ஏப்ரல் 2002: வாசகர் கடிதம்
நான் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பத்து நாட்களுக்கு முன் வந்தேன். உங்களுடைய ஜனவரி இதழை என்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் பார்த்தேன்; படித்தேன். மிகவும் ரசித்தேன். முதன் முறையாக இந்த பத்திரிக்கையை நான் இப்போது தான் படித்தேன்.

இந்தியா சம்மந்தப்பட்ட தகவல்கள் ஏராளம். என்னுடைய மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தை களே இல்லை. இதுவரை வெளிவந்த அத்தனை இதழ்களையும் படித்து மகிழ விரும்புகிறேன். இவையாவும் எனக்குக் கிடைக்கும்படி செய்யவும்.

விசாலம்

*****


கடந்த 10 மாதங்களாக தென்றலின் வாசகி நான். இந்த மார்ச் மாத இதழில் ஊர்வலம் பகுதியைக் கண்டவுடன் ஒரு இனிய அதிர்ச்சி எனக்கு. நானும் O.C.P.M. பள்ளியின் பழைய மாணவிதான். 5ம் வகுப்பு முதல் பள்ளி இறுதிவரை அங்கு படித்து 1965ல் வெளிவந்தவள். திருமதி அம்புஜவல்லி தேசிகாச்சாரி அவர்கள் குறிப்பிட்ட மிஸ்.ஏ.கே. ஜேம்ஸ், மிஸ். ஜேகப் இவர்கள் எனக்கும் ஆசிரியர்கள் தாம். இவர்களுடன் தமிழாசிரியையாக இருந்த மிஸ். பி. நல்லையாவையும் நான் மறக்க இயலாது. என் இளமைக்கால நினைவுகளை மலரவிட்டதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி.

அறம் வளர்த்த செல்வி, சான்டா கிளாரா

*****


இந்திய துணைக் கண்டத்தின் சென்னை வாசி யாகிய நான் கடந்த அக்டோபர் மாதம் இங்கு வேலை செய்யும் என் மகனிடம் சிலநாள் தங்க நினைத்து வந்தேன். மார்ச் இறுதியில் இந்தியா திரும்ப வேண்டிய நேரமும் வந்தாயிற்று. இவ்வளவு நாட்களாக இங்கிருந்தும் 'தென்றலை' உணராமல் இருந்து விட்டமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

தேனினம் இனிய தமிழ்மொழியைக் கேட்க மாட்டோமா, படிக்க மாட்டோமா என ஏங்கி நிற்கும் என்னைப் போன்ற அமெரிக்கத் தமிழ் விருந்தினர்க்கு உண்மையிலேயே உங்கள் 'தென்றல்' உள்ளத்தையும், உணர்வையும் வருடும் இனிய தமிழ்த் தென்றல்.

அலமேலு ராமமூர்த்தி

*****


நான் பயின்ற பள்ளியைப் பற்றிய (OCPM) கட்டு ரையைப் பார்த்ததும், மனதிற்குள் பலவித பசுமையான நினைவுகள். நானும் அப்பள்ளியின் பழைய மாணவி; 1977 ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு பெற்றேன்.

அப்போது செல்வி. ரத்தினசாமி அவர்கள் தலைமையாசிரியையாக இருந்தார்கள். நான் இரண்டு வருடம் முன்புதான் அமெரிக்கா வந்தேன். இத்தனை வருடங்களுக்கு பின், இங்கு வந்த பிறகு என் பள்ளியைப் பற்றிய செய்திகளை கண்டபின் மிகவும் பெருமை அடைந்தேன். திருமதி. அம்புஜவல்லியின் அனுபவங்களும், தென்றல் நிருபரின் வர்ணனையும், பிரார்த்தனை பாட்டும், தலைமையாசிரியையின் பேட்டியும், என் இளமைகால நாட்களை கண்முன் கொண்டு நிறுத்திவிட்டன.

நளினி ஸ்ரீநிவாசன்

*****


தென்றல் பிப்ரவரி 2002 இதழில் என் அம்மா திருமதி இந்திரா காசிநாதன் எழுதிய வாசகர் கடிதத்தை வெளியிட்டீர்கள். அதில் இந்த நாட்டில் நட்பு வட்டம் உருவாக்க எங்கள் தொலைபேசி எண்ணை அவர்கள் கொடுத்திருந்தார்கள்.

மற்றொரு தென்றல் வாசகர் எங்களை தொடர்பு கொண்டார். பேச்சுவாக்கில் அந்த பெண் என்னோடு சின்ன வயதில் பள்ளியில் சேர்ந்து படித்த அனுராதா என்ற இனிய செய்தி தெரிய வந்தது. நினைத்துகூட பார்க்க முடியாத இந்த இன்ப அதிர்ச்சியை எனக்கு அளிக்க உதவி செய்த தென்றலுக்கு நன்றி!

மேலும் பல வாசகர்கள் வாழ்வில் நட்புத் தென்றல் தொடர்ந்து வீசும் என்று நம்புகிறேன்!

மீரா சிவகுமார்

*****


ஜனவரி இதழில் வெளியான சிறுகதையை பாராட்டி நான் எழுதிய கடிதமும், கடுமையாக சாடி மீரா சிவகுமார் எழுதிய கடிதமும் பிப்ரவரி இதழில் பிரசுரமாகி இருந்தது. கதையை எழுதிய சகோதரி எங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்து எழுதியது அவரின் பெருந்தன்மைய காட்டுகிறது. ஆனால் சுவாரஸ்யம் இல்லை. எனவே பிரச்சனைக்குரிய ஏதேனும் விஷயத்தை பற்றி எழுதி வாசகர்களின் கருத்தை அறிந்து கொள்ள ''விவாதமேடை'' என்ற பகுதியை ஆரம்பித்தால்...

சுடச்சுட பறந்துவரும் வாசகர்களின் கடிதங்கள் !! பல விளம்பரங்களை தாங்கிவரும் ''தென்றலு''க்கு விளம்பரம் விவரமே தெரியவில்லையே. அது ஏன்? தமிழ் பத்திரிகையா? இந்நாட்டிலா? என்று அதிசயிக் கிறார்கள். எனவே எனதருமை தென்றலே நந்தவனத் துக்கும் விளம்பர பலகை தேவை தான்!!

வாசகர் கடிதத்தில் சூர்யா கிருஷ்ணன் என்ற வாசகர் ‘மாயாபஜார்’ பகுதியை பாராட்டிய அதே சமயம் மருத்துவ பகுதியை வெளியிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு செவிசாய்க்க வேண்டிய கடமை ஆசிரியருடையது.

என்னுடை கருத்து என்னவெனில் 'மாயாபஜார்' பகுதியே மருத்துவ பகுதிதான். வயிற்றுக்கு இதம ளிக்கும் உணவு வகைககளை பசித்து புசித்து வந்தாலே நோயின்றி வாழலாம். நமது அஞ்சரை பெட்டியே 'பார்மசி'. நான்கு நொடிகள் வாயிலே ருசிக்கும் உணவு நான்கு மணிநேரம் வயிற்றிலே போராடும் விதமான உணவு பழக்கத்தை கைவிட்டால் மருத்துவம் எதற்காக?

நம்முடைய பழக்கவழக்கங்களை அலட்சியம் செய்யாமல் முன்னோர்கள் வகுத்த பாதையில் தொடர்ந்து பயணித்தால் நோயின்றி நலமுடன் வாழலாம்.

இந்திரா காசிநாதன்.

*****

© TamilOnline.com