SIFA வழங்கிய இசை விருந்து
''தாமரை விளக்கம் தாங்க 35
கொண்டல்கள் முழவின் ஓங்க
குவளை கண் விழித்து நோக்க
தெண்டிரை எழினி காட்ட
தேம்பிழி.... இனிது பாட''

என்னும் கம்பன் வாக்கைப் போல் பாலோ ஆல்டா கபர்லி அரங்கம் இருந்தது, பிப்ரவரி 17, 2002 மாலை 4 மணி அளவில் திரு. நெய்வேலி சந்தான கோபாலனின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிக்காக கபர்லி தியேட்டர் நிரம்பி இருந்தது.

வெளியே பலர் ஏமாற்றத்துடன் (இடம் இல்லாததால்) வீட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம். உள்ளே அரங்கச் சுவற்றின் மீது சாய்ந்தார் போல் நின்று கொண்டே அவரது கச்சேரியை ரசித்தவர்களில் அடியேனும் ஒருவன்.

சந்தான கோபாலன் அன்று சீ·பா (SIFA) வில் வழங்கிய இசை விருந்து, ஒரு தெய்வீகமான நம்மை தியான உலகத்தில் வசீகரப் படுத்திய ஒரு அருமையான கச்சேரி. மனோதர்ம சங்கீதம் என்பது அவர் பொழிந்த இசை மழை, ஆலாபனைகளையும், ஸ்வரங்களையும் அழகாக ஆரமாக கோர்த்து, அடுக்கிய விதத்தில் தெரிந்தது. இதற்கு ஒத்துழைப்பாக நம்ம ஊர் ஹெம்மீகே ஸ்ரீவத்ஸன், வயலினில், நாராயணன் நடராஜன் மிருதங்கத்திலும், ராம்நாத் ராம்தாஸ் அவர்கள் கஞ்சீராவிலும் பக்க வாத்தியம் வாசித்தார்கள்.

கச்சேரி சகான வர்ணத்தில் (ஹரிகாம்போஜி 28ம் மேளத்திலிருந்து பிறந்த ராகம்) துவங்கி மூணரை மணி நேரம் இடைவேளை இல்லாமல் நடந்தது. அதையடுத்து ''மீரு சமான'' என்ற மாயாமாள கவுளை ராகத்தில், தியாக ராஜா க்ருதியை ஆதி தாளத்தில் பாடினார். இந்த ராகம் கச்சேரியின் முன்பகுதியில் பாடப்படுகிற ராகம். இந்தப்பாட்டு அவருடைய பக்தியையும், சங்கீதத்தின் மீதும் சந்தான கோபாலனுக்கு அவர் குருநாதர்கள் மேல் இருந்த மதிப்பையும், பக்தியையும் வெளிப்படுத்தியது. 'காலமுன சோபில்லு' என்ற வரியின் நிரவல் (பலவிதமாக ஒரே வரியை அழகாக மாலை மாலையாக கோற்று தருவது) மிக நன்றாக அமைந்தது. இந்த மாயா மாளவ கவுளை ராகம், ஒரு காலை ராகமாக இருந்தபோதிலும், கச்சேரிக்கு முன்பக்கம் பாடப்பட்டதால் மிக சிறப்பாக அமைந்தது. இதன் பிறகு 'தெரிசி ராம' என்ற பூர்ண சந்திரிகா ராகத்தில் ஒரு சிறிய பாட்டு; மாகேல ரா - ரவிச்சந்திராவில் ஒரு சிறிய பாட்டு.

பந்து வராளி (காமவர்த்தினி) ராகம் - அதாவது மாயாமளவ கவுளையின் மாவை (M1) பெரிய மாவாக்கினால் (M2) கிடைக்கும் காமவர்த்தினி மேளகர்த்தா ராகம் - இந்த ராகத்தில் சந்தான கோபாலன் 'ரகுவர' என்ற தியாகராஜ கீர்த்தனையை மிக அழகாகப் பாடினார். இந்த ராகம், ஆலாபனை செய்ய அந்த அளவுக்கு எடுபடாததாக இருந்தாலும், அரியக்குடி போன்ற மேதைகள் இந்த ராகத்தை பிரபலப்படுத்தியுள்ளார்கள்.

சந்தானகோபாலன் ரீதி கெளளை ராகத்தை அழகாக கையாண்டார். ரீதி கெளளை ஒரு பக்தியைத் தூண்டக் கூடிய கருணை ரச ராகம் என்று கூறலாம். இது 22வது மேளகர்த்தா கரஹரப்பிரியாவிலிருந்து பிறந்த அழகான வக்ர ராகம். இதன் ஏற்றமும் இறக்கமும் உள்ள அதிர்வலைகள் ஒரே நேராக இல்லாமல், அதாவது, ஸகரிகமநிதமநிநிஸ் (ஏற்றம்), ஸ்நிசமகமயமகரிஸ (இறக்கம்), இருப்பதால் இதனை வக்ர ராகம் என்று அழைக்கிறோம். க ம நீ இந்த ராகத்தின் உயிர் ஸ்வரங்கள். இதனுடைய நீ ஸ்வரம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

இந்த ராகம் கருணை ரசத்தைத் தருவதால் இதில் பல பாடல்கள் மதுரை மணியின் பாபநாசம் சிவன் தத்வமரிய தரமாஸ்வாதி திருநாள் பரிபாலயமாம் இப்படி பல கீர்த்தனைகளிலிருந்து, ஏ.ஆர். ரகுமானின், ''அழகான ராட்சசியே'' என்ற பாடல் முதல்வன் படத்தில் வரை இந்த ராகத்தைத்தான் கருணை ரசத்தை வரவழைக்க பயன்படுத்தி உள்ளார்கள்.

ரீதி கெளளை ராகத்தில் சுமார் 40 கீர்த்தனைகள் இருப்பதிலிருந்தும், தியாக ராஜ ஸ்வாமிகளே சுமார் 12 கீர்த்தனைகள் இயற்றியிருப்பதிலிருந்தும் இந்த ராகத்தின் பக்தி மார்க்கத்தையும், கருணை ரசத்தையும் அறிந்து கொள்ளலாம். சந்தான கோபாலன் அவர்கள், ''ஜனனி நின்னு வினா'' என்ற சுப்பராய சாஸ்திரிகளின் கீர்த்தனையை பக்தி ததும்ப வழங்கினார். கண்ணை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் இவர் பாடிய ரீதி கெளளை ராகத்தை கேட்டு தியான உலகத்திற்கு சென்றுவிட்டேன். சந்தான கோபாலன், சுப்பராய சாஸ்திரிகளின் கீர்த்தனையை கையாண்ட விதம் பக்தியையும், கருணை ரசத்தையும் பிழிந்து சாராகக் கொடுத்தது. இதுதான் நம் கர்நாடக சங்கீதத்தின் தனிச் சிறப்பு. அதாவது ஸ்வரங்களை அதன் ஒலி அலைகளில் (frequency) மட்டும் பாடினால் அது ஒரு மேற்கத்திய சங்கீதம் போல் அமையும். இரண்டு ஸ்வரங்களுக்கு நடுவே உள்ள துல்லிய ஒலி அலைகளை (microtones) கொண்டு, அழகாக அசைத்து (shakes) அலங்கரித்து பாவத்துடன் (grace) நமக்கு கொடுப்பதே, கமகங்கள் நிறைந்த மனோதர்ம கர்நாடக சங்கீதம் சந்தான கோபாலன் மிக அழகாக ஸ்வரங்களையும், கமகங்களையும் கோர்த்து ரீதி கெளளையில் கருணை மழை பெய்து நம்மை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

சந்தான கோபாலன் எடுத்துக் கொண்டு ப்ரதான ராகம் கரஹரப்பிரியா. அதாவது ஹரப்பிரியா என்றால் சிவன் (ஹர) விரும்பிக் கேட்கும் ராகம். கடபயதி சாமியத்தின்படி கர என்ற சொல் 22வது எண்ணை குறிக்க முன்னால் சேர்ந்து இது கரஹரப்பிரியாவாக 22வது மேளகர்தா ராகமாக மாறியது. இதில் க வும், நீயும் சிறிய ஸ்வரங்கள் (அதாவது சாதாரண காந்தாரம், கய்சிகி நிஷாதம்). ஆகவே இதன் ஸ்வரங்கள் ஒரு 'Symmetrical tetrachords' என்ற இடைவெளியில் அமைந்துள்ளன. இந்த ராகத்தின் எல்லா ஸ்வரங்களும் கமகத்திற்கு இடம் தருவதால் பக்தி ரசத்தையும் பரவசத்தையும் ஊட்டக் கூடிய ராகம், இந்த ராகத்திலிருந்து பல ராகங்கள் பிறந்துள்ளன. நி, க, நி இதனுடைய சாய ஸ்வரங்கள். பிந்த்யஹத கமகம் இந்த ராகத்தை அலங்கரிக்கிறது. தியாகராஜ ஸ்வாமிகளால்தான் இந்த ராகம் சிறப்படைந்தது என்று சொல்லலாம். இதே கரஹரப்பிரியா ராகத்தின் ஒலி அலைகள், வடக்கிந்திய ஹிந்துஸ்தானி சங்கீதத்தில், 'காபி' என்று அழைக்கப்பட்டு பிரபலமாக இருந்தாலும், கர்நாடக சங்கீதத்தின் கரஹரப் பிரியா வடநாட்டு காபிக்கும் பல வித்தியாசங்கள். ஏனென்றால் கர்நாடக சங்கீதத்தின் கமகங்களே இதற்கு காரணம். இந்த ராகத்தின் ஒவ்வொரு ஸ்வரங்களும் அழகான கமகங்களால் துல்லிய ஒலியலைகளால் (Microfrequency) அலங்கரிக்கப்பட்டு கரஹரப் பிரியாவாக மின்னுகிறது. இந்த ஒரு ராகமே கர்நாடக சங்கீதத்திற்கும் மற்ற சங்கீதத்திற்கும் உள்ள வித்தியாசத்திற்கு சான்று. இதில் 'மாதவி பொன் மயிலால் தோகை விரித்தாள்'' என்ற பழைய இருமலர்கள் சினிமாப் பாட்டிலிருந்து இளைய ராஜாவின் பாடல்கள் உட்பட பல பாடல்கள்.

சந்தான கோபாலன் அவர்கள் இந்த ராகத்தில் ஆலாபனையைத் துவக்கினார். அழகான சரம் சரமாக ஸ்வரங்களையும், அதன் துல்லிய ஒலி அலைகளும், அடங்கிய கமகங்களை மாலையாகக் கோர்த்து ஒவ்வொன்றாக நம் மீது வீசினார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ஒரு 55 வயது கொண்ட சங்கீத அனுபவத்தில் ஊறிப் போன அனுபவம் மிகுந்த ஒரு பெரிய வித்வான் போல் இருந்தது. ஆனால் சந்தான கோபாலன் 1963 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் என்பது மிகவும் குறிப்பிட வேண்டும். செம்மங்குடி ஸ்ரீநீவாச ஐயர் அவர் களுக்கே உரிய இந்த கரஹரப் பிரியாவில், சந்தான கோபாலன் (சீ·பாவில் பொழிந்த) இசை மழை அபாரம். ரசிகர்கள் ஆஹா, ஆஹா என்று ரசித்தார் கள். அவரும் சீ·பாவில்தான் இந்த மாதிரி ஆலாபனை செய்ய முடிகிறது என்று பெருமைப்ப ட்டார். இடையே ஒரு குழந்தையின் மழலை ஓசை கேட்க, சந்தான கோபாலன், 'இதுவும் ஆலாபனை தான்' என்று வேடிக்கையாக சொன்னது 'குழலினிது என்பார், யாழினிது என்பார் தன் மக்கள் மழலைச் சொல் கேளார்' என்பதை நினைவு படுத்தியது. குழந்தையின் மழலையிலே கரஹரப்பிரியாவைக் காணும் திரு சந்தான கோபாலன், இன்னும் பல பக்திப் பாடல்களைப் (ராமா நீ மே, துணை புரிந்தருள், வங்கக் கடல், கிருஷ்ணா நீ பேகனே...) பாடி ரசிகர்களை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

நம்ம ஊர் ஹெம்மிகே ஸ்ரீவத்சன் அபூர்வமாக வயலின் வாசித்தார். சந்தான கோபாலனையே வியப்பில் ஆழ்த்தினார். ஸ்ரீவத்சன் பெங்களூரில் பிறந்தாலும், வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவில் தான். அதுவும் பெரும்பாலும், நம் வளைகுடா பகுதியில்தான். ஆகவே அவர் நம்ம ஊர் சொத்து. சந்தான கோபாலன் சொன்னது போல, வயலினில் சாதாரண ஒலி அலைகள் கொண்ட கமகமில்லாத ஸ்வரங்களையும், ஏன் வடக்கிந்திய சங்கிதத்தில் உள்ள ஜாரு (Glide) கூட எழுப்பவிடலாம். ஆனால் ஸ்ரீவத்ஸன் கையாண்ட அலங்காரமான கமகங்கள், கரஹரப்பிரியா ராகத்தில் அவர் செய்த ஆலாபனை எல்லாரையும் வியக்க வைத்தது. ரசிகர்களின் கைதட்டு மழையால் நனைந்தார்.

நாராயணன் அவர்கள் மிருதங்கத்திலும், ராமதாஸ் அவர்கள் கஞ்சீராவிலும், சந்தான கோபாலனுக்கு தாள நாடியாக அமைந்தார்கள். சந்தான கோபாலன் சொன்னது போல, தாளமில்லாத சங்கீதம், உயிரில்லாத 'அஞ்சலி சங்கீதம்' போல இருக்கும். ஆகவே நாராயணனும், ராமதாஸ் அவர்களும், இந்த கச்சேரிக்கு தாள உயிர் கொடுத்தனர்.

கரஹரப்பிரியா இறுதியில் இவர்கள் இருவரும் செய்த தனி ஆவர்த்தனம் மிகச் சிறப்பாக அமைந்தது. மிருதங்கமும், கஞ்சீராவும் மாற்றி மாற்றி, நேர இடைவேளையை குறைத்து, கணித வடிவத்தில் அமைந்த பிரமீட் நன்றாக அமைந்தது.

இப்போது தென்னிந்தியாவிலேயே கர்நாடக சங்கீதத்திற்கு கூட்டம் குறைந்துவிட்டது. அப்படி இருக்க நம்ம ஊர் வளைகுடா ரசிகர்கள் சாரை சாரையாக வந்து, அரங்கத்தை நிரப்பியது - சந்தான கோபாலன் போன்ற இசை வல்லுனர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. சீ·பா தன் 22வது ஆண்டை, 22வது மேளகர்த்தாவில் (கரஹரப்பிரியா) மிகச் சிறப்பாக, சந்தான கோபாலன் மூலமாக துவங்கியுள்ளது. சீ·பாவின் கர்நாடக சங்கீதத்திற்கு ஆற்றும் பணியை நம் ரசிகர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஊக்குவிப்பார்கள் என்பது திண்ணம்.

வாழ்க சீ·பாவின் பணி!

© TamilOnline.com