கீதாபென்னட் பக்கம்
''காலம் மாறிப் போச்சு!'' என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால் நிசமாகவே மாறி விட்டதா? சில விஷயங்களில் சில அனுபவங் களிலிருந்து இல்லை என்றே தோன்றுகிறது.

இது நடந்தது சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால். என் அம்மா கெளரிக்குக் திருமணம் செய்யும் நேரம் வந்தபோது தூரத்து உறவினரான என் அப்பாவுக்கு கொடுக்கலாம் என்று கருதிய போது, என் அம்மா வழி பாட்டியும் தாத்தாவும் முதலில் தயங்கினார்களாம். காரணம் அப்பா இசைக் கலைஞர் என்பதால்.

சங்கீதம் அல்லது நடிப்பைத் தொழிலாக கொண்டவர்களுக்கு மனைவி மட்டும் இல்லை, வீடு கிடைப்பதுகூட கடினம்தான். முன்னுக்கு வந்துக் கொண்டிருக்கும் திருமணமாகாத தமிழ் நடிகர்கள் தங்களுக்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்க வீட்டு சொந்தக்காரர்கள் தயங்கு வதைப் பற்றி பின்னால் புகழும் பணமும் மனைவியும் கிடைத்த பிறகு மனது விட்டு பேட்டி கொடுப்பதைப் படித்திருக்கிறேன். இது தமிழ் பத்திரிக்கைகளில் சென்னையில்.

சில வருடங்களுக்கு முன் பென்னெட்டும் நானும் கனெக்டிகட் மாநிலத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்துவிட முடிவு செய்தோம். பல வருடங்களாக நியூஹேவனில் வசித்த எங்களுக்கு வெஸ்ட் கோஸ்ட் பற்றி ஒன்றும் முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை. அங்கி ருந்து கிளம்புவதற்கு முன்னேயே வீடு வாடகைக்குப் பார்த்து வைத்துக் கொள்ள வில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் வந்துவிட்டு இரண்டு நாட்கள் தங்கினால் கிடைத்துவிடாதா என்றுதான் நினைத்திருந்தோம்.

எங்கள் சிநேகிதி பத்மினி அபோது டைமண்ட்பாரில் இருந்தாள். அவளுடன் தங்கிக் கொண்டோம். தினம் செய்தித்தாளைப் பார்த்து வாடகைக்கு வரும் தக்க வீடுகளைக் குறித்து அவற்றிற்குப் போகும் வழியையும் எழுதி கொடுப்பாள். நாங்களும் அங்கெல்லாம் போவோம். அவர்கள் கொடுக்கும் விண்ணப் பங்களை சிரத்தையாக பூர்த்தி செய்வோம். அதை படித்த வீட்டு சொந்தக்கார் ஒரு கணமும் தயங்காமல் வீடு வாடகைக்கு இல்லை என்று கையை விரித்து விடுவார்.

ஒருவாரம் ஓட்டமாய் ஓடி விட்டது. வீடு எதுவும் கிடைக்கவில்லை. ஏன் என்றும் விளங்காமல் விழித்தோம். எங்கள் சிநேகிதியும் எங்களுடன் சேர்ந்து பதிலுக்காக தீவிரமாக யோசித்தாள்.

அதிபுத்திசாலியான பத்மினியிடமிருந்து திடீரென்று பென்னெட்டுக்கு ஒரு கேள்வி வந்தது. ''உங்களுக்கு என்ன வேலை என்ற இடத்தில் என்ன பதில் எழுதுகிறீர்கள்?'' என்றாள். ''ஏன்? இசைக் கலைஞன் - ம்யூசிஷன் என்றுதான்'' என பதில் வந்தது. ''யேல் பல்கலைகழகத்தில் நீங்கள் சிறிது காலம் ப்ரொ·பஸராக இருந்தீர்கள் அல்லவா? அதனால் இனிமேல் கல்லூரி பேராசிரியர் என்றே எழுதுங்கள்'' என்றாள்.

அன்றைக்கு நாங்கள் போன முதல் இடம் செளத் பாசடீனா. பத்மினி சொன்ன மாதிரியே என் கணவரும் வாடகை விண்ணப்பத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் வருவதற்கு முன் யேல் பல்கலை கழகத்தில் ம்யூசிக் ப்ரொ·பஸராக வேலை பார்த்ததை எழுதினார். தான் ஒரு இசைக் கலைஞன் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. என்ன ஆச்சரியம்? அந்த இடம் உடனடியாக எங்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்டது.

இது நடந்தது சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால். இப்போது சொல்லுங்கள், உண்மை யாகவே காலம் மாறிதான் போய்விட்டதா?

© TamilOnline.com