கீதாபென்னெட் பக்கம்
''க்ளீஷே'' என்ற ·பிரெஞ்ச் வார்த்தை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. அதாவது ''இப்படித் தான் இருக்கும்'' என்று முன்கூட்டியே ஒன்றைப் பற்றி முடிவு பண்ணிக் கொள்ள முடிகிறவை. உதாரணத்திற்கு பத்து ஆண்டு களுக்கு முன் இந்தியாவிற்கு நான் வீணை கச்சேரிகள் வாசிக்கப்போகும் போது ''இந்த பெண் அமெரிக்காவில் வசிக்கிறவள். அமெரிக்கனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருப்பவள். நிச்சயமாக இவள் வாசிக்கும் கர்நாடக சங்கீதம் சம்பிரதாயமானதாக சுத்தமாக இருக்காது'' என்று பலரும் க்ளீஷேயாக முடிவு செய்துக் கொள்வதுண்டு.

அமெரிக்காவில் பல வருடங்களாக வசிக்கும் நமக்கு இந்தியாவில் வசிக்கும் இந்தியர் களைவிட இன்னும் ஒரு படி மேலாக நம் கலாசாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் அக்கறையும் ஆர்வமும் அதிகம் தானே. அந்த கால கட்டத்தில் என் வாசிப்பைப் பற்றி வருகிற விமரிசனங்கள் முக்கால் வாசி ''அமெரிக்கனை மணந்து அங்கேயே வாழ்கிறவரானாலும் நம் சம்பிரதாயத்தைத் துளியும் மாற்றாமல் வாசிப்பது ஆச்சரியமாக இருக்கிறது'' என்ற வகையில் இருக்கும்.

அதே மாதிரி சினிமா நடிகை என்றால் அவர்கள் ஆடுகிற பரதநாட்டியம் பற்றி விமரிசனத்தில் ''சினிமாடிக்'' என்ற வார்த்தையைப் புகுத்தி விடுவார்கள். அதாவது சம்பிராதயத்தை மீறி ஜனரஞ்சகமாக இருக்க அதை கொச்சைப் படுத்திவிடுவார்கள் என்று நினைப்பதுண்டு.

சின்னவயதில் நான் சதா கண்ணாடி எதிரே நின்று அழகு பார்த்துக் கொள்ளும் போது ''மனசிலே வைஜயந்திமாலா மாதிரி அழகுன்னு நினைப்பா?'' என்று அம்மா கேலி பண்ணுவாரே அதே வைஜயந்திமாலா - டாக்டர் திருமதி வைஜயந்திமாலா பாலி - தான் சமீபத்தில் இந்த மாதிரி நினைப்பைத் தகர்த்து எறிந்தார்.

க்ளீவ்லான்ட் பைரவி அமைப்பில் சமீபத்தில் அமெரிக்காவிற்கு வந்திருக்கும் இவரது முதல் நாட்டிய கச்சேரி லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. மேடைக்கு நடுவே வந்து நின்றவரைப் பார்த்தால் ஏதோ முப்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பது மாதிரி தோன்றியது. சாதாரண காட்டன் புடவை தான். மிதமான மேக்கப். மொத்தமே ஐந்து அயிட்டங்கள்தான். ஒன்றிற்கும் அடுத்ததிற்கும் நடுவில் இடைவேளை, புடவை மாற்றுதல் எதுவுமே கிடையாது. ''சாதிஞ்சனே'' என்று ஆரம்பிக்கும் ஆரபி ராக பஞ்சரத்ன கீர்த்தனைக்கு ஆடி முடித்த பிறகுகூட துளியும் களைத்துப் போகாமல் அடுத்ததை ஆரம்பித் ததைப் பார்த்து பிரமித்துப் போனவர்கள் அதிகம்.

இவரது அன்றைய நாட்டியத்தில் என்னை மிகவும் கவர்ந்து மூன்று விஷயங்கள் - முன்னே இந்தியாவையே ஆட்டிப்படைத்த ''சினிமா நடிகை வைஜயந்திமாலா'' கொஞ்சம்கூட சம்பிரதாயத்தை மாற்றாமல் மிக 'ட்ரெடிஷனல்' ஆக ஆடியது. இரண்டாவதாக நிகழ்ச்சியின் முடிவில் தன் குரு பந்தநல்லூர் திரு கிட்டப்பா பிள்ளையைத் தன் வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிட்டது. மூன்றாவது மறைந்த தன்னுடைய கணவர் டாக்டர் பாலி இந்த நிகழ்ச்சி முழுவதும் தன் கூடவே இருந்ததாக உணர்ந்ததை நெகிழ்ச்சியுடன் எடுத்துச் சொன்னது. இந்த விஷயங்கள் அனைத்தும் சேர்ந்து க்ளீஷே என்ற வார்த்தையின் அர்த்தத்தை உடைத்து எறிந்தன. தென்றல் வாசகர்களுக்கு ஒரு சின்ன ரகசியம் - திருமதி வைஜயந்திமாலா பாலிக்குப் பாட்டு பாடும் வானதி ரகுராமன் என் சகோதரி. எங்கள் தந்தை டாக்டர் எஸ். ராமநாதனின் மாணவி.

சமீபத்தில் அறுபதுக்கு மேற்பட்ட ராக்கெல் வெல்ச் என்ற ஹாலிவுட் சினிமா நடிகையின் பேட்டி ஒன்றைப் படித்தேன். திருமதி வைஜயந்தி மாலா பாலி மாதிரியே இவரும் வருடங்கள் ஏறியும் வயது ஏறாதவர். அதற்குக் காரணம் என்ன என்று கேட்டதற்கு ''டயட், எக்ஸர்ஸைஸ் அன்ட் ஆட்டிட்யூட்.... '' என்று பதிலளித்திருக்கிறார். யோசிக்க வேண்டிய விஷயம்!!

© TamilOnline.com