நிறைவேத்துவாயா ராஜி?
தஞ்சாவூர் பாசஞ்சர் சிதம்பரத்தை அடையும்போது காலை மணி ஆறு இருக்கும்.

பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்டேஷனின் கடைகளில் காபி போடும் சத்தமும் தூங்கி எழுந்த கண்களோடு பெட்டியை தூக்கி நடக்கும் பாஸன்ஞர் கூட்டமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தூக்கம் கலைந்த ஹரிணியை மருமகள் ஷீலா தூக்கிக் கொள்ள மகன் ராகுல் ஆட்டோ தேடத் துவங்கினான். கடந்த ஐந்து வருஷமாக வாடிக்கை யாகப் போன பயணம் இது.

நான் முதலில் பார்த்ததற்கு இந்த ஊர் பயங்கரமாக மாறிவிட்டது. புது ஹோட்டல்களும் உயரமான கட்டடங்களும் எனக்கு அடையாளம் தெரியாமல் போயிற்று. பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இறக்கிவிட்டு ஆட்டோ நகர, ரூம் தேடி பெட்டிகளை வைத்ததும், 'எல்லாரும் கொஞ்ச நேரம் படுத்துக்கலாம். எட்டு மணிக்கு கிளம்பி நடராஜா கோயிலுக்கு போகலாம்'. ராகுல் சொன்னான்.

விட்டதூக்கத்தை அனைவரும் தொடர நான் இந்த பயணத்தின் காரணத்தை எண்ணிப் பார்க்கிறேன்.

சரியாக முப்பது வருஷத்துக்கு முன்னர், இதே தேதியில்தான் நான் ரகுவை சந்தித்தது. ஆசைப்பட்டப்படி மெரிட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எஞ்சினியரிங் சீட் கிடைத்ததும் தலைகால் புரியாமல் குதித்தவள் நான். அப்பா அம்மா தம்பிகூட இருந்து வீட்லேருந்து காலேஜ் போகறதுனா சும்மாவா. அப்பா பாங்குல அக்கெளண்டட். 'இங்க கிடைக்கலன்னா திருச்சி சீதாலக்ஷ்மி காலேஜ்ல சேத்துடுவேன். அப்புறம் ஹாஸ்டல்தான்' அப்பா சொல்லியிருந்தார்.

அட்மிஷன் எல்லாம் ஓய்ந்து வகுப்புகள் மெதுவாக ஆரம்பித்த போதுதான் ஒருவருக்கொருவர் பரிச்சயம் ஆனோம். ப்ராக்டிக்கல், லாப், செமஸ்டர் என்று திரும்பி பார்ப்பதற்குள் மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. கடைசி வருட ப்ராஜக்ட் செய்யும் போதும் டூர் போகிறோம் என்று கொடை போகும் போதும்தான் நாங்கள் நெருக்கமானோம்.

நான், உமா, கீதா, ரகு, அப்துல் - நாங்கள் ஐந்து பேரும்தான் ப்ராஜக்ட் செய்ய ஓன்றாய் சேர்ந்தோம். கலகலவென்று பேச்சும் கிண்டலும் எங்களிடையே இருந்தாலும் ஆழமான நட்பும் இழைந்தோடியது. பரிட்சை என்று வரும்போது மற்றவர்கள் ஹாஸ்டல் என்பதால் என் வீடே போதிமரம் ஆகும். சத்தமாகவே விவாதம் செய்து விளக்கிப் படித்து போட்டி போட்டு அந்த நாட்கள் என் நினைவில் இருந்து போக மறுக்கின்றன.

உமாவின் பெண் கல்யாணத்திற்கு நாங்கள் பெங்களூர் போனபோது பழசை எண்ணி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். கீதாவும் குடும்பத் தோடு வந்திருந்தாள். அப்துல் துபாயிலிருந்து மெயில் அனுப்பியிருந்தான். எங்களிடையே இல்லாமல் போனது ரகுமட்டும்தான்.

'எதுக்கும்மா அழறேன். எழுந்திருங்கோ. கோயி லுக்குப் போலாம் ! ஷீலா கேட்கும் வரையில் எனக்கு கண்ணின் ஈரம் தெரியவேயில்லை. கணீரென்று காதில் ஒலித்த சிவஸ்துதியும் நைவேத்தியத்திற்கு பாத்திரத்தில் எதையோ மூடி எடுத்துச் செல்லும் அர்ச்சர்களும் இந்த கோவில் மட்டுமே இன்னும் மாறாமல் இருப்பதாய் தோன்றியது எனக்கு. அர்ச்சனை தட்டோடு உள்ளே நுழையும் போது பழைய நினைவுகள் திரும்பவும் மனதில் ஊஞ்சலாடின.

நாங்கள் படித்து முடிப்பதற்கு முன்னமே அனை வருக்கும் வேலை கிடைத்தாகிவிட்டது. எல்லோரும் ஊருக்கு கிளம்பும் நாள் அம்மா வடை பாயஸத்தோடு சாப்பாடு போட்டாள். நம்மை புரிந்துகொண்டு நடத்தும் அப்பா அம்மா கிடைப்பது ரொம்ப கஷ்டம். காலேஜ் அனுப்பும் போது 'ஆம்பளைகளோடு பழக்கம் வேணாம்' என்று பெற்ற பெண்ணிடம் சொல்லும் பெற்றோர்கள்தான் ஜாஸ்தி. 'பழகு. ஆனால் வரம்பு தாண்டாதே' என்று தோள்தட்டி அனுப்புபவர்கள் ரொம்ப கம்மி. எத்தனையோ நேரங்களில் என் பெற்றோர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையே எனக்கு அவர்களிடத்தில் மதிப்பைக் கூட்டி யிருக்கிறது.

வேலை பார்க்கத் தொடங்கி மூன்று வருடங்களில் எங்களிடையே இருந்த தொடர்பு விட்டுப் போகவில்லை. குரியரும் இமெயிலும் இல்லாத நாளில் கடிதமும் தொலைபேசியும் சிறிதே உதவிட, அப்போதுதான் அது நடந்தது. ரகு ஏதோ காலேஜில் வேலை என்று சிதம்பரம் வந்திருக்க, நானும் லீவு என்று வீட்டில் இருந்தேன். நான் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் என் பெற்றோர் அந்தப் பக்கம் அழைத்தாலொழிய வரமாட்டார்கள். 'எங்கள் பெண்ணை நாங்கள் நன்றாக தான் வளர்திருக் கிறோம். அவள் சரியாகவே நடந்து கொள்வாள் என்பது போலிருக்கும் அவர்கள் செய்வது.

காலேஜில்கூட படித்தவர்கள் எங்கே இருக்கி றார்கள் என்பதில் ஆரம்பித்து தான் வேலை பார்க்கும் கம்பெனியில் வாட்ச்மேன் வரையில் நாங்கள் பேசியாகிவிட்டது.

நேரமாகிவிட்டது என்று கிளம்பியபடியே ரகு, 'ராஜி, நான் உன்ன ஒண்ணு கேப்பேன். தப்பா நினைக் கமாட்டியே? என்று கேட்டது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.

'சொல்லு ரகு' என்று என் வாழ்க்கையே முற்றுமாக மாறப் போகிற உணர்வில்லாமல் சொன்னேன்.

'எங்க வீட்ல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க அப்பா அவசரப்படறார். அம்மா இல்லாததுதால எனக்கு பொண்டாட்டினு ஒருத்தி வந்தா குடும்பம் நல்லாயிருக்கும்னு நினைக்கிறார்.' ரகு விளக்கினான்.

'ஏய் ! பொண்ணெல்லாம் பாத்துட்டியா' நான் விளையாட்டாய் சீண்டினேன்.

'பாத்தாச்சு ராஜி. நீதான் அது' ரகு முடித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை.

'என்னது!!' பாறாங்கல்லாய் உறைந்தேன் நான்.

'ஆமாம் ராஜி. நானும் ரொம்ப யோசிச்சுதான் முடிவு செஞ்சேன். பழகியிருக்க வரைக்கும் எனக்கும் உனக்கும் இருக்க நல்ல புரிஞ்சு நடக்கற உறவுதான் கல்யாணம் என்கிற பந்தத்துக்கு முக்கியமான அடிப்படை. இனிமே ஒரு பொண்ணைப் போய் பாத்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு எழுந்துவர எனக்கு இஷ்டமில்லை. ஒரு மணி நேரத்துல இவ எனக்கு பொண்டாட்டியா வந்தா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணி முடிவு பண்ணமுடியாது. கல்யாணம் அதுக்கும் மேல்பட்டது.

'பட் ரகு, நம்ம ரெண்டு பேரும் ·ப்ரெண்ட்ஸ். இப்படி கல்யாணம்னு சொல்லி நம்ம நட்பையே சொதப்பிட்டியே. வேணாம். இது நடக்காது' நான் தீவிரமாய் கூறினேன்.

'இது எப்படி நம்ம நட்பை கொச்சைப்படுத்தறதா ஆகும் ராஜி. எல்லா உறவிலயும் நட்புதான் முதல்படி. அது அம்மா அப்பாவாருந்தாலும், கணவன் மனைவி யாயிருந்தாலும் அக்கா தங்கை அண்ணா தம்பியா யிருந்தாலும் சரி, நட்போடு எடுத்து வைக்கற ஒரு அடிக்கு அப்புறம்தான் எல்லா உறவும் வலுக்கும். ஏன், உன் அம்மா அப்பா உன்கிட்ட ஒரிஜனல் பெற்றோர் மாதிரி நடந்துக்கிட்டா இப்படி இருப்பியா நீ. உனக்கும் மதிப்பு கொடுத்து தோழமையோடு நடத்தறதுதால தானே நீ அவங்களை சிம்மாசனம் போட்டு உக்காத்தி வச்சுருக்கே'

ஏதோ பேச வந்த என்னைத் தடுத்து, ''நான் உன்ன கட்டாயப்படுத்தல. நல்லா யோசிச்சு நீ சொல்ற பதிலை கேக்க நான் தயார்' என்று ரகு கூறிவிட்டு அப்பா அம்மா தம்பியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிய போது நான் மகாகுழப்பத்தில் இருந்தேன்.

எத்தனை மாதங்கள் ஆனாலும் என் முடிவில் மாற்றம் இருக்கும் என்று எனக்கு தோணவில்லை. என் பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பேச்சைத் தொடங்கும் வரை.

அந்த தீபாவளியின்போது வீட்டில் மெதுவாக என் கல்யாணப் பேச்சு புரள ஆரம்பித்தது. 'நல்ல பையனா பாக்கணும். தீர விசாரிச்சு பையனுக்கு எதுவும் கெட்ட பழக்கம் இருக்கானு தெரியணும்' அம்மா தொடங் கினாள். 'இப்ப கல்யாணம் பண்லா¡மானு ஜோஸிய ரைக் கேட்டுட்டு ஜாதகம் காப்பி எடுத்துண்டு வரேன்' அப்பா ஸ்கூட்டரில் கிளம்பினார்.

'ஏண்டி ராஜி, உனக்கு ஓகேதானே. நல்லாவேற படிச்சுருக்க. தனக்கு வரப்போறவன் இப்படித்தான் இருக்கணும்னு கற்பனை ஏதும் பண்ணியிருந்தா சொல்லிடுடீஷ அம்மா ஆசையாகக் கேட்டாள்.

'நலல குணமாயிருந்தா போறும்மா. நல்ல மனுஷனா என்ன நல்லபடியா நடத்தினா போறும். பணம் காசு தானா தேடிவரும்.'

'அப்படியே ஒருத்தன் கிடைப்பான். அதாவது நம்ம ரகு மாதிரி. அவ்ளோதானே. ' அம்மா ஏன் அப்படி சொன்னாள் என்று எனக்கு இன்றுவரை புரிந்த தில்லை. தாங்க முடியாமல் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தேன் அம்மாவிடம். முடிக்கும்போது வெளியில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

'இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் முடிஞ்சுடும். இப்பவே பாக்க ஆரம்பிச்சுடுங்கோன்னுட்டார் ஜோசியர்'அப்பா சோபாவில் வந்து அமர்ந்தார்.

'பாக்க ஆரம்பிச்சு முடிஞ்சாச்சு' அம்மா தன் ஸ்டைலில் பதில் சொன்னாள்.

'என்னடீ சொல்ற' அப்பா திகைப்புடன் பார்க்க அம்மா விளக்க ஆரம்பித்தாள்.

'அந்த பையன் என்ன குலமோ கோத்திரமோ. ஒணணுமே தெரியாம எப்படி சம்பந்தம் பண்றது. நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் என்ன சொல்வாங் களோ' அப்பா குரலை சற்று உயர்த்தினார்.

'ரகுவோட அப்பாவை ராஜி ஒரு காலேஜ் விழாவில அறிமுகப்படுத்தியிருக்கா. நீங்களும் கூட இருந் தேளே. நல்லபடியா பேசிண்டு இருந்தார். பாவம், அம்மா இல்லாத ரகுவையும் அவன் தங்கை கெளரியை யும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கியிருக்கார். அவரோட குடும்பம் நேர்மையா தெரியறது. போறும், என் பொண்ணுக்கு நல்ல புருஷன்தான் வேணும். அவன்கூட வர குலமோ கோத்திரமோ வேண்டாம்' சமையல் வீட்டுவேலை என்று இருந்த அம்மாவா இது?

'அம்மா, நாங்க ரெண்டு பேரும் ·ப்ரெண்ட்ஸ்மா. லவர்ஸ் இல்ல' நான் வாதாடிப் பார்த்தேன்.

'எனக்கு அப்பா அம்மா பாத்து வச்ச கல்யாணம்தான் ராஜி. என் புருஷன் எப்படி, எது பிடிக்கும், பிடிக்காதுன்னு நானும் எனக்கு என்ன தெரியும் தெரியாதுன்னு உங்கப்பாவும் புரிஞ்சுக்கறதுக் குள்ளயே எங்களுக்கு குழந்தைகள் பிறந்தாச்சு. அப்புறம் எங்க நேரம்? எத்தனையோ பேர் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கலைன்னாலும் சமூகத்துக்கும் அப்பா அம்மாவுக்கும் பயந்து கணவ்ன் மனைவியா குடும்பம் நடத்திண்டு இருக்கா. அந்த நிலைமை உனக்கு வேண்டாம் ராஜி. நீயாவது நல்ல விவரம் தெரிந்து, இவனோட அனைத்து உணர்ச்சிகளும் எனக்கு புரியும்னு ஒருத்தனை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக்கோ.

ஜாதி இல்லன்னு பாரதியார் பாட்டை சத்தம் போட்டு படிச்சா போறாது. நம்ம வீட்டை முதல்ல சுத்தம் பண்ணனும். அப்புறம் ஊரே குப்பையில்லாம போகும். ஆனா ராஜி உன் முடிவுதான் முக்கியம்'.

அம்மா முடித்தபோது புரட்சி என்பது உடுத்தும் உடையில் இல்லை செய்யும் செயலில் இருக்கிறது என்று எனக்கு புரிந்தது.

இரு குடும்பமும் மனம்விட்டு பேசி சிரித்து சம்மதித்து இரண்டே மாதத்தில் நான் திருமதி ரகு ஆனேன். அம்மா பேசின பேச்சின் அர்த்தம் எனக்கு அப்புறம்தான் புரிந்தது. எத்தனையோ கணவ்ன்கள் பொது இடம் என்பதுகூட பாராமல் மனைவியிடதில் கோபப்பட்டு கத்தும்போது தனிமையில்கூட என்னிடம் ஆத்திரப்படாத ரகு... கடவுளே! இதை நடத்திக் காட்டிய என் பெற்றோருக்கும் ரகுவின் அப்பாவுக்கும் கோடி நமஸ்காரம். நானும் ஒரு பொண்டாட்டி என்கிற மெஷினாய் போயிருக்க வேண்டியவள். ஒரு நல்ல மனிதனின் மனைவியாய் வாழ்ந்ததாலேதான் இந்தப் பயணம்.

'எல்லாரும் கொஞ்ச நேரம் ஹோட்ல்ல போய் ரெஸ்ட் எடுத்தப்புறமா காலேஜ் பாக்க போகலாம்' ஷீலா சொன்னது சரியென்று பட்டது எனக்கு. நாங்கள் படித்த அறைகளையும் நடந்த சாலைகளையும் நினைக்கும்போதே எனக்கு துக்கம் பொங்கியது.

சந்தோஷம் என்பது காவிரித் தண்ணீயாகப் பொங்கியது எங்கள் வாழ்வில். ராகுலும் மாலினியும் பிறந்த பின்புகூட எதுவுமே குறைந்தது போல தோணவில்லை. மாறாக அவர்களையும் எங்களுடைய வலையில் சேர்த்துக் கொண்டோம்.

ஐம்பதாவது வயதில் ஒரு அட்டாக் வந்தபின்பு என்னடம் ரகு சொன்னது இது. 'இந்த உலகத்துல என்னைவிட கொடுத்து வச்சவன் யாருமேயில்லன்னு தோணுது ராஜி. மனசுக்கு பிடிச்ச மனைவி, ஆசையா பழகற குழந்தைகள், எனக்கு இதுக்கு மேல எதுவுமே வேணாம். அடுத்த அட்டாக் எப்ப வரும்னு சொல்லமுடியாது. அதனால என் மனசுல இருக்க ஆசையை இப்பவே உன்கிட்ட சொல்லிடறேன். நிறைவேத்துவியா ராஜி' கலங்கின கண்களோடு தலையை ஆட்டினேன்.

'நமக்குஅமஞ்ச வாழ்க்கை மாதிரி நம்ம பசங்களுக்கும் கிடைக்கணும். நீயா எதையும் அவங்க மேல கட்டாயப் படுத்தக்கூடாது. படிப்பிலேருந்து கல்யாணம் வரைக்கும் தயவு செஞ்சு அவங்க மனசுக்குப் பிடிச்சதை செய்ய தடை செய்ய வேண்டாம் ரா. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்ம கல்யாண தேதியில நீ குழந்தைகளைக் கூட்டிட்டு நம்ம படிச்சு வளர்ந்த இடத்துக்கு போ ராஜி.

பேய், பிசாசுன்னு எனக்கு நம்பிக்கையில்லன்னாலும் உங்களை எல்லாம் அங்க பாத்து சந்தோஷப் படறதுக்கு கடவுள் எனக்கு சக்தி கொடுப்பார்னு நம்பறேன். செய்வியா ராஜி?'

பதில் சொல்லத் தெரியாமல் ரகுவின் கையை பிடித்துக் கொண்டு கதற தொடங்கினேன்.

இது நடந்து ஒரு வருடத்திற்குள் ரகு எங்களை விட்டுப் பிரிய, மனத்திற்குள் கோழையானேன். பிள்ளையும் பெண்ணும் எனக்கு தைரியம் கொடுக்க, ரகுவின் ஆசைப்படியே அவர்களின் திருமணம் நடந்தது.

கல்லூரிப்பூங்காவில் மற்றவர்கள் அமர்ந்து கொள்ள நான் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். 'ரொம்ப தூரம் போகாதேம்மா' கவலையோடு ராகுல் குரல் கொடுக்க 'கவலைப்படாதேடா. எனக்குதுணை இருக்கு' மனதில் சொல்லிக் கொண்டேன்.

உங்களோட ஆசையை நிறைவேத்திட்டேன், பாத்தேளா? மாலினியும் சுரேஷீம் லண்டன்ல இருக் கறதால இன்னிக்க இங்க வரமுடியல. உங்க பேத்தி ஹரிணி அப்படியே உங்கள மாதிரியே இருக்கா. இன்னிக்கு நான்கூட கடவுள்கிட்ட என் ஆசையை சொல்லிட்டேன் ரகு. அடுத்த ஜன்மத்திலயும் எனக்கும் ரகுவுக்கும் ஒண்ணா படிச்சு புரிஞ்சு கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு கொடுன்னு சரிதானா ரகு.'

அன்று இரவு திருச்சி பாசஞ்சரில் கிளம்பி சென்னை வரும்பேது நடராஜா கோவில் கோபுரத்தில் தெரிந்த விளக்குகளில் எனக்கு ரகுவின் முகம் தெரிந்தாற் போலிருந்தது.

அனுஸ்ரீராம்

© TamilOnline.com