ரம்மியமான ரஜனி ராஜா கோலம்
சென்னை ஜவகர் நகரில் உள்ள அந்த கோயிலுக்குள் நுழையும் எவரும் ஆச்சரியத்துக் குள்ளாகாமல் இருக்க முடியாது. முதலில் அந்தக் கோயிலின் வித்தியாசமான பெயருக்கான காரணத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் நம்மை துளைக்கிறது. விஷ்ணு மற்றும் அழகு என்பதைக் குறிக்க ரஜனியும், சிவபெருமானின் குறியீடாக ராஜாவும் இணைய வித்தியாசமான 'ரஜனி ராஜா' கோயிலாக உருவெடுத்ததாக, கோயில் நிர்மாணத்தில் பெரும்பங்கு வகித்த ராஜா தெரிவிக்கிறார்.

பல சமஸ்கிருத பண்டிதர்களைக் கலந்தா லோசித்த போது அவர்கள் பரிந்துரைத்த இந்தப் பெயர் அகால மரணமடைந்த தனது மனைவி யின் பெயராக இருந்தது அவருக்கு மிகுந்த ஆச்சரியமளித்ததாகக் கூறுகிறார். சுமார் நான் கரை ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இக் கோயில், விஷ்ணுவின் அதி தீவிர பக்தையாக விளங்கிய அவரது மனைவியின் நினைவாகவே எழுப்பப்பட்டுள்ளது. அவர் தில்லியில் வசித்த போது, அந்தப் பகுதியில் உள்ள ஊனமுற்ற / மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகப் பல நற்பணிகளை மேற்கொண்டிருந்தார். மிக இளம் வயதில் மரணம் அவரை அழைத்துக் கொண்டுவிடவே, அவரது கனவுகளையும், லட்சியங்களையும் தான் தொடர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராஜா.

மத்திய அரசு ஊழியரான ராஜா, ஜவகர்நகர் குடியிருப்புப் பகுதி சார்ந்த கோயிலாக அதனை உருவாக்கும் முயற்சியில் 20,000 ரூபாயை நன்கொடையாக அளித்தார். அவரது நல்லெண் ணத்தைப் புரிந்து கொண்ட அப்பகுதி மக்கள், கோயில் நிர்மாணத்தின் முழு பொறுப்பையும் அவரே மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத் தினர். கோயிலின் மூலவராக விஷ்ணுவும், கோயில் வருமானம் ஆதரவற்ற குழந்தைகளின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கோயில் நிர்மாணப் பொறுப்பை ராஜா ஏற்றுக் கொண் டார்.

அவருக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களின் உதவியோடு சுமார் ஒரு கோடி ரூபாயைத் திரட்டினார் ராஜா. இதோ... 75 லட்சம் ரூபாய் செலவில் அழகிய 'ரஜனி ராஜா' கோயில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. மீதமுள்ள 25 லட்சம் ரூபாய் ரஜனி ராஜா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1988ல் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோ யில், வட சென்னையில் அதிகமாக வசிக்கும் தெலுங்கு மக்களிடையே மிகப் பிரபலமாக விளங்குகின்றது.

கோயிலின் அனைத்து செலவுகளையும் அறக்கட்டளை நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள் ளது. பக்தர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக் கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி பூசை மற்றும் விழாக்களை சிறப்பாக நடத்தி வருவதோடு, உலக முதியோர் தினம், ஊனமுற்றோர் தினம், பார்வையற்றோர் தினம், மனநலம் பாதிக்கப்பட்டோர் தினம் போன்ற வற்றையும் இக்கோயிலின் அறங்காவலர் குழுவினர் தவறாது கடைப்பிடித்து வருகின்றனர்.

அத்தகைய தினங்களில், சம்பந்தப்பட்டவர் களை கோயிலுக்கு அழைத்து வந்து உணவு, உடை (மாணவர்களுக்கு சீருடை) மற்றும் பல உதவிகளை அளிக்கின்றனர். நகரில் உள்ள ஊனமுற்றோர்/ அனாதைக் குழந்தைகளுக்கான பள்ளிகளைத் தேர்வு செய்வதில், தமிழக அரசு - சமூக நலவாழ்வு பிரிவின் இணை இயக்குனர் அவர்களிடம் ஆலோசனை பெறப்படுகிறது.

மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, மருத்துவ வசதி, ஏழை மணப்பெண்களுக்கு இலவசமாக மங்களசூத்திரம் வழங்கும் நற்பணியையும் இக் கோயில் நிர்வாகம் அவ்வப்போது மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மாலையில் யோகாசனம் மற்றும் தியான வகுப்புகள் இலவசமாகப் பயில்விக்கப் படுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த பயனடைகிறார்கள். மறைந்த ஆளுநர் சென்னாரெட்டி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தியான மண்டபத்தில்தான் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பல்வேறு மதத்தினரும் வருகை தரும் இந்த மனித நேயக் கோயிலின் சுவர்களில் பைபிள், குர்ரான் மற்றும் பகவத் கீதையின் வாசகங்கள் அலங்கரிப்பது சிறப்பம்சமாகும்.

கோயிலைப் பற்றி பக்தர்கள் அனைவரும் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் சிடி-ரோம் ஒன்றும் (ஏப்ரல்-2001ல்) வெளியிடப்பட்டுள்ளது. இலவச மாக அளிக்கப்படும் இந்தக் கணனி குறுந் தகட்டில் ஸ்லோகங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மிகத் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளதால் அவற்றுக்கு இந்தியா முழுவதும் பக்தர்களிடம் அமோக வரவேற்புள்ளது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக, ஆந்திரப்பிரதேச அரசில் உயர்பதவி வகித்த திரு கே.பி.நாயுடு, ஐ.ஏ.எஸ் அவர்களால் நியூயார்க் நகரில் கடந்த ஜூலை - 21ல் சிடி-ரோம் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிலிகான் வேலியில் வெளியிடப்பட்ட போதும் இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

'ரஜனி ராஜா' கோயிலுக்கான இணைய தள முகவரி: www.rajaniraja.com

பே ஏரியாவில் சிடி-ரோம்களை இலவசமாகப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: rajaniraja_thequeen@yahoo.com அல்லது rajaniraja@vsnl.com

© TamilOnline.com