சமூக வளர்ச்சியோடு இசைக்கல்வி நிறுவன மையப்படுத்தப்பட்டு வளரலாயிற்று. நவீன கல்விச் செயற்பாட்டில் இசைக்கல்வியும் துறைசார் வளர்ச்சியாகி உள்ளது. வரன் முறையான கற்றல் கற்பித்தல் சார்ந்த அணுகு முறையுடன் கூடியவாறு இசைக்கல்வி வளர்ச்சி யடைந்துள்ளது. இந்த வளர்ச்சியில் பல்வேறு இசைமேதைகள் முக்கியமான பங்களிப்பு செய்துள்ளனர்.
இசைக் கல்வித்துறையிலும் இசைக் கச்சேரித் துறையிலும் மிகவும் சிறந்து விளங்கிய இசை மேதைகளில் குறிப்பிடத்தக்கவர் டைகர் வரதாச்சாரியார் (1876 - 1950)
டைகர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கொளத்தூர் என்ற கிராமத்தில் 1876ம் வருடம் ஆகஸ்டு மாதம் பிறந்தார். இவரது தந்தை பெயர் இராமானுஜாச்சாரியார். டைகரின் முன்னோர்கள் அனைவருமே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள். தந்தையார் கதாகாலட்பேச வித்துவானாக வாழ்ந்தவர்.
டைகர் ஒரு டாக்டராகவோ இன்ஜினியராகவோ உருவாக வேண்டுமென தந்தையார் விரும்பினார். தன்னைப் போல் கலைத்துறையில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை. ஆனால் டைகருக்கு கலை ஆர்வம் இயல்பாகவே இருந்தது. இசை மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இசைக்கல்வி கற்க விருப்பம் கொண்டார்.
பிடில் ராமச்சந்திர ஐயரிடம் மாணவனாக இருந்து இசையைக் கற்கத் தொடங்கினார். தொடர்ந்து நீலகண்ட சாஸ்திரியார், பெரிய சிங்காரச்சாரியார், சின்னசிங்கராச்சாரியார் ஆகியோரிடமும் இசை பயின்று வந்தார். இசையில் அதிகமான பயிற்சியும் பிடிப்பும் டைகருக்கு இசையின் நுணுக்கங்களை மேலும் மேலும் கற்றுக் கொடுத்தது.
தியாகராஜா ஆராதனை விழாவிற்கு சென்றால் பெரிய இசைமேதைகளின் கச்சேரிகளை காதால் கேட்கலாம், நேரில் அவர்களைப பார்க்கும் வாய்ப்பும் தொடர்பும் கிடைக்கும் என்றென்ணி திருவையாற்றுக்குச் சென்றார். அவர் எண்ணியது போலவே இசைமேதை பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் தொடர்பும் ஆதரவும் பெற்று அவரிடம் குருகுலவாசமாகச் சுமார் மூன்று வருடங்கள் கடுமையான பயிற்சி பெற்றார்.
விடாப்பிடியான தொடர்ந்த பயிற்சியினால் தனது குரல் வளத்தை மெருகேற்றினார். இசையின் பல்வேறு அர்த்த பரிமாணங்களின் வளத்தையெல்லாம் செரித்துக் கொண்டு சங்கீதத்தில் ஒர் ஆழ்ந்த புலமையை உருவாக் கிக் கொண்டார். பொதுவில் இவருடைய சங்கீதத்தை சாதாரண ரசிகர்களால் ரசிக்க முடியாது. சங்கீத விஷய ஞானமுள்ளவர்கள் இவருடைய கச்சேரியை மிகவும் ரசிப்பார்கள்.
சங்கீத சம்பிரதாயங்கள், இசை இலக்கணங் கள் எல்லாம் பிசகாதபடி மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கினார். சங்கீதத்தைத் தவிர சமஸ்கிருதம், தெலுங்கு மொழியிலும் நன்கு பண்டித்தியம் பெற்று விளங்கினார்.
இசை இலக்கியம் கலை போன்ற எந்தக் கூட்டமானாலும் டைகர் முன் வரிசையில் இருப்பார். இசை பற்றிய விவாதங்களில் கலந்து கொள்வார். தனது கருத்துகளை மிகத் தெளிவாக காரணகாரியத்துடன் வரலாற்று தெளிவுடன் எடுத்து முன்வைப்பார். அந்தளவிற்கு பண்டைய இசையறிவில் தெளிவுள்ளவராகவும் இருந்தார்.
வரதாச்சாரியார் இளம் வயதில் மைசூரில் இருந்த போது இவருடைய சங்கீத ஞானம் புலமை ஆகியவற்றை இனங்கண்டு 'டைகர்' என்ற பட்டத்தை கிருஷ்ண ராஜ உடையார் எனும் மைசூர் அரசர் வழங்கி கெளரவித்தார். பின்பு மைசூர் ஆஸ்தான் வித்துவானாக இருந்தார். அப்போதுதான் 1944ம் ஆண்டு 'சங்கீத சாஸ்திர விசாரத்' என்ற பட்டத்தையும் 'நாயக சிகாமணி' என்ற பட்டத்தையும் பெற்றார். டைகருக்கு பல்வேறு சிறப்புக்கள் கெளரவங்கள் கிடைக்கப் பெற்றன. தொடர்ந்து இவரது இசைத்திறமை புலமை பலராலும் பேசப்பட்டு வந்தது.
டைகரின் இசைத்திறமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சங்கீத வித்வத் சபையால் நடந்துவந்த இசை ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முதல்வராக 1931ல் பதவி ஏற்று திறம்பட நிர்வகித்தார். இந்த அனுபவம் தகுதி பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பட்டய வகுப்பு (டிப்ளமா) தொடங்கிய போது அத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்று ஆறு வருடங்கள் திறம்பட பணியாற்றினார்.
அதன்பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைக்கல்லூரி தொடங்கியதும் அதன் முதல்வராகவும் ஆறுவருடங்கள் பணி யாற்றினார். தமது கடைசிக் காலத்தில் ருக்மணி தேவி அருண்டேல் நிறுவிய கலா§க்ஷத்திரத்தில் முதல்வராகப் பொறுபேற்று பணியாற்றினார்.
டைகர் அபூர்வ ராகங்களை மிகவும் இயல்பாக மணிக்கணக்காகப் பாடுவதில் வல்லமை படைத் தவர். மேலும் உமாபரணம், ராமப்ரியா, காபி, ரவிசந்திரிகா, உதய சந்திரிகா, கரஹரப்ரியா போன்ற ராகங்களை பாடி விளக்கும் போது கலைஞர்களுக்கு மாணவர்களுக்கு புதிய இசை அனுபவம் உண்டாகும். இதனை அவரது மாணவர்கள் பலர் நினைவு கூர்ந்துள்ளனர்.
டைகர் பல வர்ணங்கள் கீர்த்தனைகள் தெலுங்கு மற்றும் தமிழில் இயற்றியுள்ளார். ஆரபி, கல்யாணி, ஸ்ரீராகம் முகாரி, சங்கரா பரணம், நாட்டைக் குறிஞ்சி போன்ற இராகங் களில் கீர்த்தனைகளையும் ஆரபி, பேகடா சஹானா, கல்யாணி காம்போதி போன்ற ராகங்களில் தமிழில் பலதான வர்ணங்களையும் தெலுங்கில் வாசஸ்பதி, கேதாரம், மணிரங்கு, ஜனரஞ்சனி ராகங்களில் தானே வர்ணங் களையும் இயற்றி இசை உலகிற்கு வழங்கி யுள்ளார்.
டைகரின் இசைப் புலமையும் இசைப் பயிற்சியும் இசை மேதைமையாக விளங்கு வதற்கு காரணமாயிற்று. மேலும் இசைக் கல்விக்கு வரன்முறையான பாடத்திட்டங்களை பயிற்சிகளை வழங்குவதற்கு டைகரின் பங்களிப்பு பெரியது. இசைக் கல்விக்கான அடிப்படைகளை உருவாக்கி கல்விப் புலத்தில ஒர் அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்ததில் டைகர் வரதாச்சாரியாரின் ஆளுமை குறிப்பிடத்தக்கது.
மதுசூதனன் |