காற்று சொல்லிய கதைகள்
கடலும் நிலமும் பிரிந்தது எப்படி?

ஆதியிலே உலகமெங்கும் கடலே நிரம்பி இருந்தது. மண்ணுலகம் நீருக்குள் மூழ்கிக் கிடந்தது. நிலத்தை நீரில் இருந்து பிரித்தெடுக்கக் கடவுள் சிந்தனை செய்தார். இதற்காக முதலில் நண்டை மண் எடுத்து வரச்சொன்னார். நண்டு தன் இரு கொடுக்குகளால் மண்ணைக் கவ்விக் கொண்டு தண்ணீரின் மேல் வர முயன்றது. அது மேலே வரும் முன்பாகவே மண் கரைந்து போய் அது தோற்றுப் போனது. கடவுள் இதனால் ஆமையை மண் எடுத்து வரச் சொன்னார். அது தன் முதுகில் மண் குவியலைச் சுமந்தபடி மேலே வந்தபோது அலையில் மண் கரைந்து போனது.

இதைக் கண்ட கடவுள் மண்புழுவை அழைத்தார். ''நான் ஆமையையும், நண்டையும் மண் கொண்டு வரச் சொன்னேன். அவர்களால் ஒரு துளி மண் கூடக் கொண்டு வர முடியவில்லை. நீ கவனமாகக் கொண்டு வா'' என்றார். மண் புழு நீரினுள் சென்று அடி மண்ணை வாயில் நிரப்பிக் கொண்டு நெளிந்து நெளிந்து மேலே வந்தது.

கடவுள், ''மண்புழுவே, மண்புழுவே மண் எங்கே?'' என்று கேட்டார். ''இதோ மண்'', என தன் வாயில் இருந்து உமிழ்ந்தது.

''நீ இனிமேல் மண்ணுக்குரியவன்'' என கடவுள் அதை வாழ்த்தினார். இப்படி மண்புழுக்களால் விரைவாக மண்ணை நீரிலிருந்து கடவுள் பிரித்து மரங்களும், செடிகளும், விலங்குகளும் உண்டாக்கினார். இதனாலே கடலும், நிலமும் இரண்டாகப் பிரிந்தது.

சோடா நாகபுரி பழங்கதை

******


அலைகள் உண்டானது எப்படி?

ஒரு காலத்தில் தண்ணீருக்குள் நிறைய உயிரினங்கள் இருந்தன. அப்போது நிலத்தில் எங்கும் தண்ணீரே தேங்குவது கிடையாது. தண்ணீர் கரைக்குப் போனால் நிலம் அதனைப் பிடித்துக் கொள்ளும் என்று பயந்தார்கள் நீர்வாசிகள். இதனால் தண்ணீர் எப்போதும் ஆடாமல், அசையாமல் இருக்கும். தண்ணீருக் குள் வசிப்பவர்கள் வெகு ஆழத்தில் இருந் தார்கள். அப்போது நிலம் வெகு தொலைவில் இருந்தது. ஒரு நாள் தண்ணீர்க்கடவுள் தனது தேசத்து மக்களை அழைத்துச் சொன்னார்.

''நிலம் வெயிலில் உலர்ந்து கொண்டே வருகிறது. யாரும் வெளியே போகாதீர்கள். பிடித்துக் கொள்ளும்'' என்று உத்தரவிட்டார்.

நிலம் எப்படியிருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்ட ஒரு சிறுமி யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் நீந்திக் கரையைப் பார்க்கப் போனாள். அவளது அம்மா இதைத் தெரிந்து கொண்டு, தன் மகளை எப்படியும் நிலத்திடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்துடன் தானும் ஒரு அலையாகி விரட்டிக் கொண்டே வந்தாள்.

மகளோ, அம்மா தன்னைப் பற்ற வரும் முன் பாய்ந்து கரையேறி நிலத்தைப் பார்த்து விட விரும்பினாள். அம்மாவோ தன் பிள்ளை யைக் காப்பாற்ற வேகமாக ஓடி வந்தாள். சிறுமி கரையைத் தொடும்போது அவளது கூந்தலைப் பிடித்து உள்ளே இழுத்தாள். அதுதான் நுரையானது. அந்தச் சிறுமிதான் சிற்றலை. தாய்தான் பெரிய அலை. அவர்கள் கடற்கரைக்கு வருவது இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.

மகளும் நிலத்தைப் பார்க்க முடியவில்லை. தாயும் மகளை விடுவதாக இல்லை.

முண்டா இனக் கதை

******

© TamilOnline.com