லாபத்தில் இயங்கும் பொதுதுறை நிறுவனங்களான நால்கோ மற்றும் என்.எல்.சி. நிறுவனங்களின் பத்து சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் செயல்பாட்டினைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கடந்த மாதம் ஈடுபட்டன.
முன்னதாக கடந்த ஜுன் மாதம் தில்லியில் நடைப்பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஓரிசாவில் இயங்கும் நால்கோ நிறுவனம், தமிழகத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளை தனியாருக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இந்நிறுவனங்களின் 10 சதவீத பங்கினை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு அந்நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்நிலை நீடித்தால் அரசுக்கு தரும் ஆதரவை விலக்கி கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி கூடிய மத்திய பொருளாதாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தின் முடிவு என்.எல்.சி. நிறுவன ஊழியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்ததையடுத்து, மத்திய அரசு இம்முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் 26ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் பொறியாளர் சங்கக் கூட்டமைப்பும் இணைந்து போராட்ட நடவடிக்கைகளை துவக்கினர்.
ஊழியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது. அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, தே.மு.தி.மு.க மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆதரவை தொழிற்சங்கங்களுக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கவும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையில், என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை அந்நிறுவன ஊழியர்களுக்கே விற்கலாம் என்றொரு புதிய யோசனையை தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கின் முன்பு வைக்க, முதல்வரின் யோசனையை பிரதமரும் ஏற்றுக்கொண்டு, பங்குகளை தொழிலாளர்களுக்கே விற்கத் தயார் என்று உறுதி அளித்தார். ஆனால் பிரதமரின் இந்த யோசனையை ஊழியர்கள் உடனடியாக நிராகரித்தது மட்டுமல்லாமல் பங்குகளை எந்த வடிவில் விற்றாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறினர்.
பிரச்சனை பூதாகரமாக போவதை உணர்ந்த தி.மு.க யாரும் எதிர்பாராத நிலையில் மத்திய அரசை மிரட்டும் வகையில், '' பொதுதுறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அமைச்சரவை முடிவினை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தி.மு.க மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும்' என்று எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன்சிங் தற்காலிகமாக பங்குகளை விற்பதை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது என்று அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
கேடிஸ்ரீ |