தமிழ்ப் புனைகளத்தில் 'லா.ச.ரா' என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.
''பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்'' என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.
லால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.
'சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்' என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.
சூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.
லாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.
நானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன் இதற்கு எழுத்து எனக்கு வழித்துணை ஒருவனுக்கு அவன் பக்தி ஒருவனுக்கு அவன் ஞானம் ஒருவனுக்கு அவன் குரு அதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை ஒரு சமயம் அது என் விளக்கு ஒரு சமயம் சம்மட்டி ஒரு சமயம் கம்பு ஒரு சமயம் கத்தி ஒரு சமயம் கண்ணாடி
இவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.
லாசராவின் சில படைப்புகள்:
சிறுகதைகள்
ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா
நாவல்கள்
அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா
நினைவுகள் சிந்தாநதி, பாற்கடல்
கட்டுரைகள் முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்
மதுசூதனன் |