எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 - 1972)
பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார் பரம்பரையில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் முருகய்யா தேசிகர். முருகய்யா தேசிகரின் மகன் முத்தையா தேசிகர். இந்த முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். இவர் 1908இல் பிறந்தார்.

இசைக்குடும்பப் பின்புலத்தில் பிறந்து வளர்ந்து வந்த அனுபவம், தண்டபாணி தேசிகருக்கு இயல்பிலேயே இசைப்புலமை வாய்க்கப் பெற்றவராக வாழ்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. தேவார திருவாசகம் முதலியவை களைப் பாடுவது, இவற்றை சிறுவர்களுக்கு இசையுடன் போதிப்பது, கதாகாலட்சேபம் செய்வது போன்ற தொழிலை அர்ப்பணிப்புடன் இவரது குடும்பம் செய்து வந்தது. இந்தப் பின்புலச் செழுமையில் தோய்ந்து பக்தி இலக்கியம், அதன் ஜீவஊற்றுடன் இசைபிரவாக மாக பீறிட்டு வெளிப்பட்டது.

தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் தன தந்தையிடம் இசையை முறையாக கற்றார். நாதஸ்வர வித்துவான் சடையப்ப பிள்ளையிடம் சரளி, ஜண்டை, கீதம் மற்றும் வர்ணம் படித்தார். தொடர்ந்து சித்தப்பா மாணிக்க தேசிகர் ஆசிரியராக இருந்த தேவாரப் பாடசாலையில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலிய வற்றை பாடும் முறைகளை நுட்பங்களை மூன்று வருடம் கற்றுக் கொண்டார்.

இசையின் பல்வேறு நுணுக்கங்களை அனு பவங்களை லயிப்புகளை வரன்முறையாக கற்றுத் தேர்ந்து தனியாக கச்சேரி செய்யுமளவிற்கு வளர்ந்தார்.

திருமுருகர் ஆலயத்தின் பத்துநாள் வைகாசி திருவிழாவில் சங்கீத வித்துவான்களும் நாதசுரக் கலைஞர்களும் கூடியிருந்த சபையில் சிறுவனான தண்டபாணி தனது முதற் கச்சேரியை அரங்கேற்றினார். கூடியிருந்தவர் களின் பாராட்டும் ஐந்து ரூபாய் சன்மானமும் கிடைக்கப்பெற்று மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கினார்.

குடந்தையில் இருந்த தமக்கையார் வீட்டில் தங்கியிருந்து, வயலின் மேதை ராஜமாணிக்கம் பிள்ளையிடம் நான்கு வருடங்கள் இசை பயின்று மேலும் தனது இசை ஆர்வத்தை புலமையை வளர்த்துக் கொண்டார். கர்நாடக இசையின் தமிழிசையின் நுட்பங்களை ஆய்ந்தறிந்து தன்வயப்படுத்திக் கொண்டார்.

மதுரை வடக்குச் சித்திரை வீதியில் அம்பாள் உற்சவத்தில் பெரும்பாலும் தமிழ்ப்பாடல்களைப் பாடி 'தமிழ்பாட்டு இயக்கம்' வலுப்பெறுவதற்கும் காரணமாக இருந்து செயற்பட்டார். இந்தக் கச்சேரி பலரது பாரட்டுக்கும் இசையார்வத் துக்கும் புதியமடைமாற்றத் திருப்பத்துக்கும் காரணமாயிற்று.

சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் - குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.

ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. சங்கீதம் மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண 'இசை விருந்து' இருக்க வேண்டும். இதற்கான 'இயக்கம்' வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.

திரைப்படத்திலும் தேசிகர் தன இசைக் கோலங்களை வழங்கிச் சென்றுள்ளார். பட்டினத் தார் (1935) படத்தில் பல்வேறு ராகங்களில் அமைந்த பாடல்களை பாடியுள்ளார். அதைவிட இப்படத்தில் தேசிகரே பட்டினத்தாராக நடித்து நடிகராகவும் புகழ்பெற்றார். ஜெமினி தயாரிப்பில் நந்தனார் படத்தில் சிவனடியாராக தேசிகர் பாடி நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பாடி வலம் வந்தார். தேசிகர் கடைசியாக திருமசை ஆழ்வார் (1948) படத்தில் பாடி நடித்தார். பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனின் இன்னிசையில் பல அரிய பாடல்களை பாடினார். பின்னர் பாடி நடிப்பது நின்று போக பின்னணி பாடல் பாடும் நிலையிலும் இருந்தார். முதல்தேதி (1955) என்ற படத்தில் அசரீரியாக தேசிகரின் குரல் ஒலித்தது.

தேவார திருவாசக திருப்புகழ் விற்பன்னராக ஓதுவார் மரபை போற்றிப் புகழ்ந்து அதன் பரவலாக்கத்துக்கும் காரணமாக இருந்து தொழிற்பட்டார். கர்நாடக சங்கீதத்தின் நுட்பங்களையும் பக்தி இசையுடன் கலந்து புதிய இசை அனுபவப் பகிர்வுக்கு காரணமாக இருந்தார். மேலும் தமிழிசை மரபு மீள் கண்டுபிடிப்புக்கும் தன்னளவில் முன்னோடியாக இருந்து பங்கு கொண்டார். திரைஇசையில் ஓர் தனித்த முரசு கொட்டி வந்தார். ஆக இசையின் பயில்வுக்கும் அதன் வியாபகத்துக்கும் தனது மொழிவழிச் சமூகத்தின் உச்சபட்ச இசையின் பரிமாணத்துக்கு தேசிகர் ஓர் முன்னோடியாக இருந்து பணியாற்றியுள்ளார்.

இசையால் வாழ்ந்து இசைக்கு புதுக் கோலங்கள் அளித்து இசையின் பல்வேறு பரிமாணத் தேட்டத்துக்கு தேசிகரின் பங்களிப்பு அளப்பரியது. இன்றைய தலைமுறை தேசிகரின் இசைப் பங்களிப்பை தன்வயப்படுத்த வேண்டும். இதனால் இசைக் கோலங்கள் தமிழ் இசையின் புதிய இசை அலைகளாக மேற்கிளம்ப ஒவ்வொருவரும் தம்மளவில் முயற்சி செய்ய வேண்டும்.

ஆதி

© TamilOnline.com