இதன் மூலம் தனது இசை ஞானத்தை வளர்த்து வந்தார். 'அக்காலத்தில் பாட்டுக் கச்சேரிகள் நடத்த சபாக்களும் மிகக்குறைவு. அதற்கு வாய்ப்பு கேட்க போகும் பெண்களும் மிக குறைவு.' இத்தகையதொரு சந்தர்ப்பம் சூ¡ழ்நிலை வாய்க்கப் பெற்ற காலத்தில்தான் வை.மு. கோ. இசையார்வத்தை வளர்த்து வந்தார்.

வை.மு.கோ. குடும்பச்சூழல் அவரது ஆர்வத்தை வளர்த்தெடுக்கவும் வளப்படுத்தவும் துணையாக இருந்தது. இதனால் அவர் வெகு இயல்புடன் தனது திறன்களை வளர்த்துக் கொண்டார். சிறிய மாமியார் உறவுமுறை கொண்ட ஒருவரிடம் சிறிது காலம் சங்கீதம் கற்றுக் கொண்டார்.

சிறுவயதில் புதிய புதிய பாடல்களைக் கேட்டு உடனே பயிற்சி செய்து பாடிக் காட்டுவ தென்றால் அவருக்கு மிக விருப்பம். தியா கைய்யரின் கீர்த்தனைகள் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக மருகே லரா ஓ ராகவா' என்ற கீர்த்தனை அவருக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல் தெலுங்கில் சஹானா ராகத்தில் 'தோழசாய கழாவ கோபால ஸாமீ' என்கிற கீர்த்தனையும் அம்மையாருக்கு சிறுவயதில் பிடித்தவையாகும்.

அக்காலக்கட்டத்தில் சிறந்து விளங்கிய இசைக் கலைஞர்களின் கச்சேரிகளுக்கு சென்று வந்தவர். அதனால் ஏற்பட்ட இசை அனுபவம், அதன் இசை நுணுக்கங்கள் இசையின் புலமை ஆர்வத்தை மேலும் வளர்த்தெடுத்தன.

சென்னை திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி சபாவில் பத்தாவது வயதில் அம்மையாரின் முதல் இசைக் கச்சேரி அரங் கேறியது. அந்தக் காலத்தில் கோயில்களில் பாடக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. ஆனால் இந்த சட்டத்தை உடைத்து பார்த்தசாரதி கோயிலில் கச்சேரி செய்தார். பெண்களே பக்கவாத்தியங்கள் இசைக்க அந்நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

அம்மையார் தான் பாடியதுடன் மட்டும் நிற்கவில்லை. இசையார்வம் உள்ள பெண்களை இனங்கண்டு அக்கோயிலில் மேடை ஏற்றினார். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை வெளிக்கொண்டு வர அப்பெண்களின் தாய் தந்தையரிடம் போராடியும் வாதாடியும் இருக்கிறார். இதற்கு பலன் கிடைக்காமல் அல்ல.

காஞ்சிபுரத்தில் தம் பெற்றோருடன் வசித்துவந்த சிறுமி பட்டம்மாளின் இசைத் திறனை பிறர் சொல்லக்கேட்டு தானே நேரடியாகச் சென்று பட்டம்மாளின் தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கி, அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து பாட வைத்தார். அவருக்கு அப்போது பதினோறு வயது. இந்தக் குழந்தை தான் பின்னர் இசையுலகில் பல்வேறு பட்டங்கள் பெற்று இசைமேதையாகத் திகழ்ந்த டி.கே. பட்டம்மாள்.

இவ்வாறு டி.கே. பட்டம்மாள் இசையுலகில் தனக்கென்று தனியான முத்திரையைப் பதிப்ப தற்கு வை.மு.கோ தக்க உறுதுணையாக இருந்துள்ளார். அம்மையாருடன் இணைந்து திருமதி டி.கே. பட்டம்மாள் மூன்று கிராமபோன் இசைத் தட்டுகள் கொடுத்துள்ளார்.

அம்மையாரால் இனங்காணப்பட்ட மற்றொரு இசைக் கலைஞர் இன்றுவரை பாடிக் கொண்டிருப்பவர் திருமதி ஜி.பி. கமலா என்பவராவார். இவரையும் இவரது குடும்பம் பாட அனுமதிக்கவில்லை. அம்மையார் கமலா வின் தந்தையிடம் பலமுறை பேசி தன்னுடன் மேடையேற்றிப் பாடவைத்தார். தனது வளர்ப்புப் பெண்ணாகவே வளர்த்து வந்தார்.

திருமதி கமலா பல பெண் நாட்டியக் கலைஞர்களுக்க நட்டுவாங்கம் பாடியவர். இன்னும் பல குழந்தைகளுக்கு பாடல் கற்றுக் கொடுத்து வருபவர். சென்னை வானொலியில் தொடர்ந்து பாடி வருபவர்.

வை.மு.கோ. அம்மையார் தாமே பாடல்களை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தவர். தாம் சிறைக்கு சென்று வந்த அனுபவத்தைப் பற்றி பாடல்கள் எழுதி அவற்றைப் பட்டம்மாளுடன் இணைந்து பாடி இசைத்தட்டு கொடுத்துள்ளார். காங்கிரஸ் கூட்டங்களில் அம்மையார் தொடர்ந்து பாடி வந்துள்ளார். காந்தியச் சிந்தனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் இருந்துள்ளார்.

அம்மையார் நிறைய பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடி இசைத் தட்டும் கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் கீர்த்தனை பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். நாலாயிரதிவ்ய பிரபந்தத்திற்கு ராகம் அமைத்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் அதை மூன்று மணிநேரக் கச்சேரியாகச் செய்துள்ளார். அந்தக் கச்சேரியிலும் பெண்களே பக்கவாத்தியங்களை இசைத்துள்ளனர்.

சிறுவயதில் தொடங்கிய இசையார்வம் அவருக்குள் ஆத்மநேயப் பண்பை வளர்த்து வந்தது. 1932ல் சிறையில் இசை ரசனையை வளர்க்க முயன்றார். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உடனிருப்பவர்களைக்கூட்டி பஜனை செய்வது அவரது வழக்கமாக இருந்தது.

தேசிய உணர்வும் தேசப்பற்றும் சமூக உணர்வும் பிரக்ஞையாக அம்மையாரிடம் இயல்புப் பண்பாகவே இருந்தது. இதனால் இசையார்வம் கூட இந்த சிந்தனைகளையும் உள்வாங்கிய 'விழிப்புணர்வு ஊட்டும்' இசையாக மேற்கிளம்பியமையும் இயல்பாகவே இருந்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் அரசியல் கூட்டங்களில் அம்மையார் கலந்து கொண்டு உரையாற்றுவது, பாடுவது என்பது தவறாமல் இருந்த வந்தது.

இசை மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியும் வந்துள்ளார். சங்கீதம் பற்றிய சிந்தனையை ரசனையை தனது படைப்புகளிலும் எழுதிவந்தார். தான் நடத்தி வந்த ஜகன்மோகினி பத்திரிகையில் இசைக்கென்று இரண்டு பக்கங்களை ஒதுக்கியிருந்தார். அவற்றில் புதிய பழைய கீர்த்தனைகளை பதம் பிரித்து ஸ்வரப்படுத்தித் தந்தார். ஓரளவு பாடத் தெரிந்தவர்களுக்குப் பாடம் செய்து கொள் வதற்கு வசதியாக அமைந்திருந்தது.

அம்மையார் அக்காலத்தில் பெண்கள் இசைக்குழு ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். அக்குழுவில் டி. சுபத்ரா என்பவர் வயலினும், எம்.ஆர். சகுந்தலா வீணையும், சாந்தா மிருதங் கமும், பத்மாசினி புல்லாங்குழலும் இசைப் பார்கள். மைதிலி ஸ்ரீனிவாசன், எம்.பி. சுகந்தா, பூமா ஜெகன்நாதன், ரங்கநாயகி, ஜி.பி. கமலா, வை.மு. பத்மினி போன்றோர் வாய்ப்பாட்டு பாடுவார்கள்.

மகாத்மாஜி சேவா சங்கத்தில் இவ்விசைக்குழு ஒவ்வொரு வாரமும், கச்சேரி செய்வது வழக்கம். இது தவிர நவராத்திரி, ஆடி, தை வெள்ளிகள், மார்கழி மாதம் முழுவதும் பஜனை மற்றும் கச்சேரிகள் செய்து வந்துள்ளனர்.

இசைக் கலைஞர்களை மட்டும் ஊக்குவிப் பதுடன் மட்டும் நிற்காமல் பெண் நடனக் கலைஞர்கள் பலரை வெளிக்கொணரவும் பாடுபட்டார். அம்மையார் காலத்தில் பரதத் துக்கு மதிப்பில்லை. 'சதிர்' என்னும் கூத்து என்றும் பரதக்கலை தரக்குறைவாக மதிக்கப் பட்டு வந்தது. தேவதாசிகளுக்கு இக்கலை உரியது எனவும் கருதப்பட்டு வந்தது. இவற்றை யெல்லாம் எதிர்த்து பரதக்கலை உன்னதமான தெய்வீகக்கலை, எல்லாக் குழந்தைகளுக்கும் இதனை கற்க வேண்டும். பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்றுகூட குரல் கொடுத்து வந்தார்.

ஆக இசை நாட்டியம் போன்ற கலைகளில் பெண்கள் தமது திறமையை வெளிக்கொணர உரிய வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொடுக்க அம்மையார் அயராது உழைத்து வந்துள்ளார். இன்று பெண்கள் இசைத்துறையில் நுழைந்து பிரகாசிக்க முடிகிறது என்றால் வை.மு.கோ அம்மையார் மேற்கொண்ட முயற்சிகள்தான் காரணம்.

மதுசூதனன்

© TamilOnline.com