பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சீர்திருத்தத்துக்கான சிந்தனையும் செயற்பாடும் இந்தியாவில் முகிழ்க்கத் தொடங்கியது. இக்கால கட்டத்தில் 'சமூகச் சீர்த்திருத்தம்' சமூக அசைவியக்கத்தின் முற்போக்கு புரட்சிகர மாற்றங்களை துரிதப்படுத்திக் கொண்டிருந்தன.
ஒருபுறம் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக சுதந்திரப் போராட்டம் வெடித்துக் கொண்டி ருந்தது. இன்னொருபுறம் ஆங்கிலேயர் வழிவந்த மேனாட்டுக் கல்விப் பரவல் சமூக மட்டத்தில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டி ருந்தன. கல்வி கற்றோர் குழாம் சமூகச் சீர்திருத்த இயக்கத்தில் தம்மையும் இணைக்கத் தொடங்கினர். இக்கால கட்டத்தில் பீறிட்ட சுதந்திர வேட்கையில் சுடர்விட்ட வெளிச்சம்தான் 'டாக்டரம்மா' என்று பாசத்தோடும் மரியாதையோடும் அழைக்கப் பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1886-1968)
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கல்வித்துறை இயக்குநராகவும் அரசரின் ஆலோசகராகவும், அரசினர் கல்லூரி முதல்வராகவும் இருந்த நாராயணசாமிக்கும் சந்திரம்மாளுக்கும் 30.7.1886ல் முதல் குழந்தையாக பிறந்தார் முத்துலட்சுமி. தமது நான்காம் வயதில் திண்ணைப் பள்ளியில் முத்துலட்சுமி சேர்க்கப் பட்டார். இளம்வயதிலேயே கல்வி கற்கும் ஆர்வமும் நினைவாற்றலும் நுண்ணறிவும் இவருக்கு சிறப்பாக இருந்தது. ஆசிரியர்கள் போற்றத்தக்க மாணவியாக வளர்ந்து வந்தார். அக்காலங்களில் பெண்கள் பத்துவயதிற்குள் படிப்பு முடிந்து பதிநான்கு வயதிற்குள் திருமணத்தை முடித்து விடுவார்கள். பெற்றோர் களும் அதற்கு மேல் பெண்களை படிக்க அனுமதிப்பதில்லை.
எனினும் முத்துலட்சுமி தொடர்ந்து படிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். ஆறாம்வகுப்பு ஆங்கிலம் கற்றுத் தேறினார். தந்தை நாராயணசாமி இவருக்கு வீட்டில் வைத்து தானே பாடங்களை யும் சொல்லிக் கொடுத்து வந்தார். தம் பதிமூன்றாம் வயதில் எட்டாம் வகுப்பு வரை ஆண்கள் படிக்கும் பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்றார். பின்னர் தந்தையார் ஆசிரியர் ஒருவரை வீட்டுக்கே அழைத்து முத்துலட்சுமி தனியாகக் கற்க ஏற்பாடு செய்து கொடுத்தார். மெட்ரிக் குலேஷன் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
முத்துலட்சுமி கல்லூரிக்குச் சென்று கல்வி கற்க விரும்பினார். அந்நாட்களில் வெளியூர் கல்லூரிகளில் பெண்கள் தங்கிப் படிக்க விடுதி வசதிகள் இல்லை. புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற விதியை வைத்திருந்தனர். தந்தை நாராயணசாமி புதுக்கோட்டை மன்னரிடம் சிறப்பு அனுமதி பெற்று மகளைக் கல்லூரியில் சேர்த்தார்.
பழமையின் ஆசாரப் பிடிப்புகள் ஆதிக்கம் செலுத்திய அக்காலத்தில் ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் அவர்கள் மத்தியில் ஒரே ஒரு பெண்ணாக, பதினெட்டு வயது மணமாகாத பெண் கல்வி கற்ற போது கல்லூரிக்குள்ளும், வெளியிலும் சமூத்திலும் அவர் எதிர் கொண்டிருக்கிற நெருக்கடியையும் பிரச்சனை களையும் நாம் இன்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால் முத்துலட்சுமி அத்தகைய நெருக்கடிகளையெல்லாம் முகம் கொடுத்து கல்லூரியில் முதல் பெண்ணாக சேர்ந்து முன்னோடியாக கல்லூரி வாழ்வைத் தொடங்கினார். இந்தத் தொடக்கம் 'முதல் முன்னோடியாக' அவர் மேலும் உயர்ந்து செல்வதற்கு உரமாக அமைந்தது.
கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் மருத்துவக் கல்வி படிக்க விரும்பினார். தந்தையாரும் அவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய விரும்பி னார். 1907 ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் முத்துலட்சுமி சேர்ந்து படிக்கத் தொடங்கினார். இக்கல்லூரியில் படித்த முதல் பெண் முத்துலட்சுமிதான். கல்லூரியில் முதன்மை மாணவியாக விளங்கியதோடு, ஒவ்வொரு ஆண்டும் பதக்கங்களும் பல பரிசுகளும் பெற்று தனிச் சிறப்போடு திகழ்ந்தார். மருத்துவப் பட்டப்படிப்பில் M.B. & C.M. என்ற பட்டத்தை 1912 ல் பெற்றார். தென்னிந்தியாவிலேயே மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்றானார்.
1914ல் சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தங்கிப் பணிபுரியும் மருத்துவராக செயலாற்றி வந்தார். மருத்துவக் கல்லூரியில் படிக்கின்ற காலத்தி லேயே முத்துலட்சுமிக்கு திருமணம் முடித்திட தந்தையார் விரும்பினார். ஆனால் இதற்கு முத்துலட்சுமி இசைவுதரவில்லை. திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுடனும் இருந்தார். பல்வேறு வற்புறுத்தல்களால் ஒருவாறு திருமணத்துக்கு உடன்பட்டார்.
முத்துலட்சுமியை மணப்பதற்கு டாக்டர் சுந்தரரெட்டி FRCS (முதலமைச்சராக இருந்த சுப்புராயலு ரெட்டியாரின் சகோதரி மகன்) முன் வந்தார். அவருக்கு முத்துலட்சுமி, ''உங்களுக்கு சமமான மரியாதையை எனக்கு நீங்கள் தரவேண்டும். என்னுடைய விருப்பங்கள் எது வானாலும் அதற்கு நீங்கள் குறுக்கே நிற்கக் கூடாது'' என்ற நிபந்தனையை விதித்தார். இதற்கு டாக்டர் சுந்தரரெட்டி இணங்கியமை யால் 1914 ஏப்ரலில் பிரம்மசமாஜ முறைப்படி திருமணம் நிறைவேறியது.
அர்ப்பண உணர்வோடு மருத்துவப் பணியை மேற்கொண்டார். இருப்பினும் சமூக அக்கறை யும் சுதந்திர வேட்கையும் கொண்டவராகவும் இருந்தார். இந்த நினைப்பும் செயலும் அவரை பிரபல்யப்படுத்தியது. மேலும் இவரது மருத்துவ ஆற்றலையும் திறமையையும் கண்டுணர்ந்த இந்திய அரசு அவரை மேற்படிப்புக்காக 1925ல் லண்டனுக்கு அனுப்பியது. அவரும் லண்டன் சென்று தனது படிப்பை முடித்தார். பெண்கள் நலமும் குழந்தைகள் நலமும் இவரது வாழ்நாள் அக்கறைகளாகவே இருந்தன.
லண்டன் சென்று பயிற்சி பெறுகிற நேரத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் 42 நாட்டுப் பெண்கள் கலந்து கொள்கிற மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் முத்துலட்சுமி கலந்து கொண்டார். இவர் தாயகம் திரும்பிய பின்னரும், பெண்கள் விடுதலை பெண்கள் முன்னேற்றம் பற்றிய அக்கறையுடனும் செய்றபட்டார்.
1926 ஏப்ரலில் பெண்களும் வேட்பாளராகத் தேர்தலில் நிற்கலாம் எனச் சட்டம் இயற்றப் பட்டது. இதனால் பெண்கள் அமைப்புக்கள் பல முத்துலட்சுமியை சட்டமன்ற நியமன உறுப்பின ராக நியமிக்குமாறு ஆளுனரை வேண்டினர். இதன் அடிப்படையில் டாக்டர் முத்துலட்சுமி சட்டமன்ற உறுப்பினராக 1926-30 வரை நியமிக்கப்பட்டார். மேலும் சட்டமன்றத்தின் துணைத் தலைவராகவும் இவரே பொறுப்பு வகித்தார். முதன்முதல் சட்டமன்றத்தில் ஒரு பெண் இடம் பெற்றது தமிழ்நாட்டில்தான். இந்தப் பெருமை இவருக்கு வாய்த்தது.
இந்த நான்காண்டு காலத்தில் பெண்கல்வி, பெண்களுக்கு சம உரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, பால்ய விவாகத் தடை போன்றவற்றுக் கான சட்டங்களை நிறைவேற்றப்பட முன்னின்று உழைத்தார். இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப் பட சட்டமன்றத்தில் இவர் முன்வைத்த வாதங்கள் மிக முக்கியமானவை. இதில் அவரது சமூகநோக்கும் மனிதநேயமும் பெண்கள் சார்ந்த தெளிந்த பார்வையும் நன்கு வெளிப் பட்டது. நியாயமாக பெண் நிலை சார்ந்து ஒலிக்கப்பட வேண்டிய ஜனநாயகக் குரலாகவே இவரது குரல் இருந்தது.
1930இல் காந்தி கைது செய்யப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இக்கால கட்டத்தில் இவர் 'யெத்திரி தர்மா' என்ற இதழின் ஆசிரியராக இருந்து பணி யாற்றினார். இவ்விதழ் ஒத்துழையாமை இயக்க அஹிம்சைப் போராட்டக் கால கட்டத்தில் காவல்துறையும் அரசும் இழைத்த அநீதிகளை யும் அக்கிரமங்களையும் அம்பலப்படுத்தியது. தொடர்ந்து சமூக நலப் பணிகளையும் மருத் துவப் பணிகளையும் இணைத்தே சமூக அக்கறையுடன் செயற்பட்டார்.
சென்னை மாநகராட்சியின் நியமனக்குழு உறுப்பினராக 1937 முதல் 1939 வரை மிகச் சிறப்பாகவும் பணியாற்றினார். தேவதாசி ஒழிப்புச் சட்டத்தின் மூலம் தேவதாசிகளை ஒழித்து அவ்வினத்தைச் சார்ந்த சில பெண்களை காப்பகத்தில் சேர்க்க முயன்ற போது விடுதிக் காப்பாளர்கள் இடம் தர மறுத்துவிட்டனர். இதனால் அவர்களை தம் வீட்டிலேயே தங்க வைத்தார். பின்னர் தனது வீட்டிலேயே 'அவ்வை இல்லம்' என அமைத்து அத்தகைய சகோதரி களுக்கும், திக்கற்ற குழந்தைகளுக்கும் வாழ் வளித்தார். இவர் சொல்லுக்கும் செயலுக்கும் ஓர் இணைவை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்.
தம் தங்கை புற்றுநோயால் மாண்டதால், இந்தக் கொடிய நோய்க்கு முடிவு கட்ட புற்றுநோய் ஆய்வு நிலையத்தை உருவாக்கினார். சென்னை அடையாறில் இந்த ஆய்வு நிலையத் தை, மருத்துவமனையையும் உருவாக்கினார். இந்நிலையம் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மையமாக திகழ்கின்றது.
1956ம் ஆண்டு இவருடைய பணிகளை கெளரவிக்கும் போற்றும் வகையில் இந்திய அரசு 'பத்மபூஷன்' விருது வழங்கி கெளரவித்தது. 1968 ஜூலை 22 இல் இவர் மறைந்தார்.
பெண்களின் முன்னேற்றத்துக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் முத்துலட்சுமி ஆற்றிய பணிகள், அவரது சிந்தனைகள் தீர்க்கமானவை யாகவும், புரட்சிகர மாற்றத்துக்கான உந்து விசையாகவும் அமைந்திருந்தன.
தமிழ்ச் சூழலிலும், இந்தியப் பின்புலத்திலும் ஓர் முன்னோடியாகவே வாழ்ந்து புதிய தடம் அமைக்கக் காரணமாகியுள்ளார். இவரது ஆளுமை விகசிப்பு, அர்ப்பணிப்பு மனோபாவம், சமூக நோக்கு, செயற்பாடுகள் யாவும் தலை முறைகளை கடந்து எக்காலமும் நினைவு கூரத்தக்கது. |