திருமதி சுகுணா புருஷோத்தமன்
தென்னிந்தியாவில் தொன்று தொட்டு வழங்கி வரும் கர்நாடக சங்கீதம் உலகின் பல்வேறு இசை வடிவங்களோடு ஒப்பிடுகையில், தனித் தன்மை பெற்று விளங்குகிறது. புரந்தரதாசர், சங்கீத மும்மூர்த்தி களான தியாகராஜர், முத்து ஸ்வாமி தீக்ஷிதர் மற்றும் ஷ்யாமா சாஸ்திரிகள் போன்ற முன்னோர்கள் பலரும் அருளித் தந்த பாட வழிமுறைகளும் படைப்புகளும் நம் சங்கீதத்திற்கு முதுகெலும்பாய்த் திகழ்ந்து வருகின்றன. வெகு விரிவான ராக, தாள அமைப்புகளும், கமக அசைவுகளும் பக்தி உணர்வை ஊட்டும் சாகித்யங்களும் நம் சங்கீத இசைக்கே உரிய சிறப்பு அம்சங்கள் எனலாம்.
பாரம்பர்ய தூய்மைக்குப் பெயர் போன நம் இசை இன்று 'பாப்' இசை கலாச்சாரத்தால் ஆழம் குறைந்து வருகிறது என்று பலரும் அங்கலாய்க் கிறார்கள். சங்கீத உலகில் இன்று பிரபல்யமாக இருக்கும் முன்னணி கலைஞர்கள் பலரும் 'வெகு ஜன' வரவேற்பைப் பெறுவதற்காகவும் எளிமைப் படுத்துவதற்காகவும், நம் சங்கீதத்திற்கே உரிய நுணுக்கங்களை ஒதுக்கி விடுகிறார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.
நல்ல தூய்மையான இசையை ரசிக்கும் அரிய வாய்ப்பு, அமெரிக்காவில் வாழும், பாரம்பர்ய சங்கீதப் பிரியர்களுக்கு சமீபத்தில் கிட்டியது. சங்கீத உலகில் சுமார் நாற்பது ஆண்டுகளில் சிறந்த குருவாகவும், உயர்வான சங்கீத இசையை வழங்கும் ஒப்பற்ற கலைஞராவும் விளங்கும் 'சுருதி சாகரம்' திருமதி. சுகுணா புருஷோத்தமன் அவர்களின் கச்சேரிகள் சில வாரங்களுக்கு முன் சான் பிரான்சிஸ்கோ பகுதி, நியு ஜெர்சி, லாஸ் ஏஞ்சல்ஸ், சியாட்டில் மற்றும் சில நகரங்களில் நடந்தேறியது.
சங்கீத உலகில் தனி முத்திரை பதித்து வாழ்ந்து மறைந்த பழம்பெரும் முசிறி சுப்ரமணியரிடம் பத்தாண்டுகள் இசை பயின்ற பெருமை சுகுணாவுக்கு உண்டு. தனது 21 வயதிலேயே 'த்வி' தாளம் (இரு தாளம்) அடிப்படையிலான பல்லவியை அரங்கேற்றம் செய்து சாதனை செய்தார். சாதரணமாக ராகம்-தாளம்-பல்லவி-களும் கீர்த்தனைகளும் ஒரு தாள அமைப்பில் பொருந்தி வரும். ஆனால், இந்த இரு தாள முறையில், கீர்த்தனையோ பல்லவி பாடலோ, இரு வேறு தாளங்களிலும் பொருந்துமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பொருத்தத்தை கச்சேரிகளில் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையில், பாடுபவர் இரு தாளங்களையும், இரு கைகளிலும் போட்டுக் கொண்டே பாட வேண்டும். இது நிச்சயம் மாய ஜாலம்தான், என்று நினைக்கத் தோன்றுகிறது. இரு வேறு தாளங்களை மனதில் நிறுத்தி, இரண்டு கைகளிலும் ஒரே சமயத்தில் செயலாக்குவதற்கு, ஆழ்ந்த தாள ஞானமும், அனுபவமும், கடினமான அபியாசமும் பெற்றிருக்க வேண்டும். அதோடு பாடுவதில், எந்தக் குறையும், நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 'பல்லவி'களை இரு தாளத்தில் பாடும் பொழுது, கற்பனாதிறன் மிகுந்த ராக நுணுக்கங்களையும் பாடலில் படைக்க வேண்டும். தாள நுணுக்கத்திலான கற்பனைகள் இருதாளத் திற்கும் ஏற்றவாறு அமைக்கவேண்டும்...என்று எத்தனை விஷயங்கள்? மூளையில் சக்திவாய்ந்த இணைதிறன் கணனி (Parallel Computer) இயங்கினால்தான் இது சாத்தியம் என்று தோன்றுகிறது.
இந்த இரு தாள பல்லவி படைப்பதிலும், பாடுவதிலும் சுகுணா இன்றைக்கு முன்னோடியாய்த் திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை. புதுமையான, சிக்கலான ஆனால் இனிமையான தானே படைத் தமைத்த இருதாள பல்லவிகளும், பாடல்களும் சுகுணாவின் இசைப் புலமைக்கு அணிக்கு அணி சேர்க்கின்றன. புகழ்பெற்ற முசிறிப் பரம்பரையின் நங்கூரமாய் விளங்கிவரும் சுகுணா, பெருமை மிக்க செம்மங்குடி சீனிவாசரிடமும் இசை பயின்றிருக் கிறார். பல்லவிகள் பாடுவதற்கான நுணுக்கங்களைக் திண்ணையம் வெங்கட்ராமரிடமிருந்து திருமதி சுகுணா கற்றுக் கொண்டார்.
திருமதி. சுகுணாவின், செய்முறை சொற் பொழிவுகள் (lecture demonstrations), இசை விழாக்களிலும், இசைக் கல்லூரிகளிலும், பெரிதும் மதிக்கப்படுபவை. சிறந்த குருவாக பல்லாண்டுகளாக திருமதி.சுகுணா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, சென்னை மியூசிக் அகாடமி, திருமதி.சுகுணாவுக்கு, இந்த ஆண்டுக்கான 'போதகா' விருதை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது.
"கர்நாடக சங்கீதத்திற்கு அறிமுகம் தேடும் துவக்க நிலை மாணவர்களிருந்து, முது நிலை மாணவர்கள் வரை, திருமதி.சுகுணாவின் இசைப்பாடமுறை, அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாணாக்கருக்கும் அவரவர் நிலைக்கேற்றார் போல் பாடமுறைகளை அமைத்துத் தருவது திருமதி. சுகுணாவின் சிறப்பு. ஒவ்வொரு படியாக செல்லும் வழக்கமான அணுகு முறையோடு (conventional incremental approach), அந்தந்த பாடலுக்கான, ஒரு முழுமையான வடிவத்தை விளக்குமாறு பாடாந்திரங் களை அமைப்பது, மிகக்குறுகிய காலத்தில் நிறையக் கற்றுக் கொள்ள மிகவும் சக்தி வாய்ந்த பயனுள்ள அணுகுமுறை" என்கிறார் திருமதி.சுகுணாவிடம் இசை பயின்ற முகுந்தன்.
வளைகுடாப்பகுதியின் பிரபல சங்கீத வித்வான் முனைவர் பால முரளி கிருஷ்ணாவின் சீடர், இராகவன் மணியன் சுகுணாவைப் பற்றிக்கூறும் பொழுது, "திருமதி.சுகுணாவின் சுறு சுறுப்பான செயல்வேகம் கொண்ட மனம், என்னைப் பிரமிக்க வைத்திருக்கிறது. சங்கீதத்தில் பெரும் விஷயங்களைச் செய்த பிறகு, இன்றும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மை, வியப்படைய வைக்கிறது. 'முனைவர் பால முரளியின் தில்லானா படைப்புக்களைக் கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்', என்று பல முறை என்னிடம் கூறியிருக்கிறார்கள்" என்று வியப்பு மேலிட பெருமையுடன் நினைவுகூர்கிறார்.
இத்தனை சிறப்புகளையும் தனக்குள்ளே அடக்கி வைத்து இசைச் சேவை புரிந்து வரும் திருமதி. சுகுணாவுடன் ஒரு சிறப்பு நேர்முகம்...
உங்கள் இசை வாழ்க்கை துவங்கியது எப்படி?
ஏழு வயதிலேயே, இசையின்பால் எனக்கிருந்த ஆர்வத்தைப்பார்த்து, எனது பெற்றோர், எனது, பாட்டியாரிடம், வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ளச்செய்தார்கள் எனது தந்தை, சென்னையில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் என்னை அழைத்துச் சென்று என் ஆர்வத்தை வளர்த்தார். எனக்கு வெகு இள வயதிலேயே சங்கீத வித்வானாக ஆக வேண்டும் என்ற துளிர் விட்டிருந்தது. சாவித்திரி என்பவரிடம், வர்ண பாடங்கள் பலவற்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அப்போது, திருமதி.லலிதா அம்மா என்பவர்களிடமிருந்து, வீணையும் கற்றுக் கொண்டேன். அதற்குப்பின், உயர்பள்ளிப் பருவத்தின் பொழுது, திரு இராமமூர்த்தி என்பவரிடமிருந்து, கல்பனா ஸ்வரங்கள் பாடுவது முதாலான பாடாந்திரங்களைக் கற்றுக் கொண்டேன். முதுநிலை பாடமுறைகள், நுணுக்கங்கள் பலவற்றையும் கற்றுக் கொண்டது, திரு. இராமமூர்த்தி அவர்களிடமிருந்து தான்.
உயர் பள்ளி முடித்ததும், சென்னைப் பல்கலைக் கழகத்தில், Diplamo in Music பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அப்போது, அந்த இசைத் துறைத் தலைவராய் இருந்த பேராசிரியர் சாம்பமூர்த்தி, கர்நாடக சங்கீதத்தில் உள்ள சாஸ்திரக் கருத்துக்கள் (theoritical concepts) பலவற்றையும் கற்றுக் கொள்ள பெரிதும் உதவினார். இந்த டிப்ளமோ படிப்பின் பொழுதே, திண்ணையம் வெங்கட்ராமரிடம் பல்லவி பாடுதல், இரு தாள முறைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டேன். இங்கு படிக்கும் பொழுது, சுமார் 16 வயதில் (1957), என்னுடைய முதல் கச்சேரியைச் செய்தேன். அந்த காலத்தில், இளம் வயதினர், கச்சேரிகள் செய்வது, இப்போதைக் காட்டிலும் அபூர்வமாகத்தான் இருந்தது. அன்றைய கால கட்டத்தில் அனுபவ முதிர்ச்சி பெற்ற பெரிய வித்வான்களின் கச்சேரிகள்தான் பெரிதும் விரும்பப்பட்டது.
சென்னை பல்கலைக்கழகத்தின். Diplomo in Music பட்டத்தை மூன்று ஆண்டுகள் பயின்று, வீணை, வாய்ப்பாட்டு இரண்டிலும், distinctionல் தேர்ச்சி பெற்றேன். அதனால், இந்திய அரசாங்கத்தின், உயர் படிப்பிற்கான, Scolarship எனக்குக் கிடைத்தது. அதற்குப்பின், சுமார் ஒன்பது வருடங்கள் முசிறி சுப்பிரமணியர் அவர்களிடம் பாடம் கற்றுக் கொண்டேன். முசிறி வகுப்புகள் எனக்குத் தினமும் இருந்தன. அந்த சமயத்தில், செம்மங்குடி ஸ்ரீனிவாசர் அவர்களிடமும் நான்கு ஆண்டுகள் இசை பயின்றேன்.
நீங்கள் உங்களின் இருபதுகளில் தீவிரமாக இசை பயின்ற காலத்தில், உங்களின் சராசரி நாள் எப்படிக் கழிந்தது?
காலையில் நான்கு மணியிலிருந்து, பாட்டு பயிற்சிகளைச் செய்வேன். அதற்குப்பின், சிறிது நேர காபி இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரு சில மணி நேரங்கள், கீர்த்தனைகள், இராகம் பாடுவது போன்ற முக்கியமான உயர் நிலைப் பாடாந்திரங்களை பயிற்சி செய்வேன். அதற்குப்பின் காலை பத்து மணி போல, செம்மங்குடி மாமா வகுப்புக்குச் சென்றுவிடுவேன். அந்த வகுப்பிற்குப்பின், மதியம் மூன்று மணிபோல், முசிறி மாமாவின் வகுப்பு. அதற்குப்பின் பயிற்சி அல்லது, கச்சேரி பாடுதல் அல்லது கேட்பது என்று முழு நேரமும் இசையில்தான் கழிந்து கொண்டி ருக்கும். அதுபோக, நானும் அந்த சமயத்தில், சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். மாலை நேரங்களில், என்னுடைய வகுப்புகள் இருக்கும்.
உங்கள் குருக்கள் பற்றி?
என் குருக்கள் எல்லோருமே அந்தந்த நிலையில், சிறப்பான ஆசிரியர்களாய் எனக்கு அமைந்தார்கள். திரு.இராமமூர்த்தி அவர்கள்தான், முதன்முதலில், எனக்கு, மனோ தர்மத்தில் பாடுவது போன்ற நுட்பங்களைக் கற்பித்தார். திரு.இராமமூர்த்தி, மஹாராஜபுரம் சீனிவாசர் அவர்களின் சீடர். பேராசிரியர் சாம்பமூர்த்தி, நான் டிப்ளமோ படித்த காலத்தில், பொறுமையாக நிறைய சங்கீத காரியங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவருக்கு சமீபத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடினோம்.
சங்கீத உலகில் ஞானம் படைத்த முசிறி மாமா மற்றும் செம்மங்குடி மாமா போன்ற பெரியவர்களிடம் சொல்லிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்ததை நான் இந்த பிறவியின் பெரும் பயனாக பாக்கியமாக நினைக்கிறேன். பல ஆண்டுகளுக்கு, தினமும் இந்த குருக்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. செம்மங்குடி மாமா வகுப்பில், ஒரு நாள் பல்லவி/அனு பல்லவி மறு தினம் சரணம் மற்றும் பாடாந்திரங்களை சரியாக எழுதுவது என்று பாடங்கள் வேகமாக நகரும். முசிறிமாமா வகுப்பில், எழுதுவதோ, நோட்டுப் புத்தகங்களைப் பயன் படுத்த்துவதோ அனுமதிக்கப்பட மாட்டாது. பாடங்களை, நினைவில் நிறுத்திப் பாடவேண்டும். இரு வழிமுறைகளுமே எனக்கு மிகவும் பிடித்தவைகள் தான்.
முசிறி மற்றும் செம்மங்குடி இவர்களிடமிருந்து, கற்றுக்கொள்வதற்கும் மேலாக, அவர்கள், வீட்டில் சுதந்திரமாக பாடும்பொழுது, கேட்பது இன்னும் கொடுத்துவைத்த விஷயம். சங்கீத அனுபவங்கள் மட்டுமல்லாது, நல் வாழ்க்கைக்கான நெறிமுறைகள் பலவற்றையும் இந்த பெரியவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முசிறி மாமாவின் நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடினோம். என்னு டன் முசிறி மாமாவிடம் இசை பயின்ற சுகுணா வரதாச்சாரி மற்றும் மணி கிருஷ்ணஸ்வாமி, மூவரும், இந்தியாவில் பல இடங்களில் முசிறி சுப்ரமணியரின் அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தினோம். இந்த கச்சேரிகளில், முசிறியின் இசைப் படைப்புகள் மற்றும், முசிறி மாமாவால் பிரபல்யம் அடைந்த நகுமோமு, காவடிச்சிந்து போன்ற இசைப் படைப்புகளை மட்டுமே பாடினோம். இந்த நூற்றாண்டு விழா இசை நிகழ்ச்சிகளுக்கு, போக்குவரத்து தவிர, நாங்கள் நிதி எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் மூவரும் சேர்ந்து பாடும் பொழுது, நாங்கள் முசிறியிடம் கற்றுக்கொண்ட கீர்த்தனைகள், சங்கதிகளை துளியும் வேறுபடாது ஒருமித்து பாட முடிந்தது. முசிறியின் பாடாந்திர வழிமுறைகளின் சக்தியை முப்பது ஆண்டுகளுக்குப்பின்பு நினைவு கூர்ந்து பெருமிதம் கொண்டோம். எவ்வளவு கற்றுக்கொண்டாலும், கற்றுக்கொண்டதை, அடிக் கடி, பயிற்சி செய்து மேலும் மேலும் மெருகூட்டி வரும்போதுதான் சங்கீதம் தரம் குறையாமல் நிலைக்கும். சமீபத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கூட, நானும் சுகுணா வரதாச்சாரியும், முசிறியின் பாடாந்திரங்களைக் கொண்டு ஒரு கச்சேரி செய்தோம்.
நீங்கள் தீவிரமாக இசை பயின்ற இந்த காலக் கட்டத்தில் உங்களுடை நோக்கம் என்னவாக இருந்தது?
என் குருக்கள், சங்கீத பெரியவர்கள் போன்று உயர்வான சங்கீதம் படைக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். இரு தாளத்தில் பாடுவது போன்ற அரிய காரியங்களையும் சாதனைகளையும் செய்யக்கூடிய அளவுக்கு பெரிய வித்துவம் பெற்ற வித்வானாக விளங்கவேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது.
நீங்கள் இருதாளத்தில் பாடி அரங்கேற்றம் செய்தது பற்றி?
1961 ல் சென்னையின் சங்கீத நாடக சங்கம் (இன்று இயல் இசை நாடக சங்கம் என்று வழங்கப்படுகிறது) அமைப்பைச் சேர்ந்த, திரு.ஈ.கிருஷ்ணன் என்பவர் நான் இரு தாள பல்லவிகள் பாடுவதை அறிந்து, சென்னை மயிலையில் உள்ள சாஸ்திரி ஹாலில் பெரிய அளவில் ஒரு முழுக் கச்சேரி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். இருதாளத்தில் பல்லவிகளும் கீர்த்தனைக்களும் பாடினேன். இந்த நிகழ்ச்சிக்கு வித்வான்கள் பலரும் வந்திருந்து என்னைப் பாராட்டினார்கள். அதற்குப் பின், இசைக் கல்லூரிகளில் செய்முறை விளக்கக் கச்சேரிகள் பல செய்து வந்தேன். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், விஜயவாடா இசைக்கல்லூரி, மதுரைப் பல்கலைக் கழகம் போன்ற இசைப் பள்ளிகளிலும் எனது இருதாள பல்லவிகள் கொண்டு, இசை நிகழ்ச்சிகளை அமைத்து கௌரவித்தார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மியூசிக் அகாதமியில், 'சம்ப்ரதாயா' என்று, பல்லவிகளை வழங்கும் இசை நிகழ்ச்சித் தொடரில், இரு தாள பல்லவிகளை வழங்குமாறு கேட்டார்கள். அந்த ஆண்டில், எனக்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவித் தார்கள். சமீபத்தில், சென்னைத் தொலைக் காட்சியில், என் இரு தாள பல்லவி களையும், கீர்த்தனைக்களையும் பதிவு செய்து, நிலைய கோப்புகளில் (ARCHIVES) சேர்த்திருக் கிறார்கள்.
தற்போது, கச்சேரிகளில், இரு தாளத்தில், ஓரிரு கீர்த்தனைகளும், சில சமயம் பல்லவிகளும், இரசிகர்கள் விரும்பிக் கேட்டால் பாடுகிறேன்.
உயர்வான சங்கீதம் பாடவேண்டுமென்ற உங்களுடைய ஆர்வத்திற்கு, நீங்கள் தடைகள் என்று ஏதும் சந்தித்துண்டா? வெகு ஜன இரசிகர்கள் அதனால் உங்களுக்கு குறைவாக உள்ளார்கள் என்று நீங்கள் நினைத்து உண்டா?
தடைகள் என்று சொல்லமுடியாது. காலத்திற்கு ஏற்றாற்போல் இன்று நம் சங்கீதத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன எனலாம். ஆனால், வெகு ஜன ரசிப்பிற்கு ஏற்றார்போல், நம் சங்கீத தரத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம் என்ற போக்கில் எனக்கு உடன்பாடில்லை. பெரியவர்கள் சொல்லித் தந்த தூய்மையும், பாரம்பர்யமும் நம் சங்கீதத்தின் தூண்களாய் நிற்கின்றன. கடினமான பல்லவிகளும், கீர்த்தனைகளும் நான் பாடுவதால், என் கச்சேரிகள் புரிந்துகொள்ள அரிதானவை என்றுகூட மக்கள் நினைத்திருக்கலாம். அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் அதே சமயம், நான் இருதாள கீர்த்தனைக்களைக் கச்சேரிகளில் பாடும் பொழுது, மக்கள் வரவேற்கத்தான் செய்கிறார்கள். நானும், கடினமான கீர்த்தனைகளும் பல்லவிகளும் பாட முனையும் பொழுது, மக்கள் இரசிக்கும்படி இனிமையாகவும் அமைக்க வேண்டுமென்று சிரத்தை எடுக்கிறேன்.
நான் பெரிய அளவில், பிரபல்யம் அடையவில்லை என்ற கருத்தையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக துளியும், நான் வருந்தியது கிடையாது. பாரம்பர்யம் மிக்க சங்கீதம் கேட்க விரும்புகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன். அதோடு, அரசாங்கம் எப்பொழுதுமே, என் இசைக்கு அங்கீகாரம் அளித்து, Fellowship போன்றவைகளைக் கொடுத்து கௌரவித்து வந்திருக்கிறது. நம் சங்கீதம் என்ற அரும்பெரும் பொக்கிஷத்தை பெருமைக்குரிய குருக்களிடமிருந்து கற்றுக்கொள்ள நேர்ந்தது பெருமைக்குரிய காரியம். கச்சேரிகள் மட்டுமன்றி, என்னிடம் கற்ற்றுக் கொள்ளும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதிலும், இந்த சங்கீதப் பாரம்பர்யம் தரமோடு விளங்க வேண்டுமென்பதில் நான் ஆர்வம் காட்டி வருகிறேன்.
முப்பது ஆண்டுகாலமாக உங்களிடம் கற்றுக்கொண்ட மாணவர்கள் பற்றி?
அந்தக் காலத்தில் என்னிடம் கற்றுக் கொண்ட மாணவர்கள் சிலர், வானொலியில் இசைத் துறையில் பணிபுரிகிறார்கள். என்னிடம் கற்றுக் கொண்டவர்கள் பலரும், சங்கீதத்தை தொழிலாக யாரும் அதிகம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தக் காலத்தில், இளைஞர்களுக்கு இன்றைக்குக் காட்டிலும் வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இன்றைக்கு மியூசிக் அகாதமியில் Treat of Youth போன்று எல்லா இடங்களிலும், இளைஞர்களை ஊக்குவிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. என்னிடம் கற்றுக் கொண்ட மாணவர்கள் பலர் இன்று அமெரிக்காவில் இசை சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்.
முசிறியின் பரம்பரை சங்கீதச் செல்வத்தை தொடர்ந்து கொண்டு செல்லும் ஆர்வம் உங்களின் இன்றைய மாணவர்களுக்கு எவ்வளவுதூரம் இருக்கிறது?
மாணவர்கள் ஆர்வமாய்க் கற்றுக் கொள்கிறார்கள். பாரம்பர்ய கீர்த்தனைகளின் சங்கதிகளை மாற்றாமல், அழகு குறையாமல் பாடுவதுபற்றி என் வகுப்புகளில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். மாணவர்களுக்கு அனுபவமும் பயிற்சியும் கூட கூட, இன்னும் பாடாந்திரங்களும் மெருகேறும் என்பதில் ஐய மில்லை. இந்த பரம்பரை தொடரும் என்று நான் உறுதியாய் நம்புகிறேன்.
சங்கீதத்தில் வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை?
சம்பிரதாயத்திற்கு மதிப்புக் கொடுத்து, மும்மூர்த்திகள் மற்றும் பெரியோர்கள் செய்து தந்த கீர்த்தனைகளை நன்கு பாடம் செய்து சங்கதிகளை மாற்றாமல், சொந்த சரக்குகளைத் திணிக்காமல் பாடவேண்டும். புதுமைகள் செய்வதை நான் தடுக்கவில்லை, ஆனால் பாரம்பர்யமாக சங்கீதத்தில் வழங்கிவரும் தூய்மையும், தரமும் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் பிடிக்கும்படி சங்கீதம் தருகிறேன் என்பதும் முக்கியம்தான், அதற்காக தரம், ஆழம் குறைந்த சங்கீதம் பாடக் கூடாது. இன்றும் நிறையக் கலைஞர்கள் நல்ல சங்கீதம் பாடி வருகிறார்கள். இன்றைய மாணவர்கள் பெரிய வித்வான்களின் சங்கீத ஒலிப்பதிவுகளை அதிகம் கேட்டு அதிலிருந்து நிறையக் கற்றுக் கொள்ள முயல வேண்டும். நம் சங்கீதப் பாரம்பர்யத்தைத் தொடர்ந்து காப்பாற்றும் பெரிய பொறுப்பு இன்றைய இளம் கலைஞர்களின் கையில் இருக்கிறது.
அந்தப் பொறுப்பைத் திறம்பட செய்வார்கள் என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக நம்புகிறேன். இன்று மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் சங்கீத ஆர்வம் நிறையவே இருக்கிறது. மேல் படிப்புகளுக்குச் செல்லும் பொழுது, பலருக்கு சங்கீதத்தில் அதிக நேரம் செலுத்த முடிவதில்லை. ஆனாலும், முடிந்தவரை கற்றுக் கொண்டதை பயிற்சி செய்து வரவேண்டும். முழு நேர இசைக் கலைஞராக ஆகாவிட்டாலும், நல்ல சங்கீதம் கேட்பதையும், அதோடு முடிந்தால் பாடுவதையோ, இசைக் கருவிகள் வாசிப்பதையோ, தொடர்ந்து செய்வது, மனதுக்கு சந்தோஷத்தைத் தரும் காரியம்.
திரை இசை கேட்பதுண்டா?
திரை இசை அவ்வப்போது கேட்பதுண்டு. நல்ல விஷயங்கள் யார் செய்தாலும், எங்கிருந்தாலும் பிடிக்கும். எந்த இசைக்கும் அடிப்படை நம் சங்கீதம்தான் என்று நான் கருது வதுண்டு.
இன்னும் நீங்கள் சாதிக்க நினைப்பது ஏதாவது?
நான் இன்னும் ஒன்றும் செய்து விடவில்லை. இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். 'கற்றது கையளவு கல்லாதது உலகளவு' என்று பழமொழி உண்டு.. அதனால், இன்னும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், 'இளைமையில் கல்' என்ற முதுமொழியும் உண்டு. (சிரித்துக் கொண்டே), ஆனால் முதுமை வந்து கொண்டிருக்கிறது. இப்போது, என் மாணவர் களுக்குக் கற்றுக் கொடுப் பதற்காக நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்த இசை விழாவின் போது, 'பஞ்ச கல்யாணி' என்ற தலைப்பில் செய்முறை விளக்க நிகழ்ச்சி நானும் என் மாணவர்களும் நடத்துகிறோம். கல்யாணி, பூர்வி கல்யாணி, மோஹன கல்யாணி, அமீர் கல்யாணி மற்றும் யமன் கல்யாணி போன்ற கல்யாணி ராகங்களை அலசிப்பார்த்து, அதில் அமைந்த பாடல்களை இந்த நிகழ்ச்சியில் விளக்கம் கொடுத்துப் பாடப் போகிறோம். இந்த நிகழ்ச்சிக் காக மோஹன கல்யாணி, அமீர் கல்யாணி போன்ற இராகங்களில் கீர்த்தனைகளை அமைத்து நானும் கற்றுக் கொண்டு, மாணவர்களையும் பயிற்றுவித்து வருகிறேன். நம் கற்றுக் கொள்ள கடல் போல் அளவற்ற செல்வம் கொட்டிக் கிடக்கிறது.
கர்னாடக சங்கீதத்தில் பெரும்பாலும் இந்து சமயக் கடவுள்களைப் பற்றிய கீர்த்தனைகளே பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. புதிய சமயச் சார்பற்ற கீர்த்தனைகள் பரவி வரும் நம் சங்கீதத்திற்கு அவசியமானதா? அதைப் பற்றி...
வழிவழியாக நம் சங்கீதத்தை வளர்த்து வந்தவர்கள் பலரும், இந்து சமய பக்தர்கள். அவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்கள் மேல் அவர்கள் பாடிய பாடல்களும், வழிபாடுகளும், இன்றைக்கு நம் சங்கீதத்திற்கு ஊன்று கோலாய் இருந்து வருகிறது. மும்மூர்த்திகளும், பிற முன்னோர்களும், சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்ற ஆசையைவிட, தெய்வத்தின் மேல் கொண்டிருந்த பக்தியால்தான் அத்தைகைய உயரிய கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்கள் என்பது என் கருத்து. வேத நாயகம் என்ற சங்கீத வித்வான் அந்த காலத்தில், எந்த தெய்வத்தின் பெயரையும் வெளிப்படையாக அழைக்காமல் நிறைய கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். அவருடைய கீர்த்தனைகள் மிகவும் விசேஷமானவை.
இயல்பாகவே, உலகில் பலமதங்களிலும் இசையை பக்தியோடு தொடர்புபடுத்தியிருக்கிறார்கள். Music elevates the soul என்று சொல்வார்கள். இசையைப் பக்தி மார்க்கத்திற்கான வழியாக நம் முன்னோர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இசைவழி, மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கான சிறந்த வழி என்று இன்றைய ஆன்மீகவாதிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அதுதான் காரணம். அதே சமயம், நம் சங்கீதத்திலும், குற்றாலக் குறவஞ்சி, நாட்டுப் புறப்பாடல்கள் போன்ற பிற சுவைகொண்ட பாடல்களும் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன.
எப்போதும் அழகாக சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள். பெரிய அளவில் பணம் சேர்க்கவில்லை என்றோ வேறு எதற்காகவோ வருத்தமுற்றதுண்டா?
நிச்சயமாக இல்லை. மனிதனுக்கு, சாப்பிடும்போது தவிர, வேறு எப்பொழுதும், போதும் என்று சொல்லும் மனம் வராது என்று சொல்வார்கள். இருக்க இடம், உணவு, உடை இவை ஓரளவுக்கு இருக்கும் போது, வேறு எதற்கும் பெரிதாய் வருத்தப்படக் கூடாது என்பது என் எண்ணம். நல்ல சங்கீதம் இன்னும் நிறைய மக்களைச் சென்று அடைய வாய்ப்புகள் அமைய வேண்டும் என்று நான் நினைப்பது உண்டு. ஆனால், இன்றைக்கு சங்கீதம் நன்கு பரவி வருகிறது என்றுதான் நினைக்கிறேன். வானொலி, தொலைக் காட்சி, இணையம் என்று வீடுதேடி சங்கீதம் வரக்கூடியதாய் இருக்கிறது. அந்த காலத்தில், பல மைல்கள் நடந்து, மாட்டுவண்டியில் போய் கச்சேரிகளைக் கேட்ட அனுபவங்களை செம்மங்குடி மாமாவிடம் நான் கேட்டிருக்கிறேன். இன்று வகுப்புகளைக்கூட மாணவர்கள் பதிவு செய்து கொள்ள மாணவர்களுக்கு ஒலிப் பதிவுக்கருவிகள் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால், அந்த காலத்தில், நான் குருநாதரோடு செய்த கச்சேரி களைக் கூட, நாங்கள் பதிவு செய்துகொள்ள முடிந்ததில்லை. எனவே கிடைத்த வாய்ப்பை இளைய தலைமுறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சந்திப்பு: அலெக்ஸ் பாபு |