ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி...
தமிழகம் இதுவரை எத்தனையோ இடைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால் ஆண்டி பட்டி சந்தித்தது போன்ற முக்கியத்துவம்; தேர்தல் பரபரப்பு இதுவரை இருந்தது இல்லை. எம்எல்ஏ தெரிவு மட்டுமல்லாமல்; தமிழக முதல்வராகவும் வரும் ஜெயலலிதாவை தெரிவு செய்ய ஆண்டிபட்டி காத்திருந்தது.

முன்னர் ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலகும்பொழுது, ''நான் தேர்தலில் போட்டி யிட்டு தமிழக மக்களின் ஆதரவோடு மீண்டும் முதல்-அமைச்சர் ஆவேன்'' என்று குறிப்பிட்டார்.

பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போல் ஜெயலலிதா 41,201 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதுவரை தற்காலிக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை ஆளுநரிடம் கொடுத்து விட்டார். ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை மீண்டும் பதவியேற்கிறது. முந்தைய அமைச்சரவையில் இருந்து புதிய அமைச்சரவையில் பல மாற்றங்கள் நிகழு மென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குகள் விவரம்
மொத்த வாக்காளர்கள் - 2,08,214
பதிவானவை - 1,34,744
செல்லுபடியானவை - 1,34,734
செல்லாதவை - 10
ஜெயலலிதா (அதிமுக) - 78437 58%
வைகை சேகர் (திமுக) - 37,236 27%
வி.ஜெயச்சந்திரன்(மதிமுக) - 8,421 6%
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) - 5,125 3%
சுயேட்சைகள் (மொத்தம் 20) - 5,514 4%

ஆண்டிபட்டி தொகுதியில் இதுவரை நடந் துள்ள 11 தேர்தல்களில் இந்தத் தேர்தலில் மட்டும்தான் அதிகபட்சமாக 20 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.

ஆண்டிபட்டித் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வற்புறுத்தி வந்தன. ஆனால் எப்படியும் தேர்தல் நடைபெறுமென ஆணையம் அறிவித்தது. தேர்தலும் சுமுகமாக நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் தொடர்பாக ஆரம்பம் முதல் திமுக குற்றம்சாட்டி வந்தது. தற்போது கூட ஆண்டிபட்டித் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் அலட்சியம், மாறுபாடான நிலை ஆகியவை பற்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஆக ஜெயலலிதாவின் வெற்றி தேர்தல் ஆணையத்தின் பாரபட்ச அணுகுமுறையினால் ஏற்பட்டது போன்ற ஓர் தோற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றார். எவ்வாறாயினும் ஜெயலலிதா வின் வெற்றியை திமுகவால் ஜீரணிக்க முடியாமல்தான் உள்ளது.

நடைமுறை அரசியல் மக்கள் நலன், மக்கள் பிரச்சனைகள் எனும் நிலையில் இருந்து கருணாநிதி x ஜெயலலிதா என்று தனிநபர் நிலைப்பட்டு பார்க்கும் குறுகிய அரசியலாக வளர்ந்துள்ளது. இதனால்தான் ஆண்டிபட்டித் தேர்தல் வெற்றியை திமுக தலைவர் தனக் கேற்பட்டுள்ள நெருக்கடி சார்ந்துதான் புரிந்து கொள்கிறார். ஜெயலலிதா இதே மனேநிலை யில்தான் தனக்கான வெற்றியைப் பார்க்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் ஒருகட்சிக்கு அமோக வெற்றி அளித்து அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் வாக்காளர்கள், சில மாதங்களில் ஒரு தொகுதியிலோ அல்லது சில தொகுதியிலோ இடைத்தேர்தல் நடந்தால் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி ஈட்டித் தருவார்கள்.

1967 தேர்தலில் திமுக முதன்முதலாக ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் தோற்றது. சில மாதங்களுக்குப் பிறகு நாகர்கோயில் நாடாளு மன்ற தொகுதியில் ஒரு இடைத்தேர்தல் வந்தது. ஆளுங்கட்சியான திமுக ராஜாஜியின் சுதந்தி ராக் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் மத்தியாஸை ஆதரித்தது. காங்கிரஸ் சார்பில் காமராஜர் போட்டியிட்டார். அந்த தேர்தலில் காமராஜருக்கே மகத்தான வெற்றி.

அதே 1967ம் ஆண்டில் சட்டமன்ற இடைத் தேர்தல் திருமங்கலம் தொகுதியில் நடந்தது. அந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட என்.எஸ்.வி. சித்தனையே மக்கள் வெற்றி பெறச் செய்தனர்.

1971ல் நடைபெற்ற சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களைப் பெற்று வென்றது. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து விலகி அதிமுகவை உருவாக்கினார். இந்நிலையில் 1973ல் திண்டுக்கல் நாடாளு மன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் கட்சிக்கே மக்கள் ஆதரவு கொடுத்தனர்.

இதன்பிறகு கோவை நாடாளுமன்றத் தொகு திக்கும் கோவை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குமான இடைத்தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டன. அந்தத் தேர்தலிலும் ஆளுங்கட்சியான திமுக தோற்றது. நாடாளு மன்றத்துக்கு பார்வதி குமாரமங்கலமும் (கம்யூனிஸ்ட் கட்சி), சட்டமன்றத்துக்கு அரங்க நாயகமும் (அதிமுக) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1977, 1980 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றது. எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ஒரே சமயத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அண்ணாநகர், மயிலாடுதுறை தொகு திகளில் திமுக வெற்றியீட்டியது.

1989 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சில மாதங்களுக்குள் ஒரே சமயத்தில் இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியே இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

1991 சம்மன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. சில மாதங்களுக்குள் எழும்பூர் துறைமுகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் திமுகவே வெற்றி பெற்றது.

1996ல் மீண்டும் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2001 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

முந்தைய இடைத்தேர்தல்கள் போல் ஆண்டி பட்டி அமையவில்லை.

தமிழகம் தற்காலிக முதல்வர் என்ற நிலையை மாற்றி நிரந்த முதல்வரை கொண்டு வந்து விட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி தேசிய அரசியலிலும் திருப்பங்களை ஏற்படுத்தி னாலும் ஆச்சரியப்பட முடியாது.

துரைமடன்

© TamilOnline.com