மாயமாய் மறைந்த மெமரிகள் -(பாகம் 4)
(முன் கதைச் சுருக்கம்: Silicon Valley - இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, முதலில் பொழுது போக்காகவும், பிறகு முழு நேரமாகவும் துப்பறிய ஆரம்பிக்கிறார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து stock வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவிடமே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவ்வப்போது தேவைப்படும் போது மட்டும் சூர்யாவுக்கு உதவுகிறாள்.

சூர்யாவுக்கு, அவரது நண்பன் குமாரிடமிருந்து ஒரு கலவரமான மின்னஞ்சல் வந்தது. குமாரின் ஹோலோஸ்டோர் நிறுவனம் தயாரித்து வந்த 3D ஹோலோக்ரா·பிக் மெமரிகள் சில காணாமல் போய்விட்டன, சில கெடுக்கப்பட்டு விட்டன. மறைந்து விட்ட மெமரிகள் கிடைக்காவிட்டால் குமாரின் நிறுவனமே சிதைந்து போய்விடக் கூடிய நிலைமை வந்து விடக் கூடும். கண்டு பிடிக்க, சூர்யாவும் கிரணும் சான்டா க்ளாராவில் உள்ள குமாரின் நிறுவனத்துக்கு சென்றனர். சூர்யா குமாரின் லேபை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தார். ஷீலா என்னும் ஒரு எஞ்சினீயர்தான் மிகவும் சந்தேகிக்கப் படுவதாகக் குமார் கூறினார்.

ஷீலாவுடன் பேசியவுடன், சூர்யா ஷாலினி யிடம் ஏதோ ·போனில் பேசிவிட்டு, ஷீலா செய்திருக்க மாட்டாள் என்று கூறிவிட்டார்! பிறகு, சக எஞ்சினீயர் பீட்டருடனும், குழு மேனேஜர் மார்க்குடனும் பேசி விட்டு, லேப் மேனேஜர் ரமேஷ¤டன் பேச லேபுக்கு சென்றார். மேலும் தொடர்வோம்...)

லேப் மேனேஜர் ரமேஷ் குள்ளமாக திடகாத்தி ரமாகவே இருந்தான்! முகத்தில் மட்டும் ஆனால், என்னவோ ஒரு திருட்டுக்களை. சூர்யாவை நேரில் பார்க்காமல் அங்கும் இங்கும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கிரண் சூர்யாவின் காதில், "பார்த்தாலே, இவன் தான் திருடன் மாதிரி தெரியுதே" என்றான். சூர்யா பதில் பேசாமல், சுட்டு விரலை உதட்டின் மேல் வைத்துக் காட்டி அவனை அடக்கி விட்டு, லேபைச் சுற்றி ஒரு முறை பார்த்தார். லேப் மற்ற எஞ்சினீயர்கள் க்யூப் மாதிரி தாறு மாறாக இல்லாமல் நேர்த்தியாக வைக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு மேஜை மேலும் சோதனைக் கருவிகளும், அதனுடன் தேவைப் படக் கூடிய சாதனங்களும் வைக்கப் பட்டிருந்தன. தரையிலும் குப்பைக் கூளங்கள் இல்லை. ஒயர்களும், சிறு சிப் போன்ற சங்கதிகளும், தனித் தனிக் கூடைகளில் போடப் பட்டு கேபினெட்களிலும், மேஜைகளின் கீழும் வைக்கப்பட்டிருந்தன.

சூர்யா ரமேஷை பார்த்து, "லேப் ரொம்ப நல்லா நீட்டா வைச்சிருக்கீங்க ரமேஷ்! பாராட்ட வேண்டிய சமாச்சாரம் தான்! நான் என் எக்ஸ்பீரியன்ஸ்ல இவ்வளவு நேர்த்தியா இருக்கற லேப் பாத்ததில்ல!" என்றார்.

குமாரும் பெருமிதமாக தலையாட்டி ரமேஷைத் தட்டிக் கொடுத்தார்.

ரமேஷின் முகத்தில் கொஞ்சம் புன்னகை வந்தது. அடக்கத்துடன், "நான் ஒண்ணும் ரொம்ப பிரமாதமா செஞ்சிடல. நான் வர்ரத் துக்கு முன்னாடியே, மார்க் செஞ்சு வச்சிருந்தத நான் கீப் அப் பண்ணிக்கிட்டாவது வர முடியு தேன்னு சந்தோஷப்படறேன், அவ்வளவு தான்!" என்றான்.

சூர்யா, "வெரி குட்! ஆனாலும், அப்படி தொடர்ந்து வச்சுக்கிறது சாதாரண விஷயமில்ல. சரி இப்போதைய விஷயத்துக்கு வருவோம்! நீங்கதான் மெமரிகள் காணாமப் போச்சுன்னு முதல்ல பாத்தீங்களா?"

ரமேஷின் முகத்தில் குற்றப் பாவனை மீண்டும் வந்து விட்டது! "ஆமாம், நான் தான் நேற்றுக் காலைல வந்தப்ப கேபினெட்ல அஞ்சு மாட்யூல் தான் இருக்கறதப் பாத்து பயந்து போய் குமார், மார்க் ரெண்டு பேரையும் அவசரமாக் கூப்பிட்டு விஷயத்த சொன்னேன்."

"அப்ப லேப் இப்படியேத்தான் நேர்த்தியா இருந்ததா? இல்ல கீழே எல்லாம் எதாவது சிதறி இருந்ததா?"

ரமேஷ் தலையசைத்து மறுத்தான். "ஒண்ணும் சிதறியில்ல. நீட்டாத்தான் இருந்தது."

"கேபினெட் உள்ள? அதுவும் இப்ப இருக்கற மாதிரித்தான் இருந்ததா?"

"ஆமாம். அப்படியேத்தான் இருந்தது."

"ஆனா நீங்க எடுத்து டெஸ்ட் பண்ணீங்க இல்லயா?"

"எடுத்தோம், ஆனா கேர்·புல்லா இருந்த படியே திரும்ப வச்சுட்டோம். மார்க் கூட அப்ப அதுதான் சொன்னார். எடுத்து டிஸ்டர்ப் பண்ண வேண்டாம், எவிடன்ஸா அப்படியே இருக் கட்டும்னு. ஆனா, நான் டெஸ்ட் பண்ணாத்தான் நல்லதுன்னு சொல்லி எடுத்துட்டேன். ஆனா முதல்ல எது எது எப்படி இருக்குன்னு தெரியறத்துக்கு ·போட்டோ புடிச்சுட்டேன். இங்க பாருங்க அப்ப எடுத்த ·போட்டோக்கள். அப்படியே இருக்கு பாருங்க."

சூர்யா ·போட்டோவைப் பார்த்து, ரமேஷின் முன்னெச்சரிக்கையைப் பாராட்டி விட்டு கேள்விகளைத் தொடர்ந்தார். "வெள்ளிக் கிழமை இரவு எங்கிருந்தீங்க?"

"ஆ·பீஸ் ·ப்ரென்ட்ஸோட பார்ட்டில இருந்தேன்."

"பார்ட்டிக்கு அப்புறம்?"

"நேரா வீட்டுக்குப் போய்த் தூங்கிட்டேன்! பார்ட்டில கொஞ்சம் நிறைய குடிச்சுட்டேன். ரொம்பத் தூக்கம் வந்துச்சு."

"அப்ப, நீங்க பார்ட்டிலேந்து கிளம்பினதி லிருந்து குமாரும், மார்க்கும் வர வரைக்கும் யாரையும் பாக்கல."

"இல்ல, பாக்கல. ஆனா, நீங்க என் மேல சந்தேகப் படவே முடியாது. ஏன்னா, நான் மீதி இருக்கற மெமரிகள டெஸ்ட் பண்ணச் சொல்லி அழுத்தி வாதாடியிருக்கேன். நான் செஞ்சிருந்தா சும்மா இருந்திருப்பேன்."

சூர்யா கை தூக்கிக் காட்டி, சமாதானம் அளித்து விட்டு, "ரொம்ப நல்லது. சரி இப்ப இது போதும்", என்று சொல்லி லேபை விட்டு நகர்ந்தார். அவர் பார்வையில் லேப் கதவின் எலெக்ட்ரானிக் பூட்டு தென் பட, சட்டென எதோ உதித்தது. "ரமேஷ், இன்னும் ஒண்ணு.

இந்த பூட்டு பேட்ஜ் காட்டித்தான் திறக்கணும் இல்லயா?"

மீண்டும் ரமேஷின் முகத்தில் ஒரு குற்றப் பார்வை தோன்றி மறைந்தது. "ஆமாம், அதனால் என்ன?"

"இந்தப் பூட்டுக்கும், இதே மாதிரி வாசல் பூட்டுக்கும் யார் பேட்ஜ் போட்டுத் திறந்தாங் கன்னு log file இருக்கணுமே? அத நான் பாக்க முடியுமா?"

ரமேஷ் சூர்யாவின் முகத்தை நேராகப் பார்க்காமல், "இருக்கு..." என்று மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டு விருப்ப மில்லாத முக பாவனையுடன் அவர்களை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு ஒரு கம்ப்யூட்டர் திரையில் ஒரு ·பைலை போட்டு சூர்யாவிடம் காட்டினான். குமார் திரையில் இருந்த விவரத்தைப் பார்த்து திடுக் கிட்டார்! சூர்யா என்ன என்று விசாரிக்க, குமார் சனிக் கிழமைக் காலை சேர்க்கப் பட்டிருந்த விவரங்களைக் காட்டினார். அதில் லேபில் நுழைந்ததாகக் காட்டப் பட்டது - ஷீலாவின் பெயர் மட்டுமே!

"சூர்யா, நீங்க சொன்னது தப்பாப் போச்சு போலிருக்கே, ஷீலாதான் செஞ்சிருக்கா போலிருக்கு" என்றார்.

சூர்யாவுக்கும் அது பெரிய குழப்பத்தை அளித்தது. சற்று சிந்தித்து விட்டு, மீண்டும் உறுதியாக "இல்ல, குமார், இது அவ்வளவு சிம்பிள் இல்ல. இதுல எதோ சிடுக்கு இருக்கு. இது ஷீலா செஞ்சிருக்கலாம்னு காட்டுது. ஆனா, உடனே அந்த முடிவுக்குத் தாவாதீங்க" என்றார். சூர்யா திரையில் இருந்த விவரங்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்து எதை எதையோ குறித்துக் கொண்டார். பிறகு குமாரைத் தனியாக அழைத்து எதோ விசாரித்தார். அவர் கூறிய பதில் அவருக்கு திருப்தி அளித்தது!

ரமேஷ¤க்கு நன்றி கூறி விட்டு, சூர்யா நகர்ந்தார்.

குமார் பொறுமை இழந்து "என்ன சூர்யா, இன்னும் ஒண்ணும் தெரியலயா, போலீசக் கூப்பிட்டு எல்லாரையும் விசாரிச்சுடலாம்னு தோணுது" என்றார்.

சூர்யா, "குமார், இன்னும் கொஞ்சம் பொறு மையா இருங்க, கண்டு புடிச்சிடலாம். நாம் கிட்ட நெருங்கிட்டுதான் இருக்கோம். மேலும், போலீஸக் கூப்பிட்டா, குற்றவாளிய புடிச்சாலும், மெமரிகள மீட்க ரொம்ப நாளாகலாம். நான் கொஞ்சம் கிரணோட, தனியா சிந்திச்சு பேசணும். உங்க பெரிய கான்·பரன்ஸ் ரூம்ல இருக்கேன். அப்புறம் உங்களக் கூப்பிடறேன்." என்றார்.

குமார் சமாதானமடைந்து, சரியென்று கூறி விட்டு நகர்ந்தார். சூர்யாவும் கிரணும் பெரிய அறைக்கு சென்று சேர்ந்தவுடன், கிரண், ஒரு நாற்காலியில், குறுக்குப் புறமாக தொப்பென உட்கார்ந்து சூர்யாவைப் பார்த்தான். பழக்கத்தி லிருந்து, சூர்யா ஒரு முடிவுக்கு வந்து விட்டார், குற்றவாளிக்கு சுறுக்கு நெருங்குகிறது என்று அவனுக்குத் தெரிந்து விட்டது! சூர்யா சிறிது நேரம் பேசாமல், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தது போல் சட்டென்று நின்று, "கிரண் நீ என்ன நினைக்கறே?" என்றார்.

கிரண், "பேசினத வச்சு எதையும் என்னால முடிவா சொல்ல முடியாது. ஆனா, இந்த ரமேஷ் பாக்கற திருட்டுப் பார்வை சகிக்கல. அவன் எதயோ மறைக்கறான். அதனால, அவனா இருக்கலாம்னு தோணுது." என்றான்.

சூர்யா "ரமேஷ் நிச்சயமா ஒண்ண மறைக் கிறான். ஆனா அத வச்சு மட்டும் அவன்னு முடிவு கட்ட முடியாது. யார் செஞ்சாங்கன்னு நான் முடிவு கட்டிட்டேன். அத நிரூபிக்கறது எப்படின்னுதான் பாக்கணும். அத விட, அந்த மீதி மெமரிகள மீட்கணுமே?" என்றார்.

கிரணுக்கு ஆவல் அதிகரித்தது! "தெரிஞ்சு போச்சா, யாரு, யாரு?" என்றான்.

சூர்யா தலையசைத்தார். "நாம பேசின எல்லாரையும் இங்க கூப்பிடு. ஒரே இடத்துல வச்சு பேசி முடிவுக்கு வரலாம்" என்றார்.

கிரண் ஏமாற்றத்துடன் போய் குமார், ஷீலா, ரமேஷ், பீட்டர், மார்க் எல்லாரையும் கூப்பிட்டான். அனைவரும் வந்து மேஜையைச் சுற்றி உட்கார்ந்து சூர்யா என்ன சொல்லப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தனர். சூர்யா கிரணின் காதில் எதோ கிசு கிசுத்தார். அவன் முகத்தில் மிகுந்த ஆச்சரியம்! சரியென்று தலையாட்டி விட்டு ஓடினான்.

சூர்யா ஒவ்வொருவர் முகத்தையும் தீர்க்கமாகப் பார்த்தார். வேறு வேறு பாவனைகள்! குமார் - பொறுமையில்லாத எதிர்பார்ப்பு. மார்க் - சாந்தமான புன்னகை. ரமேஷ் - கவலை. பீட்டர் - மிகுந்த சிடு சிடுப்பு. ஷீலா - நன்றி கலந்த ஆவல்.

சூர்யா பேச ஆரம்பித்தார்.

"நான் உங்கள எல்லாம் இங்க சேர்த்து வர வழச்சது எதுக்குன்னு விளக்க வேண்டியதில்ல, உங்களூக்கே தெரியும். ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணாம உடனே விஷயத்துக்கு வரேன். இந்த மெமரிகளத் திருடி, மீதியக் கெடுத்தது இந்தக் கம்பனில ஒருத்தராத்தான் இருக்க முடியும்னு ஆரம்பத்திலிருந்தே நல்லாத் தெரியும். ஆனா, உங்களோட எல்லாம் பேசி, லேபை ஆராய்ந்து பாத்தப்புறம்..."

சூர்யா நிறுத்தி விட்டு எல்லார் முகத்தையும் கூர்ந்து பார்த்தார். குமார் அவசரமாக, "என்ன சூர்யா, மேல சொல்லுங்க, தயங்காதீங்க" என்றார்.

சூர்யா தொடர்ந்து "...அத செஞ்சது இந்த ரூம்ல இருக்கற ஒருத்தர்தான்னு தெரியுது!" என்றார்! மார்க், ரமேஷ், பீட்டர் மூவரும் கொதித்து எழுந்தனர். சூர்யா கையை எடுத்துக்காட்டி, குரலை உயர்த்தி, "உட் காருங்க, யார் செஞ்சாங்கன்னு எனக்கு தெரியும். எல்லாரும் பதட்டப்பட வேண்டிய தில்லை" என்றார். மூவரும் மெதுவாக உட்கார்ந்தனர்.

"ஆரம்பத்துல ஷீலா மேலதான் சந்தேகம் விழுந்தது. இப்போ கடைசியிலும் கூட, லேப் லாக் ·பைல்ல ஷீலாதான் செஞ்சிருக்க முடியுங்கற அத்தாட்சி இருக்கு". ஷீலா அதிர்ந்து போனாள். மற்றவர்கள் முகத்தில் மலர்ச்சி!

பீட்டர் இடை மறித்தான். "அப்புறம் என்ன கேஸ் க்ளோஸ்ட்! முடிச்சி ராணிய உள்ள தள்ளிட வேண்டியதுதானே?!" என்றான். சூர்யா முறைக்கவே வாயை மூடிக் கொண்டான்.

சூர்யா தொடர்ந்தார். "ஆனா, எனக்கு மத்த விவரங்கள வெச்சு அவ செய்யலன்னு தெரியும்!" ஷீலா விம்முவதை நிறுத்தி மீண்டும் ஆவலுடன் பார்த்தாள்.

சூர்யா மேலும், "அவ செய்யலன்னா யாரால செய்ய முடியும்? மீதி மூணு பேர்ல யார் செஞ்சிருக்கலாம்? யாருக்குத் தகுந்த காரணமும், வாய்ப்பும் இருந்திருக்கு? துரதிருஷ் டமா, மேலோட்டமா பார்க்கப் போனா மூணு பேருக்குமே! பீட்டருக்கு நிச்சயமா ஷீலா மேல எதோ வெறுப்பும் பொறாமையும் இருக்குன்னு தெரியுது. ரமேஷ¤ம் எதோ மறைக்கிறார். மார்க் வெளிப்படையா ஒண்ணும் காட்டலன்னாலும் உள்ள எதோ விஷயம் இருக்கறது எனக்குத் தெரிஞ்சுது. அதுனால இன்னொரு லெவல் இன்னும் உள்ள இறங்கி யோசிக்க வேண்டிய தாச்சு.

"யாரால அவ்வளவு தொழில் நுட்பமா, மெமரிகளக் கெடுக்கற வேலை செஞ்சிருக்க முடியும்? யாருக்கு இந்த வேலையால லாபம்? யாருக்கு இந்த நிறுவனத்து மேலயும் ஷீலா மேலயும் அவ்வளவு கோபம்? யாருடைய நடத்தை நான் லேப் கேபினெட்டில் கவனிச்சதுக்குப் பொருத்தமா இருக்கு? யாரால இந்த விஷயத்துல நடந்திருக்கற மற்ற சில வேலைகள செஞ்சிருக்க முடியும்? இது அத்தனையிலும் பொருந்தற ஒரே ஆள், இத செஞ்சிருக்கார்னு நான் நிச்சயமா சொல்லக் கூடியவர்..."

சில நொடிகள் நிறுத்தி எல்லோர் முகத்தையும் கூர்ந்து பார்த்த சூர்யா, கை நீட்டி சுட்டிக் காட்டி, "...சந்தேகமேயில்லை, மார்க் தான்!" என்றார்.

இதைக் கேட்டு மார்க்கைத் தவிர மீதி அத்தனைப் பேரும் அதிர்ச்சியடைந்தனர்! அவர்கள் எல்லோரும், மற்ற இருவரில் ஒருவரைத் தான் சந்தேகித்தனர். மார்க்கின் பொறுப்பும் இனிய சுபாவமும் அவர்களிடம் கடுகளவு சந்தேகமும் இல்லாமல் செய்திருந் ததால் சூர்யாவின் குற்றச்சாட்டு பெருத்த அதிர்ச்சியாயிற்று!

மார்க்கின் முக பாவம் கடுமையாக மாறினாலும், அவன் பட படக்காமல், "சுத்த அபத்தம். எத வச்சி அப்படி சொல்றீங்க? நான் இந்த நிறுவனத்துக்காக எவ்வளவு கடுமையா உழைச் சிருக்கேன்னு குமாருக்குத் தெரியும். உங்களால எதுவும் கண்டுபிடிக்க முடியலைன்னு என் தலை மேல கட்டறீங்களா?" என்றான்.

குமாரும், "ஆமாம், சூர்யா. மார்க் இத செஞ்சிருப்பார்னு என்னால நம்ப முடியல. எப்படி சொல்றீங்க?" என்றார்.

சூர்யா, "மார்க், உங்க அமைதியையும், தைரியத்தையும் நான் பாராட்டறேன். யாரும் கண்டு பிடிக்க முடியாதுங்கற உங்க நம்பிக் கையும் அபாரம்தான். எவ்வளவோத் திறமை யாத்தான் காரியம் செஞ்சிருக்கீங்க. ஆனா உங்களையும் அறியாம, உங்க உள்சுபாவமும், எல்லாம் தெரியுங்கற அகம்பாவத்தால நீங்க செஞ்சிட்ட சில சின்னத் தவறுகளும் உங்களக் குறி தவறாமக் காட்டிக் கொடுத்திடுச்சு.

"நான் லேப் கேபினெட்ல மெமரிகள் இருந்த நிலையைப் பார்த்தவுடனேயே, இந்த வேலையச் செஞ்சவருக்கு எது நேர்த்தியா இல்லாட்டாலும் பொறுத்துக் கொள்ளாத சுபாவம் இருக்கறது புரிஞ்சுது. மெமரிகள் அத்தனை நீட்டா ஒரே லைன்ல, சைஸ் படி,

ஒரே கோணத்தில வைக்கப்பட்டிருந்தன. எப்பவும் அப்படி இருக்குமான்னு கேட்டேன். இல்ல, தாறுமாறாத்தான் இருக்கும்னு விடை கிடைச்சது. ரமேஷ் எடுத்த ·போட்டோக்களும், டெஸ்ட் பண்ணறத்துக்கு முன்னாடியே அப்படித் தான் நேர்த்தியா இருந்துச்சுன்னு காட்டிச்சு. அதுனால, மெமரிகள கெடுத்தவர் ஒரு நேர்த்திப் பைத்தியமா இருக்கணுங்கற முடிவுக்கு வந்தேன்.

"ஷீலாவுக்கு நிச்சயமா அந்தச் சுபாவம் இல்ல. நான் ஷாலினியக் கூப்பிட்டு அத டிஸ்கஸ் பண்ணேன். அவளும் மனோதத்துவப் படி ஷீலாவா இருக்க முடியாதுன்னு ஆமோதிச்சா. பீட்டர் ஷீலாவ வெறுக்கறது தெரிஞ்சாலும், அது தொழில் முறைப் பொறாமைதானே ஒழிய, அவனும் நேர்த்திப் பைத்தியம் இல்லை, அதனால செஞ்சிருக்க மாட்டான்னு என் கணிப்பு.

அடுத்தது மார்க் ஆ·பீஸ¤க்குப் போனோம். அத படு நேர்த்தியா வச்சிருக்கறத பார்த்த உடனேயே எனக்கு மார்க் மேலதான் சந்தேகம் வந்தது. நடுவுல திடீர்னு கிரண் மேஜை மேல இருந்த பேனா ஹோல்டரத் தட்டி விட்டதும், பேசறத உடனே நிறுத்திட்டு முகத்துல ஒரு வெறியோட மார்க் அத சரி செஞ்சு வைக்கிறத பார்த்ததும் என் சந்தேகம் இன்னும் உறுதி யாச்சு. நானே தட்டி விடணும்னு இருந்தேன், கிரண் விளையாடிக்கிட்டு, தற்செயலா முந்திகிட்டது வசதியாப் போச்சு!"

மார்க் வாய் விட்டு சிரித்தான். "சூர்யா, அவ்வளவுதானா? உங்க இத்தனைப் பெரிய சார்ஜ், வெறும் நேர்த்தியா இருக்கறத வெச்சு தானா? அப்படீன்னா, ரமேஷ், குமார், எல்லா ரையும் மாட்டி விடுங்களேன்?! நீங்க சொல்றது எல்லாம் சுத்த கற்பனை, ஜஸ்ட் யுவர் இமாஜி னேஷன், அவ்வளவுதான்" என்றான்.

சூர்யா தலையாட்டினார். "இல்ல, மார்க். மேல இன்னும் நிறைய இருக்கு. ரமேஷ் உங்க லேப் செட்டப் தான் ·பாலோ பண்றாரு. அவர் ஆஃபீஸ், குமார் ஆ·பீஸ் ரெண்டுமே உங்க அளவு நேர்த்தி கிடையாது. அதையும் தவிர நீங்க ஒருத்தர் தான் மீதி இருக்கற மெமரி பார்ட்டுகளை டெஸ்ட் செய்ய வேண்டாம்னு சொன்னது. என் கிட்ட நீங்கதான் டெஸ்ட் செய்ய சொன்னதா பொய் சொல்லிருக்கீங்க. அதுக்கு கிரண், குமார் ரெண்டு பேரும் சாட்சி"

மார்க் மீண்டும் சிரித்தான். "இன்னும் வீக். அது நான் மறந்து போய் சொல்லியிருக்கணும், அவ்வளவுதான்."

சூர்யா கண்டு கொள்ளாமல் விரைவாகத் தொடர்ந்தார். "மேலும், உங்களுக்கு ஷீலா மேலயும், குமார் மேலயும் உள்ளிட்ட பெரும் வெறுப்பு இருக்கறது தெரிஞ்சது. ஷீலாவ ஷாலினிகிட்ட பேசச் சொன்னதுல, அவ சமீபமா மனநிலை சரியா இல்லாம இருக்கறது, நீங்க அவள உங்களோட உறவு வச்சுக்க சொல்லி வற்புறுத்தினதுனாலதான்னு தெரிஞ்சுது. அவ ஒரு அ·பிடேவிட்டும் கொடுத்தாச்சு. அவ உங்கள மறுத்ததனால அவ மேல வஞ்சனை யோட மாட்டி விட்டிருக்கீங்க. முதல்ல அவ மேல சந்தேகம் கிளப்பினதே நீங்கதான்னு தெரியும்.

"மேலும், லேப் என்ட்ரி லாக்ல அவ பேட்ஜ் நம்பர பொய்யா போட்டிருக்கீங்க. ரமேஷ் வெள்ளிக்கிழமை இரவு லேப் கதவை பூட்டாமலே அவசரமா பார்ட்டிக்குக்கிளம் பிட்டார் போலிருக்கு. அதுனால லேப் கதவு பூட்டின என்ட்ரியே இல்ல. ரமேஷ் உள்ள போன என்ட்ரியும் இல்லை. ரமேஷ் லேபை மூடாததை மறைச்சு பேசறதுனாலதான் பாவம் குற்ற பாவனையோட இருந்திருக்காரு."

இதைக் கேட்ட ரமேஷ் மிகுந்த நிம்மதியுடன் பெருமூச்சு விட்டு பெரிய புன்னகையுடன், "ஆமாம் சூர்யா, ரொம்ப சரியா கணிச்சிட்டீங்க. அது ஒண்ணுதான் நான் பண்ண தப்பு. நான் மூடாததுனாலதான் திருடு போச்சுன்னு பயந்து செத்துகிட்டிருந்தேன்!" என்றான்.

சூர்யா தொடர்ந்து, "வேற யாரும் லேப் உள்ள போன என்ட்ரியும் இல்ல. அதுனால ஷீலா பேட்ஜ் என்ட்ரி பொய்னு தெரியுது. ஆனா, அவசரத்துல, கம்பனி மெயின் கதவுக்கு அதே மாதிரி என்ட்ரி போட மறந்துட்டீங்க! உங்க என்ட்ரிய அழிச்சும் ஷீலாவுக்கு ஏன் என்ட்ரி போடல? அது ஒரு பெரிய தப்பு! லாக் என்ட்ரி மாத்தறத்துக்கு, நீங்க, ரமேஷ், குமார் மூணு பேராலதான் முடியும். அதுனால அதுவும் உங்களத்தான் சுட்டிக் காட்டுது." என்றார்.

குமார் குமுறினார். மார்க்கைப் பார்த்து, "அடப் பாவி, நான் என்னடா உனக்கு செஞ்சேன்? ஏன் இப்படி செஞ்சிட்டே?" என்றார்.

சூர்யாவே பதில் அளித்தார். "குமார், நீங்க மார்க்குக்குப் பதிலா, நடராஜை மொத்த டெக்னாலஜிக்கும் மேனேஜரா ஆக்கிட்டீங்க, அந்த ஏமாற்றத்துனாலதான். மார்க் ரொம்ப பழி வாங்கறடைப். மேலும் அவரோட லை·ப் ஸ்டைலுக்கு - லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ் வீட்டுக் கும், ஜாகுவார் காருக்கும், இன்னும் என்னென் னவோ - நிறைய பணம் தேவைப் பட்டிருக் கணும். அதனால கெடுக்காத மீதி மெமரிகள வேற கம்பெனி எதுக்கோ விற்கறத்துக்காகவும் திருடியிருக்கலாம்" என்றார்.

மார்க்கின் முகம் மிகவும் இருண்டு, வெறியுடனிருந்தது. அவன் சீற்றத்துடன், "இதெல்லாம், சுத்த கற்பனை, ஸ்பெகுலேஷன் அவ்வளவுதான். நீங்க சொன்ன எதுலயும் நான் மெமரிகளத் திருடியதாகவோ, கெடுத்த தாகவோ ஆதாரமேயில்ல. காணாமப் போன மெமரிகள மீட்கறத விட்டுட்டு, எதோ உங்க பெருமைக்கு என் மேல பழியப் போட்டாத் தீர்ந்ததுன்னு விட்டுடலாம்னு பாக்கறீங்க" என்றான்.

அப்போது கிரண் மீண்டும் அவசரமாக வந்து அவர் காதில் எதோ கிசுகிசுத்தான்.

சூர்யா வெற்றிப் புன்னகையுடன், "ஆதாரங்கள் இருக்கு மார்க். நீங்க மெமரிகளை ஜாக்கிர தையா க்ளோவ்ஸ் போட்டு எடுத்தாலும், அந்த மாதிரி கெடுக்க க்ளோவ்ஸோட, லேபில இருக்கற ஹோலோரைட்டர் மெஷின் பட்டன்ஸைத் தட்ட முடியாதுன்னு எனக்குத் தெரியும். அங்க உங்க ·பிங்கர் ப்ரிண்ட்ஸ் நிச்சயமாக் கிடைக்கும். நீங்க இப்போ எல்லாம் அதைத் தொட வேண்டிய வேலை இல்லாத துனால கடைசியா உங்க ப்ரிண்ட்ஸ் விழ வேற காரணமே இருக்க முடியாது. இத நீங்க யோசிக்கல. மேலும்..."

சூர்யா நிறுத்திவிட்டு ஒரு சந்தோஷப் புன்னகையுடன் குமாரைப் பார்த்தார். குமாருக்கு ஒரே படபடப்பு. "என்ன சூர்யா, என்ன? சீக்கிரம் சொல்லுங்க" என்று துரிதப்படுத்தினார்.

சூர்யா, "மேலும்... நான் என் ·போலீஸ் இணைப்பு மூலமா, ஒரு ஸர்ச் வாரண்ட் வச்சு மார்க்கோட பேங்க் ஸே·ப்டி லாக்கரத் திறந்து பாக்கச் சொன்னேன். மெமரிகள் கிடைச்சாச்சு! மார்க், நீங்க சனிக்கிழமை காலைல உங்க லாக்கருக்குப் போனதுக்கு பேங்க் ஆளுங்க சாட்சி. வெளியிலயும் உங்கள அரெஸ்ட் பண்ண காத்துகிட்டிருக்காங்க. நீங்க தப்பிக்கவே முடியாது!" என்றார்.

இதைக் கேட்ட மார்க், முகம் வெளிறி புஸ்ஸென்று காற்றுப் போன பலூன் போலத் தொய்ந்து போய் சரிந்தான். குமார் இருக்கை யிலிருந்து குதிதெழுந்தார். "சூர்யா, பிரமாதம், பிரமாதம்! என்னால நம்பவே முடியல! நான் நம்பிக்கையே இழந்து கடைசி சான்ஸாத்தான் உங்களக் கூப்பிட்டேன். என்னையும் கம்பெனி யையும் காப்பாத்திட்டீங்க! நான் எப்பவும் இதை மறக்கமாட்டேன்!" என்றார்.

ஷீலாவும், "ரொம்ப தேங்க்ஸ் சார். மார்க் என்ன கஷ்டப்படுத்தினதை யாரும் நம்ப மாட்டாங் கன்னு நொந்து போயிருந்தேன். அதுக்கும் மேல இந்தத் திருட்டுப் பட்டம் வேற கட்டினதும் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. நீங்க ஷாலினிகிட்ட என்னை பேச வச்சு, மார்க்கை கண்டு பிடிக்கலைன்னா, நான் தற்கொலை கூட பண்ணீகிட்டிருந்திருப்பேனோ என்னவோ!" என்றாள்.

கிரண் புன்னகையுடன், "நல்ல வேளை! அது எவ்வளவு வேஸ்ட் ஆஃப் ஸச் ப்யூட்டி!" என்றான். ஷீலா நாணிக் கொண்டாள்! கிரண் அவளுடைய ·போன் நம்பர் வாங்கிக் கொண்டான்!

கிரணும், சூர்யாவும் வெளியேறினர். கிரண், "சரியான குள்ள நரி பாஸ் நீங்க! ஆரம்பத்து லேந்தே மார்க் மேல குறி வச்சிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி மேல விசாரிச்சீங்க?" என்றான்.

சூர்யா, "ஹூம்! பல வித ஆபத்தான மிருகங்கள் நிறைஞ்ச இந்த லை·ப்ல, கொஞ்சம் குள்ள நரிகளும் இருந்தாத்தான் சரிப்படும்!" என்றார்.

கிரண், "சரி வாங்க பாஸ், இந்த கேஸ் நல்லா பசியைக் கிளப்பிடுச்சு! நாம உடுப்பி ரெஸ்டரான்ட்ல போய் ஒரு மசால் தோசை வெட்டலாம்!!" என்று கூறி விட்டு, காரை அசுர வேகத்தில் கிளப்பினான்!

(முற்றும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com