ரேவதி உடன் ஒரு சந்திப்பு
மண்வாசனை படத்தில் அறிமுகமாகிய ரேவதி இன்று தமிழ்த் திரைப்பட உலகில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த விசயம்தான்.

ரேவதி நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததைச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவையே இல்லை. புன்னகை மன்னன், புதிய முகம், மறுபடியும், தேவர் மகன், மகளிர் மட்டும்... போன்ற படங்களிலெல்லாம் ரேவதி வெளிக் காட்டிய தனித்துவமான நடிப்பைப் பாராட்டாத ஆட்களே இல்லையெனலாம்.

சமீபத்தில் நடந்த 'இந்திய அமெரிக்கன் ·பிலிம்' விழாவில் கலந்து கொள்ள, 'மித்ரு மை ப்ரண்ட்' (Mithru - My Friend) என்ற தான் இயக்கிய முதல் திரைப்படத்தோடு அமெரிக்கா வந்திருந்தார். இந்த விழா நியூயார்க் மன்ஹாட்டனில் உள்ள பிராட்வே பகுதியின் புகழ் பெற்ற Lowe cineplex-இல் வைத்து நடந்தது.

'மித்ரு மை ப்ரண்ட்' மிக வித்தியாசமான படம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக முழுக்க முழுக்கப் பெண்கள் குழுவே படத்தைத் தயாரித்து இயக்கி எல்லா பணிகளையும் செய்துள்ளது குறிப்பிடத்தகும் அம்சம்.

மண்வாசனையோடு வாழும் ரேவதியுடன் 'தென்றலு'க்காகக் கொஞ்ச நேரம்...

முழுவதும் பெண்கள் மட்டுமே சேர்ந்து இந்த திரைப்படத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்கிற யோசனை எப்படி தோன்றியது?

முதல்ல அந்த மாதிரி பெண்களே சேர்ந்து பணியாற்றணும்னு தோணல. ப்ரியா வெங்க டேஸ்வரன் சொன்ன கதை ரொம்ப பிடிச்சுப் போச்சு. அதனால இந்த திரைப்படத்திற்க்கு கதை சொன்னவங்க பெண்ணாகிட்டாங்க. ஒளிப்பதிவிற்கு பி.சி. ஸ்ரீராம் கூட பணியாற்றிய fowziaவை தேர்வு பண்ணினோம். ப்ரியா வெங்கடேஸ்வரனும், சுதா கொங்கராவும் திரைக்கதை அமைச்சாங்க. பிரபா கோடா உடையலங்காரத்துக்காக. எம்.டி. வாசு தேவனின் இரண்டு படங்களுக்கு எடிட்டிங் செய்த அனுபவமும், ஒரு முறை கேரள அரசின் தேசிய விருதும் வாங்கிய பீனாவை எடிட்டிங் செய்ய தேர்ந்தெடுத்தோம். sound engineer ஆக , 107 படங்களுக்கு பணியாற்றிய கீதாவை தேர்வு செய்தோம் ஆக 'மகளிர் மட்டும்' சேர்ந்து இயக்கிய படமாக இது அமைந்து விட்டது.

படத்தை அமெரிக்காவில் எடுக்க என்ன காரணம்?

படத்தை முதல்ல தமிழ் நாட்டுக்கும் மும்பைக்கும் நடக்கக்கூடிய காட்சிகளாகத் தான் நினைத்தோம். அடிக்கடி கலிபோர்னியா விற்கு சில விஷயமாக வர வேண்டியிருந்தது. இந்த கதை அமைப்பை ஒரு silicon valley-யில அமைந்த இந்திய குடும்பம் மாதிரி அமைச்சா நல்லா இருக்குமேன்னு தோன்றியதால், 90% திரைப்படத்தை அமெரிக்காவில் எடுத்தோம்.

படத்தில் அங்கங்கே தமிழ் வசனங்கள் வந்தாலும் திரைப்படத்தை ஆங்கிலத்தில் எடுக்க என்ன காரணம்?

இந்த படத்தோட கதை ஒரு universal theme. ஒரு குறிப்பிட்ட மொழியில் எடுத்தால், அந்த மொழி தெரிந்த மக்கள் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எடுத்தோம். படத்தில் வரும் தமிழ் வசனங்களுக்கு ஆங்கில sub titles போடப் போறோம். இந்த படத்தை பார்த்துட்டு நிறைய அமெரிக்கர்கள் படத்தின் கருவிற்காக பாராட்டினார்கள்.

திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங் களை எப்படி தேர்வு செய்தீர்கள்?

படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் மொத்தம் 5 பேர். கதாநாயகியாக நடிக்க அடிக் கடி அமெரிக்க விஜயம் செய்யும் ஷோபனாவை தேர்வு செய்தோம். அமெரிக்க வாழ் இந்தியக் குடும்பங்களைப் பற்றி அவங்களுக்கு நன்றாக தெரியும். அவங்க அந்த கதாபாத்திரத்தில் தோன்றி நடிச்சாங்க என்பதை விட, அந்த கதாபாத்திரமாகவே மாறிட்டாங்கன்னுதான் சொல்லணும். ப்ரீத்தியை ஒரு தோழி மூலம் தேர்ந்தெடுதேன். படத்தில் வரும் மற்ற இரு அமெரிக்க கதாபாத்திரங்களையும் அமெரிக் காவில் உள்ள ஒரு casting companyயின் மூலம் தேர்வு செய்தோம்.

அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?

படப்பிடிப்பு அனுபவம் நிறைய மன உறுதியை கொடுத்திருக்கிறது. தன் கையே தனக்கு உதவி எனும் மிகப் பெரிய விஷயத்தை இங்குதான் அனுபவபூர்வமாக பார்த்தேன். இந்தியாவில் படப்பிடிப்பில் 'டீ டீ' என கேட்டால் யாராவது சுடச் சுட 'டீ' கொண்டு வந்து கொடுப்பார்கள் ஆனால் அமெரிக்காவில் 'டீ' வேண்டுமென்றால் நாமே சென்றுதான் 'டீ' எடுத்துக் கொள்ள வேண்டும் யாரும் கையில் கொண்டு வந்து கொடுக்க மாட்டார்கள்.

ஏதாவது கசப்பான சம்பவம் படப்பிடிப்பின் போது நடந்ததா?

நாங்கள் los angeles-இல் தங்கி யிருந்த ஹோட்டல் அறையிலிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காமிரா லென்ஸ் திருட்டுப் போனது, படப் பிடிப்பின் முதல் நாளே திடீரென மழை எதிர்பாராத பனி மழை. இதெல்லாம் கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. ஆனால் விடாது மன உறுதியோடும் விடா முயற்சியோடும் , படத்தை நல்ல படியாக முடித்து விட்டோம். இனி மக்களின் விமர்சனத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்

பொதுவாக ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் என்று சொல்வார் கள். அது மாதிரி இந்த பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஆண் உங்கள் கணவரா?

பின்னால், முன்னால் என்று எல்லாம் இல்லை. அவர் எப்பொழுதும் என் கூடவே இருக்கிறார். நான் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியிலும் என் கூடவே இருந்து உற்சாகமும், ஊக்கமும் அளிப்பார்.

நளினி சம்பத்குமார், நியூயார்க்

******


திரைப்பட உலகம் குறித்து ரேவதி மனந் திறக்கிறார்...

இந்திய சினிமாக்களிலே கதாநாயகிகளின் ஆயுட்காலம் குறைவாகத்தான் உள்ளது. இந்தி சினிமாக்களில் வேண்டுமானால் ஒன்றிரண்டு முக்கிய கதாநாயகிகள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஷபனா ஆஸ்மி, ரேகா போன்ற ஒரு சில நடிகைகள் முக்கியமான கதாபாத்திரங்களில், குணச் சித்திர வேடங்களில் நடிக்கிறார்கள். அதற்கான வாய்ப்பு அங்கிருக்கிறது. ஆனாலும், அவர்களும் வருடத்திற்கு எத்தனை படம் நடிக்கிறார்கள்? ஒருபடம்! இரண்டு படம்! அவ்வளவுதான். இவர்கள் அந்த ஒன்றிரண்டு படங்களில் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த வாய்ப்பும் போய்விடும்.

ஆனால் ஹாலிவுட் படங்களில் பெண் களுக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேலதான் அழகான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் பதினெட்டு வயதில் தான் நல்ல கதாபாத்திரம் கிடைக்கும். இருபத்தைந்து வயதைத் தாண்டிவிட்டால் 'வீட்டுக்குப் போ' என்று வணக்கம் சொல்லி அனுப்பி விடுவார்கள். என்னைப் பொறுத்தவரை படங்களின் எண்ணிக் கையில் எனக்கு நம்பிக்கையில்லை. நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். அப்படியில்லாத சமயத்தில் எனக்கு சினிமாவில் நடிக்காமல் இருப்பதைப் பற்றிய கவலை யில்லை. என்னை விரும்பும் சினிமாவில் நான் இருப்பேன்.

சினிமாவில் நடிக்கிறவங்க சின்னத்திரையில் நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒரு புதுப் படத்தைப் பற்றி பேட்டி கொடுப்பதையும், கிளிப்பிங்ஸ் கொடுப்பதையும், பாடல்கள் கொடுப்பதையும் நிறுத்தச் சொல் றாங்க. அது தயாரிப்பபாளர் கையிலும், இயக்குநர் கையிலும் தான் இருக்கு.

அவங்களுக்குள்ள ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்துவிட்டார்கள் என்றால் ஒரு பிரச்சினையும் இருக்காது. இன்னொன்று என்னவென்றால், 'தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு இந்த மாதிரியான நாள்களில் நடிகர், நடிகைகள் பேட்டி கொடுத்தால் எல்லோரும் தொலைக் காட்சியின் முன்னால்தான் இருப்பார்கள். யாரும் தியேட்டருக்கு வர மாட்டார்கள். அதிகமான கலெக்ஷன் வர வேண்டிய அந்த நாள்களில் எங்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் முன்னணி நாயக, நாயகிகள் பேட்டி கொடுக்க வேண்டாம்' என்று கேட்டு கொண்டிருக்கிறார்கள். நமக்குள்ள ஒரு கட்டுப்பாடு கொண்டு வருவோம் என்று சொன்னார்களே தவிர எங்களைக் கட்டுப்படுத்தவில்லை.

சினிமா நன்றாகப் போனால் தானே சினிமாவில் இருக்கின்ற எல்லோருக்கும் நல்லது. அறிமுகக் கலைஞர்கள் ரசிகர் களைச் சந்திப்பது ஆரோக்கியமான விஷயம். முன்பு ஒரே தொலைக்காட்சி தான் இருந்தது. இப்போது நிறைய தனியார் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. எல்லாத் தொலைக்காட்சிகளும் ஒரு முன்னணி நடிகர் அல்லது நடிகையின் பேட்டியை ஒரே நேரத்தில் போடுகிறார்கள். அப்படிச் செய்யாமல் ஏதாவது ஒரு சேனலில் மட்டும் வருகின்ற மாதிரியாவது பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கும் நல்லது, சினிமாத்துறைக்கும் நல்லது.

சந்திப்பு: சந்திரா

© TamilOnline.com