sirippom.com
'வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்று காலங்காலமாகப் பெரியவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்தாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான நேரங்களில் சிரிப்பதில்லை. என்னவோ கப்பல் கவுந்த மாதிரித்தான் எந்நேரமும் சதா யோசனைகளோடு வலைய வந்து கொண்டி ருக்கிறோம். ஒருவர் காலம் முழுவதும் சதா சிரித்த முகத்தோடு அலைந்தால், அதைப் பாராட்டாமல், 'பைத்தியம் மாதிரி சிரிச்சுக் கிட்டே இருக்கான் பாரு' என்று கேலி பேசத் துவங்கி விடுகிறோம். என்னவோ சிரிப்பு என்றாலே பைத்தியங்களின் சமூகத்துப் பொதுவுடமை என்கிற நினைப்புத்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.

இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நகைச்சுவைத் திரைப்படங்கள் பலவும் ரசிகர்களை அழ வைத்தே திருப்பி அனுப்பு கின்றன. அந்தளவுக்குச் சிரிப்புச் சுவையில் தமிழர்கள் கொடிநாட்டிக் கொண்டிருக் கிறோம். ஒன்பது சுவைகளில் நகைச்சுவையே பிரதானமானது என்ற வழிவழி வழக்குச் சொல்லிச் சொல்லிப் புளித்துப் போயாயிற்று...!

சரி சரி! இந்த முன்னுரை, துவக்கவுரை வியாக்கியானங்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நேரடியாக விசயத்துக்கு வந்து விடுவோம். அதாகப்பட்டது வெளிநாடு வந்து வாழும் தமிழர்களுக்குத் தெரிவிப்பது என்ன வென்றால், சிரிக்க நினைப்பவர்கள் ஒரு முறை www.sirippom.comக்குச் சென்று வாருங்கள் என்பதே!

முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களால் இந்த இணையத்தளம் பராமரிக்கப்படப்பட்டு வருகிறது. சிரிப்பைத் தவிர நாங்கள் எதையும் பெறுவதில்லை, தருவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்த இணையத் தளம் செயல்பட்டு வருகிறது. இந்தத் தளத்திலுள்ள நகைச்சுவைத் துணுக்குகளுக்குப் பயன் படுத்தப்பட்டுள்ள ஈழத்து மொழிநடை படிப் பதற்குக் கொஞ்ச நேரத்தை எடுத்துக் கொண்டாலும், சிரிப்பு உண்டாகிறது என்கிற காரணத்துக்காகவாவது நேரத்தைச் செலவிட லாம். சிரிப்பே மருந்து என்கிற போது, மருந்து என்ன இலவசமாகக் கிடைத்து விடுமா? (கட்டணம் அதிகமில்லை. உங்களின் பொன் னான கொஞ்ச நேரம்தான்!)

ரவிஜோக்ஸ், கந்தப்பு ஜோக்ஸ், சிரி-சிந்தி (கலைவாணர் டைப் ஜோக்ஸ்), கடி ஜோக்ஸ் (கல்லூரிப் பெண்களும் படிக்கலாம்), சினிமா ஜோக்ஸ் (சினிமாவில் வருவதல்ல, சினிமாவைப் பற்றியது), அறுவை ஜோக்ஸ் (அறுசுவை உணவு என்பதைப் போல்), புலம்பெயர் ஜோக்ஸ் (ஏன் புலம்பெயர் இலக்கியம் என்று மட்டும்தான் உண்டா?) ஐடியா ஐயாசாமி (ஏஏஏ... ஐயாசாமி நீ உன் ஆளைக் காமி என்று பாட்டுப் பாடினால் நாங்கள் பொறுப்பாளிகளல்ல!) போன்ற தலைப்புகளில் சிரிக்கத் தூண்டுகிறார்கள். (அடைப்புக் குறிக்குள் உள்ளது ச்ச்சும்மா!)

இந்த இணையத் தளத்துக்குள் நுழைந்து சிரித்து பெரும்பேறு பெற்றவர்கள், யாம் பெற்ற சிரிப்பு பெறுக இவ்வையகம் என்பது போல் உங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பலாம். அல்லது இந்த இணையத் தளத்திலிருந்து உங்கள் நண்பர்களுடன் உரையாட வசதியும் செய்யப்பட்டுள்ளது. சிரிப்பை வாய்விட்டுச் சொல்லி மகிழ 'வாய்ஸ் சாட்' வசதியும் உள்ளது.

அன்றாட அலுவலக, இல்லறக் கவலைகளில் வீழ்ந்து சிரிக்க நேரம் இல்லாதவர்கள் கொஞ்ச நேரம் இந்த இணையத் தளத்தில் உலவி விட்டு வரலாம்! சிரித்துச் சிரித்து வயிறு புண்ணானால் நாங்கள் பொறுப்பாளிகளல்ல! நீதிமன்றம், வழக்கு விவகாரங்களில் எங்களை இழுத்து புண்ணானதற்கு எங்களிடம் நஷ்ட ஈடு பெறுவதற்கு வழிவகையில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாம்பிலுக்குச் சில நகைச்சுவைத் துணுக்குகள் www.sirippom.com லிருந்து...

ஒருவர் : திருவள்ளுவர் ஐரோப்பாவிற்கு வந்தால், எப்படி குறள் எழுதியிருப்பார்.
மற்றவர் : வட்டிக்கு விட்டவன் வயிறு எரிய வாழ்வான். சீட்டுப் பிடித்தவன் சீரழிஞ்சு போவான் என்று எழுதியிருப்பார்.

நகைச்சுவை உபயம்: ரவிசெல்லத்துரை

கோபால் : உங்கட மகன்ரை பண்பாட்டைப் பார்த்துத்தான் என் மகள் விரும்பினாள்.

சுந்தரம் : என்ன பண்பாடு?

கோபால் : 'ரீ' 'யூஸ் குடிக்கும் போதும் சியர்ஸ் சொல்லுறாரே.

வை.யோகேஸ், ஜெர்மனி

சிலோன் சின்னதுரை : வட்டிக்கு விட்ட காசையும், சீட்டுக்கட்டிய காசையும் சுத்ததிக் கொண்டு போட்டாங்கள் என்று சிரித்துக் கொண்டு சொல்லுறியள். எப்படி இவ்வளவு பணம் போயும் உங்களால் சிரிக்க முடிகிறது?

ஐரோப்பா சின்னதுரை : சுத்திக் கொண்டு போனது என்ர காசில்லை, சுந்தரத்தின்ர

ரவிசெல்லத்துரை

ஒருவர் : ரஜினி மாதிரி வந்து காட்றேன்னு சொல்லிட்டு சென்னை போன என் பையன் சொன்ன மாதிரியே செஞ்சுக்கிட்டி இருக்கான்

மற்றவர் : அப்படீன்னா ஹீரோ ஆயிட்டானா?

ஒருவர் : நீங்க வேற... பஸ்ஸில கண்டக்டரா ஆயிருக்கான்.

ரவிசெல்லத்துரை

ஒருவர் : நம்ம தலைவர் பெரிசா ஒரு வீடு கட்டுறாரே யாருக்க அந்த பெரிய வீடு

மற்றவர் : அது அவரோட சின்னவீட்டுக்குத்தான்!

ஒருவர் : என்ன சோமண்ணை தாயின்ர செத்த வீட்டில மூத்தமகன் சுந்தரத்தைக் காணக் கிடைக்கல...

மற்றவர் : வட்டிக்காசு வாங்கப் போனவர் வர சுணங்கிட்டதாம்!

ஒருவர் : ஆமா உன் பொண்ணு அந்த நல்ல குணமான உத்தியோகஸ்தனை கல்யானம் செய்ய மறுத்திட்டாளாமே... ஏனாம்?

மற்றவர் : தன்ர கூந்தலைவிட அவரின் கூந்தல் மிகவும் நீளமாம் அதுதான்!

ஒருவர் : லண்டன் மாப்பிள்ளை ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்?

மற்றவர் : அவர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அதுதான் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்.

"வணக்கம் பிள்ளைகள், 2000ம் ஆண்டும் முடிஞ்சு 2001ம் ஆண்டும் துவங்கி நடந்துக்கிட்டு இருக்கு. 2000ம் ஆண்டோட உலகம் அழியப் போகுது எண்டாங்கள். அழிஞ்சதாயும் காணம். தமிழற்ற பிரச்சனை தீர்ந்ததாயும் காணம்.

என்னதான் இருந்தாலும், உலகம் பலமாற்றம் கண்டுபிடிப்போட முன்னேறிக் கொண்டுதான் இருக்குது பாருங்கோ. எங்கட நாடு எப்ப இப்படி இந்த நாட்டுக்காரங்களைப் போல முன்னேறப் போகுதோ தெரியவில்லை. வரவர நாடு குட்டிச்சுவராகிச் சுடுகாடாய்ப் போயிடுமோ தெரியல்ல. இங்க வந்த எங்கட சனம் இப்ப சிலசில விசயத்தில முன்னேறி இருக்கு கண்டியலே.

என்ன என்ன விசயத்திலை முன்னேறி இருக்கு எண்டு ஒரு புத்தகமே எழுதலாம் பாருங்கோ. இப்ப எங்கட சனம் தமிழ் கதைகேக்க இடைக்கிடை இங்கிலிஸ், பிரஞ்சு, டொச்சு, இத்தாலி, டென்மார்க், நோர்வே பாஷையெல்லாம் கலந்தல்லே கதைக்கினம். போற போக்கில இங்கிலிசில் தமிழ் கலந்து கதைப்பினம் போல கிடக்கு.

தண்ணீக்க விஸ்கிவிட்டுக் குடிச்சவன் பிறகு விஸ்கியில தண்ணி விட்டு குடிச்சானாம். கடைசியில தனி விஸ்க்கியைக் குடிச்ச கதையாய்க் கிடக்கு பாருங்கோ. போற போக்கில தமிழ் எந்த நாட்டுப் பாஷை எண்டும் கேட்டாலும் கேட்பினம் பாருங்கோ.

எங்கட இந்த சில தமிழ் சனத்திற்கு மற்றவன்ற பாஷையை கதைக்கிறதிலதான் சந்தோஷமாம். தன்ற தமிழ்ப் பிள்ளைகள் தமிழைவிட இங்கிலீசு வடிவாய் கதைக்கிறானகள் எண்டு புழுகமாய் கதைப்பினம்.

வெள்ளைக்காரன்கள் விடுமுறைக்கு ஸ்ரீலங்காவுக்குப் போட்டு வந்து என்ன அழகான நாடு, நல்ல சனம் எண்டு புழுகிறான்கள். இங்க இருக்கிற தமிழ்ச் சனம் என்னெண்டால் பிரச்சனை தீர்ந்தாலும், ஈழத்திற்குப் போய் யாரும் சீவிப்பானோ எண்டு கேட்பினம் போல கிடக்கு.

பனைக்குப் பின்னாலை பனையைப் பிடிச்சபடி குந்தியிருந்த சனம், இப்ப பனை என்ன நிறம் எண்டு கேட்டாலும் கேட்பினம் போல கிடக்கு. இப்படிப்பட்ட சில தமிழ்ச் சனத்திற்கு அட்வைசும் பண்ண் முடியாது. ஐடியாவும் கொடுக்க முடியாது பாருங்கோ!"

ஐடியா ஐயாசாமி

சரவணன்

© TamilOnline.com