கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம்!
இதோ வெடிக்கும், அதோ வெடிக்கும் என்று நாலைந்து வருடங்களுக்கு முன்பே பற்ற வைத்த வெடி கடைசியில் பயங்கரச் சத்தத்துடன் வெடித்திருக்கிறது.

சிவகாசி, வெடி... என்ற பீடிகையெல்லாம் போடாமல், நேரடியாக விசயத்துக்கு வருவதென்றால், சின்னத்திரைக்கும் பெரிய திரைக்கும் இடையிலான மோதல்தான் அது.

தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள், பெப்சி என ஐந்து அமைப்புகளும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பைத் துவங்கி சின்னத்திரைக்கு எதிரான சில கட்டுப்பாடுகளைக் கடந்த டிசம்பர்-31-ஆம் தேதி கொண்டு வந்திருக்கிறார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகளின்படி, தொலைக் காட்சிக்கு பெரிய திரை நடிகர்கள் யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது. (விழாக்கால சலுகைகள் மட்டும் உண்டு) சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள் எதையும் சின்னத்திரையில் ஒளிபரப்பக் கூடாது. திரை விமர்சனம் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்காக பாடல், வசனம் அடங்கிய காட்சிகள் எல்லாம் சேர்த்து மூன்று நிமிடத்திற்குள் வருமாறு கட்டுப்படுத்தி தயாரிப் பாளர் சங்க அனுமதியோடுதான் கொடுக்க வேண்டும் என்று முக்கியமான சில கட்டுப் பாடுகளை விதித்திருக்கிறார்கள்.

எதற்காக இப்படி திடீரென ஒரு முடிவு?

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் ஒரு படத்தில் குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பற்றி விமர்சித்துப் பேசியிருந்தார். அந்தத் தொலைக்காட்சி திரைவிமர்சனம் என்கிற பெயரில், நடிகர்களை மிகவும் கிண்டலடிக்கிறது என்றும் ஏகப்பட்ட பணம் போட்டு எடுக்கும் ஒரு படத்தை ஒரே வரியில் 'குப்பை' என்று சொல்கிறது என்றும் தன்னுடைய விமர்சனத்தை சத்யராஜ் அந்தப் படத்தின் வழியாகத் தெரிவித்திருந்தார்.

இப்படி திரை விமர்சனம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகள் தாறுமாறான முறையில் கிண்டலடிப்பதால், சினிமாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது என்பது பெரியதிரையினர்களின் மனக்குறை.

சத்யராஜைத் தொடர்ந்து இந்த வகை டாப் 10 நிகழ்ச்சி குறித்து விவேக்கும் தன்னுடைய விமர்சனத்தைப் பத்திரிகையொன்றில் பேட்டி யின் போது தெரிவிக்க, இப்போது இந்த மோதல் வலுத்திருக்கிறது. அதன் தொடர்ச்சி யாகத்தான் மேற்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடு விதிமுறைகள் பற்றி விஜயகாந்த் என்ன சொல்கிறார்?

தனியார் தொலைக்காட்சிகளைக் கடுமையாக விமர்சிப்பதன் காரணம் பற்றி நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்திடம் கேட்ட போது, "இந்தச் சினிமாதான் விஜயகாந்த் என்ற அறிமுகத்தைக் கொடுத்தது. இப்போது இருக்கும் கார், பங்களா போன்ற வசதிகளைக் கொடுத்தது. சின்னத்திரை எனக்கு எந்த வசதியையும் தரவில்லை. நான் சம்பந்தப்பட்ட சினிமா நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக சில முடிவுகளை நாங்கள் எல்லோரும் ஒன்றுகூடி எடுத்திருக்கிறோம். அது பார்க்கிறவர்களுக்கு விரோதமாகப்படுகிறது. 2002-இல் சில முடிவுகளைத் தீர்மானமாக எடுப்போம். மூன்று நிமிடம் மட்டுமே கிளிப்பிங்ஸ் கொடுப்போம். முன்பெல்லாம் ஒவ்வொரு டீவியிலும் இருபது நிமிடம் கிளிப்பிங்ஸ் போட்டு முழுப் படத்தையும் போட்டு விடுவார்கள். இதனால் விநியோகிஸ் தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். நடிகர் சங்கமோ, விநியோகிஸ்தர் சங்கமோ டீவிக்குப் பகைவர்கள் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்று காரசாரமாகவே பதிலளிக்கிறார்.

விஜயகாந்த் சொல்வதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் ஒருதலைப் பட்சமானது என்று சொல்லி நடிகர் சங்கச் செயலாளரும் தி.மு.க சார்பு எம்.பியுமான சரத்குமார் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித் துள்ளார்.

உண்மை நிலவரம் என்ன?

சினிமா சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசிய போது அவர்கள் சொன்ன கருத்துக்கள் அதிர்ச்சியளிப் பதாக இருந்தன. இது சின்னத் திரைக்கும் பெரிய திரைக்கும் இடையிலான போட்டியே அல்ல; இது தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையிலான போட்டிதான். விஜயகாந்த் ஜெயலலிதாவை நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அடுத்தே இதுமாதிரி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தி.மு.கவினரின் அதிகாரப்பூர்வமான தொலைக் காட்சி நிறுவனத்தினருக்கு எதிராக நடிகர்கள் அனைவரையும் திசை திருப்பி விடுவதற்காகவே இது மாதிரி கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருக்கின்றன என்றும் அதனால்தான் சரத்குமார் இந்த விதிமுறைகளுக்கு உடன் படவில்லையென்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளை விஜயகாந்த் கடுமையாக மறுத்துள்ளதோடு, ஏற்கனவே இதுகுறித்து கலைஞரிடம் பேசியுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் பிரச்சனை குறித்து ரஜினி, கமல் இருவரும் இதுவரை வாய்திறந்து எந்தக் கருத்தையும் சொல்லாமல், பட்டும்படாமலே இருந்து வருவதும் மற்ற நடிகர்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரேவதி, ரோஜா, குஷ்பு, சித்தாரா, கௌதமி, பானுப்ரியா, சீதா, ஷோபனா போன்ற மார்கெட் இழந்த நடிகைகள் அனைவரும் ஏற்கனவே சின்னத்திரை பக்கமாய்ச் சாய்ந்து விட்டார்கள். எங்களை நடிக்க வேண்டாம் என்று சொல் வதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று கடுப்பு டன் ரேவதி ஒரு பேட்டியில் பதிலளித்துவிட்டார். மணிவண்ணன், செந்தில் போன்ற நடிகர்களும் இப்போது சின்னத்திரையின் முழுமையாகக் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இதுதவிர இப்போதுள்ள சில நடிகைகளும் சின்னத் திரைக்குப் பேட்டிகள் அளித்துக் கொண்டிருக் கின்றனர். அதுவு மில்லாமல் சமீபத்தில் சன் டீவி ஆரம்பித்த கே டீவியினாலும் சினிமாவுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுவதாகச் சொல்லியிருக் கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சின்னத்திரை, பெரிய திரை இடையிலான இந்த மோதல் மேலும் வலுப் பெற்றிருக்கிறது.

சினிமாவை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தனியார் தொலைக்காட்சிகள் இப்போது சினிமாவையே அழிக்கப் பார்க்கிறது என்பதுதான் எல்லா நடிகர்களின் குற்றச் சாட்டும். சினிமா நடிகர்களின் பேட்டி, சினிமா பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள், புதுச் சினிமா காட்சிகள் என எல்லா சேனல்களிலும் வந்து கொண்டிருக்கிறது; இதனால் சினிமாவுக்கு வரும் பார்வையாளர் களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது; அதனால்தான் எதிர்க்கிறோம் என்று சொல்கிறார் பெயர் சொல்ல விரும்பாத நடிகர் ஒருவர்.

"சினிமா விமர்சனத்தைப் பார்த்துவிட்டு சினிமாவுக்கு யாரும் போவதில்லை என்பதை நம்ப முடியாது. அதுவுமில்லாமல் சினிமாவைவிட இப்போது வரும் சீரியல்கள் நன்றாகயிருக் கின்றது. நல்ல சினிமாவாக இருந்தால் அதை தியேட்டருக்குப் போய்ப் பார்ப்பதற்கு மக்கள் விரும்பத்தான் செய்கிறார்கள். சின்னத்திரை இவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று சொல்கிறார்களே தவிர, நாம் நல்ல படம் எடுத்திருக்கிறோமா என்று இவர்களால் துணிந்து சொல்ல முடியுமா? பொங்கலுக்கு வந்த படங்களில் எத்தனை படங்கள் உருப்படி யானது?" என்கிறார் வங்கியில் பணிபுரியும் மகேஷன். நல்ல கதைகள் தமிழில் வருவதில்லை என்பதை பாரதிராஜா மற்றும் மகேந்திரன் ஆகிய சீனியர் டைரக்டர் இருவரும் ஒத்துக் கொண்டு பேட்டி கொடுத்துள்ளதுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதே சமயம் சீரியல்கள் என்ற பெயரில் இவர்கள் செய்கிற அட்டூழியங்களும் தாங்கும் படியாக இல்லை; எந்தப் பக்கம் திரும்பினாலும் சீரியல்களில் அழுது புலம்பிக் கொண்டிருக் கிறார்கள். சினிமாவில் உள்ள சென்டிமெண்ட் அம்சங்களை விமர்சித்துக் குறை கூறுகிற சின்னத்திரையினர் சீரியல் என்கிற பெயரில் செய்து கொண்டிருக்கிற முட்டாள்தனங்களை நிறுத்திக் கொள்ளலாமே! ராமநாராயணனைக் கிண்டலடிக்கிற இதே சின்னத்திரை யினர்கள்தான் பக்தி சீரியல்களையும் ஒளிபரப்பி வருகின்றனரே; அதைத் தவிர்க்கலாமே? சின்னத்திரைக்கும் வியாபாரம்தான் முக்கியம்; பெரிய திரைக்கும் வியாபாரம்தான் முக்கியம்; இவர்களுக்கு மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை! என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

முடிவு எதுவாக இருக்கும்?

பெரியதிரை, சின்னத்திரை சண்டையெல்லாம் மக்களுக்குத் தேவையில்லாதது. மக்கள் யார் தரமான நிகழ்ச்சிகள் கொடுத்தாலும், அதை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள். சின்னத்திரையைக் குறைகூறிக் கொண்டே அதில் நடிகர்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பதைத் தட்டிக் கேட்காமல் இருக்கும் நடிகர் சங்கத்தைப் பற்றி மக்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏகப்பட்ட சேனல்களின் வருகையால், தரத்தை மேற் கொள்ள வேண்டிய தேவையும் ஒவ்வொரு சேனல்களுக்கும் இருக்கிறது. சினிமாக்களும் தரமான படங்களாக வர வேண்டிய தேவையும் இருக்கிறது. அதைவிட்டு விட்டு இது போல் குடுமிப்பிடி சண்டைகள் போட்டுக் கொண்டிருப் பதினால், எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை இருதரப்பினர்களும் உணர்ந்து சீக்கிரமே நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோமாக!

சரவணன்

© TamilOnline.com