கபிலனின் உயிர்
சங்கப் புலவர்கள் வரிசையில் கபிலரின் முதன்மையைச் சொல்லவேண்டியதில்லை. அவர் சென்ற சில காலத்தில் அவரைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டி மற்ற சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். இளங்கீரன் என்னும் புலவர் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையிடம் செறுத்த செய்யுள் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்(புறநானூறு:53:11-12) என்று பாராட்டுகின்றார்; அதாவது நிறைய பொருளை அடக்கிய (செறுத்த) கவிதை செய்யும் செம்மையான நாவினையும், மிகுந்த (வெறுத்த) கேள்வியறிவும் உடைய விளங்கும்புகழ் கொண்ட கபிலன் என்று சொல்கிறார். சங்கப் புலவர்களின் உயர்வு பொதுவாகவே பெரியது; அவர்களே இவ்வாறு போற்றும் பண்புடைய கபிலர் எவ்வளவு பெரியவர்! அந்தச் சேரமன்னன் மாந்தரனும் இளங்கீரனாரிடம் அந்தக் கபிலன் இன்றுளன் ஆயின் நன்றுமன்(புறநானூறு:53) என்று கபிலரின் கவிதையைக் கேட்கும் ஏக்கத்தால் கபிலன் இன்று இருந்தால் நன்று என்று சொல்லியுள்ளான். நக்கீரனார் இவரை பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்(புறநானூறு: 78) எனப்புகழ்ந்துள்ளார். மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் பொய்யா நாவிற் கபிலன்(புறநானூறு:174) என்று பாடுகிறார்.

கபிலர் மதுரைக்குக் கிழக்கே உள்ள திருவாதவூரிலே அந்தணர் குடியில் பிறந்தவரென்று சொல்லுவார்கள். மாணிக்கவாசகரும் அதே ஊர்தான் என்பதை நினைக்கவேண்டும். இங்கே அந்தக் கபிலர் பாடிய கவிதைகளின் சிறப்புக்கூறு ஒன்றினையும் அதற்கும் அவர் வாழ்வின் தொடர்பையும் பார்ப்போம். கபிலர் கவிதைகளில் ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால் ஒரு துணையின் உயிர்சென்றால் அதன் இன்னொரு துணையும் உயிரிழப்பதாகவோ உயிரை இழந்துவிடுவேன் என்று சூளுரைப்பதாகவோ இருப்பது. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

ஏனைய பிறவியிலாவது அவரை அடைவேன்:

குறிஞ்சிப்பாட்டு என்னும் நெடுங்கவிதையிலே தலைவியின் களவுக்காதலை அறியாமல் பெரியோர்கள் அவளுக்குத் திருமணமுடிக்க வேறொருவனைத் தேடுவது அறிகிறாள் தலைவி. அவள் கற்பிலே சிறந்தவள்; எனவே உள்ளத்தில் புகுந்தவனையன்றி இன்னொரு வனைத் தன்னோடு இணைப்பதை நினையாதவள். எனவே தன் கற்பிற்கு இழுக்கு நேர இருப்பதை அறிந்து தோழியிடம் சொல்கிறாள்: ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு(குறிஞ்சிப்பாட்டு: 23-4); அதாவது என் கற்புநெறிப்படித் தலைவர் இந்தப் பிறவியில் கணவராக வாரரர் ஆனாலும் ஏனைய உலகத்தில், அதாவது ஏனைய பிறவியில், எமக்கு அவரை அடைவது மிகவும் இயலும்என்று தெளிவாகச் சொல்கிறாள். ஏனைய பிறவி என்பது வேறொன்றுமில்லை: நான் இறந்துபடுவேன், பிறகு தலைவரை அடுத்த பிறவியில் அடைவேன் என்று சொல்கிறாள்.

மலையில் பாய்ந்து இறந்த மந்திக்குரங்கு:

கலைக்குரங்கு செத்ததைத் தாங்காத மந்தியைப் பாடுகிறான் குறுந்தொகையிலே கபிலன். இங்கே தலைவன் களவிலே தலைவியைப் பார்க்க இருட்டிலே காட்டுவழியே வருவதைத் தடுக்கத் தோழி தலைவனிடம் மறைமுகமான கருத்தோடு சொல்கிறாள். கருங்கண்ணும் மரந்தாவுதல் வல்லதுமான ஆண்கலை ஏதோ காரணத்தால் இறந்துபட்டது. அதற்கும் அதன்துணையான மந்திக்கும் இளைய குட்டிப்பறழ் பிறந்து மரமேறுதல் கல்லாத வயதோடு இருந்தது. ஆனால் மந்தியோ வருத்தம் தாங்காமல் தன்கடுவனோடு செல்ல முடிவு செய்தது. தன் குட்டிப்பறழைச் கிளைச்சுற்றத்திடம் சேர்த்தி ஓங்கிய மலைமுகட்டில் இருந்து பாய்ந்து உயிரிழந்தது:

கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்(குறுந்தொகை: 69). அதாவது அந்த மந்திபோல் உனக்குக் காட்டிலே ஏதும் கெடுதல் நேர்ந்தால் தலைவியும் அதைத் தனக்கு ஏற்படுத்திக்கொள்வாள் என்று குறிப்பினைச் சொல்கிறாள்.

இதுவரை ஆண்பெண் துணைகளைத்தான் ஒருவர்பின் ஒருவர் உயிரிழப்பதைப் பாடியுள்ளதைக் கேட்டடீம். ஆனால் தோழர்களுக்கு எப்படி வாழ்வு என்று கபிலன் பாடியுள்ளான்?

தோழிபோனால் யானும் வாழேன்!

கலித்தொகையில் ஒருகவிதையில் தலைவி தலைவனுக்கு ஏதும் நேர்ந்தால் தலைவி உயிர் வாழாள், அவள் அல்லாமல் யானும் உயிர்வாழேன் என்று தலைவனிடம் செப்புவாள் தோழி. ...இவள் வாழாள்; இவளன்றி... யானும் வாழேன்(கலித்தொகை:52:20-21) என்று தோழி சூளுரைப்பாள்.

பாடியதுபோல் வாழ்ந்தானா கபிலன்?

மேலே கபிலனைப் பொய்யா நாவின் கபிலன்என்று பாடியுள்ளதைக் கேட்டடீம். மேற்கண்டவாறு தன் கவிதைகளில் ஒரு துணை இறந்தால் அதன் துணையும் உயிரிழப்பதைப் பாடிய கபிலன் தன் வாழ்வில் எவ்வாறு நடந்துகொண்டான் என்று வினா எழலாம். ஆம் என்பதே விடை. தன் உயர்ந்த கவிதைபடியே வாழ்ந்து காட்டும் நிலைமை அவனுக்கு நேர்ந்தது. கபிலனின் உயிர்நண்பன் பாரி மற்ற மூவேந்தரிடம் போர்பொருது உயிரிழந்தது தெரிந்ததே. மாளிகையின் உச்சிச் சூளிகையிலிருந்து தேர்களை எண்ணிய அந்தப்பாரியின் சிறுபெண்கள் அதன்பின் குப்பைமேட்டிலிருந்து வழியில்போகும் உப்பு வண்டிகளை எண்ணிய உருக்கமான நிகழ்ச்சியும் தெரிந்ததே. ஆனால் பலருக்கும் கபிலனுக்கு அதன்பின் நடந்ததைத் தெரிவதில்லை.

பாரியின் மகள்கள் இருவரையும் தன்மகள்களாக ஏற்று அவர்களை மணமுடிக்க அவர் தமிழகம் முழுதும் அலைந்தார். விச்சிக்கோ என்னும் அரசனைப் பாரிமகளிரை ஏற்றுக்கொள்ள வேண்டினார் (இது புது நானூற்றின் 200-ஆம் பாட்டால் தெரிகிறது). அதன் பின் அவர் இருங்கோவேள் என்னும் வேளிர்மன்னனைப் பெண்கொள்ள வேண்டுவதால் விச்சிக்கோ மறுத்ததாகத் தெரிகிறது. இருங்கோவேளும் மறுத்ததும் அவன்மேல் கோபத்தோடு பாடியதும் 202-ஆம் பாட்டில் தெரிகிறது. பிறகு கபிலர் தென்னார்க்காட்டிலே திருக்கோவலூரிலே பார்ப்பனச் சேரியில் பாரிமகளிரை ஒப்படைத்து விட்டுப் பெண்ணையாற்றங் கரையிலே வடக்கிருந்து உயிர்துறந்தார். வடக்கிருத்தல் என்பது வடக்குநோக்கி அமர்ந்து சிலவாரங்கள் பட்டினிகிடந்து இறப்பதாகும். திருக்கோவலூர்க் கல்வெட்டு ஒன்று அவர் மலையன் என்னும் கோவலூர் அரசனுக்குப் பெண்களைக் கொடுத்து நெருப்பிலே குளித்து உயிர்துறந்ததாகச் சொல்லுமென்று உ.வே.சாமிநாதையர் சொல்கிறார்.

எப்படியானாலும் கபிலர் தாமே உயிர்துறந்தது உண்மை. உயிர்துறக்குமுன் பாரியின்மேல் பரிவோடு பாடிய பாட்டு புறநானூற்றின் 236-ஆம் பாட்டாகும். அதிலே பாரி... இம்மை போலக் காட்டி உம்மை இடையில் காட்சி நின்னோடு உடனுறைவு ஆக்குக உயர்ந்த பாலே (உம்மை=மேற்பிறவி) என்று பாடுகிறார்; அதாவது பாரியே இப்பிறவிபோலக் காட்டி மேற்பிறவியிலும் இடைவெளியில்லாமல் நீ தோன்ற உன்னோடு உடன்வாழ்வதை உயர்ந்த விதி ஆக்கட்டும் என்று நெஞ்சுருகிப் பாடி உடல் வாடி உண்மையான புகழ் அழியாமல் நிலை நின்றார். சாதலைவிடத் துன்பமானது இல்லை (சாதலின் இன்னாதது இல்லை) என்று வள்ளுவன் சொல்லுவான்; எனவே கபிலனுக்கும் உயிர்விடுவது எளிய செயலில்லை; ஆனால் பாரியின் நட்பும் அன்பும் அதனை மிஞ்சியது. இவ்வாறு தான் பாடிய நெறியில் வாழ்ந்த கபிலன் ஐம்புலன்களும் அழுக்கற்று எவ்வளவு தூய்மையானவன்! அதனால் தான் அவனைப் புலன் அழுக்கற்ற அந்தணாளன்(புறம்:126) என்று நப்பசலையார் பாடினார். அவன் ஒருவன் தியாகம் பலகோடி யாண்டுகள் ஆனாலும் மறையாதது. அவன்சொல்லை மறவாது கண்ணீரோடு காக்கும் தமிழ்க்குலமும் அத்தனைக் கோடியாண்டுகளும் பொலிந்து வாழும்.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com