தமிழகத்திலும், தேசிய அளவிலும், உலகெங்கிலும் என எல்லா நிலைகளிலும் கடந்த வருடம், பல இடர்ப்பாடுகளையும் துயரங்களையும் தந்துள்ளது. பொருளாதார நிலையிலும் தேக்கம் ஏற்பட்டது. மொத்தத்தில் 2001 பல கோணங்களில் மோசமான ஆண்டாகத்தான் இருந்தது.
ஆனால் 'hope springs eternal'. வரும் ஆண்டில் இத்தடைகளையும், துயர்களையும் நீக்க முயற்சிகளை மேற்கொள்வோமாக!
போர் மேகங்களும், பொருளாதாரப் புயல்களும், அரசியல் அடிதடிகளும் மிகுந்துள்ள இந்நிலையில் புத்தாண்டு என்னும் ஒரே காரணத்தால், இவை யாவும் உடனடியாக மாறப் போவதில்லை. நாடு, இனம், மொழி, சாதி, பொருளாதாரப் பிரிவுகள் ஆகிய பல சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கிறோம். அந்தப் பிரிவினைகளைச் சுயலாபம் கருதிப் பெரிதாக்கும் இழிமக்களையும், குறுகிய நோக்கோடு இவற்றில் உழன்று தன்னையும் வருத்திப் பிறரையும் வருத்துவோரையும் உதறும் பரந்த மனப்பாங்கை வளர்ப்பதே இத்தகைய இன்னல்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி.
சிறுமை கண்டு பொங்குவோம்; பிரித்தாளுவோரைப் புறந் தள்ளுவோம்; நாளைய தலைமுறைக்கு நல்லதோர் உலகை விட்டுச் செல்வோம்; இது நமது உடனடிக் கடமை...
'கதிரவனைக் கேளுங்கள்' என்ற பக்கத்தின் வழியாக கடந்த இதழ்களில் உபயோககரமான தகவல்களை வாசகர்களுக்கு அளித்து வந்த கதிரவன் எழில்மன்னன் இந்த மாத இதழிலிருந்து தனது புதிய முயற்சியான தொடர்கதை ஒன்றையும் எழுதத் தொடங்கியிருக்கிறார். 'சூர்யா துப்பறிகிறார்' என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொடர்கதை கண்டிப்பாக வாசகர்களின் பேராதரவைப் பெறும் என்று நான் நம்புகிறேன்.
'ஊர்வலம்' என்ற புதிய பகுதி ஆரம்பிப்பது பற்றியான அறிவிப்பை சென்ற இதழ் தலையங்கப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி சில வாசகர்கள் எங்களுக்கு அவர்களது பள்ளி அனுபவங்கள் பற்றி விளக்கி எழுதி அனுப்பியிருந்தார்கள். இந்த இதழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட 'ஊர்வலம்' பகுதிக்கு மேலும் எழுதி அனுப்புபவர்கள் தங்களது புகைப்படங்களையும் அனுப்பினால், அதை அந்தப் பகுதியில் பிரசுரிக்க ஏதுவாகயிருக்கும். உங்களது புகைப்படம் உங்கள் மனங்கவர்ந்த பகுதியிலேயே பிரசுரமாவது மேலும் அந்தப் பகுதிக்கு அணி சேர்ப்பதாக அமையும் என்பதாலேயே இந்த வேண்டுகோள்!
மீண்டும் சந்திப்போம்.
உங்கள் ஆதரவை நாடும்... பி.அசோகன் ஜனவரி 2001 |