தமிழ்மொழி மறந்தும் மறுக்கப்படக் கூடாது - 'சிஷ்யா' பிரஹஷித்தா குப்தா
அமெரிக்காவில் அடி எடுத்து வைத்த உடனேயே பல பெற்றோர் களுக்கும் தோன்றும் முதல் கேள்வி இதுதான்; நம்மால் இங்கே இந்தியக் கலாச்சாரத்தை போற்றி, பின்பற்றி கடைபிடிக்க முடியுமா?

சுற்றி இருக்கும் அமெரிக்க சமுதாயத்திற்காக நுனி நாக்கில் அமெரிக்க ஆங்கிலம் பேசி, அவர்களைப் போலவே நடை, உடை, பாவனைகளை நாம் மாற்றிக் கொண்டாலும், நமக்குள் இருக்கும் அந்த இந்திய ரத்தத்தை நம்மால் நிச்சயம் மாற்றிக் கொள்ள இயலாது. வீட்டில் இந்திய உணவை உண்டு, குழந்தைகளுக்கு ஸ்கூல் டிபனுக்காக தோசை யை pancake ஆகவும், இட்லியை rice cake எனவும் கொடுத்து இந்திய உணவையும் உணர்வையும் சேர்த்தே ஊட்டும் பல பெற்றோர்கள் தம் குழந்தைகள் தான் தமிழிலேயே கேள்வி கேட்டாலும் விடாமல் தம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே பதிலளிப்பதை ஜீரணித்துக் கொள்ள தயாராக இல்லை. ''என் குழந்தை தமிழ் நல்லா புரிஞ்சுப்பா. ஆனா, ஆங்கிலத்தில்தான் பேசுவா'' என புலம்பும் பெற்றோர்கள் பலர் அமெரிக்காவில் இருக் கிறார்கள். ''அவங்களுக்கு நல்லா தமிழ் புரியும், தெரியும் ஆனா பேசத்தான் தயக்கம்'' இப்படி குறைப்பட்டுக் கொள்ளும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். வீடு, வேலை என ஓயாமல் ஓடி செல்லும் பெற்றோர்களால், இந்திய மொழி யையோ, இந்திய கலாசாரத்தையோ உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை.

பெருமைமிக்க நம் இந்திய கலாச்சாரத் தையும், அமுதென்று பேர் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழையும் வளரும் இளைய சமுதாயத்திற்குப் பயிற்றுவிக்க வேண்டும் எனும் ஒரு உயரிய எண்ணத்தோடு ஜனவரி 17 2000-ஆம் ஆண்டு திருமதி பிரஹஷித்தா குப்தா நியூயார்க்கில் 'சிஷ்யா' எனும் ஒரு இந்தியப் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்துள்ளார். இனி அவருடன் தென்றல் பத்திரிக்கைகாக ஒரு நேர்காணல்...

இந்திய பள்ளிக்கூடம் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது?

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தமிழகத்துலதான். திருமணம் முடிந்து அமெரிக்காவிற்கு காலடி எடுத்து வைத்த உடனேயே, பல தமிழ்க் குடும்பங்கள் தங்களது வளரும் தலைமுறையினரால் இந்தியக் கலாசாரத்தையும், தமிழையும் சொல்லி கொடுக்க ஆசிரியர் இல்லாமல் தவிப்பதை உணர்ந்தேன். இந்தியக் கலாச்சாரம் சாகக் கூடாது. தமிழ்மொழி மறந்தும் மறுக்கப்படக் கூடாது எனும் ஒரு எண்ணம் இந்த அமெரிக்க மண்ணில் நான் காலடி எடுத்து வைத்த நாள் முதலே தோன்றியதால் 'சிஷ்யா' வை ஆரம்பித்தேன். இதோ வெற்றிகரமாக முதலாம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாட 'சிஷ்யா' சந்தோஷமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

சிஷ்யாவில் எந்தெந்த இந்திய மொழிகளைக் கற்றுக் கொடுக்கிறீர்கள்?

சிஷ்யாவில் முக்கியமாக தமிழ் வகுப்புகளை வார நாட்களில் புதன்கிழமைதோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடத்துகிறோம். இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என்பதால் அந்த மொழியையும் கற்றுக்கொள்ள பலர் ஆர்வம் காட்டியதால் ஹிந்தி வகுப்புகளையும் நடத்துகிறோம். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பல ஹிந்தி இளைஞர்கள்கூட 30, 40 வயதிற்கு மேல் தமிழ் பயில ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், சிறுவர்கள் போல பள்ளிக்கு வந்து பாடம் கற்றுக் கொள்ள கூச்சப்படுகிறார்கள். அதனால், அவர்களுக்காக அவர்களது இல்லத்துக்கே சென்று தமிழ் வகுப்புகளை எங்களது பள்ளி ஆசிரியர்கள் நடத்துகிறார்கள். வீட்டு சூழலிலேயே பாடம் கற்றுக் கொள்வதால் அவர்கள் தமிழை மிக எளிமையாகவும், வேகமாகவும் கற்றுக் கொள்கிறார்கள். இந்த Home tutoring இப்போது நியூயார்க்கின் பல தமிழ் குடும்பங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிஷ்யாவின் வெற்றிக்குக் காரணம் யார்?

சிஷ்யாவின் வெற்றிக்கு காரணம் அமெரிக்க வாழ் இந்தியக் குடும்பங்கள்தான். சிஷ்யாவின் வெற்றி என்பதைவிட இந்திய மொழிக்கும் இந்தியக் கலாசாரத்திற்கும் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். சிஷ்யாவில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தம் பெற்றோர் களுடனும், இந்தியாவில் இருக்கும் தனது பாட்டி, தாத்தாக்களுடனும் தெள்ளத் தெளிவாக தமிழில் பேசுவதைக் கேட்கும் பொழுது இந்தியா, அமெரிக்காவிலும் வெற்றி பெற்றுவிட்டதாக நான் உணர்கிறேன். நிச்சயம் நம் தாய்மொழி அமெரிக்கா வாழ் தமிழர் களிடையே போற்றி பாதுகாக்கப்படும் எனும் தன்னம்பிக்கை என்னிடம் நிறையவே இருக்கிறது.

தமிழைப் பற்றி தன்னம்பிக்கை வைத்திருக்கும் உங்களின் தன்னம்பிக்கைக்குக் காரணம் யார்?

சிறுவயது முதல் என்னை எல்லா போட்டிகளிலும் பங்கு கொள்ள உற்சாகப் படுத்திய எனது பெற்றோர்களும் எனது அருமை கணவர் திரு. சுரேந்திர குப்தாவும் என் மேல், என் ஆற்றல் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை காரணம்.

நான் பள்ளியிலும், கல்லூரியில் படிக்கும்போது எனது பெற்றோர்கள் நான் ஏதாவது போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தால், ''என்ன ப்ரஹா போட்டியில் பெயர் குடுக்காமா இருக்க?'' என்று செல்லமாகக் கண்டிப்பார்கள். போட்டிகளில் பரிசு வாங்காமல் வந்ததைவிட போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் போதுதான் நிறையக் கோபிப்பார்கள். ஐந்தில் வளையாத தது ஐம்பதில் வளையுமா? என்பதைப் போல அன்று முதலே என் பெற்றோர்கள் என்னை வாழ்க்கை எனும் நீரோட்டத்தில் நீந்தி, கடந்து, சாதனை புரிய வழி காட்டிவிட்டார்கள்.

சிஷ்யாவில் ஏதாவது மறக்கமுடியாத சம்பவம் இருக்கிறதா?

நிச்சயம். நிறையவே இருக்கிறது. சிஷ்யாவில் நாங்கள் ஹிந்தி வகுப்பு தொடங்கிய முதல் நாளன்று ஒரு spanish பெண்மணி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவள் தான் ஒரு பஞ்சாபிக்காரரை காதலித்து திருமணம் புரிந்திருப்பதாகவும், 10 வருடங்களாக ஹிந்தி கற்றுக்கொண்டு கணவரிடமும் இந்தியாவில் உள்ள மாமனார் மாமியாரிடமும் ஹிந்தி பேச வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், இப்பொழுதுதான் ஹிந்தி கற்றுக் கொள்ள சிஷ்யா மூலம் வாய்ப்பு வந்திருப்பாக அவள் கூறியபோது நான் மெய்சிலிர்த்துப் போனேன். இப்போது அந்த spanish பெண்மணி இந்தியப் பாரம்பரிய உடை அணிந்து அழகாக தமிழ் பேசுவதை கேட்கும்போது அவளது கணவர் மட்டுமல்ல நானும் பெருமை அடைகிறேன்.

சிஷ்யாவின் வருங்காலத் திட்டம் என்ன?

நியூயார்க்கில் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் வெகுவிரைவில் சிஷ்யாவின் கிளைகள் பரவப் போகிறது. கலிபோர்னியா, நியூஜெர்சி மற்றும் சிக்காகோவில் இருக்கும் பல தமிழர்கள் சிஷ்யாவை அந்த மாநிலங்களிலும் கிளைகள் ஆரம்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இன்னும் சுமார் 10 வருடகாலத்தில், ஒரு முழுநேர இந்தியப் பள்ளியாக சிஷ்யா வளரும். அமெரிக்க பாடத்திட்டத்தின் வழி, அமெரிக்க பாடங்களோடு இந்திய மொழி, இந்திய கலாச்சாரம் பயிற்றுவிக்கும் ஒரு தலைச்சிறந்த இந்தியப் பள்ளிக்கூடமாக அது அமெரிக்காவில் வளரவேண்டும்; வளரும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

நளினி சம்பத் குமார்

© TamilOnline.com