ராயங்கல ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் என்ற இயற்பெயர் கொண்ட கி.ராஜநாராயணன் என்னும் கி.ரா, 1923-இல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர். தற்போது பாண்டிச்சேரி பல்கலைக் கழகத் தின் நாட்டுப்புறக் கதைகள் ஆவணக் காப்பகத் தின் இயக்குனர் மற்றும் வருகைதரு பேராசி ரியராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழ் எழுத்துப் போக்கைத் திசை திருப்பியவர்களாக பாரதி, புதுமைப்பித்தன் போன்றவர்களைக் குறிப்பிடுவர். அதேமாதிரி தமிழ் எழுத்துக்கு வட்டார இலக்கியம் என்ற புதிய வகைமையை உருவாக்கிக் கொடுத் ததில் முன்னோடியாக இருந்தவர் கி.ரா. அதற்கு முன்புவரை நாவல் மற்றும் சிறுகதைகள் அனைத்தும் அன்னியப் பட்ட பொதுத்தமிழ் வடிவத்திலேயே புழங்கி வந்தன. கி.ரா. தன்னுடைய மண்மணம் மிக்க கிராமிய வாழ்க்கையைப் பழக்கப்பட்ட அதே மொழி யில் பதிவு செய்ததன் மூலம் தமிழிலக் கியத்துக்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியா, பிந்தைய இந்தியா இரண்டுக்கும் இடைப் பட்ட கால மாறுதல்களை தனக்கேயுரித்தான எள்ளல் தன்மையுடன் சித்திரிப்பதில் கி.ரா வல்லவர். இவருடைய கதைகள் அனைத்தும் ஒரு பாட்டி தன்னுடைய அருமைப் பேரனுக்குக் கதை சொல்வது போல் எளிமையாக, விவரணையுடன் அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பு.
கி.ரா எழுதிய முதல் கதையான 'கதவு' இன்றளவும் தமிழ் விமர்சகர்களால் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருகிறது. இயக்கங்கள் சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்துச் சிறை வாசங்களை அனுபவித்த கி.ரா தன்னுடைய நாற்பதாவது வயதிலேதான் எழுத்துலகுக்கு அறிமுகமாகிறார். 1965-இல் தன்னுடைய முதல் தொகுப்பான 'கதவு' சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு பரவலான வாசகக் கவனத்தைப் பெற்றவர். இவரது பால்யத் தோழன் கு.அழகிரி சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள், தமிழ் நாட்டுக் கிராமியக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், நாட்டுப்புறக் கதைகள் இரண்டு பாகங்கள், வயது வந்தவர்களுக்கு மட்டும், புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறப் பாலியல் கதைகள், பெண்மனம், காதில் விழுந்த கதைகள்... போன்ற நாட்டுப்புற ஆய்வியல் சார்ந்து வழிவழி வழங்கி வரும் கதைகளைப் பதிவு செய்துள்ளார்.
அப்பா பிள்ளை, கிடை குறுநாவலும் பனி ரெண்டு சிறுகதைகளும், கரிசல் கதைகள், கொத்தைப் பருத்தி, கி.ராஜநாராயணன் கதைகள், கதவு, கன்னிமை- போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர், பிஞ்சுகள் போன்ற நாவல்களை எழுதி வட்டார இலக்கியத்துக்கு வலுச் சேர்த்துள்ளார். மாந்தருள் ஒரு அன்னப் பறவை, வட்டார வழக்குச் சொல்லகராதி, கு.அழகிரிசாமி கடிதங்கள், மக்கள் தமிழ் வழக்கு, கி.ரா பதில்கள், கடிதங்கள், போன்ற பொதுவில் அமைந்த புத்தகங் களையும் கரிசல் காட்டுக் கடுதாசி, கி.ராஜ நாராயணன் கட்டுரைகள், புத்தகக் காதலர்கள் போன்ற கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
பெரும்பாலும் கி.ராவின் உலகம் முழுக்க பருத்தி விவசாயிகள் வாழ்வு சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. வானம் பார்த்த பூமியான கரிசல் மக்களின் வாழ்க்கை, ஆசா பாசங்களை நயமான கிண்டலுடன் எடுத்து ரைப்பவை இவருடைய கதைகள்.
1991-இல் 'கோபல்ல புரத்து மக்கள்' நாவலுக்காகச் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றார். இவருடைய 'பிஞ்சுகள்' நாவல் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. சாகித்ய அகாதெமியின் தேர்வுக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். 'கதைசொல்லி' என்னும் சிற்றிதழின் ஆசிரியரா கயிருந்து புதுவையிலிருந்து கொண்டு வருகிறார்.
கி.ராவின் 'விளைவு', 'கரண்ட்' ஆகிய கதைகள் குறும்படங்களாகத் தயாரிக்கப் பட்டுள்ளன. 'முரண்பாடுகள்', 'கிடை' ஆகிய கதைகள் வானொலி நாடக வடிவமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவருடைய கதைகளில் பெரும்பாலானவை தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
கட்டுரைகள், கதைகள், ஆய்வுகள்... எனப் பல தளங்களிலும் இயங்கிவரும் கி.ராஜநாரா யணன் திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை. 'புரட்சிக்காரன்' புகழ் வேலு பிரபாகரன் நடித்து அருண்மொழி இயக்கும் பெரியார் பற்றிய படத்தின் வசனகர்த்தா கி.ராவே!
கிட்டத்தட்ட எழுபத்தெட்டு வயதை நெருங்கிவிட்ட கி.ரா இன்னும் மேடைகளில் இளைஞராகவே வலம் வருவதை, இந்தக் கால இளசுகள் சொல்லிச் சொல்லி மாய்வதாய்க் கேள்வி!
சரவணன் |