இன்னொரு இதிகாசம் - A Beautiful Mind
A Beautiful Mind

இரண்டாம் உலகப்போர் முடிந்த கையோடு விஞ்ஞானம், பொருளா தாரம், மற்றும் தொழிற் புரட்சிகளில் அமெரிக்கா உலகம் வியக்குமளவுக்கு முன்னேறிக் கொண்டிருந்த நாட்கள் அவை.

ஹார்வர்ட், MIT போன்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களுக்கு இணையான பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம்.

கணிதத்தில் இந்த யுகத்தின் இணை யற்ற விஞ்ஞானியான பேராசிரியர் ஐன்ஸ்டீனின் அறை.

இருபதாம் நூற்றாண்டில் கணிதம் மட்டுமில்லாது வங்கிகள், பங்குச் சந்தைகள் (Stock Market) என்று வரைமுறை யில்லாமல் பொருளாதாரத் துறையில் தற்காலத் தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய "குவாண் டம் தியரி, கேம் தியரி (Game Theory)" உருவாகிக் கொண்டிருந்த நேரம் அது.

மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் எங்கோ அட்ரஸே இல்லாத ஒரு கிராமத்திலிருந்து கணிதத்தில் முதுகலை பயிலவந்திருக்கும் மாணவன் ஜான் நாஷ், ஐன்ஸ்டீனின் அறைக்குள் எந்த விதமான பயமுமின்றி உள்ளே நுழைந்து ஐன்ஸ்டீனைப் பார்த்துத் துணிவோடு கேட் கிறான்... "V power zero, K-dimensional க்குத் தானாவே உயர்ந்துக்கிறது கூடத் தெரியாம .... கணக்காய்யா போட்டிருக்க கணக்கு..."

இலக்கங்களை, குறியீடுகளை, எண்களைக் கண்களுக்குள்ளேயே கண்டுகொண்டு, கண் ணாமூச்சி ஆடி, அவற்றை களைப்படையச் செய்து, மூளைக்குள் அவற்றை இழுத்துச் சென்று, கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து ... மூவாயிரம் முடிச்சுகளின் முனையைக் கண்டு பிடித்து, மூச்சு விட்டு இழுப்பதற்குள் சூத்திரங் களின் முடிவினைக் காணுகின்ற இந்த அசாத்திய ஞானம்... நியூட்டனுக்கு உண்டு, ஐன்ஸ்டீனுக்கு உண்டு, The man who knew infinity என்று போற்றப் பெற்ற கணித மேதை ஸ்ரீநிவாசராமானுஜத்துக்குக்கு கனிசமாய் உண்டு. ஜான் நாஷ¤க்கு இந்த ஞானம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. அந்த ஞானத் திமிர் கொடுத்த துணிச்சலில் ஐன்ஸ்டீனுக்கே சவால் விடுவதோடு நின்றுவிடாமல் நாஷ் சமனம் (Nash Equilibrium)" என்ற கணிதக் கோட் பாட்டை உலகம் முழுமையும் வியக்கும் வகை யில் கண்டறிகிறான்.

இது நடந்தது 1948ல்.

கடந்த அரை நூற்றாண்டுகளில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் வளாகத்திலுள்ள புல் அத்தனையும் டாக்டர் நாஷின் பாதங்களை முத்தமிட்டதுண்டு. அதனால் மோட்சமுற்றதாக அவை எண்ணியதுமுண்டு. பிரின்ஸ்டன் செங்கல் அத்தனைக்கும் அவன் கிறுக்கிச் செல்லும் கணிதக் குறிகளை தம் மேல் வாங்கிக் கொண்ட பெருமையுண்டு.

ஆனால்......

இம்மா பெரும் கணித மேதையின் முப்பது வயது தொடங்கி பல ஆண்டுகளாய் அவனைப் புரட்டிப் புரட்டி எடுத்த "ஸ்கீஸே'·ப்ரீனியா" என்ற மனநோயின் கொடுமையையும், அதிலி ருந்து அவன் மீண்டு இன்று ஆழமிகு கடல் போல் வாழ்ந்து கொண்டு, பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தினை நாளது தேதி வரை சுற்றிச் சுற்றி வருவதையும்... அந்தப் புல்லும் கல்லும் விம்மி விம்மி அழுது வாய் விட்டுச் சொல்ல முடியாதிரு ஊமை கண்ட கனவை........

செல்லுலாய்டில் சொல்லுவதே "A BEAUTIFUL MIND" என்ற திரைக் காப்பியம்.

காப்பியம் என்றா சொன்னேன்?

ஸில்வியா நாசரின் மூலக்கதையென்னும் பட்டு நூலைக் கொண்டு கவனமாய் இழை பிரித்து ரான் ஹாவர்டு இயக்கத்தில் நெய்யப் பட்டி ருக்கும் ஓர் இணையற்ற இதிகாசப் பேழை. இந்த இதிகாசத்தில் கற்பனை கடுகளவும் கிடையாது. இந்த இதிகாச நாயகன் இன்னமும் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சுற்றிய வீதி எங்கும் பித்தனாகவும் பிறை சூடாப் பெருமாளா கவும் சுற்றி வருவது நிதர்சனமான உண்மை.

காதல்,... கற்பனை வற்றிப் போகும் அளவுக்குக் காதலைப் பற்றி சொன்ன பின் மீண்டும் என்ன சொல்லலாம்? ஓ...காதல்...'ஆவாரம் பூவே' என்று கத்திக் கொ'ண்டே தாஜ்மஹாலுக்கு அருகே சம்பந்தமே இல்லாமல் தென்னை மரத்தைச் சுத்தி ஓடுவது... இதுபோலும் மண்ணாங்கட்டி எல்லாம் இல்லாமல் பார்க்க வந்தவர்களைத் தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்து, கண்ணீர் பெருக விட்டு, பெருமூச்சையே சுவாசிக்கவிட்டு... சிந்திக்கத் தூண்டிடும் ஒரு தனி மனித வரலாறு.

ஜான் ·போர்ப்ஸ் நாஷ் பிரின்ஸ்டனில் படிக்கின்ற நாட்களில்...

கலைந்த தலை, உடை; மோஸார்ட், பாக் இதுபோலும் இணையற்ற இசைக் கலைஞர் களின் வரிகளை ஓயாமல் வாய் விசிலடித்துக் கொண்டிருந்தாலும் மனம் முழுக்கக் கணக்கு, கணக்கு, கணக்கற்ற கணக்கு.

கரும்பலகை, கண்ணாடி, சுவர், என்று எங்கு பார்த்தாலும் நாஷின் கணிதக் கோட்பாடுகள். இருபது வயதில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் மட்டு மில்லாமல் உலகக் கணித மேதைகள் எல்லாருமே வியக்குமளவுக்கு கணிதத் தில் சாதனை.

என்றாலும் இதுபோலும் அறிஞர் களுக்குப் பிதுரார்ஜித சொத்தான ஆணவம், திமிர். கனிவான கேள்வி களுக்குக் கூட அடாவடியான பதில். உலகம் முழுக்க முட்டாள்கள்,..." இந்தப் பதர்களையே நெல்லாம் என எண்ணியிருப்பேனோ?" என்று எண்ணு கின்ற ஓர் "முக்தி நிலை".

ஜான் ·போர்ப்ஸ் நாஷின் கல்லூரித் தோற்றம்.

பின்னர்- டாக்டர் நாஷின் பாதங்களாவது தங்கள் பல்கலைக் கழக வாசலில் படாதா என எத்தனையோ பல்கலைக் கழகங்கள் நீ, நான் என்று போட்டியிட MITயில் பேராசிரி யரானதுவும்...

பேராசிரியர் நாஷின் வகுப்பில் தானும் ஒரு மாணவன் என்று மாணவர்களெல்லாம் பெரு மைப்பட்டுச் சொல்லிக் கொள்வதுவும்...

இவரின் கணித ஞானத்தில் மனதைப் பறி கொடுத்து, அலிஷா என்றொரு அழகு தேவதை நாஷை மணந்து கொண்டதுவும்...

புகழ் மிக்க ·பார்ச்சூன் பத்திரிகை டாக்டர் நாஷை ஈடு இணயற்ற கணித மேதை என்றதோடு, உலகப் பொருளாதாரக் கணக்கு வழக்குகளை மாற்றியமைத்துச் சீர்படுத்தும் சூத்திரங்களை உலகுக்கே வழங்கியவர் என வாழ்த்திக் கௌரவித்ததுவும் மட்டுமே... அவரது வாழ்வின் மலரும் நினைவுகள்.

அதற்குப் பின் நடந்த அத்தனையும்... ஸ்கீஸோ ·ப்ரீனியா என்ற கொடிய மன நோயின் நர்த்தனங்கள். கோரத் தாண்டவங்கள்.

நாஷின் முப்பது வயதுக்குப் பின்னர் தான் ஸ்கீஸோ·ப்ரீனியாவின் வினைகள் தோன்றி னாலும், கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே அதன் சித்து விளையாட்டுகள் தோன்றியிருக்க வேண்டும்.

"ஸ்கீஸோ·ப்ரீனியா-ஓர் கொடுமையான மனநோய். பெரும்பாலும் பத்து வயது முதல் முப்பதுக்குள் எப்போதும் மூளையைத் தாக் கலாம்; யாரென்றும் அது பார்ப்பதில்லை. யாருக்கு வந்தாலும் அதன் கொடுமைகளை எடுத்துச் சொல்வதற்கில்லை.

இந்த மன நோய்க்கான சிலந்தி வலை மெல்ல மெல்ல இழை இழையாய் மூளைக்குள் பின்னப் படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறான். ஏதோ தீயசக்திகள் எல்லாம் உலகை அழிக்கப் போவது போலவும், இவன் ஏதாவது செய்து உலகைக் காப்பது அவசியமானது, அவசர மானது என்றும் கற்பனை காண்கிறான். அந்தக் கற்பனைகள் அத்தனையும் உண்மை என்று இவனுக்குள்ளேயே பல குரல்கள் ஓலமிட்டுக் கொண்டே, அவனைத் துரத்திக் கொண்டிருப் பதாக நம்பத் தொடங்குகிறான். உறக்கம் ஏதும் இல்லாமல், உணவு ஏதும் கொள்ளாமல்... தனக்குள் விவாதிப்பதுவும், சிரிப்பதுவும், சீற்ற மடைவதுமாகக் கொஞ்சம் கொஞ்சமாய்...

ஸ்கீஸோ·ப்ரீனியா... கல்லையே கரைக்கும் போது கற்பூரம் என்னாவது?

அதீதமான கற்பனைகளும், விபரீதமான சிந்தனைகளும் ஸ்கீஸோ·ப்ரீனியா' மன நோயாளிகளுக்கே உரிய கூறு பாடுகள். ஆனால்... டாக்டர் நாஷைப் பொருத்தமட்டில் கொடுமை எதுவெனில்... அந்த விபரீதமான சிந்தனைகளுக்கு அடிமையாகிப் போனதுதான்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த கையொடு ரஷ்யா அமெரிக்காவை அழிப்பதற்கு மும்மர மாய்த் திட்டமிடுவதாகவும், அந்தத் திட்டங்களை முறிப்பதற்கான சங்கேதக் குறிகளை (Secret Codes) முற்றுமாய் உணர்ந்தவர் கணித எண்க ளின் கடவுளான நாஷ் ஒருவர் மட்டுமே என்று அல்லும் பொழுதும் அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் சொல்லிப் பார்த்துக் கொண்டிருப்பதகவும் டாக்டர் நாஷ் நம்பத் தொடங்கியது..., ஆடுபவனாக மட்டுமில்லாது, ஆட்டுவிப்பவனாகவும் தன்னை உருவகப்படுத்திக் கொண்டது...

"கணைவாய் அசுரர் தலைகள் சிதறக் கடை யூழியிலே படையோடு சென்று பாரினைக் காக்கும் பரமாத்மாவாய்த் தன்னைக் கற்பனை செய்து கொண்டது...

எத்தனைக் கொடுமை?

அத்தனைக் கொடுமையிலும் டாக்டர் நாஷின் மனைவி துவண்டு விடாது, அவன் வீழ்கின்ற போதல்லாம் தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தி, கைக்குழந்தையின் கையைப் பிடித்து நடை பழக்குவது போலும் நடத்தி வழி காட்டியிருக் காவிடில்.... இந்த மண் ஓர் மாமேதையை என்றோ ஸ்கீஸோ·ப்ரீனியாவுக்குப் பலி கொடுத்திருக்கும்.

ஆயிரம் வைத்தியங்கள், மருந்து, மாத்திரை கள், அதிர்ச்சி வைத்தியங்கள்... என்றாலும்... கொஞ்சம் கொஞ்சமாய் டாக்டர் நாஷ¤க்கு உண்மை எது, போலி எது என்று ஒரு மழலைக்கு பாடம் சொல்வதைப் போல் சொல்லி ஒரு நிலைப் படுத்தாது போயிருந்தால் டாக்டர் நாஷை என்றோ இழந்திருப்போம்.

ஒரு முறை அலிஷா, ஜான் நாஷின் வலது கரத்தை எடுத்து தன் நெஞ்சில் பதித்துக் கொண்டு சொல்கிறாள்..

"என் அருமை ஜான், யாராலுமே நினைக்க வொண்ணாத, சாதிக்க இயலாத ஒன்று உன்னால் முடியும் என்று நான் திண்ணமாக நம்புகிறேன்..." என்கிற போது, ஜான் நாஷ் அதை ஆமோதிக்கும் வண்ணம் மெதுவாகத் தலையயாட்டுகிறார். அப்போதே நமக்குள்ளும் நம்பிக்கைத் துளிர்விட்டு, கிளைவிட்டு, விழுதும் விடத் தொடங்கி விடுகிறது. மீண்டும் ப்ரின்ஸ் டன் பல்கலைக் கழகத்தில் ஆசிரியப் பணி... அவர் விரும்பும் போது வரவும் போகவும் ப்ரின்ஸ் டன் தலைமை அனுமதிக்கிறது.

அறுபதுகளில் கணிதத்தில் இவருடைய கண்டு பிடிப்புக்காகவும், அந்த கணித சூத்திரங்கள் பின் நாட்களில் பொருளாதாரத் துறையில் ஏற்படுத் திய வியத்தகு மாற்றங்களுக்காகவும் நோபல் பரிசு குழுவினர் டாக்டர் நாஷைக் கௌரவித்தது 1994ல் தான்.

ஸ்டாக்ஹோம், வியன்னா. எப்போதோ வழங்கி யிருக்க வேண்டிய ஒப்பற்ற நோபல் பரிசினை இப்போதாவது டாக்டர் நாஷ¤க்கு வழங்கி கௌரவித்தோமே என்ற குற்ற உணர்வுடன் நோபல் பரிசுக் குழுவினரும், உலகம் முழுமைக் கான கணித, பொருளாதார விஞ்ஞானிகளும் காத்திருக்க...

நன்றியுரையை நாஷ் நாலே வரிகளில் சொல்லுகிறார்.

"மருத்துவ மனையில் நீண்ட நாட்களாகச் சிந்தை தெளிவின்றிச் செத்த உடலாய் நான் இருந்தது உண்மையே... என்னைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த கற்பனைப் பேய்களை விலக்கி ஓர் மூலையில் உட்கார வைத்துவிட்டு இறைவன் ஆட்டுவிக்கும் விதமெல்லாம் ஆடும் ஓர் சாதரண மனிதன்தான் நானும் என்று என் றைக்கு உணரத் தொடங்கினேனோ, அன்று புதிதாய்ப் பிறந்தேன்... எண்களைப் பற்றி எத் தனை எத்தனையோ எழுதத் தெரிந்திருந்த எனக்கு உண்மையான அன்பு, பிரியம் என்றால் என்ன என்று காட்டி வழிப் படுத்தியது அதோ அந்த தேவதையே" என்று முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் தன்மனைவியை சுட்டிக் காட்டிச் சொல்லும் பொழுது கள்ளம் உருகி, வெள்ளக் கருணையில் பக்திக் கண்ணீர் பெருகுகிறது.

உள் மனத்தின் கூறுபாடுகளையும் கோளாறு களையும் சொல்லுவதென்றால் ‘படைப்பிற்கு இறைவன்’ ஒருவனால் மட்டுமே முடியும். அதை ஒளிப்படமாகக் காட்டுவதற்கு ஓர் பக்குவம், முதிர்ச்சி வேண்டும். மனநோயாளியின் நிலை யைப் பூரணமாய் உணர்ந்து கொண்டு, பூவுக்குள் இருந்து மகரந்தத்தை எடுத்துப் புதிதாய் இன்னு மொரு பூவுக்கு உயிரூட்டும் வண்ணத்துப் பூச்சியின் நேர்த்தியோடு புனையப் பட்டிருக்கும் 'A Beautiful Mind' என்ற இந்த புதுக்கவிதை மானுடத்தின் மனங்களில் எல்லாம் மையமிட்டு உட்கார வேண்டியதோர் குறிஞ்சிப் பூ.

நான் இன்னமும் ஆளவந்தானைப் பார்க்க வில்லை. ஸ்கீஸோ·ப்ரீனியா நோயுற்றவனை ஓர் கொடுமைமிகு கொலையாளியாய்ச் சித்தரித் திருக்கும் கொடுமை (இந்தத் துறையில் நிறையப் படித்திருந்தும்) என் சிற்றறிவுக்குச் சரியாய்ப்படவில்லை; அதனாலேயே பார்க்க விருப்பமுமில்லை. சேது திரைப் படத்தைப் பற்றி நன்றாகச் சொன்னார்கள், பார்க்க வேண்டும்.

ஒன்று சொல்வேன். ஸ்கீஸோ·ப்ரீனியா மன நோயினால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் அறிவில் மற்றவர்களைக் காட்டிலும் பல படி மேல். அவர்கள் மனம் பஞ்சிலும் மென்மை, வெள்ளை. அரும்பு மீசை வளர்கின்ற நாட்களில் மூளையின் DNAயில் சில மாற்றங்கள்... விளைவு ஸ்கீஸோ·ப்ரீனியா.

மழலை, தென்றல், அருவி, வெண்ணிலவு, வண் ணத்துப் பூச்சி வானவில் என அத்தனை உலகி லும் வண்ணக் களஞ்சியமாய், இத்தனைக்கோடி இன்பங்களை படைத்திட்ட இறைவனோ... இப்படியுமோர் பகடைக் காயை மனித மூளையில் உருட்டி சகுனிச் சூதாடி வேடிக்கை பார்க்கிறான் என்று வியக்கிறேன். இன்னொரு கொடுமை என்னவெனில்... டாக்டர் நாஷின் மகனுக்கும் ஸ்கீஸோ·ப்ரீனியாவாம்... ஏன். ஏன்... "படைப்பிற்கு இறைவன்" மேல் ஓர் மலட்டுக் கோபம் வராமலில்லை...

"என்னே விதியின் பயன், இங்கு, இதுவோ? அம்மா! பொருளொன்றும் அறிந்திலனே." என்று கந்தரனுபூதியைச் சொல்லி சாந்தப் படுவதைத் தவிர வேறு வழி எதுவும் இருப்பதாக எனக்குத் தோணவில்லை.

வேதம்மாள்

© TamilOnline.com