பழைய முகங்கள், புதிய உறவுகள்
சில பழைய முகங்கள் சங்கம் - இது ஏதோ அறுபதுகளில் சினிமாவில் நடித்து இப்போது வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டவர்களின் சங்கம் என்று எண்ணவேண்டாம். ஆங்கிலத்தில் SOFA (Some Old Faces Association) என்று அறியப்படும் இந்த அமைப்பு 50 வயதிற்கு மேற்பட்டோர் சந்தித்து தம் தனிமையைப் போக்கிக் கொள்ளவும் புது நட்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புத் தருகிறது.

1980களில் சில முதியவர்கள் சேர்ந்து இந்த அமைப்பை ஏற்படுத்தினர். கேபிள் டெலிவிஷன் இல்லாத காலம் அது. முதுமையில் தனிமை வாட்ட, தோழமையின் துணையாலே அதை ஓட்டலாம் என்ற எண்ணத்தோடு ஐந்தாறு குடும்பங்கள் சேர்ந்து தொடங்கினர் சோபா (SOFA)வை. ஓரிரண்டு ஆண்டுகள் ஊக்கமாகச் செயல்பட்டபின் சற்றே தளர்வடைந்தது சங்கம். மீண்டும் 1997 ம் ஆண்டு பெங்களூரில் சுந்தரேசன் என்பவரின் இல்லத்தில் புத்துயிர் பெற்றது. தற்போது சென்னை, மதுரை, திருவாரூர் ஆகிய ஊர்களிலும் கிளைகள் செயல்படுகின்றன.

சாதி, மத, இன, பால் வேறுபாடு இல்லாமல் 50 வயதுக்கு மேற்பட்ட எவரும் சங்கத்தில் சேரலாம். உறுப்பினர் கட்டணம் எதுவும் கிடையாது. வயதானவர்கள் கூட்டத்திற்காக நெடுந்தூரம் பயணம் செய்யும்படி ஆகக்கூடாது என்பதற்காக 10 பேர் இருந்தாலே அங்கே ஒரு கிளை தொடங்கிவிடலாம் எனத் தீர்மானித் திருக்கிறார்கள். மாதம் ஒருமுறை கூடி தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, தமக்கு ஏற்பட்ட பிரச்சனை களையும் விவாதிக்கிறார்கள். கூட்டம் நடத்துவதற்கான செலவுகளைப் பகிர்ந்து கொண்டால் போதும்.

"ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய்? எதற்கு அஞ்சுகிறாய்? யாரால் உன்னை அழிக்கமுடியும்? ஆன்மாவுக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை" என்ற பகவத் கீதை வாக்கியத்தை முகப்பில் தாங்கி இவர்களுடைய SOFAMESS என்ற பெயர்கொண்ட காலாண்டிதழ் வெளிவருகிறது.

தற்போது வளைகுடாப்பகுதிக்கு வந்திருக்கும் SOFAவின் அமைப்பாளரும் ஒருங்கிணைப் பாளருமான K.S. நடராசன் அவர்கள் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் கிளைகள் தொடங்குவதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார். தம் மகன் அல்லது மகள் வீட்டுக்கு வரும் பெற்றோர் பகல் பொழுது முழுவதும் தனியே கழிக்கிறார்கள். தாம் இருக்கும் பகுதியிலேயே வாரம் ஒருமுறை சந்தித்துக் கொண்டால்கூட பிற இந்தியர்களைப் பார்த்துப் பேசி உறவாடும் மகிழ்ச்சி இவர்களுடைய தனிமையுணர்வைப் போக்கும்.

கிளை தொடங்க விரும்புகிறவர்கள் நடராஜன் அவர்களோடு தொடர்பு கொள்ளலாம்:
atarajan09@yahoo.com
080-6687050 (Bangalore, India)

© TamilOnline.com