பிப்ரவரி 16ஆம் தேதி வெஸ்ட் வேலி கல்லூரி அரங்கெத்தில் ஒன்பது வயதே நிரம்பிய செல்வி ப்ரியா பானர்ஜியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தைக் கண்ட பார்வையாளர்கள், எப்படி இந்த குறுகிய ஐந்து வருட காலத்தில் இப்படி ஒரு சிறந்த நடன கலைஞராக மிளிர முடிந்தது என்று திகைப்பும் ஆர்வமும் ஒரு சேர எழும்ப அமர்ந்திருந்தார்கள்.
அதற்குக் காரணம் ப்ரியாவின் திறமை மட்டுமன்றி அவரது பெற்றோர்கள் ரீனா மற்றும் அனிருத் பானர்ஜி தங்கள் குழந்தைகளுக்குத்தரும் நல்ல ஊக்கமும் தான். ஐந்து வருடங்களாக சுத்தமான தஞ்சாவூர் பாணியில் குரு ஸ்ரீமதி விஷால் ரமணியிடம் நடனம் பயின்று வரும் ப்ரியா, வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றுள்ளார். பரதத்துடன் ஒடிசியும் பயின்று வரும் இவரது பொழுது போக்கு ஒவியம் வரைவது, புத்தகங்கள் படிப்பது மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது போன்றவை.
ப்ரியாவின் சகோதரர் அர்ஜுன் அவர்கள் மிக அழகான உச்சரிப்போடு தொகுத்து வழங்க நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது. முதலாவதாக அமிர்தவர் ஷிணி ராகத்தில் அமைந்த மல்லாரியுடன் தொடங் கினார். அதனை தொடர்ந்தது ஸ்ரீ நாராயண தீர்த்தர் இயற்றிய 'ஜெயஜெய ஸ்வாமின்' என்ற கணேச ஸ்துதி. அடுத்ததாக கமாஸ் ராகத்தில் அமைந்த 'ஸ்வர ஜதி'.மேடையேறி அத்தனை பேர் முன்பு பளீர் வெளிச்சத்தில் புன்னகை குன்றாமல் ஆடிய அவரது ஒவ்வொரு நடன அசைவுகளும் வயதுக்கு அப்பாற்பட்ட தெளிவுடனும், நளினத்துடனும் இருந்தன.
ப்ரியா அவர் ஆடப்போகும் சுத்ததன்யாசி ராகத்தில் அமைந்த வர்ணத்திற்கு மிக அழகாக விளக்கவுரை அளித்தார். அவரது நாட்டியத்திற்கு சிகரம் வைத்தார்ப் போன்று அமைந்தது அந்த வர்ணம். அவர் அசைந் தாடும் மயிலின் மேல் முருகன் வருவதையும் சிவ பெருமானின் காதில் ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைப்பதையும் அபிநயிக்கும் போதும் முருக பெருமானே நேரில் வந்துவிட்டது போல் மெய் சிலிர்க்க வைத்தது. மிகச்சிரமமான மிஸ்ரசாபு தாளத்தில் அமைந்த நீளமான ஜதிகளையும், சிக்கலான தீர்மானங்களையும் அவர் ஒரு கைதேர்ந்த நடனக்கலைஞரின் பக்குவத்துடன் கையாண்ட விதம் அருமை. இதில் வள்ளி திருமணம் மற்றும் அறுபடை வீடுகளில் ஒன்றான ஸ்வாமிமலை முருகனது புராணக்கதைகளை விரிவாக அபிநயம் பிடித்தார்.
நிகழ்ச்சியின் அடுத்த பாதியில் 'சந்திர சூட சிவ சங்கரா' என்ற புரந்தரதாசர் கீர்த்தனையில் பிறை நிலவை அணிந்த சிவபெருமானையும் மற்றும் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் 'ஸ்வாகதம் கிருஷ்ணா'வில் மாயக்கண்ணனையும் வர்ணித்தார். தனது முத்திரை மற்றும் முகபாவங்கள், அங்க அசைவுகள் மூலம் அவரது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மிகநேர்த்தியாக அவரால் வெளிக்கொணர முடிந்தது. கடைசியாக வங்காள மொழியில் அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண சைதன்யர் பற்றிய பாடலுக்கு அவர் ஆடியது மிகவும் உருக்கமாக இருந்தது.
ப்ரியாவுக்குக்கிடைத்த பாராட்டுக்கள் குரு விஷால் ரமணி அவருக்கு நடனக்கலையை நன்கு பயிற்று வித்ததற்கு கிடைத்த பரிசாகும். அவர் ஒவ்வொரு பாடலுக்கும் மிகுந்த கவனம் செலுத்தி நாட்டியம் அமைத்திருந்தார்கள். அவர்களே நட்டுவாங்கமும் சிறப்பாக செய்தார்கள். சாந்தி ஸ்ரீராம், கீதா ஐயர் ஸ்ருதிலயத்துடன் இனிமையாக இணைந்து பாடி பிரமாதப்படுத்தினார்கள். சுபா, ரஞ்சனி, ராஜாவின் பக்கவாத்தியமும் மற்றும் ராம்தாஸின் மிருதங்க ஒலியும் ப்ரியாவின் ஜதியுடனும் நடையுடனும் ஒன்றரக்கலந்தது. இது போன்ற புதிய இசை குழுவினர்களை அறிமுகப்படுத்தும் விஷால் ரமணியின் முயற்சி பாரட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஸ்ரீகிருபா நடனப்பள்ளித் தோட்டத்தில் மலர்ந்த ப்ரியா எனும் ரோஜா மலருக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. அந்த மலரின் நடனப்பயணம் இனிதே தொடர நல்வாழ்த்துக்கள்.
ரஞ்சனி ஸ்ரீகாந்த் |