நாட்டிய தாரகை நித்யா வெங்கடேஸ்வரன்
சென்னையில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் இசை (நாட்டிய) விழாவில் பங்கேற்பது என்பது எல்லாக் கலைஞர்களுக்கும் வாழ்நாள் விருப்பமாக இருக்கும்.

வளரும் கலைஞர்களும், வளர்ந்த கலைஞர்களும் சந்திக்கின்ற வாய்ப்பாக டிசம்பர் சீசன் அமைகிறது.

வளரும் கலைஞர்/வளர்ந்த கலைஞர்/மூத்த தலைமுறை கலைஞர் என அனைவரும் இசைவிழாவின் போது கெளரவிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்படுகின்றனர்.

எனவே இசை விழாவில் பங்கேற்பதை கலைஞர்கள் தமக்கு கிடைக்கும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

நடைபெற்று முடிந்த 2001-2002 மியூசிக் சீசனில் பங்கேற்று தம்முடைய நாட்டிய நிகழ்ச்சிகளின் மூலம் அந்த பாக்கியத்தை அடைந்தார் நித்யா வெங்கடேஸ்வரன்.

சான்பிரான்சிஸ்கோ, வளைகுடா பகுதியில் பிறந்து வளர்ந்த நித்யா வெங்கடேஸ்வரன் 2001-2002 சீசனில் மிகச் சிறந்த நான்கு நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கினார்.

San Joseல் உள்ள ஸ்ரீ கிருபா நாட்டிய நிறுவனத்தின்\நிறுவன இயக்குநர் விஷால் ரமணியிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்றவர் நித்யா வெங்கடேஸ்வரன். இவருடைய நாட்டியம் தஞ்சாவூர் பாணியில் அமைந்தது.

டிசம்பர் 6 - கபாலி பைன் ஆர்ட்ஸ், பாரதிய வித்யா பவன், மைலாப்பூர்
ஜனவரி 2 - மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், மைலாப்பூர்
ஜனவரி 4 - ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, வாணி மகால், தி.நகர்
ஜனவரி 9 - நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமி, ராமாராவ் கலா மண்டபம், தி. நகர்
ஆகிய நான்கு பிரசித்தி பெற்ற சபாக்களில் நித்யா வெங்கடேஸ்வரன் தம்முடைய நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கி எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.

அழகுக்கு அழகு சேர்ப்பது போல் நித்யா வெங்கடேஸ்வரன் குழுவில் இருந்த இடம் பெற்றிருந்த இசைக் கலைஞர்கள் மதுரை ஆர். முரளிதரன் (நட்டுவாங்கம்), குற்றாலம் வி. நாகராஜன், பத்மா சேஷாத்திரி சகோதரிகள் (வாய்ப்பாட்டு) தனஞ்செயன், சக்திவேல், மாயூரம் ஜே. சங்கர் (மிருதங்கம்), சீதாராம ஷர்மா(வயலின்), வெங்கடேசன் (புல்லாங்குழல்), சசி ஆச்சார்யா (சிதார்) ஆகியோர் சிறப்புக்கு சிறப்பு சேர்த்தனர்.

நித்யா வெங்கடேஸ்வரன் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல... விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றார்.

இந்தியாவின் நம்பர் ஒன் தமிழ் நாளிதழான தினத்தந்தி, (டிசம்பர் 9, 2001) நாளிதழில் \''நித்யா பேசும்பொழுதுதான் அவர் வெளி நாட்டில் இருப்பவர் என்பது தெரிய வருகிறது. ஆனால் அவரது நாட்டியத்தில் எவ்வித கலப்படமும் இல்லை. சுத்தமான பரத நாட்டியம்தான்.

திரெளபதி வஸ்த்திராபரண காட்சியை நித்யா\ கண்முன் கொண்டு வந்து நிறுத்தினாள்.

கீதோபதேச ஜதிகளுக்கு நித்யாவின் நடனத்தை பார்த்தவர்கள் அவரை பாராட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

பரதகலையின் மீது நித்யாவுக்கு இருக்கும் பக்தியினை வியந்து பாராட்டுகிறேன்” என்று எழுதப்பட்டு இருந்தது.

தினமலர் (ஜனவரி 13, 2002) தமிழ் நாளிதழில்\பரத நாட்டியம் ஆடுபவர்கள் பல பேர் இருந்தாலும், லயத்தில் குறையில்லாமல் ஆடுபவர்கள் மிகச் சிலரே. நித்யாவின் ஆட்டத்தை பார்க்கும்போது சில கால்கள் நாட்டியம் ஆடுவதற்கு என்றே இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

பாரதியின் சிவசக்தி பாட்டுக்கு அவருடைய நடனம் அபாரம். அவருடைய அபிநயம் அந்த பாட்டினுடைய உட்கருத்தை அவர் புரிந்து கொண்டு வெளிப்படுத்தியதை நமக்கு உணர்த்தியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நியூஸ் டுடே, (டிசம்பர் 23, 2001) ஆங்கில மாலை தினசரியில் \ராகமாலிகா வர்ணத்தை நித்யா வெளிப்படுத்தியவிதம்\ அவருடைய நாட்டிய திறனுக்கும், உடல் உரத்திற்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. அவருடைய முக பாவனைகள்\ நேர்த்தியான அபிநயம், கச்சிதமாக மேடையில் நித்யா ஆடிய விதம் மிகவும் பிரமாதமாக இருந்ததோடு அல்லாமல்\ கடவுளின் வெவ்வேறு வடிவங்களை மிகவும் துல்லியமாக வெளிகொணர்ந்ததாக இருந்தது.

இந்த திறமை மிகுந்த கலைஞருக்கு மிகவும் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டி ருக்கிறது.

அடையாறு கே.லக்ஷ்மணன், திருமதி மீனாட்சி சித்தரஞ்சன் போன்ற பிரபலமான நாட்டிய கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவரை ஆசிர்வதித்தனர்.

நித்யா அடுத்த வருடம் சென்னைக்கு மொழியும், இசையும் கற்பதற்கு மீண்டும் வருவார்.

இப்படி நாளிதழ்களில் மட்டுமல்ல... நாட்டிய நிகழ்ச்சியைக் கண்ட எல்லோர் உள்ளங் களையும் கொள்ளை கொண்ட நித்யா வெங்கடேஸ்வரன் சான்பிரான்சிஸ்கோவின் நாட்டியத் தாரகை என்றால் அது மிகையில்லை.

© TamilOnline.com