ஆலயம் தொழுவது சாலவும் நன்று; கோயி லில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; இவை போன்ற ஆன்றோர் வாக்கொல்லாம் பாரத நாட்டின் இறையுணர்வுக்கும் பக்திக்கும் எடுத்துக் காட்டாகும். எந்த மதத்தவர் ஆயினும் அவ்வம்மதத்திற்குரிய இறைவனைப் பக்தியுடன் வழிபடுவது என்பது காலங்காலமாக மக்களிடம் காணப்படும் மரபாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சைவ வைணவ மதங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, செழித்தோங்கி வளர்ந்துள்ளவையாகும். சிவா லயங்களும் பெருமாள்கோயில்களும் நம் பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளில் கணக்கற்றுக் காணப்படுகின்றன. இக்கோயில்களில் எழுந் தருளியிருக்கும் இறைவனையும் இறைவியையும் நாயன்மார்களும், ஆழ்வார்களும் அடியார்களும் போற்றிப் பாடியுள்ள பாசுரங்கள் மக்களது பக்தியின் வெளிப்பாட்டுக்கும், அவர்கள் இறையருள் பெற்றுய்வதற்கும் சாட்சியாக நிலவுகின்றன.
புண்ணிய க்ஷேத்திரங்கள் என்றும், பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்றும் பாராட்டிப் பேசப் படுகின்ற பெருமைக்குரிய பல கோயில்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக் கின்றோம். சிலவற்றைக் கண்டு தரிசித்திருக் கின்றோம். ஆனால் பற்பல கோயில்களின் 'தனிச்சிறப்புக்கள்' என்று கூறப்படும் செய்திகள் பற்றிப் பலருக்கும் தெரியாமலே இருந்து வருகின்றன. அத்தகைய தனிப்பட்ட சிறப்புகளை எடுத்துக்கூறும் விதத்தில் 'தெரிந்ததும் தெரியாததும்' என்ற தலைப்பில் திங்கள்தோறும் ஒருகோயில் பற்றி இனிவரும் இதழ்களில் காணலாம்.
முதலாவதாக 'நாச்சியார் கோயில்' பற்றிப் பார்க்கலாம். இது தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காணப்படும் ஒரு பெருமாள் கோயில். இந்த அளவில் இது பலருக்கும் தெரிந்திருக்கும் ஒருசெய்தி. ஆனால் அக்கோயிலுக்கென்று சில தனித் தன்மைகள் இருப்பது பலருக்குத் தெரிந்திருக்காது.
இறைவன் சந்நிதி தனியாகவும், இறைவி சந்நிதி தனியாகவும் அமைக்கப்பட்டிருப்பது தான் பொதுவாக எல்லாக் கோயில்களிலும் காணப்படும். ஆனால் பெருமாளோடு தாயாரும் இணைந்து மூலஸ்தானத்தில் காட்சிதரும் அற்புதத்தை இந்தக் கோயிலில் காணலாம். தாயாருக்கென்று தனியாக சந்நிதி கிடையாது.
அடுத்ததாக, தாயார் முன்னே, பெருமாள் பின்னே என்கிற வகையில் தாயார் நிற்கு மிடத்திலிருந்து மூன்று அங்குல தூரம் பின்னால் தள்ளி நின்று பெருமாள் காட்சி தரும் அதிசயத்தைக் காணலாம். உற்சவ காலங் களிலும் பெருமாள் புறப்பாடு நடைபெறும் போதும் தாயார் முன்னே செல்ல பெருமாள் பின்னே செல்வதுதான் வழக்கம்.
ஒரு குடும்பத்தில் ஆண் ஆதிக்கம் என்றால் அங்கு 'சிதம்பரம்' ஆட்சி நடக்கிறது என்றும், பெண் குரல் - ஆதிக்கம் - ஓங்கியிருந்தால் 'மதுரை' ஆட்சி நடக்கிறது என்றும் வேடிக்கை யாகக்கூறுவார்கள். இங்கு இக்கோயிலின் பெயரே நாச்சியார் கோயில் என்றுதான் அமைந்துள்ளது. ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டிட அமைப்பிலும் இக்கோயிலுக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. கோவில் நுழை வாயிலிலுள்ள துவஜஸ்தம்பத்தின் அருகில் நின்றபடியே, 690 அடி நீளம் கொண்ட கோயி லின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளையும் தாயாரையும் சேவிக்க முடியும். 76 அடி உயரத்தில் 5 மாடக்கோயிலாக அமைக்கப் பட்டுள்ளது மூலவர் சந்நிதி.
எனவே மூலவர் சந்நிதியின் விதானம் வரை எழுப்பப்பட்டுள்ள மதில் சுவரின் சந்நிதியின் விதானம் வர எழுப்பப்பட்டுள்ள மதில் சுவரின் உயரம் 76 அடி. மதில்சுவருக்கு அருகிலே நின்று நிமிர்ந்த பார்ப்பவருக்குக் கழுத்து துவண்டு போகும். இந்த கோயிலிலுள்ள ஒவ்வொரு சந்நிதிக்கும் ஒரு கோபுரம் என்ற வகையில் 16 கோபுரங்கள் அமைந்துள்ளன. தேவார காலத்திற்கும் முற்பட்ட பழமையான சிறப்பான பெருமாள் கோவில் இதுவாகும்.
மற்றொரு புதுமை இதோ! 'மடல் ஏறல்' என்பது ஒருவகையான இலக்கியவகை. அகப்பொருள் துறையைச் சேர்ந்தது. ஒரு பெண்ணைக் கண்டு மோகித்து அவளை அடைய முடியாத நிலையில் தவிக்கும் தலைவன் பனைமடலால் குதிரை ஒன்றைச் செய்து அதன் மேல் அமர்ந்து கொண்டு, தான் விரும்பிய பெண்ணின் உருவத்தைச் சித்தரித்து, கைகளில் ஏந்தியபடி நகர வீதியில் வலம் வருவதை 'மடல்ஏறல்' என்பர். இவ்வாறு மடல் ஏறும் வழக்கம் பெண்களிடம் கிடையாது என்பது திருக்குறளிலும்.
''கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற்பெருந்தக்க தில்''
என்று கூறப்பட்டுள்ளது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் தன்னை நாயகியாகப் பாவித்துக் கொண்டு இறைவனைத் தன் உள்ளம் கவர்ந்த நாயகனாகப் பாவித்து,
''இறைவன் தன்னை ஆட்கொள்ளவில்லை என்றால் மடல் ஊர்வேன்''
என்று பாடியுள்ளார். நூலின் அளவைப் பொறுத்து 'பெரிய திருமடல்' என்றும் சிறிய திருமடல் என்றும் இருநூல்கள் 'பெருமாள் தம்மை ஆட்கொண்டு அருள வேண்டும்'' என்னும் குறிக்கோளுடன் பாடியதாகும்.
இதுமட்டுமல்ல புதுமை; திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாசுரங்களில் மிகுதியாகப் பாடப் பெற்ற திவ்வியப் பிரபந்த பாசுரங்கள் நாச்சியார் கோயில் இறைவன் மீது பாடப்பெற்றவையாகும். நாலாயரத்திவ்வியப் பிரபந்தங்களில் இடம் பெற்ற வைணவத்தலங்களில் அதிக பாசுரங்கள் பாடப்பெற்ற தலங்களின் வரிசையில் நாச்சியார் கோயில் ஐந்தாவது இடத்திலிருக்கும் பெருமையுங் கொண்டது.
வழிபாடு தொடரும்...
டாக்டர் அலர்மேலு ரிஷி |