பாஞ்சாலி சபதம்
தமிழ் நாடக உலகில் ஒரு திருப்பம்

"தேவர் புவிமிசைப் பாண்டவர், அவர் தேவி துருபதன் கன்னி நான். இதை யாவரும் இற்றை வரை யிலும் தம்பி, என்முன் மறந்தவரில்லை காண். காவல் இழந்த மதிகொண்டாய், கட்டுத்தவறி மொழிகிறாய்" என்று பாஞ்சாலி சீறுகிறாள் தறிகெட்டு நடக்கும் துச்சாதனனைப் பார்த்து. “ஆடி விலைப்பட்ட தாதி நீ, உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோதனன்" என்று அவளை இழித்துரைத்து விட்டு கக்கக்கவென்று கனைத்தவாறு அவளது கூந்தலைப் பற்றி இழுக்கிறான் துச்சாதனன். அரங்கத்தின் சோகமான அமைதிக்கு நடுவே "அடப்பாவி!" என்றொரு பெண்பார்வையாளரின் குரல் கேட்கிறது. திரை இறங்கியும் கரவொலி அடங்க நெடுநேரம் ஆகிறது.

இது நடந்த இடம் சிங்காரச் சென்னையின் ராஜா அண்ணாமலை மன்றமல்ல, சான் ஹோசெ கம்யூனிட்டி கல்லூரியின் நாடக அரங்கம். ஜனவரி 12ம் தேதியன்று முத்தமிழ் விழாவின் ஒரு பகுதியாக அரங்கேறிய மகாகவி பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' நாடகத்தின் போது. அரங்கத்தின் இருக்கைகள் நிரம்பிச் சுவர் ஓரமெல்லாம் மக்களும் குழந்தைகளூம். "அமர இடமில்லை, அனுமதிச் சீட்டுத் தரமுடியாது" என்று நிர்வாகிகள் சொன்னாலும் "பரவாயில்லை, எங்களைப் பார்க்க அனுமதித் தால் போதும்" என்று கெஞ்சி உள்ளே நுழைகின்றனர் சிலர். நாடகம் முடிந்ததும் நிர்வாகிகளைத் தேடிக்கண்டுபிடித்து நன்றி சொன்னது மட்டுமல்லாமல் "இவ்வளவு அருமை யான நாடகத்தைப் பார்த்துவிட்டு எங்களால் காசு கொடுக்காமல் போகமுடியாது; இதை நன்கொடையாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று தமக்கான நுழைவுக் கட்டணத்தைக் கையில் திணித்துவிட்டுப் போகின்றனர்.

"கவிதை நாடகமா?"

அமெரிக்காவின் வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தினர் முத்தமிழ் விழா கொண்டாடத் தொடங்கி இது மூன்றாவது வருடம். இயலுக்கு பட்டிமன்றமும் இசைக்கு மெல்லிசையும் என்று தீர்மானித்தாகிவிட்டது. நாடகம்? வழக்கமான சிரிப்புத் தோரணம் போட ஒருவர் தயாராக இருந்தார். தமிழ்நாட்டிலேயே கடிஜோக்கு களைத் தொகுத்துக் கதைபண்ணுவதையே நாடகம் என்று வழக்கப்படுத்திவிட்டார்களே. கடல்கடந்தவர்களா அதை மாற்றிவிடப் போகிறார்கள்?

மாற்றவேண்டும் என்று விரும்பினார் மணி மு. மணிவண்ணன்(பார்க்க பெட்டித்தகவல்). மகாகவி பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' மேடையேற வேண்டும் என்று ஆசைப்பட்டார். எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ் இதனை அரங்கேற்றி சுமார் நாற்பது ஆண்டுகள் இருக்கும். "பாஞ்சாலி சபதத்தை நான் மேடையேற்றுகிறேன்" என்று சொன்னார் மணி. என்ன தோன்றியதோ, தமிழ்மன்ற நிர்வாகிகள் இதை ஏற்றுக்கொண்டார்கள். தயாரிக்கும் பொறுப்பு மணிவண்ணனுடையது.

இன்னும் நான்கு வாரங்கள்கூட இல்லை. சுமார் நான்கு மணி நேரம் ஓடக்கூடிய பாரதியின் படைப்பை கருத்தும் சுவையும் மாறாமல் ஒரு மணி நேரத்துக்குள் முடிவதாக பாரதியின் வரிகளிலேயே மேடை வடிவம் கொடுத்தாக வேண்டும், நடிக நடிகையர் தேர்வு செய்தாகவேண்டும், காவியகாலப் பாத்திரங் களுக்கான ஒப்பனைக்கு வழிதேடியாக வேண்டும், ஒத்திகைகள் பார்த்து மேடைக்குத் தயாராக வேண்டும். கேட்கவே மலைப்பாக இருக்கிறதே.

பாஞ்சாலி சபதத்தை அரங்கேற்றுகிறேன் என்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே இந்தியாவிலிருந்து பயணியாக வந்திருந்த கவிஞர் மதுரபாரதியிடம் (பார்க்க பெட்டித் தகவல்) சொன்னார் மணி. "செய்யமுடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். சரியா?" கரும்பு தின்னக் கூலியா? மறுபேச்சின்றி ஒப்பினார் கவிஞர். தமிழ்மன்றமும் பச்சைக்கொடி காட்டி விடவே இரண்டே நாட்களில் மேடை வடிவத்தைத் தயார் செய்தார் மதுரபாரதி.

அடுத்த கட்டம் இயக்குநர், நடிகர்கள். முன்பே சில தமிழ் நாடகங்களை இயக்கி அனுபவம் பெற்ற ஒருவரை அழைத்து அவருடன் கலந்து ஆலோசித்தனர் மதுரபாரதியும் மணியும். அவர் பிரதியைப் பார்த்தார். "கவிதை. பொன்னான வரிகளானாலும் கவிதை வரிகள். புராணக்கதை. தன்னாட்டிலிருந்து வந்து அடுத்த அரைக் கோளத்தில் இருக்கும் இவர்களுக்குப் புரியுமா? இல்லை நடிகர்களால்தான் இதைப் பேசி நடிக்கமுடியுமா?" என்றெல்லாம் அவர் மனத்தில் எண்ணங்கள் ஓடியிருக்க வேண்டும். இது நடந்தது டிசம்பர் 21 அன்று. நாடகம் மேடையேற வேண்டிய நாள் சனவரி 12, 2002. மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிப்போனவர் வரவில்லை.

நடிகர் தேர்விலும் இது தொடர்ந்தது; வசனத்தைப் படித்துப் பார்ப்பார்கள், அடுத்த ஒத்திகை சமயத்தில் "உடம்பு சரியில்லை" என்று தொலைபேசி வரும். இவற்றையெல்லாம் மீறி நெஞ்சுரத்துடன் தம்மை இதில் இணைத்துக் கொண்டவர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சியும் புகழும் காத்திருந்தது. எதற்காகவும் நிற்க வில்லை பாஞ்சலி சபதம். மணிவண்ணன் வீட்டில்தான் தேர்வும் ஒத்திகையும். சந்தேகத் துடனும் தயக்கத்துடனும் ஒவ்வொருவராக வந்தனர். சிறிதும் சளைக்காமல் ஒவ்வொரு வருக்கும் கவிதையை வசனமாகச் சொல்வது எப்படி, குரல்வளத்தை அதிகரித்துக்கொள்வது எப்படி என்பதை மட்டுமல்லாமல் தானே உணர்ச்சியுடன் படித்தும் நடித்தும் காட்டுவார் மதுரபாரதி. பொருளையும் சந்தர்ப்பத்தையும் விளக்குவார். முழுநாடகத்தையும் தனிநடிப்பாக ஒலிநாடாவில் பதிவுசெய்தும் கொடுத்தார்.

நடிக நடிகையர் தேர்வுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார் மணிவண்ணன். சகுனி வசனத்தைப் பேசிக்காட்டச் சொல்லுவார், அடுத்து துரியோ தனன் வசனத்தை என்று மாற்றி மாற்றி நடக்கும். குறித்துவைத்துக் கொள்வார். ஒவ்வொன்றாக பாத்திரங்களுக்குப் பொருத்தமானவர்கள் அமைந்தனர். நடித்தவர்களில் பெரும்பாலோர் முதல்முறை மேடை ஏறியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எடுத்த எடுப்பிலேயே ஸ்ரீகாந்த் முனைப்பாகத் தனக்கு துரியோதனன் வேடம்தான் என்று தயாரிப்பைத் தொடங்கி விட்டார். நீண்ட வசனங்கள் கொண்ட அவரது பகுதியை முதலிலேயே மனப்பாடமும் செய்து விட்டார். வஞ்சகமும் சூதும் உருவான சகுனி வேடத்துக்குத்தான் யாரும் அமையவில்லை. சிவா சேஷப்பன் விகர்ணன், தேர்ப்பாகன் என்று ஏதேதோ செய்தார். திடீரென்று ஒருநாள் மணி "நீங்கள்தான் சகுனி" என்றார். இவரது பாத்திரப் பொருத்தமும் நடிப்பும் அனைரையும் கவர்ந்து விட்டது சரித்திரம்.

பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யரான ராகவன் மணியனின் இசையை சிலாகிக்காதவர்கள் இல்லை. திரைமூடித் திறப்பதற்குள் அரங்க அலங்காரத்தை மாற்றிய சியாமளாவின் திறனும், கண்கொள்ளா வண்ண ஆடைகளையும் ஆபரணங்களையும் அலைந்து திரிந்து சேகரித்து புராண நாயகர்களைக் கண்முன் நிறுத்திய ஜனனியின் கலையுணர்வும் எண்ணியெண்ணி வியக்கத்தக்கன. (நாடகம் பற்றிய முழு விவரங்களும் புகைப்படங்களும் பார்க்க: http://home.attbi.com/~seshappan1/index.htm)

வளைகுடாப் பகுதியில் தமிழ் நாடகம்

சாதாரணமாக இங்கே நாடகம் என்றால் எஸ்.வி.சேகர் போன்றோரின் வசனப் பிரதியை வாங்கி வைத்துக்கொண்டு, விடியோவையும் போட்டுப் பார்த்து அப்படியே சற்றே நீர்த்த பிரதியாக அரங்கேற்றிவிடுவார்கள். அதிலும் சிலர் தமிழ் வசனத்தை ஆங்கிலத்தில் எழுதிவைத்துக்கொண்டு படித்து ஒப்பித்ததும் உண்டு. தவிரவும் எஸ்.வி.சேகர், கிரேஸி மோஹன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோ ரையே கூட்டிவந்ததும் உண்டு.

கணினி மென்பொருள் துறையின் உச்சக் காலத்தில் இங்கே தமிழ்க்குடும்பங்களின் எண்ணிக் கையும் கணிசமாக ஏறியது. தற்போது சுமார் 10000 தமிழர்கள் இந்தப் பகுதியில் வசிக்கக்கூடும் என்பது கணிப்பு. திறமையும் தமிழறிந்தவர்களும் ஒன்று சேர்ந்தபோதும் தாங்களே எழுதிய இலகுவான நகைச்சுவை ஓரங்க நாடகங்களை முன்வைத்தார் களே தவிரப் பரிசோதனை முயற்சிகள் எதுவும் செய்யும் துணிவு இல்லை.

இந்தப் போக்கை எதிர்த்து நீச்சல் போட்ட முதல் முயற்சி 'கலவரம்'. இதன் இயக்குனரான மஹேஷ் உமாசங்கர் சொல்லுகிறார்:"தமிழ் நாடகமென்பது சிந்தனையற்ற வேடிக்கை யாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதே நேரத்தில் கண்ணீரில் குளிக்க வைக்காமலும் கனமான நாடகங்களை மேடை யேற்றமுடியும் என்பதைக் காட்டுவதே எங்கள் குழுவின் நோக்கம்." திறமை, தொழில் நேர்த்தி, ஒருமுக உழைப்பு இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக 'கலவரம்' மேடையேறியபோது எல்லாக் காட்சி களுக்கும் நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அதன்பின்னே எந்த ஒரு மொழி அல்லது கலாச்சார அமைப்பும் தாங்கி நிற்காது தனித்து நின்று இதை "நாடக்" குழுவினர் செய்தது ஒரு சாதனைதான்.

'வடகலிபோர்னியாவின் தமிழர்கள்' (Tamils of Northern California) என்ற பெயரில் நடந்துவரும் புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர் அமைப்பு தம் தாய்நாட்டில் தமக்கு நடக்கும் அவலங்களைச் சித்தரிக்கும் தரமான 'ஒரு குடும்பத்தின் கதை' என்ற தமிழ் நாடகத்தையும் மற்றும் நகைச்சுவை நாடகங் களையும் மேடையேற்றியுள்ளது.

"சிந்திக்கத் தூண்டுகிற, காலத்தோடு பொருந் துகிற, பொறுப்புள்ள இந்திய நாடகங்களைத் தருவதே எங்கள் நோக்கம்" என்று சொல்லுகிற மஹேஷ், "பாஞ்சாலி சபதம் போன்ற நாடகங் களை மேடையேற்றுவதன்மூலம் 'தமிழ் நாடகம்னா சுமாராத்தான் இருக்கும்' என்கிற எண்ணத்தை மாற்றவேண்டும்" என்றும் சொல் கிறார். நாடகம் பார்ப்பவர்களின் தரம் உயர்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கக் கூடாது, நாம்தான் உயர்த்த வேண்டும் என்று உறுதியாக நம்புகிறார் இவர்.

பார்வையாளரின் தரம்

"புராண அடிப்படையிலான முழுநீளக் கவிதை நாடகம் என்று தெரிந்தும் அரங்கம் நிரம்பி வழிந்தது என்றால் பார்வையாளர்கள் இருக்கி றார்கள் என்றுதானே அர்த்தம். நாம்தான் அவர்களை இதுவரை குறைத்து மதிப்பிட்டு வந்திருக்கிறோம்" என்று சொல்லும் மணிவண்ணனின் கூற்றிலும் நியாயமிருக்கத் தான் செய்கிறது.

"இங்கு மட்டுமா, தமிழ்நாட்டிலும் வேறென்ன நடக்கிறது? அங்கும் பரீட்சித்துப் பார்க்கட்டும். நிச்சயம் நல்ல நாடகங்களைப் பார்க்க அதற்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களைக் குறை கூறுவது நாடக உலகின் குறைபாட்டை மறைக்கத் தான்" என்று அடித்துச் சொல்கிறார் மதுரபாரதி.

பாரதி என்கிற பெருங்கவிஞனின் காந்த சக்தியும் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. "எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம்" என்றவன் அவன். அப்படி நம்புகிறவர்கள் நெஞ்சை நிமிர்த்தி மேடை யேறினால் மீண்டும் ஒரு நாடகப் புரட்சி வளைகுடாப் பகுதியில் மட்டுமென்ன, வங்காள விரிகுடாவைத் தொட்டிருக்கும் செந்தமிழ் நாட்டிலும் நடக்கலாம். செய்வார்களா?

*****


மணி மு. மணிவண்ணன்

சிலிக்கான் பள்ளத்தாக்கின் உயர்நுட்ப வல்லுநர். பாஞ்சாலி சபதத்தை மேடையேற்றும் எண்ணம் உதித்தது இவருக்குத்தான். நாடகத்தின் தயாரிப்பாளராகவும், இணை இயக்குநராகவும் செயல்பட்டார். வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் முன்னாள் தலைவர். இணையத்திலியங்கும் தமிழ்த் தளங்களிலும் மடற்குழுக்களிலும் ஆரம்ப காலமுதலே பெரும்பங்கு கொண்டு மதிப்புப் பெற்றவர். இவர் நடத்தி வருகிற இலக்கிய வட்டத்தில் பல தமிழறிஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் முதன்முதலாக 'கம்பன் விழா' மற்றும் 'தமிழிசைத் திருநாள்' இவர் முனைப் பாலே மன்றம் மூலம் நடக்கத் துவங்கியது.

சென்னை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாடுகளின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவில் இருந்து தமிழ் எழுத்துருவை தகுதரப்படுத்துதலில் (Standardization of Tamil Fonts) பெரும்பணி ஆற்றியுள்ளார். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை (Tamil Internet Conference 2002) சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நடத்துவதில் இப்போது தீவிரமாக இருக்கிறார். இவருக்கு முழு உற்சாகத் துடன் எல்லாப் பணிகளிலும் தோள் கொடுத்து நடத்துபவர் இவரது மனைவி ஆஷா மணிவண்ணன். தற்போது வளை குடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் பொருளாளரும் கூட ஆவார்.

*****


மதுரபாரதி

பாரதியின் அற்புதமான கவிதை நாடகத்தைச் சுவையும் சூடும் குறையாமல் சுமார் ஒருமணி நேரத்தில் நடத்தும்படி மேடை வடிவம் கொடுத்தார். கவிதை வரிகளை வசனமாகப் பேசுவதற்கும், பொருளுணர்ந்து உணர்வோடு சொல்வ தற்கும் மட்டுமன்றி நடிகர்களுக்குக் குரல்வளம் மற்றும் நடிப்புப் பயிற்சியும் கொடுத்தார். நாடகத்தின் இணை இயக்கு நராகச் செயல்புரிந்தார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுள்ள இவர் கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நூற்றாண்டு விழா இசைப்பாடல் போட்டியில் முதல் பரிசு வென்றவர். பிரிட்டிஷ் கவுன்சில் 1989ல் நடத்திய் முதல் அகில இந்திய ஆங்கிலக்கவிதைப் போட்டியிலும் பரிசு வென்றிருக்கிறார். சென்னையில் 'பாரதி இயக்கம்' என்ற சமுதாய இலக்கிய அமைப்பை நடத்தி வந்தார். இவருடைய கதை கவிதை ஆகியவை கல்கி, கணையாழி, அமுதசுரபி ஆகியவற்றிலும் இந்தியாவின் பல்வேறு வானொலி நிலையங்களிலும் வந்துள்ளன. ஹ¥ஸ்டன் பாரதி கலை மன்றம் தவிர பல இந்திய நகரங்களின் இலக்கிய அமைப்பு களில் உரையாற்றியுள்ளார். சென்னை ஆன்லைன்.காம் அமைப்பின் முதன்மைக் கருப்பொருள் ஆசிரியராகப் (Chief of Content) பணியாற்றியுள்ளார்.

*****


"எப்படி நீங்களே வென்றீர்கள்?"

தருமன் குடி, படை, செல்வம், நாடு, தம்பிமார் என்று ஒவ்வொன்றாகப் பணயம் வைக்கிறான். சகுனியின் கள்ளப் பகடை அவற்றை மட்டுமின்றி திரௌபதியையும் கவுரவருக்கு வென்று தருகிறது. பார்த்துக் கொண்டே இருந்தாள் ஒரு சிறுமி. நாடகம் முடிந்தது. சகுனி வெளியே வந்தார். இன்னும் வேடம் கலைக்கவில்லை. அவரிடம் வந்து கேட்டாள்: "சகுனி மாமா, எப்படி எல்லாவற்றையும் நீங்களே வென்றீர்கள்? உங்கள் பகடையில் அப்படி என்ன மாயம் இருக்கிறது?" சகுனியாக நடித்த சிவா சேஷப்பன் விக்கித்துப்போனார்.

தன்கையிலிருந்த பொன்னிறம் பூசிய பகடையை அவளுக்குக் காட்டிச் சொன்னார் "இதோ பார், இதில் எதுவும் இல்லை. கதையில் அப்படி வருகிறது, அவ்வளவுதான். "நாடகத்தின் இயல்பான சித்திரப்பில் மயங்கிவிட்ட சிறுமிக்கு இது புரியவில்லை. விழிகளை மலர்த்தி வியப்போடு பார்த்துவிட்டு, இன்னும் நம்பிக்கை வராமல், அகன்றாள்.

*****


"சூப்பர்மேனை நேரில் பார்த்தேன்"

கையில் தகதகக்கும் கதை, ஆஜானுபாகுவான தோற்றம், தீங்குகண்டால் சீற்றம் - இவையே பீமன். "இந்த நாய்மகன் துரியோதனனையும், தம்பி சூரத் துச்சாதனனையும் தொடையைப் பிளந்து உயிர்மாய்ப்பேன்" என்று ஆக்ரோஷமாகச் சபதம் செய்கிறான். அரங்கம் ஒருகணம் மூச்சை நிறுத்தி ஸ்தம்பிக்கிறது. அடுத்தகணம் கூரையிடியக் கரவொலி. பீமனாக நடித்த கிருஷ்ணமூர்த்தி ராமகிருஷ்ணன் ஆடை அணிகலன்களை மாற்றுவதற்காக வருகிறார். பத்துவயதுச் சிறுவனை அழைத்துக்கொண்டு தந்தை ஒருவர் விரைந்து அவரிடம் வந்து "பாருடா, பீமனைப் பாக்கணும்னு சொன்னியே" என்கிறார். பீமனைப் பக்கத்திலிருந்து பார்த்த பையனுக்கு நாவெழவே இல்லை. "அப்பா உங்களைப் பற்றிக் கதைசொல்லியிருக்காங்க" என்கிறான் தயங்கித் தயங்கி.

சற்று தூரம் சென்று தன் நண்பனிடம் "நான் சூப்பர்மேனைப் பக்கத்தில் போய்ப் பார்த்தேனே!" என்று பெருமையடித்துக் கொள்வது காதில் விழுந்தபோது "எனக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது" என்கிறார் முதன்முறையாக மேடை ஏறிய ராம்கி.

*****


முதல் முயற்சியே இத்தனை நன்றாக இருந்தது என்றால், இது போன்ற இனி அமையும் நிகழ்சிகள் இன்னும் அருமையாக இருக்கும். பாரதியின் பாடல் வரிகளையே பாத்திரங்களின் வசனமாக்கி, நல்ல நாடகத்தை மேடைவடிவில் வெளிக்கொணர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ஒரே

ஒரு முறை வசனம் பேசிய துச்சாதனன், விகர்ணன் போன்ற பாத்திரங்களாகட்டும், முழுதும் பேசிய சுயோதனன், சகுனி, யுதிட்டிரன், பாஞ்சாலி ஆகியோராகட்டும், அனைவரும் சிறிது கூடப் பிழையின்றிப் பேசியது பாராட்டுக்குரியது. சகுனியாகத் தெரிவு செய்யப்பட்டவர், அதற்கு கனகச்சிதமான பொருத்தம்! துரியோதனனின் வசன வெளிப்பாடுகள் அருமை. மேடையிலும் மற்றும் திரைக்குப் பின்னால் இருந்தும் இதற்குத் துணை புரிந்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

பா.இராதாகிருஷ்ணன்

மிகச்சிறப்பான காவியம். அமெரிக்காவில் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு இது ஒரு திருப்புமுனை. இங்கு வசிக்கும் நாடு தழுவிய தமிழர் பேரவையில் அரங்கேறவேண்டிய அற்புதக் காவியம் இது.

கடந்த பத்தாண்டுகளில் இவ்வளவு சுவையான கவிதை நாடகத்தைப் பார்த்ததில்லை. மதுரபாரதி, மணிவண்ணன் மற்றும் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

லெ.கண்ணப்பன்.

பல நடிகர்கள் தங்கள் வசனத்தைச் சொல் வதற்காகவே காத்திருந்ததைப் போல இருந்தது. நடிப்பில் இன்னும் முன்னேற்றம் வேண்டும். சகுனியும் துரியோதனனும் மிகச்சிறப்பாகச் செய்தார்கள்.

பாலாஜி ஸ்ரீனிவாசன்

பாகிரதி

© TamilOnline.com