பாரதி கலாலயாவின் ஒரு நாள் நிகழ்ச்சி!
பாரதி கலாலயா மற்றும் ஹபீப் கான் இசைப்பள்ளி இணைந்து மார்ச் 9, 2002 சனிக்கிழமை அன்று "தபஸ்யா" என்ற நிகழ்ச்சியை ஸன்டா க்ளாரா கன்வென்ஷ்ன் சென்டரில் வழங்கினார்கள்.

பாரதி கலாலயா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அந்நாள் ஒரு மறக்கமுடியாத நாளாக அமைந்தது. அனைத்து மாணவர்களும் பாரதி கலாலயாவில் கடந்த ஐந்தாண்டுகளாகப் பல்வேறு துறைகளில் பயின்று வருகின்றார்கள். பல்வேறு துறைகளில் பயிலும் மாணவ மாணவிகளைக் கொண்டு ஒரு நிகழ்ச்சியை அளிப்பதென்பது மலைப்பானதாகும். பங்கு பெற்ற அனைவரின் திறமைகளை வெளிக் கொணர்ந்த ஆசிரியர்களின் முயற்சி பாராட்டத் தக்கது. இந்த சிறந்த நிகழ்ச்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டுமுயற்சியையும் கடின உழைப்பினையும் வெளிப்படுத்தியது.

பாரதி கலாலயாவின் இலட்சியமான "Touch the future through traditional arts; the proven method from the past" என்பதனை ஒரு பிரம்மாண்டமான முறையில் நிகழ்ச்சி முழுவதும் இதில் பங்குபெற்றவர்கள் வெளிப் படுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் "குரு ப்ரம்மா" என்ற ஸ்லோகத்தை பாடி பாரதி கலாலயா மாணவர்கள் தத்தம் ஆசான்களின் ஆசியைப் பெற்றார்கள். இதனையடுத்து பரதம் பயிலும் மாணவர்களின் நாட்டை ராகத்தில் அமைந்த "புஷ்பாஞ்சலி" என்ற நிகழ்ச்சி வினை தீர்க்கும் நாயகன் விநாயகரைப் போற்றி நடைபெற்றது.

அடுத்து வந்த கிருஷ்ணாவதாரம் நாட்டியமும் மாணவர்களின் நளினத்தையும் உணர்ச்சி களையும் பிரதிபலித்தன. இவ்விரு நிகழ்ச்சி களுக்கும் பரதம் பயிற்றுனர் திருமதி வித்யா வெங்கடேசன் நடன ஆசிரியராக இருந்தார்.

பாரதி கலாலயாவின் இயக்குனர் அனுராதா சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்திய பின், சிறப்பு விருந்தினர் டாக்டர் போர்டே அவர்களை பேச அழைத்தார்கள். கடந்த ஐந்தாண்டுகளாக இந்திய இசை மற்றும் நடனத்தை வளைகுடா பகுதியில் தழைத்தோங்கச் செய்யும் பாரதி கலாலயாவின் முயற்சியை டாக்டர் போர்டே வெகுவாகப் பாராட்டினார்.

ஹம்ஸத்வனி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'வாதாபி கணபதிம் பஜே' என்ற தீட்சதர் க்ருதியுடன் பாரதி கலாலயாவின் கர்னாடக இசை மாணவர்கள் அடுத்த நிகழ்ச்சியை வழங்கினர். கர்னாடக இசை வாய்ப்பாட்டு பயிற்சியாளர் டாக்டர் பத்மா ராஜகோபால் இதனை நடத்தினார். பக்க வாத்தியங்களை பாரதி கலாலயா ஆசிரியர்கள் திருமதி மைதிலி ராஜப்பன், திருமதி பார்வதி சங்கர் - வயலின், ராஜலஷ்மி ஐயர் - வீணை மற்றும் அவர்களது மாணவர்களும் இசைத்தனர். ராக ஆலாபனை, தானம், நிரவல் மற்றும் ஸ்வரத்துடன் இந்நிகழ்ச்சி அமைந்து. முழுமை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயிற்சியினை துவக்கம் முதல் இறுதி வரை ஒரே கோர்வையாக இந்நிகழ்ச்சி அமைந்து பறைச்சாற்றியது.

ஹபீப் கான் இசைப்பள்ளி மற்றும் பாரதி கலாலயா மாணவர்கள் மல்கௌன்ஸ் ராகம் தீன் தாளத்தில் ஹிந்துஸ்தானி இசை வழங்கினர். இந்த சீரிய படைப்பினை பண்டிட் ஹபீப் கான் இயற்றி வழங்கினார். இந்த மாணவர்கள் அவருடன் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகின்றனர். கடினமான மூன்றாவது காலத்தில் அமைந்த பாடலை ஸ்ருதி மற்றும் தாளம் மாறாமல் மாணவர்கள் பாடியது ஓர் சாதனை யாகும்.

இறுதி நிகழ்ச்சியை பாரதி கலாலய KeyBoard மாணவர்கள் 911 பாதிப்படைந்தவர்களின் நினைவாக KeyBoard பயிற்சியாளர் ப்ரவீன் சத்தா இயற்றிய சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த படைப்பினை அளித்தனர்.

நிகழ்ச்சி சிறப்பாக அமையக் காரணமான அனைத்து ஆசிரியர்களையும் ஒருசேர மேடை யில் கண்டபோது பிரமிப்பாக இருந்தது.

இடைவேளைக்குப்பின் பண்டிட் ஹபீப் கானின் மஹா சிதார் இசை நடைப்பெற்றது. அவருக்கு பண்டிட் ஸ்வபன் செளத்ரி தபேலா வாசித்தார்.

© TamilOnline.com