விகாஸ் ராவல், குடியரசு தின விடுமுறையின் படபடப்பு இல்லாத காலை நேரமொன்றில், அஹமதாபாத்தின் நவ்ரங் புராவில் இருந்த மான்சாரியா அபார்ட்மெண்ட்ஸ் என்ற தன் குடியிருப்பின் வாசலில் கைனடிக் ஹோண்டாவைத் துடைத்துக் கொண்டிருந்த போது அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது..
குஜராத்தின் காலடியில் பூமி நித்திரை கலைந்து ஸீஸ்மிக் உதறலில் லேசாக சோம்பல் முறிக்க அந்தப் பிரதேசம் நில நடுக்கத்தில் உதற ஆரம்பித்தது. மெலிதான அதிர்வு தொடங்கி.. அலை அலையாய் கூடி... முன்னும் பின்னும் உலுக்கும் பேயாட்டம் ஆடியது. சட சட வென்று மெல்லிய இடி ஓசை சின்னச் சின்னதாய் வெடிக்க... வீடு நடுவில் விரிசல் கண்டு மெல்ல அந்த ஆறு மாடிக் கட்டடத்தின் சோகைச் சுவர்கள் விடுபட்டு உடைந்து உடைந்து...
நொறுங்கியிருந்த அந்தக் குவியலுக்கு ஊடாக தன் குடும்பம் இருந்த இடத்தைத் தேடினான். அவர்களை பெயர் சொல்லிக் கூப்பிட்டவாறு, உடைந்த பள்ளங்களின் மேல் ஏறி, நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளைக் கடந்து அங்கே இங்கே ஆராய்ந்தான். தெரிந்த சின்னச் சின்ன துவாரங்கள் வழியே குரல் கொடுத்தான். பலரின் ஷீண முனகல்களும், உயிர் போகும் கதறலும், லேசான அழுகையும் கேட்டது. அப்பா என்று ஒசை ஆங்காங்கே மரண ஓலம்...
தப்பித்தவர்கள் புலம்பல்.. பெருங்குரலில் அழுகை.. அமைதியான காலைச் சூழல் மாறியது.
விபத்தின் தீவிரம் உள்ளத்தை உலுக்க, கற்குவியலின் உள்ளே தன் குடும்பம் அடைபட்டுக் கிடக்கும் அதிர்ச்சியிலிந்து மீளாமல் பதை பதைப்புடன் தேடித் தவித்தான். குடியிருப்பின் காவலாளி சுரேஷ்ஜி ஓடி வந்தார்.
"சுரேஷ் ஜி... உள்ளே நிறைய பேர் மாட்டிகிட்டு இருக்காங்க.. உதவிக்கு யாருக்காவது போன் போடுங்க..."
"போன் வேலை செய்யல விகாஸ் சாஹேப்.. ஊரே நொறுங்கி தரை மட்டமாயிடுச்சு.. வீட்டு முதலாளி கிட்ட பேசுங்க. அவருகிட்ட கட்டட வேலை செய்யற கருவியெல்லாம் இருக்கும். கம்பெனி ஆளுங்க இருப்பாங்க. ஒரு கிரேன் கூட ஒரு பத்து பேரு கிடைச்சாப் போறும். அவரு வீடு ஆஷ்ரம் ரோடுல இருக்கு. நீங்க போய் பாத்துட்டு வாங்க. அதுக்குள்ள நான் கருவியெல்லாம் சேகரிச்சு வெக்கறேன்"
விகாஸ் தன் கைனடிக்கை எடுத்து விரைந்தான். வழியெங்கும் அத்தனை அடுக்கு மாடிக் கட்டிடங்களும் பாதி நொறுங்கியும் தலை கவிழ்ந்து வீழ்ந்தும், லேசாகச் சாய்ந்தும் கிடக்க அதைச் சுற்றி பதட்ட மனிதர்களும்.. அவர்களின் மரண ஓலமுமாய் ப்ரளய பூமியாய் அல்லோல பட்டுக் கொண்டிருந்தது அந்தப் பகுதி. எல்லிஸ் பிரிட்ஜ் பகுதியில் அவன் ஜவுளிக் கடை இருந்த கிரசன்ட் கார்டன் கட்டிடம் இருந்த இடமே தெரியாமல் மண்ணோடு மண்ணாகியிருந்தது.
அவர்களின் மான்சாரியா அபார்ட்மெண்ட்ஸ் பூகம்ப உலுக்கலில் உதிர்ந்து போகக் காரணம் இருந்தது. சின்னக் குளமாய் தண்ணீர் தேங்கியிருந்த ஸ்தலத்தில் மண் நிரப்பி சமன்படுத்தி பெருகி வரும் அஹமதாபாத் ஜனத்தொகையின் அத்யாவசியத் தேவையை பூர்த்தி செய்ய, துரித கதியில் கட்டப் பட்ட ஏராளமான குடியிருப்புகளில் மான்சாரியாவும் ஒன்று.
விகாஸ் கட்டிட உரிமையாளர் ராக்கேஷ் வீட்டு வாசலில் கைனடிக்கை நிறுத்தி விட்டு கேட்டிலேயே பொருத்தியிருந்த அழைப்பு மணியை அவசரமாய் அடித்துவிட்டு கூர்க்கா நடந்து வரக் காத்திருந்தான். விகாஸ் சற்றும் சேதப்படாத அந்த இரண்டு மாடி மாளிகையை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், கூர்க்கா வந்து "கோனு காம்சே" என்றான். விகாஸ் பதட்டத்துடன் சொல்வதைக் கேட்டிருந்து விட்டு, "சாப் ஊர்ல இல்லிங்க. மும்பய் போயிருக்காரு. நாளை காலை வருவாரு. ஆபீசுல போய் சொல்லுங்க. எல்லிஸ் ப்ரிட்ஜ்ல இருக்கு. நான் இன்ஜினியர் வந்தா சொல்றேன்" என்றான்.
"நான் அம்மா கைல கொஞ்சம் பேசிட்டு போறன்"
"யாரும் இல்லீங்க. போங்க".
விகாஸ் இங்கு தேடிக் கொண்டிருந்த சமயத்தில், வீட்டின் உரிமையாளர் ராக்கேஷ் ஷா அஹமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் அலுவலக உயர் அதிகாரியோடு தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தார். மான்சாரியா குடியிருப்பு தவிர அவரின் பிரண்டஸ் காலனி, சபர்மதி குடியிருப்புகளும் குடை சாய்ந்ததில் கொஞ்சம் கலவரமாயிருந்தார்.
"என்ன செய்வாங்க காகா"?
" உன்னை கைது செய்வாங்கய்யா... பிளோர் ஸ்பேஸ் இன்டக்ஸ் மேல இரண்டு மடங்கு கட்டடம் கட்டியிருக்க. கான்கிரீட் கட்டடத்தை குடிசை கட்டறா மாதிரி கட்டினா என்னையா அர்த்தம்"
"இதெல்லாம் உங்களை சரிகட்டிதான செஞ்சது?"
"அதுக்காக உன்னோட ஜெயிலுக்கு வரச் சொல்றியா?"
"மினிஸ்டர் கைல பேசுங்க"
"இப்ப யாரு கிட்டயும் பேச முடியாது. கொஞ்சம் சூடு கொறையட்டும் விடு. ஆபீஸ்ல இருக்கற உன் பைல்ஸ் எல்லாத்தையும் காணாம போக வைக்கலாம் அவ்வளவுதான்."
"நான் என்னதான் செய்யறது? கிரேன் வேணும்.. ஆளுங்க வேணும்னு காத்தாலந்து பத்து பேர் தொரத்தறாங்க"
"பத்து மாடிக் கட்டடம் விழுந்து நொறுங்கிருச்சு. எவன்யா உயிரோட இருக்கப் போறான்? அப்பிடியே இருந்தாலும் ஏதோ ஒண்ணு ரெண்டு தேறும். அதுக்காக அங்க நீ போய் என்ன செய்யப் போற? உன்னை கிழிச்சி தோரணம் கட்டிடுவாங்க. வீட்டை காலி பண்ணிட்டு ஆபீசை மூடிட்டு காணாம போ. அவ்வளதான் நான் சொல்லுவேன்"
சுரேஷ் ஜி தருவித்த கருவிகளை வைத்து மலையளவு கான்கிரீட் குப்பையில் இலக்கில்லா மல் கிளறினார்கள். உடைந்து சரிந்து பூமிக்குள் பாதி புதைந்து கிடந்த அந்த கான்கிரீட் உடைசலின் முன் நின்று அங்கலாய்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.
இருள் சூழ்ந்தவுடன் கொஞ்ச நஞ்ச வேலையும் நின்றது. விகாஸ் மறுபடி மறுபடி அவர்களை அழைத்தபடி இருந்தான். தைரியம் அத்தனை யும் இழந்த நிலையில் அங்கேயே உட்கார்ந்து சின்னக் குழந்தை போல அழுதான். நடுங்கும் குளிரில் சாலை ஓரமாய் படுத்து அப்படியே உறங்கிப் போனான். இரவில் மெல்ல இன்னொரு முறை லேசாக நடுக்கம் வர பதறிப் போய் எழுந்து மறுபடி 'ஆர்த்தி...' என்று கதறினான்.
அடுத்த நாளும் வீட்டின் உரிமையாளர் ராக்கேஷ் ஷா கிடைக்கவில்லை. தலை மறைவாய் இருப்பதாய்ப் பேசிக் கொண் டார்கள். அலுவலகத்தில் பாதி கதவடைத்து முன்னறையில் உட்கார்ந்திருந்த அந்த ஆள் மட்டும் 'சாஹேப் நத்தி..' என்று சளைக்காமல் சொல்லிக் கொண்டிருந்தான். ஆத்திரத்தில் அவனை அடிக்கப் போன விகாஸை நாலு பேர் தடுத்து விலக்கினார்கள்.
கான்கிரீட்டை வெட்டி துளை போட காஸ் கட்டர் தேடி முனிசிபல் கமிஷனர் அலுவலத்திற்கு நான்காம் தடவையாகச் சென்று முறையிட்டான். அங்கிருந்து போலீஸ் கமிஷனர் அலுவகம் சென்றதில் அவர்கள் மந்திரி வருகைக்காக செக்யூரிட்டி ஏற்பாடு என்று காணாமல் போயிருந்தார்கள். ஊரெங்கும் இறந்தவர்களால் மூடப்பட்ட வெள்ளைத் துணி மூட்டைகளைக் கண்டு கண்கள் மரத்திருந்தது.
"இது பிரயோஜனமில்லை விகாஸ்ஜி. இந்தக் கான்கிரீட் சுவர்களை நவட்டி உள்ளே இருப்பங்களை மீட்க, மண் தோண்டும் இயந்திரம் வேணும். இந்த கடப்பாரை மம்மட்டி எல்லாம் உதவாது"
" யாரு கிட்ட கிடைக்கும்?"
"இதெல்லாம் இங்க யாரு வச்சிருப்பா? அரசாங்கத் துறை யாராவது எடுத்து வரணும். தொலைபேசி, மின்சாரம் எதுவும் இல்லாம எங்க போறது"
விகாஸ் தவித்தான். மெல்ல நம்பிக்கை தளர்ந்து கொண்டிருந்தது.
விகாஸ் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் குடும்பத்தை இடிபாடுகளில் இருந்து மீட்க ஆவலோடு தேடிய அந்த மண்தோண்டும் எர்த் மூவர் இயந்திரங்கள் இரண்டு, இரண்டாம் நாள் மாலை அஹமதாபாத் வந்தது. ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் அன்பளிப்பாய் வந்திறங்கிய அந்த இயந்திரத்தை ஒப்படைக்க வந்த மோகியாட்சு சுகை என்கிற அந்த அதிகாரி, பார்க்கும் சுங்க அதிகாரி களையெல்லாம் இயந்திரத்தனமாய்க் கத்திக் கொண்டிருந்தான்.
இரண்டு மணி நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு அந்த சுங்க அதிகாரி மோகியாட்சு சுகையை கேள்விகளால் களைப்புற வைத்தார்.
"இது எங்கள் நிறுவனத்தின் அன்பளிப்பு. நிலைமை கருதி இதை கொஞ்சம் சீக்கிரமாய் கிளியர் செய்ய வேண்டும்" என்றார் சுகை புன்னகையுடன்.
மூக்குக் கண்ணாடி அந்து தானமாய் ஆல் ஆப் எண்ட்ரி ஆராய்ந்த அதிகாரி "பெறுநர் யாரு?"
"திவ்ய ஜோதி பெளண்டேஷன்"
"என்.ஜி.ஓவா...?
"புரியவில்லை"
அதிகாரி தொலைபேசி எடுத்து 'படேல்' என்று யாரையோ விளித்து தன் வழுக்கை மண்டையை தடவியபடி, 'சூகர்வானோ சே' என்று ஏதோ பேசினது சுகைக்கு புரியவில்லை.
தொலைபேசியை வைத்துவிட்டு, "கொஞ்சம் அங்கே உட்காருங்கள். கூப்பிடுகிறேன்" என்று சொல்லி விட்டு.. காணமல் போனார்.
சுகை, அந்த பெரிய அறையின் ஓரத்தில் காந்திப் படம் மாட்டி நாலு சோபாக்கள் வைத்து, மேஜையின் மேல் தினசரி இரைந்திருந்த கவனிப்பாரற்ற மூலையில் ஆயாசமாய் உட்கார்ந்தார். அந்த இடத்து மின் விசிறி சோகையாய் சுற்றிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த தண்ணீர் குளிர்விக்கும் கருவியில் சங்கிலியால் இணைத்திருந்த குவளையில் தண்ணீர் பிடித்து வாயில் கவிழ்க்கையில் அதன் துருப்பிடித்த கீழ் மூலைகளைப் பார்த்து தண்ணீர் குடிப்பதே வெறுத்தது போலயிருந்தது.
அதிகாரி இருபது நிமிடம் கழிந்து வந்து.. "மிஸ்டர்" என்றார்.
சுகை விரைந்து மறுபடி முகத்தில் அவரின் முத்திரைப் புன்னகையை வரவழைத்துக் காத்திருந்தார்.
"சுங்க வரி கட்டணும்"
" கஸ்டம்ஸ் டூட்டியா? ஏன் கட்டணும்.? பூகம்ப மீட்புக்காக இந்த இயந்திரங்கள் எங்கள் நிறுவனத்தின் அன்பளிப்பு.."
"பாருங்கள் மிஸ்டர்.. மோகியா.." என்று அவரது அட்டை எடுத்து உச்சரிப்பு தேடினார்
"சுகை"
"ஆ.. மிஸ்டர் சுகை .. நீங்கள் இதை பூகம்ப மீட்புக்கு தருவதற்கு நன்றி.. ஆனால் அரசுத் துறை அல்லாது வேறு ஒரு என்.ஜி.ஓக்கு அளிப்பதென்றால் சுங்க வரி கட்ட வேண்டும்"
"இந்த சட்ட திட்ட நுணுக்கங்கள் எல்லாம் எனக்குத் தெரியாது ஐயா. என் நிறுவனம் உடனடியாக உதவியளிக்க என்னை அனுப்பிஅனுப்பியிருக்கிறார்கள்.."
"உங்கள் கிளியரிங் ஏஜெண்டிடம் பேசுங்கள்"
"அதற்கெல்லாம் நேரமில்லை. லட்சக் கணக்கில் மக்கள் கட்டிட இடிபாட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். உடனே செல்ல வேண்டும் என்று வீட்டில் தூங்கிக் கொண் டிருந்த என்னை எழுப்பி விரட்டியிருக்கிறார்கள். ஜப்பானிலிருந்து இங்கு வந்த நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் இதை வெளியே கொண்டு வர செலவிட்டு விட்டேன். உங்கள் உயர் அதிகாரியுடன் நான் பேச வேண்டும்"
"நான் பேசியாகி விட்டது. நான் வேறு வழி சொல்கிறேன் அதன் படி செய்யுங்கள்"
"என்ன"
"பெறுநர் பெயரை மாற்றுங்கள். பூகம்ப மீட்பு விசேஷக் குழுவின் பெயரில்தான் அத்தனை நிவாரணப் பொருட்களும் வருகின்றன. அப்படி இல்லாத பட்சத்தில் நாங்கள் இதை சாதாரண இறக்குமதியயாய் நினைத்து சுங்கவரி விதிக்க வேண்டிவரும். அதனால் நேரம் விரயம் செய்யாமல் பெயரை மாற்றுங்கள்"
"திவ்ய ஜோதியில் நாங்கள் தகவல் சொல்லி அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போ பெயரை மாற்று என்றால் நான் என்ன செய்வது. அதற்கு நான் எங்கள் அலுவலகத்தில் கேட்க வேண்டும்"
"கேளுங்கள். நான் வேறு ஒன்றும் செய்ய முடியாது. முடிவு செய்து ஒரு கடிதம் தாருங்கள். நாங்கள் ஆவன செய்கிறோம்"
"ஆவன என்றால்..? அந்த இயந்திரம் எங்கே போகும்"
"அது எனக்கு எப்படித் தெரியும்? மீட்புப் பணி கமிஷனரிடம் அவை ஒப்படைக்கப்படும் அதன் பிறகு நீங்கள் அங்கே பேசி எங்கே போகிறதென்று பார்த்துக் கொள்ளுங்கள்"
சுகை... அவரை வாய்க்குள் சபித்தபடி அங்கிருந்து விலகி, தன் நிறுவனத்தின் இந்தியக் கிளையிடம் முறையிடக் கிளம்பினார். அவர்கள் பேசி ஓய்ந்தபின் வேறு வழியில்லை என்று உணர்ந்து பெறுநர் பெயர் மாற்ற கடிதம் தரப்பட்டு, சுங்கத் துறை இயக்கங்கள் முடிய ஒரு நாள் ஆனது.
அடுத்த நாள் இயந்திரங்கள் அடங்கிய கண்டயினர்கள் ஷாஹாபோகில் சிவில் சப்ளைஸ் தானியக் கிடங்குகள் இருக்கும் இடத்துக்கு கிரேன்களால் இறக்கி வைக்க தருவிக்கப்பட்டவுடன் அங்கே கிரேன்கள் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு.. விமான லையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டு ... சாலை பராமரிப்புத் துறையிடம் கிரேன்கள் இருப்பதாய் சொல்லி அங்கே திருப்பிவிடப்பட்டு, அங்கிருந்த கிரேன்கள் அத்தனையும் மீட்புப் பணிக்கு ஏற்கனவே போயிருந்ததாய்ச் சொல்லி மீண்டும் மீண்டும்...
இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டிருந் தவர்களின் முனகல் குரல்கள் காற்றில் கலந்த படியிருந்தன...
ஆனந்த் ராகவ் |