மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது!
'இளைய சமுதாயம் பொறுப்பின்றி இருக்கிறது. மேற்கத்திய (அ)நாகரீகத்தின் மிதமிஞ்சிய தாக்கத்தால் சீரழிகிறது; இந்த ரீதியில் போனால் நமது பண்பாடு, கலாசாரம் எல்லாம் அழிந்து விடும்' என்ற கவலைகளுக்கு நான் என்றும் செவிமடுத்ததில்லை. அவ்வாறு யாராவது சொல்லும்போது சும்மா இருந்ததுமில்லை. "சாக்ரடீசின் காலத்தில் இருந்தே இவ்வாறு குரல்கள் எழுந்துள்ளன; இளைய தலைமுறை போகும் போக்கைப் பார்த்தால் உலகம் இன்னும் சில வருடங்களில் அழியும் என்று பல ஆயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் யாராவது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறர்கள்" என்று சற்றுக் கோபமாகவே பதில் சொல்லுவது வழக்கம்.

மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. நமக்கு தெரிந்த உலகம் மாறி இன்னொன்று உருவாகிறது - சிறிது சிறிதாக - incremental evolution? ஒவ்வொரு தலைமுறையும் மாறும்போதும் பழைய தலைமுறைக்குத் தலைவலிதான். சில நல்லவை அழியும்; சில தீயவை அழியும்; புதிய நல்லவை தோன்றும்; புதிய தீயவையும் தோன்றும்! ஒரு வகையில் நாமும் இவ்வாறு நல்லவை அழிவதற்கும், தீயவை புகுதற்கும் பொறுப்பேற்க வேண்டும். இதுவே என் கருத்து.

ஏன் இந்த திடீர் தத்துவம் என்று கேட்கிறீர்களா? இரண்டு கல்லூரிகளில் பேச அழைத்திருந்தார்கள். அப்போது வரவேண்டிய அனைத்து மாணவர்களும் வரவில்லை. வந்தவர்களில் சிலரே கேள்விகள் கேட்டனர். இதைப்பற்றி நான் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை. ஆனால் வேறு சிலர், 'இன்றைய மாணவர்களைப்' பற்றி குறைபட்டனர். நான் எனது கல்லூரி நாட்களை எண்ணினேன். இது போல யாராவது வெளியில் இருந்து பேச வந்தால் அதைப்பற்றி பேசும்போது பயன்படுத்தும் 'அறுவை' போன்ற அடைமொழிகள் நினைவுக்கு வந்தன. இதையே நான் கூறிய போது, கல்லூரி முதல்வர் 'நீங்கள் சொல்வது சரியே! ஆனால் இதை ஒருவரும் நினைவு கூர்வதில்லை. எங்களுக்கும் யாராவது விருந்தினர் வந்தால் இவ்வாறு பேசி பழகிவிட்டது' என்று சிரித்தார்.

நான் சொல்வதைச் செய்! நான் செய்வதைச் செய்யாதே!! என்று அறிவுரை கூறி வரும் நம்மை, இளைய தலைமுறை வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்வார்களா என்ன? எல்லோரும் கணினித்துறையில் சம்பாதிக்கிறார்கள். எனவே உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நீயும்படி என்று கிட்டத்தட்ட எல்லோரும் சொல்லியிருக்கிறோம். இன்று மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை என்று குறைப்பட்டால் எப்படி? அவர்களுக்கு நாம் செய்திருக்கும் பல 'உதவி'களைப் பட்டியலிடப் போனால் பல பக்கங்கள் வேண்டியிருக்கும்; உதாரணத்திற்கு ஒன்று - இந்த வருடம் MBA படிப்பவர்கள் WordStar, Lotus, dBase பற்றி ஒரு பரீட்சை எழுதுகிறார்கள்!

சில காலமாக பலரும் எனக்கு எவ்வாறு தமிழ் ஆர்வம் உண்டானது என்று கேட்டுள்ளனர். சென்ற வாரம் மென்பொருள் துறையில் எனக்குப் புதிதாகப் பழக்கமான ஒருவர் இதையே கேட்டார். (இங்கே என்னைப் பற்றி சில வரிகள்: மென்பொருள் துறையில் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளைக் கழித்துள்ளேன் - பயிற்சியாளனாகவும், மென்பொருள் எழுதுவதிலும் மற்றும் உயர்நிலைப் பொறுப்புகளிலும்). எல்லோருக்கும் சொல்லும் பதிலான, 'எனது தந்தையின் தமிழார்வம் மற்றும் திருச்சி தூய வளனார் கல்லூரியில் படித்தபோது பேராசிரியர் சம்மனசு மற்றும் ஆறுமுகம் ஆகியோரது தாக்கம்' என்ற விளக்கத்தைக் கேட்ட பிறகு அவர் சற்றுப் பேசாமலிருந்து பின்னர் மெதுவாகப் பேச்சு மாறியது. அந்த மௌனம் அப்போது உறைக்கவில்லை; சில நாட்களுக்குப்பிறகு எப்படி ஆர்வம் வந்தது என்பதை விட, ஏன் வந்தது என்று கேட்டதாகத் தோன்றியது!

உண்மையில் சொல்லப்போனால், தொழில்முறையாக எனக்குப் பழக்கமான பலர் நான் தமிழ் பேசுவதற்காகப் பாராட்டுகிறார்கள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவர் தின வாழ்வில் கொச்சை அல்லாத தமிழ் பேசுவதும் எழுதுவதும் பாராட்டத்தக்கவையாக மாறிவிட்டது, வருந்த வேண்டிய ஒரு நிலையாகத்தான் தோன்றுகிறது.

மீண்டும் சந்திப்போம்.

உங்கள் ஆதரவை நாடும்...
பி.அசோகன்
பிப்ரவரி 2002

© TamilOnline.com