தென்றலுக்கு வயது ஒன்று!
நவம்பர் மாத இதழோடு தென்றலுக்கு ஒரு வயது பூர்த்தியாகியுள்ளதை அனைவரும் அறிவீர்கள்! தென்றல் எங்களிடமிருந்து புறப்பட்டாலும் உங்களிடையேதான் வெற்றி கரமாகப் பவனி வந்தது. தென்றலெனும் இக் குழந்தையைப் பெற்றெடுத்தது நாங்கள் என்றாலும், அதைச் சீராட்டி வளர்த்தெடுத் தவர்கள் நீங்கள்தான்.

பல நேரங்களில் செல்லமாய்க் கோபித்து இழுத்து வைத்து வலிக்காமல் தலையில் குட்டியிருக்கிறீர்கள். சந்தோசம் வந்த பொழு தினில் வாரி அணைத்து முத்தமிட்டிருக்கிறீர்கள். உங்களது குழந்தை போலவே தென்றலைப் பாவித்து அதைப் பற்றி மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அவர்களும் பாரபட்சமின்றி தென்றலின் வளர்ச்சியில் எங்களோடு கைகோர்த்துச் செயல்பட்டனர்.

ஆக இந்த ஒரு வருடத்தில் தென்றலை நாங்கள் வளர்த்தெடுத்ததைவிட அதிகமாய் வாசகர்களாகிய நீங்கள்தான் வளர்த்தெடுத் திருக்கிறீர்கள் என்பதை மனப்பூர்வமாக நன்றியுடன் நாங்கள் நினைத்துக் கொள்கிறோம்.

ஒரு ஆண்டை வெற்றிகரமாக ஒரு பத்திரிகை கடந்திருப்பதென்பது சாதாரண காரியமில்லை என்பது அனுபவசாலிகளான உங்கள் அனைவருக்கும் தெரியாமலிருக்க வாய்ப்புக ளில்லை!

சிதறிக் கிடக்கும் ஒரு மூட்டைத் தானியத் தையும் ஒரே நாளில் கொத்தித் தின்று முடித்து விட ஆசைப்படும் சிட்டுக் குருவியைப் போலத் தான் நாங்களும் எல்லா துறை சார்ந்த செய்திகளையும் சேகரித்து உங்களுக்கு அளித்திட பிரயாசைப்பட்டோம். அத்தனை பலதரப்பட்ட செய்திகளையும் உடனுக்குடன் உங்களுக்குத் தர முடியாவிட்டாலும், இராமரின் பாலத்துக்கு அணில் பிள்ளை அளித்த சிறுகை மணலாய், இந்த ஒரு வருடத்து தென்றல் இருந்திருக்கிறது என்பதை ஒட்டுமொத்த இதழ்களைத் தொகுத்துப் பார்க்கும் போது உணர்கிறோம்.

தென்றலுக்கு அம்மையப்பனாய் இருந்து அதன் எல்லா வளர்ச்சிப் படிநிலைகளையும் நின்று கவனித்து ஊக்குவித்த வாசகர்களாகிய உங்களிடம்தான் இந்த ஒருவருடத்தில் கடந்து வந்த பாதை, பயண அனுபவங்கள் பற்றியெல்¡ம் பேசியாக வேண்டும்...!

டிசம்பர் 2000 இதழ் தென்றலில் முதலாவது இதழ். இதழின் பதிப் பாளர் C.K வெங்கட் ராமன், தொகுப்பாசிரியர் அப்பணசாமி இவர்களது சார்பாக பதிப்பாசிரியர் அசோக் சுப்ரமணியம் தென்றல் இதழ் குறித்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததைத் தொடர்ந்து தென்றல் தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாகத் துவங்கியது.

கதை, கவிதை, குறுக்கெழுத்துப் புதிர், ஆன்மீகம், அரசியல், ஜோதிடம், தமிழறிவோம், சினிமா, நேர்காணல், விளையாட்டு, சமையல், சிறப்புக் கட்டுரைகள்... எனவான தலைப்புகளின் கீழ் விஷயங்களைத் தாங்கி முதல் இதழ் வெளியானது. முதல் இதழின் சிறப்பம்சமாகத் தற்காலப் பத்திரிகைகளின் போக்குகள் பற்றி பிரபலப் பத்திரிகையாளர்கள் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது, தென்றல் பத்திரிகைக்கு மிகவும் உபயோகமாக அமைந் தது. வந்தே மாதரம் மற்றும் ஜனகன இசை வீடியோவின் மூலம் நாட்டின் தேசிய உணர்வைத் தட்டியெழுப்பிய பரத் பாலா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் பரத் பாலா அவர்களின் நேர்முகம் முதல் இதழின் சிறப்பு முகமாக அமைந்தது.

தென்றலின் இரண்டா வது இதழ் வடிவ நேர்த்தியிலும், விசயங் களைத் தாங்கி வருவ திலும் தன்னை மறுபடி யொருமுறை புதுப்பித்துக் கொண்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செய்திச் சிதறல் களை தன்னுடைய பக்கங்களில் இணைத் துக் கொண்டது. வாசகர்களின் ஆதரவு கிடைத்ததையடுத்து மேலும் பொறுப்புணர்வு கூடி... சிரத்தையுடன் தயாரிக்கப்பட்டது. டிசம்பர் இசை விழா குறித்த தகவல்களைத் தாங்கி பொங்கல் சிறப்பு மலராகத் தென்றல் இந்த ஜனவரி மாத இதழில் வெளிப்பட்டது. எல்லா மதத்தினரையும் திருப்திப்படுத்துகிற வகையில் எல்லா மதங்கள் குறித்தும் கட்டுரைகள் வெளியாகின. வாசகர் களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காத பத்திரி கைகள் ஏதேனும் உலகினில் உண்டா? அதன்படியே வாசகர்களுக்கு தெய்வமச்சான் பதிலளித்தார். உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் தென்றலின் தனித்துவமான பகுதியானது.

நான்காவது இதழிலிருந்து எல்லா துறை யிலுமுள்ள சாதனையாளர்களை வெளிச்சத் துக்குக் கொண்டு வரும் பணியை தென்றல் மேற்கொண்டது. பிரதமர் காலில் விழுந்து வணங்கிய பெருமையைப் பெற்ற மதுரை சின்னப்பிள்ளையின் நேர்முகத்தை வெளி யிட்டது. இந்த இதழிலிலிருந்து ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர்களைப் பற்றியும், அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் மிகச் சிறந்த படைப்பை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. அதன்படி அமரர் சாவி இந்த இதழில் சிறப்பிடத்தைப் பெற்றார்.

தமிழ்ப் புத்தாண்டை வரவேற்ற ஐந்தாவது இதழான ஏப்ரல் இதழிலிருந்து கடல் கடந்து வாழும் சாதனையாளர்களையும் கவனத்தில் கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி ஏப்ரல் இதழில் எக்ஸோடஸ் நிறுவனத்தின் நிறுவனர் K.B சந்திரசேகர் அவர்களுடைய நேர்காணல் வெளியிடப்பட்டது. கடந்த ஆறுமாதங்களாக தென்றலை கூர்ந்து நோக்கிய வாசகர்கள் பெருமளவில் தங்களது கருத்துக்களையும் படைப்புகளையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஜூன் மாத தமிழகத் தேர்தல் சிறப்பு இதழாக வெளியானது. இந்த இதழில் இடம்பெற்ற டாக்டர். ஜெகதீசன் அவர்களின் நேர்காணலில் கவனக் குறைவாக தென்றல் தவறு செய்ய நேரிட்டது. கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்பதற்குப் பதிலாக அண்ணா பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் என தவறாக அச்சிடப்பட்டது. இந்தத் தவறு மிகுந்த கவனக் குறைவால் ஏற்பட்டாலும், வாசகர் களிடையே இந்த நேரத் திலும் அதற்காக மன்னிப்பு கோருகிறோம். ஜூன் மாத இதழிலிலிருந்து ஒவ்வொரு சிறப்பான இணையத் தளங்களைப் பற்றி அறிமுகம் செய்து வைக்கும் புதிய பகுதி தொடங்கப்பட்டது.

ஜூலை மாத இதழிலும் புதிய பகுதியொன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் அல்லது பிற நாட்டிலும் இருந்தபடி தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் துணை புரிந்தவர்கள் மற்றும் எல்லா துறையிலும் புதிய சகாப்தத்தை எழுதியவர் களுக்கு மரியாதை செலுத்தும் பகுதி ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பகுதிக்கு 'முன்னோடிகள்' என்று பெயரிடப்பட்டது. இந்த இதழிலிருந்து மற்றுமொரு மாற்றம் திரு.அசோகன் தென்றல் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுச் செயலாற்றத் துவங்கினார்.

ஆகஸ்ட் மாத இதழிலிலிருந்து மேலுமொரு புதுமை. இரண்டு நேர்காணல்கள் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஒரு நேர்காணல் தமிழ்நாட்டிலிருந்தும் மற்றொன்று அமெரிக்க மண்ணில் வாழ்ந்து வரும் சாதனையாளர் களிடையேயும் எடுப்பதென்று முடிவானது. அதன்படி இந்த இதழில் அமெரிக்க வாழ் சாதனை யாளர் கதிரவன் எழில் மன்னன் அவர் களும், தமிழ்நாட்டு சாதனை யாளர் மு.ஆனந்த கிருஷ்ணன் அவர்களும் சிறப்புக்குரியவர் களா னார்கள். விருந்தினர் பக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தப் பக்கத்தில் எழுத்தாளர் கீதா பென்னட் தொடர் கட்டுரை எழுத ஆரம்பித்தார். தேமதூரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வகைசெய்திடும் சிறப்பு மலராக இந்த இதழ் வெளியானது.

செப்டம்பர் மாத இதழிலிருந்து இளந் தென்றல் என்னும் குழந்தைகளுக்கான புதிய பகுதியொன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பகுதியின் வழியாக அமெரிக்க வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு நம்முடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தருவதோடு, தமிழ் மொழியைக் கற்றுத் தரவும் திட்டமிடப்பட்டு அந்தப் பணி இன்று வரை தொடர்கிறது. இந்த இதழில் அமரர் சிவாஜிகணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அக்டோபர் மாத இதழிலிருந்து கதிரவனைக் கேளுங்கள் என்ற தொடரை கதிரவன் எழில்மன்னன் எழுத ஆரம்பித்தார். தென்றலின் ஒரு வருட நிறைவு இதழ் தீபாவளி சிறப்பிதழாக வெளியானது.

மேலும் இந்த ஒரு வருட இதழ்களில் அமெரிக்கா வாழ் மக்களின் அனுபவங்கள், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு, நடக்கப் போகும் நிகழ்வுகளின் தொகுப்பு போன்றவை களுக்கும் சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. ஆக இந்த ஒருவருடங்களில் தென்றல் வடிவம் மற்றும் உள்ளடக்கங்கள் ரீதியில் தனக்குள் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வந்திருப்பதை அனை வரும் அறிவீர்கள்.

இந்த ஒருவருடத்தின் வளர்ச்சிப் படிநிலை கள் பற்றி நாங்கள் சொல்வதை விட வாச கர்களாகிய நீங்கள் சொல்வது மேலும் நன்றாகயிருக்கும். மேலும் வாசகர்கள் தங்களுடைய கருத் தைத் தெரிவித்தால், இன்னும் புதுமையான முறையில் தென்றலை வெளிக் கொண்டு வரலாம் என்கிற நம்பிக்கை எங்களுக்குக் கடலளவு இருக்கிறது.

எழுதுவது...!
படிப்பது...!
படித்ததை விமர்சிப்பது...!

இதைவிட வாழ்க்கையில் வேறென்ன சுவாரசியமாய் இருக்கப் போகிறது...? ஆகவே எங்களுக்கு உங்களுடைய விமர்சனங்களை எழுதுங்கள்.

தென்றலுக்கான முதல் பிறந்தநாள் பரிசாய் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்...

© TamilOnline.com