பாபா
''நா ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி'' - ரஜினியின் பாட்ஷா படத்தின் வசனம் இது.

இந்த வசனத்திற்கு சொந்தகாரர் எழுத்தாளர் பாலகுமாரன்.

அதே பாலகுமாரன் இப்பொழுது 'பாபா' படத்திற்கும் வசனம் எழுதுகிறார். இந்த படத்திற்காக வசனம் எழுதுவதற்கு ரஜினி தன்னை அழைத்ததில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் பாலா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாபா படபூஜை மட்டுமல்ல; பாலகுமாரனின் மகளுக்கும் திருமணம் நடந்தது. ஆனால் மகள் திருமண வேலைகளை விடவும் பாலா முனைப்பாய் இருந்ததும் இருப்பதும் பாபா வசனத்தில்தான்!.

ரஜினி நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் படம் 'பாபா' என்பது எல்லோருக்கும் தெரியும். தனது நூறாவது படத்தை அவரது ஆன்மீக குருவான ராகவேந்திரர் பெயரில் 'ஸ்ரீ ராகவேந்திரா' என்று படமாக்கினார். பாபா ரஜினியின் 150 வது படம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இதன் தொடக்கவிழா ஏ.வி.எம். ஸ்டியோவில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஏ.வி.எம். சரவணன், பாலசுப்பிரமணியம், இப்ராஹிம் ராவுத்தர், ஆர்.பி. செளத்ரி, இயக்குநர்கள் பாலசந்தர், சங்கர், கவிஞர் வைரமுத்து, ஏ. ஆர். ரகுமான், ப.சிதம்பரம், பத்திரிக்கையாளர் சோ உள்பட பல விஐபிக்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட முக்கியமான இன்னொரு விஐபி ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ்.

ரஜினி குத்துவிளக்கேற்றி தேங்காய் உடைத்து படபூஜையை நிறைவேற்றினார். அவரது அண்ணன் சத்தியநராணராவ் கிளாப் அடிக்க படப்பிடிப்பு ஆரம்பமானது. சம்பிரதாயத்திற்கு அன்று ஒரு காட்சி மட்டும் படம் பிடித்தனர்.

பாபா பற்றிய மற்றொரு சுவையான செய்தி

ரஜினி, மீனா நடித்த 'முத்து' படம் ஜப்பானில் வெளியிடப்பட்டு அங்கு வெற்றிகரமாக ஓடி தமிழ்நாட்டு வசூலுக்கு ஈடாய் வருமானத்தை அள்ளியது. இதன் பிறகு தமிழ்படங்கள் மீது ஜப்பான் மக்களுக்கு மோகம் ஏற்பட்டது.

இதனால் பாபாவில் ரஜினிக்கு ஜோடியாக ஜப்பான் பெண் ஒருவர் அறிமுகம் செய்யப் படுகிறார். யாஷி மெர்லி ஜோஷி, ஸென் பெங்க் என்று இருபெயர்களில் அழைக்கப்படும் அப்பெண்ணுக்கு நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டுமென்பதில் ஆர்வமாய் இருக்கிறது படக்குழு.

பேர் வைப்பது இருக்கட்டும். எப்படியோ ரஜினியின் மூலம் ஐப்பான் மக்களின் இதயத்தை பிடித்துவிட்டது தமிழ் சினிமா!

பாபா பூஜைக்கு வந்த ரஜினி ஒரு துறவியின் படத்தை கையோடு எடுத்து வந்திருந்தார். பூஜையில் சில நிமடங்கள் வைத்திருந்து விட்டுதான் செல்லும் போது கூடவே அந்தப் படத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். அவர் யார்...? என்ன...? ஏதும் புரியாமல் குழம்பித் தவித்தது கூட்டம்! நாமும்தான்!.

பாரதிராஜாவின் கனவு நனவாகிறது. ஆம் கதாநாயகனாக கனவோடுதான் அவர் சினிமா உலகிற்கு வந்தார். ஆனால் அவர் டைரக்ட ராகதான் சினிமாவிற்குள் அடிஎடுத்து வைத்தார். ஆனால் இப்போது ஒரு படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

© TamilOnline.com